ஆய்வுச் சிந்தனைகள்


நம்பிக்கையே வழிபாடு

மனிதன் தங்களின் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக அமைவது, தாம் வணங்கும் தெய்வத்தின் அருட்செயல்களே என நம்பினர். இந்த நம்பிக்கையின் ஊற்றுக்கண் உள்மனம் என்பர். உள்மனம் மூளைக்கு உணர்த்தும் எண்ணங்கள் உண்மையாகி உறுதிபடும்போது நம்பிக்கையாகிறது. நம்பிக்கை அடிப்படையில் வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டில் ஒவ்வொரு செயலிலும் காரணங்களும், காரியங்களும் அறிவியல் உண்மைகளும் பொதிந்தும் செரிந்தும் காணப்படுகின்றன.

வழிபாட்டின் தொடக்கம்:

மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதனை உணர ஆரம்பித்த நிலையில் வழிபாட்டுக் கோட்பாடுகள் உருவாகின. அச்ச உணர்வே வழிபாட்டின் அடிப்படை எனலாம். இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் அதனை அமைதிபடுத்த வழிபாட்டை உருவாக்கினான். "இருக்கு வேத கால மக்கள் இயற்கையினையும் பாம்பு போன்ற உயிரினங்களையும் வழிபட்டு வந்தனர்." என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆதிமனிதனின் தொடக்க வழிபாடு இயற்கை வழிபாடு எனலாம்.

ஆவி வழிபாடு:

மனிதன் தன்னுடன் வாழ்ந்த ஒருவன் இறந்து விட்டால் அவனின் ஆவி பூமியில் உலவும் என நம்பினான். ஆவிகள் மனிதனின் அனைத்து செயல்களையும் இயக்க வல்லவை என்ற எண்ணமே ஆவி வழிபாட்டுக்கு அடிகோலியது எனலாம். இதனை "சமயத்தின் தொடக்கம் ஆவிகளின் பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது" என்பர் டைலர். இதனால் ஆவிகளை அமைதிபடுத்தவும், நன்மைகளைப் பெறவும் இறந்தவர்களுக்கு வழிபாடு செய்தனர்.

முன்னோர் வழிபாடு:

நம் முன்னோர்கள் இறந்த பின்னர் நம்முடன் காற்று வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வழிபடுகின்றனர். நடுகல் வழிபாடே முன்னோர்கள் வழிபாடு. பிற்காலத்தில் நடுகல் வழிபாடே வழிபாடு கோயில்களாக மாறின.

ஆவி வழிபாட்டிலிருந்து தெய்வ வழிபாடும், தெய்வ வழிபாட்டிலிருந்து சிறுதெய்வ வழிபாடும் தோன்றின. சிறுதெய்வ வழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றியது என்பர்.

சிறுதெய்வ வழிபாடு:

சமூகத்தின் அடித்தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைச் சிறுதெய்வங்கள் என்றும் மேல் தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் என்றும் அழைப்பர். சிறு தெய்வ வழிபாட்டில் அம்மன் வழிபாடே சிறப்பிடம் பெறுகிறது. திராவிடர்களின் தாய்தெய்வ வழிபாட்டையே குறிக்கிறது. ஆதிமனிதனின் வளமைச் சடங்குகள் பெண்ணுடன் தொடர்பு உடையதாலும் அனைத்துக்கும் இருப்பிடமான பூமியைப் பெண்ணாகக் கருதுவதாலும் பெண் தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பிற்போக்கில் ஆண் ஆதிக்க காலத்தில் ஆண் தெய்வங்களையும் படைத்துக் கொண்டனர்.

வழிபாட்டு முறைகள்:

சிறுதெய்வ வழிபாடு ஓர் வரையறைக்கு உட்படாதது, இரத்தபலி கொடுத்தல், சடங்குகளைச் செய்தல், நிகழ்த்திக் காட்டுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளைக் கொண்டது.

பலிகொடுத்தலும் நம்பிக்கையும்:

தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிட்டு இரத்தத்தைக் காணிக்கை செலுத்துவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நரி முதலிய விலங்குகளைப் பலியிடுகின்றனர். தெய்வங்களுக்கு பலியீடு செய்வதனால் மக்கள் தமக்கு நன்மை உண்டாகும் என நம்பி பலியிடுகின்றனர். தெய்வங்கள், இரத்த தாகம் கொண்டவை. ஆனால் இரத்தத்தைக் கடவுளுக்குப் பலியிட்டு உடலை மனிதன் சாப்பிடுகிறான்.

சிலப்பதிகாரக் காலத்தில் மனிதனைக் கடவுளுக்குப் பலி கொடுத்துள்ளனர். இதனை,
"உயிர்பலி புண்ணும் உருமுக்கு நன் முழுக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி"

வெற்றியின் பொருட்டு வீரர்கள் தங்களின் தலையைப் பலி கொடுத்ததை அறியலாம். காலப்போக்கிலும், நாகரிகத்தாலும், சட்டத்தின் காரணமாகவும் நரபலி நிறுத்தப்பட்டது.

காளைமாடு பலியிடல்:

சங்க காலத்தில் பசுமாட்டினைப் பலி கொடுத்துள்ளனர். "வேம்பினடியில் உறையும் தெய்வத்திற்குக் கொழுப்பு நிறைந்த பசுவைப் பலி கொடுத்துள்ளனர். இக்காலத்தில் காளிக் கோயில்களுக்குக் காளைக்கன்றுகளைப் பலி கொடுக்கின்றனர்.

பெண் இனத்தை இனப்பெருக்கத்திற்காகப் பலி கொடுப்பதில்லை. காளைக்கன்றுகளைப் பலிகொடுப்பதினால் அவ்வினம் பெருகும் என நம்புகின்றனர்.

சுடுவான் சுடுதல்:

அங்காள அம்மன் கோயில் குட்டிப்போடாத பெண் ஆட்டைக் கூட்டி வந்து பக்கவாட்டில் ஈரலை எடுத்துக் கோயிலை ஈரலுடனும் ஆட்டுடனும் சுற்றி வருவர். வழியில் ஆடு இறந்து விட்டால் ஊருக்குக் கேடு என்றும், இறக்கவில்லை என்றால் ஊர் அவ்வருடம் செழிப்படையும் என்றும், மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆட்டிலிருந்து எடுத்த ஈரலைச் சுட்டுச் சாமிக்குப் படைப்பர். இதனையே "சுடுவான் சுடுதல் எனபர்"

பரண் பூஜை:

பரண் பூஜை என்பது நான்கு கல்லை நட்டு அதில் கருங்கிடாயை வைத்துக் கத்தியால் பிளப்பர். கிடாயின் இரத்தத்தில் வாழைப் பழத்தைப் போட்டு பிணைந்து பூசாரிகள் உண்பர். இதனைப் பரண் பூஜை என்பர். இப்பழத்தைச் சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பன்றி குத்துதல்:

சிறு தெய்வ வழிபாட்டில் பன்றி வேட்டை சடங்காகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மக்கள் ஒன்று கூடி பயிர்கள் நாசம் செய்யும் பன்றியை அழித்தனர். அதனை நினைவு கூறும் முகமாக இன்னும் கிராம தேவதைக்குப் "பன்றிகுத்து" சடங்கைச் செய்கின்றனர். கொங்கு நாட்டில் இப்பன்றி குத்தைச் "சலகை குத்தல்" என்று அழைக்கின்றனர்.

பொதுவாக மனிதனின் தீமைகளை விலங்குகளுக்கு ஏற்றி அதனை இறைவனுக்குப் பலியிட்டு விடுவதால் மனிதனின் தீமைகள் மறைந்து விடுவதாக நம்புகின்றனர். கோயிலில் பலியிடப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதனால் சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடல் ஒரு புனிதச் சடங்காகக் கருதப்படுகிறது.

பிற்காலத்தில் உயிர் பலியிடுதல் பாவம் எனக் கருதி போலிப்பலி கொடுத்தனர். பூசணிக்காய் எலுமிச்சைப்பழம் ஆகியவற்றை வெட்டி, அதில் குங்குமத்தைப் பூசி பலியாகக் கொடுக்கின்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.

பூக்குழி (குண்டம்) இறங்கலும் பூச்சட்டி எடுத்தலும்:

"நெருப்பைத் தூய்மையின் அடையாளமாகப் பழந்தமிழ் மக்கள் எண்ணினர். தூய்மையடைய தீ மிதிக்க வேண்டும் என்பது சமுதாயக் கோட்பாடாக இருந்திருக்கிறது."

இக்கருத்தின் அடிப்படையில், இராமன் சீதையைத் தூய்மையின் பொருட்டு நெருப்பில் இறங்கி வரச் செய்தான் என்பர்.

மாரியம்மன் கோயில்களில் தீச்சட்டி எடுத்தல் ஒரு சடங்காக இன்றும் நடைபெறுகிறது. "தீச்சட்டி எடுத்தல் கண்ணகி மதுரையை எரித்ததின் விளைவாக ஏற்பட்டது என்கிறார் மு. வரதராசன் "மக்களைக் காக்கும் பொருட்டு அம்மன் அக்கினி பகவானைக் கையிலேந்தினாள்" அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மக்கள் அதே அக்னியைக் கையிலேந்துகிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

தீச்சட்டி எடுத்தல் அம்மனின் சினத்தைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படும் வழிபாடாகும். தீச்சட்டி சூரியனைக் கையிலேந்தும் குறியீடு என்பர்.

சாமியாட்டம்:

தொல்காப்பியர் காலத்திலேயே சாமியாட்டம் இருந்திருக்கிறது சாமியாடியை "வேலன்" என்று அழைத்தனர்.

"வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்" என்பர்.

"வேலன் வந்து வெறியாடும் வெங்களம்" என்று சிலம்பு பகரும் தெய்வத்தின் ஆவி குறிப்பிட்ட மனிதன் வாயிலாக வெளிப்பட்டுத் தோன்றும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாமியாட்டம் இடம் பெறுகிறது.

"சாமியாடுபவர்கள் மனித உருப்பெற்ற தெய்வங்கள்" என்று பிரேசர் குறிப்பிடுகிறார்.

இப்போது சாமியாட்டம் சமூக அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் ஆடுகின்றனர். மனநிலையில் பாதிக்கப்பட்டவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்த ஒரு கருவியாகச் சாமியாட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் சிலர் விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் சாமியாடுகின்றனர்.

பேய் பிடித்தல்:

விபத்து, கொலை, தற்கொலை போன்றவற்றால் இறந்தவர்களே பேய்களாக மாறுகின்றனர். உண்மையில் பேய்பிடித்தல் என்பது ஆழ்மன நிலையில் ஏற்படும் பாதிப்புகளே.

பேய் பிடித்தல் மனநோய் என்பர். உடலமைப்பு, பாரம்பரியம், குடும்பச் சூழ்நிலை, சமூக கலாச்சாரம் பொருளாதார நிலைகள் பண்பியல் தொகுப்பு மற்றும் மனவளர்ச்சி குறைபாடுகள் உண்டாகும்போது மனநோய் ஏற்படுகிறது. இதனையே பேய் பிடித்தல் என்கின்றனர்.

ஏமாற்றங்களால் ஏற்படும் உணர்வினால் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. நரம்பு மண்டலத்தின் சீர் குலைவினால் ஏற்படும் மாற்றங்களையே பேய் பிடித்தல் என்கின்றனர். கோயில்களில் நடைபெறும் பேயோட்டும் சடங்கு உளவியல் மருத்துவத்துக்கு நிகரானது என்பர் டாக்டர். சு.சண்முகசுந்தரம்.

முளைப்பாலிகை:

முளைப்பாலிகை மந்திரத்துடன் தொடர்புடைய பாவனை நடனம் என்பர். பாவனை நடனத்தின் மூலம் மழை வேண்டுவது மட்டுமின்றி, தானியங்களின் செழிப்பையும் மானுடச் செழிப்பையும் தூண்டும். செழிப்புச் சடங்காகவும் முளைப்பாலிகை அமைந்துள்ளது. முளைப்பாலிகை நன்கு செழித்து வளர்ந்தால் அவ்வாண்டு விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை கொண்டனர். முளைப்பாலிகையை வீட்டு முற்றத்தில் வைத்துக் கும்மி கொட்டுவர். இதனை "நற்பலன் மிகுதியாகப் பயிர்கள் தர நல்லிசை கூட்டவேண்டும் என்ற ஏ.என்.பெருமாள் கூற்றுப் பொருத்தமுடையதாகும்.

மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றன. அச்சத்தின் அடிப்படையில் இறைவழிபாடு தொடங்கினாலும், நன்றி உணர்வில் முடிவடைகிறது எனலாம். கடவுளிடம் ஒரு செயலை எதிர்பார்க்கும்போது கைமாறு செய்யவேண்டும் என்பதற்காகப் பல நேர்த்தி கடன்களை உருவாக்கி கொண்டனர். காரணம் தெரியாமலேயே மனிதன் வழிபாட்டுடன் பல மருத்துவத்தையும், உளவியலையும், விஞ்ஞானத்தையும் கையாண்டுள்ளனர்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link