ஆய்வுச் சிந்தனைகள்


பின் நவீனத்துவம்: ஒழுங்கவிழ்ப்பின் கூறுகள்

கடந்த காலத்தில் 50-க்கும் மேற்பட்ட இலக்கிய இயக்கங்கள் என்ற சிந்தனைகள் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டன. காலம் செல்லச் செல்ல இன்னும் பல இலக்கிய இயக்கங்கள் தோன்றலாம். அதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. அந்த வரிசையில் சமீப காலமாகப் பெண்ணியம், தலித்தியம் போன்ற இலக்கிய இயக்கங்கள் இன்று ஊற்றெடுத்து ஓடுகின்றன. இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லாமற் விட்ட இலக்கிய இயக்கங்களையும், சொல்லப்பட்டுள்ள இரண்டு இலக்கிய இயக்கங்களையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்ள முயற்சிக்கப் புதிய சிந்தனை தோற்றம் பெற்றுள்ளது. அச்சிந்தனை பின் நவீனத்துவச் சிந்தனை என்று பெயர் பெற்றுள்ளது.

இப்பின்நவீனத்துவ சிந்தனை மேலோட்டமாக ஆறு வகையான கூறுகளைக் கொண்டுள்ளது. அவ்வாறான,

1. பெருங்கதையாடல் தகர்வு.
2. தன்னிலையை முன்னிலைப்படுத்துதல்
3. ஒழுங்கவிழ்ப்பு
4. பகுத்தறிவைக் கேள்விக்குள்ளாக்குவது
5. மொத்த தத்துவத்தை மறுத்தல்
6. பன்மைத் தன்மைகளை வலியுறுத்தல்

எனவாகும்.

இதில் ஒழுங்கவிழ்ப்பு என்னும் கூறு மட்டும் இங்கு நோக்கப்படுகிறது.

ஒழுங்கவிழ்ப்பு:-

மனிதன் எல்லா நிலைகளுக்கும் தான் வாழுகின்ற தளத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்கிறான். அவ்வொழுங்கிற்கு இலக்கணத்தை ஏற்படுத்திக்கின்றான். அவ்விலக்கணத்தின்படி செயற்படுகிறான். இது எதார்த்தமல்ல. இந்த ஒழுங்கு அசவியமற்றது. எதார்த்தத்திற்கு எதிரானது. சான்றாக, "வீடு ஒழுங்காக உள்ளது. அடுக்கி வைக்கப்ட்ட பொருள் அப்படியே அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால் குழந்தைகள் சிலர் உள்ளனர். குழந்தைகள் உள்ள வீட்டில் பொருட்கள் வைத்த இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் உள்ளதெனில் அக்குழந்தைகள் இலக்கணத்துடன் வளர்க்கப்பட்டுள்ளனர். அதனால் குழந்தைப் பருவத்தை அக்குழந்தை இழந்து நிற்கிறது. வீட்டு ஒழுங்கிற்கும், குழந்தைத் தனத்திற்கும் என்ன தொடர்பு? என்ற வினா எழும்பலாம்.

குழந்தை விளையாடினால் வீடு ஒழுங்கற்றுப் போகும். குழந்தை விளையாடாவிட்டால் வீடு ஒழுங்குடன் இருக்கும். குழந்தை விளையாடாமல் இருக்குமா? நாம் அதைத் தடுக்கிறோம். குழந்தை விளையாட்டைத் தடுத்தால் குழந்தைக்கும் நமக்குமுள்ள அன்பு குறையும். வீடு ஒழுங்கெனில் பெறோர் குழந்தையிடம் அன்புப் பிணைப்பு இல்லையென்று பொருளாகும்.

வீடு ஒழுங்கற்று இருப்பதே பின் நவீனத்துவச் சிந்தனையாகும். இதுவே ஒழுங்கவிழ்ப்பாகும். இந்த ஒழுங்கவிழ்ப்பு என்பது எல்லா நிலைகளிலும் நடைபெற வேண்டும் என்பதே பின் நவீனத்துவ வாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், இக்கருத்து மனித ஒழுக்கச் சீர்கேடு நடைபெறும் தளங்களிலோ, மனிதன் சமுதாயத்திற்குச் செய்யும் இடையூறுகளுக்கோ, தனிமனிதனைத் துன்புறுத்தலோ போன்றவைகளுக்குப் பொருந்தாது. அங்கு எதார்த்தம், பின் நவீனம் என்பது மனித ஒழுங்குபடுத்துதலே. ஆனால் மனிதன் செயற்படும் பல தளங்களுக்கு இது பொருந்திப் போகும். அத்தளங்களை அ. மார்க்ஸ் என்னும் பின் நவீனத்துவ வாதியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் "ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள், சாத்தியங்கள்" என்னும் நூலின் வழி சில கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மாற்றுக்கல்வி,
முழுவிடுதலை,
மருத்துவத்தில் மாற்றங்கள்.

என்ற ஒழுங்கவிழ்ப்பின் சில கூறுகளை இக்கட்டுரையாளன் தன் போக்கில் கொண்டு செல்வதே இக்கட்டுரைத் தளம் அ. மார்க்ஸ்-ன் சில கருத்துக்களை விவரிப்பதுதானே தவிர, அதை அப்படியே கொள்வதல்ல இக்கட்டுரை.

உலகில் மனிதன் பகுத்தறிவு வாதி. நன்று - நன்றலல, நடப்பது - நடவாதது, சொல்வது - சொல்லாதது, கற்பிக்கவல்லது - கற்பிக்க இயலாதது என்பவற்றை அறிந்தவனாகிறான். உலகில் நடக்கும் அத்தனையையும் தனக்குள் கொண்டு வருகிறான். அதைப் பின்பற்றுகிறான். பின்பற்றுதல் வழிக் கட்டமைப்புச் செய்யப்படுகிறான். செய்து கொள்கிறான். அதிலிருந்து, சிலர் மாறவே மறுக்கின்றனர். இது எதார்த்தமல்ல என்பது பின்நவீனம்.

ஆனால் மிருகம் கட்டமைத்துக் கொள்வதுமில்லை. கட்டமைக்கப்படுவதுமில்லை. சில மிருகங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் இயற்கை மீறவில்லை. மிருகம் தன் குரல் மாற்றிக் கொள்ள இயலாது. தன் உணவு முறையை மாற்றிக் கொள்ளாது; தெரியாது. தூய்மை தெரியாது. இது எதார்த்தம் என்பது பின்நவீனம்.

இதை மார்க்ஸ். பாவ்ளேஃப்ரெய்ரே வழி நின்று,

"மனிதன் இருத்தல் என்பது மற்றவர்களுடனும் உலகுடனும் உறவினை ஏற்படுத்திக் கொள்வதே. எனவே தன்னில் இருந்து வேறுபட்ட புறவயமான எதார்த்தமாக உலகை மனிதனால் காண முடிகிறது. "தான்", "தானல்லாதது" எனப் பிரித்துப் பார்க்கும்போது தானல்லாத எதார்த்தம் அவனது அறிதலுக்குட்பட்ட பொருளாகி விடுகிறது. மிருகங்கள் அப்படியல்ல. அவை எதார்த்தத்தில் மூழ்கிவிடுகின்றன. எதார்த்தத்தைப் புறவயமாக்கி அவற்றால் பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் மிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்ல, உலகத்தோடும் உள்ளான்" (ப.17) என்கிறார்.

மனிதன் ஒவ்வொரு நாளையும் சிந்திப்பவன் ஒவ்வொரு மனி நேரத்தையும் சிந்திப்பவன். ஒவ்வொரு நிமிடத்தையும் சிந்திப்பவன். அவன் ஆயுட்கணக்கைக் கன நேரத்தில் முடிவு செய்து அதன்படி செயற்படுபவன். எதிர்காலம் பற்றிக் கணக்குப் போடுகின்றான். சிறந்த கருத்தைக் கணக்கில் கொள்பவன். ஆனால் மிருகம் எக்கணக்கையும் போடுவதில்லை மார்க்ஸ்-ன் கருத்தில் "மிருகங்களுக்கு எல்லாமே இன்று தான்" (ப. 18)

மேலும் மனிதன் மிருகம் பற்றிப் பேசும் அந்நூல் மனிதர்களுக்கும் ஏற்படுத்தப்படும் ஒழுங்குகள் அவர்களில் பிரிவினையுண்டாக்குகிறது. அந்தப் பிரிவு ஒருசார் மக்களை மௌனமாக வாழவைத்து ஒடுக்கிவிடுகிறது. அதை,

"ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது சொற்களைப் பேசும் உரிமை இருப்பதில்லை. பண்பாட்டு ஆக்ரமிப்பு நடவடிக்கைகளின் முலமாக மௌனப் பண்பாடு (Culture of Silence) என்று அவர்கள் மீது போர்த்தப்பட்டு இது நிறைவேற்றப்படுகிறது" (ப. 19)

"ஒடுக்கப்பட்டவர்களுக்கான பிரதிவாதிகளால் ஒடுக்கப்படுபவர்களாலேயே உருவாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் முன் நிறுத்தப்படுகின்றனர். பண்பாட்டுத் தளத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய எதிர் உரையாடல் நடவடிக்கைகளைப் பண்பாட்டு ஆக்ரமிப்பு (Cultural Invasion) என்கிறோம். (ப.20) என்ற பத்திகளில் தருகிறார்.

மேற்கண்ட இரு பத்திகளின் மூலம் மனிதனின் ஒழுங்கமைவு மனிதனையே சிறைப்படுத்துவதாக உள்ளது.

எனவே இங்கொரு ஒழுங்கவிழ்ப்புத் தேவைப்படுகிறது. அந்த ஒழுங்கவிழ்ப்பில் சாதி, சமயம் என்னும் கட்டுப்பாடுகள் உடைய வேண்டும். மௌனப் பண்பாடு வளர்த்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். மௌனப் பண்பாட்டிலிருந்து வெளியேறி ஒடுக்குவோரிடமிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதே அ. மார்க்ஸ் அவர்களின் கருத்தாகப்படுகிறது.

மேற்கண்ட செயல் நடைபெற வேண்டுமெனில், "விமர்சன உணர்வுநிலை" உருவாக வேண்டும். அந்த விமர்சன உணர்வு நிலையில், "மௌனம், செயலற்ற தேக்கம் நெகிழ்வற்ற அதிகாரத்துவ அரசு ஆகியவற்றுக்குப் பதிலாக எளிதில் ஊடுருவக்கூடிய, கேள்வி கேட்கும் திறனுடைய ஓய்ச்சலற்ற உரையாடல் நிரம்பிய வாழ்முறையும், சனநாயக அரசு பற்றிய கருத்தாக்கங்களும் இடம் பெறுகின்றன" (ப. 24) என்கிறார் மார்க்ஸ்.

இப்போதுள்ள கல்வியை ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வருகிறார் மார்க்ஸ்.

அங்கொருங்கமைவு என்பது, "எந்த முழுமையுடன் இணைத்துப் பார்ப்பதால் விமர்சனச் சிந்தனைகள் தோன்றுமோ அந்த முழுமையிலிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் விலகியிருக்கும் விசயங்களைச் சொற்பொலிவின் மூலம் ஆசிரியர் நிரப்புகிறார்" (ப. 26) என்கிறார்.

இதை நாம் ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பல்கலைக் கழகம், கல்லூரி, வகுப்பறை இந்த வழியில் மாணவரிடம் வந்து சேரும் கல்வி வகைமுறைக்குள் இடப்பட்டதாக, உறைக்குள் இடப்பட்டதாக, உறைக்குள் இட்ட கத்தியாக நிற்கிறது. இது தாண்டும்போது வெளிப்பாடம் (Out of position) எனத் தள்ளப்படுகிறது. அதே போல், ஆசிரியர், மாணவர் என்ற நிலையையே அங்கீகாரம் செய்யும் நிலையாகத் தெரிகிறது. இந்த ஒழுங்கமைவு சிதைக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஓமியோபதியை முன்னிறுத்துவதற்கான காரணிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.

1. நோயாளியைப் பிரத்தியோகத்தின், நோய்க்குறிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நோயாளிக்கான தீர்வைத் தீர்மானிக்கிறது.
2. உடலை ஓர் உயிரியல் முழுமையாகப் பார்க்கிறது.
3. நோய்த்தீர்வுக்கான விதிகளை உருவாக்குகிறது.
4. நோய்க் குறிகளுக்கு அடிப்படையான காரணியை அகற்றுகிறது.
5. ஆரோக்கியமான மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகளினடிப்படையில் மருந்தின் பயன்பாட்டை ஓமியோபதி தீர்மானிக்கிறது.
6. மருத்துவரின் ஆக்கத்திறனுக்கு முழுவாய்ப்பளிக்கும் நோய்த் தீர்வுக்கலையாக அணுகப்படுகிறது.
7. நோய்த் தீர்வு என்பதை எதையும் சார்ந்திராத தனித்துறையாக மாற்றுகிறது.
8. குறிப்பிட்ட உடலுறுப்புகளின் பெயரால் நோயை அழைப்பதில்லை.

மேற்கண்ட காரணங்களால் ஓமியோபதியை முன்னிறுத்துகிறார்.

ஏன்? அலோபதியை ஒழுங்கவிழ்ப்புச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

1. பொருளாதாரச் சுரண்டல், காலனியக் கொள்கை என்பதைத்தவிர நவீன மருத்துவம் என்பது அணுகல் முறையிலேயே பிற்கால முதலாளியத் தன்மைக்கேற்றவாறு அதிகாரங்களை மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் களத்தில் குவிக்கும் நோக்குடையதாக இருக்கிறது. (ப.72)

2. நவீன மருத்துவத்தில் நோய் தீர்வு பற்றி விதிகள் எதுமில்லை. நோய்க் காரணிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்தல், நோய்ப் பெயரின் அடிப்படையில் அணுகுதல், முன்கூட்டி அனுமானித்து வைத்தியம் செய்தல் எனப் பல்வேறு அணுகுமுறைகளை அது கையாளுகிறது.

மேற்கண்ட நிலைகளில் அலோபதி மனிதனைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த அதில் ஒழுங்கவிழ்ப்புச் செய்ய வேண்டியுள்ளது என அ. மார்க்ஸ வலியுறுத்துகிறார்.

நன்றி: ஆய்வுக்கோவை.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link