ஆய்வுச் சிந்தனைகள்


இலக்கியத்தில் அலர்

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அவனால் தனித்து இயங்க இயலுவதில்லை. ஏதேனும் ஒரு காரணம் பற்றி அவன் தன்னைச் சுற்றி இருப்போரைச் சார்ந்திருக்கின்றான். இந்நிலையில் அவன் எந்த ஒரு செயலையும் சுற்றி இருப்போரின் உடன்பாடு இன்றிச் செய்ய இயலுவதில்லை. அவ்வாறு செய்கையில் அவன் சமுதாயத்தின் விமர்சனத்திற்கு ஆளாகிறான். இது சங்க இலக்கியத்தில் அலர் என்று சுட்டப்பட்டது எனலாம். சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம் வரையிலும், அலர் என்ற சொல் சுட்டப்படுகின்றது. அதனைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அலர்:

அலர், அம்பல், கவ்வை ஆகியவை ஒத்த பொருளைத் தரும் சொற்களாகும். இலக்கியத்தில், கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் "பழிச்சொல்" என்று குறிக்கப்படுகின்றது. மன்னன் தவறு செய்தால் அவனைத் திருத்துவதற்காகக் கூறும் சொற்கள் "செவியறிவுறூஉ" என்று சுட்டப்படுகின்றது. ஆனால் களவுக் காலத்தில் தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கையில் ஊர்ப்பெண்கள் கூறும் சொற்களே அம்பல், அலர், கவ்வை என்று சுட்டப்படுகின்றது.

அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல் என்றும் அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், "அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று, இன்னிதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்" என்று விளங்குவர்.

கௌவை என்பதற்குக் "கலக்கம், துன்பம், பழிச்சொல்" எனறு தமிழ்ப்பேரகராதி பெருள் கூறும். ஆகவே இளம் பெண்ணின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் என்றும் குறிக்கப்படும் எனலாம்.

அலர் தோன்றக் காரணம்:-

சங்க இலக்கியத்தில் களவு மணம் தவறாகக் கொள்ளப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்ற தலைவனைத் தாமாகவே தேடிக் கொள்வதும், களவு மணம் புரிவதும், உடன்போக்கில் ஈடுபடுவதும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தினை அறிந்த ஊர்ப் பெண்டிர் அவர்கள் உறவைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது தலைவன், தலைவி, களவு வாழ்வு கற்பு வாழ்வாக மலரவே துணையாக இருந்துள்ளது என்பது விளங்கும்.

ஆணின் மனம் என்றும் களவு வாழ்வினையே நீட்டிக்கவிரும்பும். ஏனெனில் களவு காலத்தில் எந்த வித சுமையும் இன்றித் தலைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே தலைவனின் மனம் பெரிதாக எண்ணும். ஆனால் தலைவி மனமோ தனக்குச் சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதி கிடைப்பதனையே பெரியதாக எண்ணும். நேரடியாகத் தலைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறுவது அவன் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைச் சுட்டுவதாக அமையும். ஆனால் தலைவியைப் பற்றிப் பிறர் தவறாகக் கூறினால் அதனைத் தலைவனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே "அலர்" தோன்றியதாகக் கூறி மிகுதியும் அக இலக்கியத்தில் வரைவு கடா அதல் நிகழ்கின்றது. வரைவுகடா அதலின் பொருட்டே அலரும் விரித்துரைக்கப்படுகிறது.

அலர் தூற்றுபவர்:-

இலக்கியங்களில் அலர் தூற்றுபவர் பெண்களாகவே சுட்டப்படுகின்றனர்.

வெவ்வாய்ப் பெண்டிர் (குறுந். 373, அகம். 50)
அலர் வாய்ப் பெண்டிர் (நற். 36)
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)
அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம். 203)

என்று இவர்கள் சுட்டப்படுகின்றனர். இதன் காரணம் என்னவென்று ஆராயப் புகுவோமேயானால் தமிழ்ச் சமுதாயத்தின் நாகரிகம் புலனாகும்.

அக இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர் கூற்றிற்கு உரியவர்களாகக் கூறும்போது தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, விறலி, பரத்தை என்று பெரும்பாலும் பெண்களையே சுட்டுகிறார். அறத்தோடு நிற்றலை விளக்கும் போதும் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் வீட்டில் இருப்பவர்களுக்கும் அறத்தோடு நிற்பர் என்று கூறுகிறார். இங்கு எந்த ஓர் இடத்திலும் தலைவன், பாங்கன், பாணன் இவர்களைத் தவிர வேறு ஓர் ஆண் இடம் பெறவில்லை. ஒரு பெண்ணின் களவொழுக்கம் குறித்து, வேறு ஆண் மகன் வெளிப்படையாகப் பேசுவது நாகரிகம் அன்று என்ற தமிழரின் பண்பாட்டின் வெளிப்பாடே இஃது எனலாம்.

அலர் தூற்றும் தன்மை:-

பெண்கள் அலர் தூற்றும் தன்மையினை நற்றிணைப் பாடல் ஒன்று அழகாக வெளிக்காட்டும்.

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுபோல் வலந்தனள்.... (நற். 149)

இங்கு அம்பல் என்பது தமக்குள் கரவாகப் பேசியதைக் குறிக்கும். தலைவி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர் எனலாம். தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை அடித்தாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே தலைவியை அடித்தாள் எனலாம்.

அலர் அச்சம்:-

ஊரில் அலர் பரவிய நிலையில் தலைவிக்குத் துன்பம் ஒருபுறம் தோன்றும் எனினும் மறுபுறம் அலரின் விளைவால் தலைவன் விரைந்து திருமணம் செய்து கொள்வான் என்ற எண்ணம் அவளுக்கு இன்பத்தையே தோற்றுவிக்கும். ஆயினும், அலரினைத் தாய் அறிந்தால் நேரிடும் விளைவை எண்ணி அஞ்சுகிறாள். அன்னை கோபம் கொண்டு தண்டிப்பாளே என்ற எண்ணத்தை விடவும் இற்செறித்துவிட்டால் தலைவனைச் சந்திக்க இயலாது போய்விடுமே என்ற எண்ணமே அங்கு மேலோங்கி இருப்பதை அறிய முடிகின்றது.

அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை
அரியவாகும் நமக்கு (நற்.4)

என்ற ஏக்கக் குரலையே நாம் கேட்க முடிகிறது.

தலைவியின் மனநிலை:-

அலருக்கா ஒருபுறம் வருந்தினாலும் மற்றொரு புறம் தலைவி மகிழவே செய்வாள். தடைபோட, தடைபோட காதலில் ஆழம் அதிகரிக்கும்.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய் (குறள் 1147)

என்பது வள்ளுவர் வாக்கு. இதே கருத்தினை,

ஊரவர் கவ்வை எருஇட்டு அன்னை சொல்நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேர்அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (திருவாய்மொழி. 5.3.4)

என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் தெரிவித்துள்ளார். தலைவியின் களவொழுக்கத்தை முதலில் தாய் அறிந்த பின்பே ஊரார் அறிவர். ஆனால் ஊரார் பழியை முதலில் கூறிப் பின் தாயாரின் வார்த்தையாகிற நீர் பாய்ச்சுவதற்கு முன்னே நிகழக்கூடியதான எருவாக இங்கு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் "தன்னைப் போல மகள் உலக மரியாதைகளை மீறாள்" என்றே தாய் எண்ணியிருந்தாள். ஆனால் ஊரார் பழி சொன்ன பின்னே தாய் அறிந்தாள் என்பதாகும். அன்னை சொல்லை எருவாகவும், ஊரார் பழியை நீராகவும் உருவகம் செய்யாதது ஏன் என்றால், எரு அடியிலே ஒருமுறை இடப்படுவது; நீர் அடிக்கடி பாய்ச்சப்படுவது ஊரார் ஒருமுறை சொல்லி விட்டுவிடுவர். ஆனால் தாயோ வீட்டிற்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாகக் கூறிக் கொண்டிருப்பாள். ஆகவே தாயின் வார்த்தை நீராகக் கூறப்பட்டது.

அலர் என்பது தலைவன், தலைவியின் களவொழுக்கத்திற்குத் தடையாக இருப்பது. ஆயினும் களவு வாழ்வு கற்பாக மாறுவதற்கு வழி வகுப்பது. ஆகவே அலரைத் தமிழரின் பண்பாட்டினுள் அடக்கலாம். பண்பாடடின் வெளிப்பாடாக அமைந்த அலர் பின்னாளில் இலக்கியச் சுவைக்காகவும், நாடகத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்பட்டது எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link