ஆய்வுச் சிந்தனைகள்


பழந்தமிழில் மாயோன் தொன்மம் - வளர்ச்சியும் சுழற்சியும்

காடுறை கடவுளாகப் போற்றப்படுபவன் மாயோன். இயற்கை யுருவினாக உருவான மாயோன் பற்றிய தொன்மக் குறிப்புகள் கதைக் கூறு உடையனவாய் உள்ளன. பண்பாட்டுக் கலப்புடன் வேதத்தில் குறிப்பிடப்படும் கிருஷ்ணனுடன் இணைந்து உள்ளன. தொன்மக் கதைகளாய் வளர்ந்துள்ளன. தத்துவநோக்கில் இயற்கையில் பரந்து சுழற்சி பெற்றுள்ளன. இதனை ஆய்வதே ஆய்வுரையின் நுவல் பொருளாகும்.

பழந்தமிழ் நூல்களில் மாயோன்:-

மாயோன் பற்றிய குறிப்புகள் பிற தெய்வங்களைவிட மிகுதியாகப் பழந்தமிழ் நூல்களில் பரவிக் கிடக்கின்றன. "தேயா விழுப்புகழ்த் தெய்வமாக" (கலி:103:76) உள்ள மாயோனைக் குறிக்கும் திருமால் எனும் சொல் பழந்தமிழில் யாங்கனும் குறிப்பிடப்படவில்லை.

குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மலைபடுகடாஆம் முதலிய பத்துப்பாட்டு நூல்களிலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலிய எட்டுத்தொகை நூல்களிலும் மாயோன் பற்றிய தொன்மக் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

மாயோன்: இயற்கையுரு:-

மாயோன் என்ற சொல் கரியநிறமுடையவன் என்ற பொருளைத் தருகின்றது. மணிவரை அன்ன மாஅயோனே (புறம்.229) மண்ணுறுதிருமணி (புறம். 56:5) நீலநிற உறவின் நெடியோன் (பெரும். 30.402) இருள் மயங்கும் மேனியன் (பரி.15:50) என இயற்கையுருவாக மாயோன் குறிப்பிடப்படுகின்றான்.

காய்மலர்ப் பூவை கடலை யிருண்மணி
அவையைந்து முறழு மணிகிளர் மேனியை (பரி.13:42-43)

எனக் காயாம்பூ, கடல், நீலமணி என இயற்கையின் உரு, கடவுளாகச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றது.

மாஅல்:-

பெரிய எனும் பொருண்மை உடைய மாஅல் என்னும் பெயரும் மாயோனுக்கு உரியதாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரக் காண்கிறோம். முல்லை நிலக்காடுறைப் பகுதியின் நெடிய உருவினை மாயோனுக்கு ஏற்றி மாலாகக் கொள்ளும் முறையினைப் பத்துப்பாட்டின் பல இடங்களில் காணமுடிகிறது.

"மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு" (முருகு.12) "மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்" (நற்.32:1) என நெடியோனாக மாஅல் உயருகின்றான்.

மாயோன்: முல்லை நிலக்கடவுள்:-

அகன் ஐந்திணைக்கு உரிய நிலத்தினைக் கூறுமிடத்துத் தொல்காப்பியர், மாயோன் மேய காடுறை உலகமும் எனச்சுட்டுகிறார். காடுறை கடவுளாகச் சுட்டப்படும் மாயோன் காயம்பூ சூடினமையை, "பூவை விரிமலர் புரையும் மேனியை" (பரி.1:6-7) "பறவாப் பூவை பூவினோயே" (பரி.3:73) என்ற தொடர்கள் வெளிப்படுத்துகின்றன.

காடுறை கடவுளான திருமால் கானகத்தின் நெடுமையையும் மாமை நிறத்தினையும் உடையோனாய் இருப்பதோடு அந்நிலத்திற்கு உரிய பெரும்பொழுதான கார்காலத்துக் கரிய மேகத்தின் நிறத்தினைப் பெற்று, காயாம்பூ சூடி முல்லை நிலக்கடவுளாக விளங்குவதனை உணர முடிகின்றது. இதனைத் "தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர்" (திரு.வி.க. தமிழ்நூல்களில் பௌத்தம், ப.27) என்ற கருத்து அரண் செய்கிறது.

இவ்வாறு மாயோன் அடர் கானகப் பசுமையின் இயற்கையழகில் முகிழ்த்த முல்லைக் கடவுளாக எழிலுறுகிறான் எனலாம்.

அகவாழ்வின் தலைவன்:-

முல்லை நிலக் கடவுளாகிய மாயோனை, முல்லைநிலத் தலைவனோடு இயைத்தும் பாடும் மரபு பழந்தமிழில் பரந்து கிடக்கக் காணலாம்.

அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போல
புன்தலை மடப்பிடி உண்இயர் அம்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றிநனைகவுள்
படி நிமிறு கடியும் களிறே தோழி (அகம். 59:5-10)

என ஆற்றியிருக்கும் தலைவிக்குத் தோழி தலைவன் செல்லும் வழியிடைக் காட்சி ஒன்றினைக் கூறி ஆற்றுவிக்கின்றாள். இக்கவிதையில் மால் களிறுக்கு உவமையாகி முல்லை நிலத் தலைவனுக்கு இறைச்சிப்பொருளாய்ச் சுட்டப்படுவது இன்றியமையாத குறிப்பாகும்.

எருதின் மீது பாயும் தலைவனுக்கு மால் ஒப்பாவான் என்றும் (கலி.104:35-38) தலைவனைப் பிரிந்திருந்த தலைவி தலைவனை அடைவது மாயோன் மார்பில் உள்ள திருமகளை ஒக்கும் (கலி.109:17-18) என்றும் கலித்தொகை குறிப்பிடுகின்றது.

மாயோன்: பூவை நிலையின் வெற்றி வீரன்:-

பூவை நிலைத் துறையின் புகழ்நிலைக்கு உரிய கடவுளாகிய மாயோன் வெற்றி வீரனாகின்ற தலைவனுக்கு உவமையாகின்றான்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனைப் போற்றும் முகத்தான், "புகழ் ஓத்தீயே, இகழுநர் அடுநனை" (புறம். 56:13) என மாயோன் உவமிக்கப்படுகின்றான். பிறிதோரிடத்தில்,

புகழ்தலுற்றோர்க்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான்மாறா (புறம்.57:1-3)

என மன்னனது சிறப்பிற்கு மாயோனது சிறப்பு உவமையாகின்றது. இவ்வாறு முல்லை நிலத்தாரின் அகவாழ்விற்கும் புறத்திணை வீரர்களின் (அரசர்களின்) புகழுக்கும் மால் உவமையாக்கப்படுவது எண்ணத்தக்கதாகும். இயற்கையின் மூலபடிவ உருவினனான மாயோன் மாந்தர்தம் வாழ்வியல் கூறுகள் வழி மூலபடிவபாத்திரமாக (Archetypal Charecter) உயர்ந்தமை இன்றியமையாக் குறிப்பாகும்.

மாயோன்: காத்தல் கடவுள்:-

இயற்கையின் உருவாகிய மாயோன் பற்றி குறிப்புகள், கதைத்தன்மையுடன் இணைந்து வளர்ச்சியுற்ற நிலையில் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. காலத்தால் பிற்பட்ட இலக்கியங்களில் அவை புராணிகத் தன்மை மிக்கிருக்கும் பான்மையில் இடம் பெறுகின்றன.

பரிபாடலில் மாயோன் முத்தொழில் புரிபவனாக முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழில் எனப் படைப்பு, அளிப்பு, அழிப்பு, என்னும் தொழில் புரிபவனாக உள்ளான் (பரி.3.71) முத்தொழில் வல்லவனாக மாயோன் இருப்பினும் காத்தல் தொழில் மாயோனுக்கு உரியதாகச் சுட்டப்படுகின்றது. "உலகாள் மன்னவ" (பரி 3.85) என்னும் "ஒருமை வினைமேவு உள்ளத்தினை" (பரி.13.49) என்றும் மாயோனின் காத்தல் தொழில் சுட்டப்படுகிறது. காத்தல் கடவுளாக விளக்கமுற்ற மால் உலக முதல்வனாகப் பேருரு கொண்டமையினையும் பழந்தமிழ் வழி அறிய முடிகின்றது.

மாயோன்: உலக முதல்வன்:-

மாயோனாகிய திருமாலின் முழுமுதற்றன்மையினையும் அவதாரங்களையும் ஆற்றலுடைய முழுமுதற்கடவுளாக உயர்ந்தமையையும் பரிபாடல் குறிப்பிடுகின்றது. இக்குறிப்புகள் வடமொழிப் புராணமரபுடன் இணைந்து செழித்தவை என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

திருமால் அனைத்துக் கடவுளாக உள்ளமையை, "எவ்வயினோயும் நீயே" (பரி.4:67-70) என்ற தொடர் சுட்டுகின்றது. பலராமன், காமன், அநிருத்தன், பிரமன் என ஐவராகவும் மாயோன் உள்ளமையும் பரிபாடலில் (பரி 3.81-94) குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான குறிப்புகள் வைணவப் பஞ்சராத்திரக் கொள்கையின் வளர்ச்சி என்பர் திறனாய்வாளர் (இந்திரபவாநி, சங்க நூல்களில் கிருஷ்ண வழிபாடு, ப.62)

இயற்கையின் உருவாகிய மால் நெடியோனாகி, பேருரு பெற்று கடவுளானமையும், வடமொழிப் புராணக்கலப்பால் கதைத் தன்மையுடன் கூடி வளர்ச்சியுற்றமையையும் கண்டோம். தத்துவப் பொருளாகிய நெடியோன் இயற்கையின் எல்லாப் பொருளிலும் பரந்து விரிந்து ஊடுருவிய நிலையினையும் பரிபாடலில் பரக்கக் காணலாம்.

மாயோன் அவதாரங்கள்:-

அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். அவ்வாறு இறங்குதல் உயிர்களின் பொருட்டு என்றும் கூறுவர். அவதாரம் என்பதற்குத் தோற்றம் என்ற சொல்லாட்சி கையாளப்படுகின்றது. மால் எடுத்த தோற்றங்கள் பத்தென்பர். அவற்றுள் கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருட்டிணன் என எட்டுத் தோற்றங்கள் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர பழந்தமிழில் தொன்மை வகைமை வளர்ச்சி, பி.எச்டி ஆய்வேடு, ப.169)

மாயோன் தொன்மம்: வளர்ச்சியும் சுழற்சியும்:-

மாயோன் தொன்மம் வளர்ச்சி பெற்றுச் சுழற்சி பெற்றமையை அறியலாம்.

இயற்கையின் அடர் பசுமை, கானகத்தின் பரிதி நுழையாத அடர் இருள் முதலிய மூலபடிவு எண்ணங்களுக்கு மாயோன் வித்தாகின்றான். அடர் கானகத்தின் பெரிய பரப்பிற்கும், நெடிய சார்பாக நெடியோனாகக் காடுறை கடவுளாக உயருகின்றான். காடுரை மக்களின் அகவாழ்வாம் காதல் வெற்றிபெற வழியாகும் ஏறு தழுவும் தலைவனாய்ப் பழந்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நனவிலி மனவுணர்வுகளின் உருவாகக் காட்சியளிக்கத் தொடங்குகின்றான். அரசர்களின் புகழுக்கும் படிமமாகி. பூவை நிலை எனும் புறப்பொருளில் மையமிடுகின்றான்.

வடமொழிப் புராணக் கலப்புற்று வளர்ச்சி பெற்ற தொன்மக் கடவுளாகப் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றான். மணிதிகழ் உருபின் மாயோன், மூவேழ், உலகமாய்ப் பரந்தமையும் பிறவாப் பிறப்பாகவும் சிறந்து உலக முதல்வனாகின்றான். விட்டுணுவின் தசாவதாரங்களுள் பல தோற்றங்களின் வடிவாகின்றான். சமய தத்துவச் சார்பின் பொருண்மையாகின்றான். இவ்வாறு மாயோன் தொன்மம் பிறமொழி மற்றும் பண்பாட்டுக் கலப்பால் வளர்ச்சியுற்ற நிலையை உணர முடிகின்றது.

நன்றி: ஆய்வுக்கோவை.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link