ஆய்வுச் சிந்தனைகள்


தமிழ்ஒளி கவிதைகள் - மையம்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர் என்ற முறையில், ஆரம்பகாலத்தில் திராவிட மாணவர் கழகத்தில் பங்கு கொண்டிருந்தவர் (அவர் வாழ்ந்த காலம் 21.09.1924 முதல் 29.3.1965). 1947-ல் புதுவையிலிருந்து சென்னை வந்து தாம் அணிந்திருந்த கருஞ்சட்டையைக் களைந்துவிட்டு, பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அவர்தான் விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி. அவருடைய கவிதைகள் தனித்தன்மை கொண்டவை எனக் கூறவேண்டும். பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாணியில் இல்லாமல் ஒரு தனித்தன்மையோடு பாடல்கள் பாடினார். "அந்தத் தனித்தன்மைதான் கொள்கை முழக்கம்! உழைக்கும் வர்க்கத்தின் போர்க் குணத்தை, வீறுகொண்ட எழுச்சியை அவர் அற்புதமாகப் பாடியிருந்தார். அது மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கையைச் சித்தரிப்பதிலும் அவர் வெளிப்படுத்தியிருந்த வேதனைகள், வெற்றுப் புலம்பல்களாக இல்லாமல், வீர உரைகளாக வெடித்துச் சிதறிய வேகம் தமிழ்ஒளியின் தனித்தன்மைக்குச் சான்றாக விளங்கின" என்று அவர் கவிதைகளின் பதிப்பாசிரியர் செ.து. சஞ்சீவி கூறுகிறார்.

பாரதி பரப்பு: நோக்கம்

பாரதியைப் பாடாத கவிஞர்கள் இல்லை. பாரதியைப் பின்பற்றாத கவிதைகள் இல்லை. அத்தனையும் பாரதியின் புகழ்பாடும்; வணங்கும். பாரதியை அவன் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் எவ்வாறு மதித்தனர்? ஏன் அவனைப் பாதுகாக்கவில்லை என்பதையெல்லாம் எண்ணவில்லை. காரணம் பாரதியின் பரிணாமம் பெற்ற விஸ்வரூபம்தான் அந்தக் கவிஞர்களுக்குத் தெரிகிறதே ஒழிய, அவன் அவ்வாறு விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தான் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால் தமிழ்ஒளியோ, தாம் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எவ்வாறு சில தனி மனிதர்களாலும் சமுதாயத்தாலும் சீரழிக்கப்பட்டார் என்பதைத் தம் நண்பரும் பதிப்பாசிரியருமாகிய செ.மு.சஞ்சீவியிடம் உரையாடும்போது வெளிப்படுத்திய உணர்வால் புரிந்துகொள்ள முடியும். அந்த உரையாடல் வருமாறு:

"நான் செத்துவிட்டதாக ஒரு செய்தியைப் பரப்பினார்களே, (தமிழ்ஒளி)
"இல்லை" என்றேன் (செ.து. சஞ்சீவி)

"அவன்தான், அந்தத் துரோகி முத்திரைக் கதை எழுத்தாளன்தான் அந்தப் பொய்யைப் பரப்பினான். நான் அவனை எழுத்தாளன் ஆக்கியதற்கு, எப்படி நன்றிக் கடன் செலுத்திவிட்டான் பார்த்தீர்களா?" (தமிழ்ஒளி)

இது ஏற்படுத்தியது போன்ற மனஅழுத்தம், உளைச்சல் பாரதிக்குத் தோன்றியிருக்கும் என்பதை உணர்ந்து "பிரதிக்ஞை" என்ற ஒரு கவிதையை இரண்டு பகுதியாக அமைத்துள்ளார். அந்தக் கவிதையின் முதற்பகுதி தமிழர்களின் ஆத்மா பேசுவதாகவும், இரண்டாம் பகுதி தமிழர்கள் பேசுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் பாரதிக்கு அந்தப் பகுதி மக்கள் கொடுக்காத அங்கிகாரத்தை அங்கலாய்த்துப் பாடுகிறார். அப்போது,

"நன்மை செய வந்தவனை நாடு கடத்திவிட்டோம் / இன்மை, துயர்ச்சுமையை ஏற்றிவிட்டோம் உன்முதுகில்" என்று வேதனையோடு பாடுகின்ற போக்கில், "பாட்டைத் திருத்திப் பதத்தைத் தனியாக்கிப் / போட்டோம், அதற்காகப் போட்டோம் சிறையிலுனை/" என்று முடிக்கிறார்.

ஏழைகள் சார்பு கவிஞர்:

தமிழ்ஒளி பொதுவாகத் தொழிலாளியின் துயரத்தைப் பாடி, அவனுக்காக அவனைச் சார்ந்தே எழுதுபவர். அப்படி எழுதும்போது ஒரு கதை சொல்வது போலச் செய்தியை அமைத்துக் கருவை விரிவாக்குவார். அந்த விரிவாக்கம் கவிதையின் மையக் கருத்தைச் சுற்றிப் பின்னப்படும் கெட்டி இழைகளாலான வலைப்பின்னல். அவருடைய கவிதையில் கையாளப்படும் மையக் கருத்துக்குரிய மக்களின் வாழ்க்கை நிலையை முழுமையாகப் படித்து முடிக்கும்போது தமிழ்ஒளியின் நோக்கத்தைச் சார்ந்தவர்களாக, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியும். மாற்றிக் கொள்வோம் என்பதை "நீ யார் பக்கம்?" என்ற கவிதை வாசிப்பின் அனுபவம் நமக்குப் புலப்படுத்தும். அந்தப் பாடலில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வாழ்க்கையும் அவன் நோய்வாய்ப்படுவதும், யாரும் கருணை காட்டாமல் கவனிப்பாரற்றுக் கிடத்தலும் முதலாளியின் மனிதத் தன்மை இல்லாமையும் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரியின் இருண்ட மனநிலையும், மனித நேயம் இன்மையும் போன்ற கொடுமைகளால் ஓர் ஏழை எப்படி வதைபடுகிறான்? அந்த வதையிலிருந்து எப்படி ஒவ்வொரு ஏழைத் தொழிலாளியும் உழைக்கும் வர்க்கமும் விடுபடுவது என்பதைப் பற்றிப் பாடி இருக்கிறார்.

குடிசையில் மனைவி படும் துன்பம், ஆலையில் அந்தத் தொழிலாளி படும் துயரம் - இந்த இரண்டையும் முதன்மைப்படுத்தி வந்த கவிஞர் தமிழ்ஒளி, தெளிவாகத் தம் சார்பைச் சொல்லிவிடுகிறார். இந்தப் பாடல் ஒரு ஓரங்க நாடகம் போல் அமைந்துள்ளது. ஒரு காட்சி குடிசையில்; அடுத்த காட்சி ஆலையில்; மூன்றாவது காட்சி மீண்டும் குடிசையில்; உள்ளத்தை உருக்குகின்ற பச்சாதாப உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் ஏழையின் நிலையைச் சொல்கிறார்.

உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வேறுவழி இல்லாத கட்டாயத்தால் ஒரு தொழிலாளி ஆலை வேலைக்குச் சென்றுள்ளான். அவன் குடும்பத்தில் வறுமை. அதை மனைவி "வாடிவிட்ட பயிரானோம்! நாளும் நம்மை மரண நிழல் தொடர்கிறது பசி ரூபத்தில்!" என்று வேதனையுற்று, வேலைக்குச் சென்றுள்ள கணவனுக்காக "மூடி வைத்த நொய் கஞ்சி மொந்தையிலே கிடக்கிறது!" என்று குமுறுகிறாள். அப்போது அவள் நிலையை, "பேய் போன்ற முதலாளி கொடிய பாவி, பெருங்குருடன் - விடுமுறையும் அளிக்க மாட்டான் / வாய் செத்த ஏழைகளை வாட்டுகிறான் வறுமையிலே புழுவானோம் என்ன செய்வோம்? / தேய்கின்றோம்" எனப் பலவும் எண்ணி எண்ணித் தேம்பி விழி நீர் சொரிந்து கண்ணயர்ந்தாள்! என்று தமிழ்ஒளி படம்பிடித்துக் காட்டுகிறார்.

ஆலையில் அவள் கணவன் கடுமையான காய்ச்சலினால், உடல் துரும்பாக இளைத்து உணவு உண்ணமுடியாத வேதனையினால் ஆலைக்குரிய மருத்துவரிடம் செல்கிறான். அந்த மருத்துவரோ, ஒரு காதல் கதையை, புத்தகத்தில் படித்துக்கொண்டு, ஆனந்த சஞ்சாரத்தில் இருக்கின்றார். அவன் இருமிக் கொண்டு சென்றது அவருக்கு இடையூறு ஆகிவிட்டது. அதனால் "நாய் மகனே ஏன் வந்தாய் இந்நேரத்தில்? நாசமாய்ப் போனாயா? கொள்ளை நோயா? / ஓய்ந்திருக்கும் நேரத்தில் வந்துவிட்டாய், உயிர்வாங்க" எனச் சொல்லிக் குதித்தார் டாக்டர். என்று அந்த நேரத்தில் டாக்டர் காதல் கதை படிக்கும் சுவாரஸ்யத்தில் தடை ஏற்பட்டுவிட்டதால் கோபப்படுவதைக் காட்டுகிறார். ஏழைத் தொழிலாளியோ தன் வாழ்க்கையே ருசியற்றுப் போனதால் வெந்துயர் அடைந்து கலங்குகிறான் என்று சமுதாய முரண்பாட்டை, வர்க்க முரண்பாட்டைப் படம் பிடித்துக்காட்டுகிறார்; குமுறுகிறார். அந்த குமுறலின் - கோபத்தின் - வெளிப்பாடு.

"காதகரைப் பொதுவிடத்தில் ஏற்றி வைத்தால் கடுங்கொலைகள் நடக்காமல் என்ன நேரும்?" என்ற வரிகள்! நெருப்பை உமிழ்கின்றன! நம்மையும் நெருப்பாகச் சிவக்க வைக்கின்றன. தொழிலாளி எவ்வளவோ மன்றாடியும், கெஞ்சியும் கேட்டுக் கொண்டபிறகு, அந்த மருத்துவர் அவசரமாய் எழுந்து சென்று அலமாரிக்குள் அடுக்கி வைத்திருந்த மருந்துகளுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விழுங்கு என்றார். விழுங்கிவிட்டான். சிறிது நேரத்தில் கண்கள் சுற்ற, இருள் அடைய, தலை சுற்றத் தள்ளாடிக் கீழே விழுந்துவிட்டான். அடி வயிறு கலக்கியது; மனைவி முகம் நினைவில் நிழலாடியது. ஏதோ சொல்ல வாய் திறந்தான். வாந்தி; சாய்ந்தான் அலறிக்கொண்டே! அதனைத் தமிழ்ஒளி, "............ தலையெடுத்த நாள் முதலாய் உழைத்ததன்றி / வாய்த்த பலன் காணாதான், வறுமையன்றி வளம் படைத்து வாழாதான் உலகைவிட்டுப் / போய்விட்டான்! மரணத்தை யணைத்துக் கொண்டான்! என்று சோகமாகச் சொல்கிறார்.

ஏழைகளின் வேதனைக்கான காரணி:

துறைமுகத் தொழிலாளி, கழைக்கூத்தாடி போன்றோர்களின் வாழ்க்கை நிலை மிகவும் வேதனைக்குரியது. அதற்கெல்லாம் காரணம், அவர்களே அல்லர். அவர்களை அப்படி வாழவைத்து உழலவிட்டுச் சுரண்டிக் கொண்டுள்ள இந்தச் சமூகமும் சமூக அமைப்புமே அவர்களுடைய வாழ்க்கையின் கீழ்நிலைக்குக் காரணம் என்று தெளிவாகவும் கூர்மையாகவும் சொல்லுகிறார்.

துறைமுகத் தொழிலாளி ஒருவன் கடுமையான உழைப்பாளியாயினும் வறுமையின் காரணமாகச் சோகமே அவன் வாழ்வில் மிஞ்சியது! அதைக் கண்டு வேதனைப்பட்ட கவிஞர் கோபம் கொண்டு, "சுயராஜ்ஜியம் வந்ததெனச் சொன்னார்கள்; அந்தச் சுயராஜ்யம் யார்க்கென்று சொல்லிடுவீர் நாட்டீரே! ஒற்றைக்கு இரட்டைவிலை எறியுமே உட்கார / வெற்றிலைக்கு நான்கு வெள்ளி விக்கிரயம் ஆயிற்று! இந்நிலையில் அவ்வேழை என்ன கதி அடைவான்" என்று கேட்டுவிட்டு, இத்தனைக்கும் காரணம் "ஆளும் வர்கத்தின் அக்கிரமம் காணீரோ" என்று விடையளிக்கிறார்.

வர்க்க முரண் ஒழிபடல் வேண்டும்:

தொழிலாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் தம் கவிதைகளில் பெரும்பாலானவற்றைத் தொடுக்கிறார். அதனால் மே தினத்தை வரவேற்றுப்பாடும் புதிய உலகப் பொதுமையை மேற்கொண்டார். நகரத் தூய்மைத் தொழிலாளர்களை அக்கறையோடும் கரிசனத்தோடும் பாடிய முதல் தமிழ்க் கவிஞர் தமிழ்ஒளி என்றால் அது மிகையல்ல. நகர சுத்தித் தொழிலாளர்கள், "பொருள்களின் விலை விஷம்போல் ஏறிவிட்டது. சம்பளத்தைச் சேர்த்துக் கூட்டிக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டனர். தமிழகத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சி அந்தத் தொழிலாளர்கட்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறிச் சிறையில் அடைத்தது. அப்போது அந்தத் தொழிலாளர் வீட்டுப்பெண்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளோடு திரண்டு வீதிக்கு வந்து போராடினர். தங்கள் குடும்பத்து ஆண்களைச் சிறையிலிருந்து வெளியே அனுப்புமாறு போராடினர். அதற்கு அந்தப் போலீஸ் கும்பல் "இந்த மாதிரிப் போராட்டத்திற்கு உம்மைத் தூண்டி விட்டது யார்?" என்ற ரீதியில் "உமைத்தூண்டி விட்டவரைச் சொல்லாவிட்டால் ஒழித்திடுவோம், துப்பாக்கிச் சனியனாலே / இமை நடுங்க விழி நடுங்கக் குத்திச் சாய்ப்போம்!" என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண்களில் ஒருத்தி தன் கைக்குழந்தையைக் காட்டி, "கோபத்தைத் தூண்டியது பால் இல்லாமல் குமுறியழும் குழந்தைகளின் குரலே" என்றாள்; தொழிலாளிப் பெண்கள் எல்லாம் முழக்கம் இட்டனர். தொடை நடுங்கிச் செந்தலையர் விழிக்கலானார்!" மேலும், மந்திரிமார்களும், போலீஸ்காரர்களும் "தப்பாகப் பணமெல்லாம் செலவழித்து, டாம்பீகம் அடிக்கின்றீர்! தொழிலாளர்கள் உப்புக்கு வகையின்றி வாடுகின்றார்! உபதேசம் செய்கின்றீர் அவர்க்கு" என்று போராடுகின்றார்கள் பெண்கள். உலகமெல்லாம் "ஒழிக முதலாளி" எனப் புரட்சிவீரர் பொங்கி எழும் காட்சியைப் பாருங்கள் என்று தமிழ்ஒளி அக்கவிதையை முடிக்கின்றார்.

இக்கட்டுரை மூலம் கீழ்க்கண்ட கருத்துக்களைப் பெறமுடிகிறது.

1. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் முழுமையாக அவருடைய தியாகத்தையும் மக்கள் மீது தமக்கு இருந்த அக்கறையையும் அங்கிகரிக்காத மக்கள் செய்கைக்காக மிக வருந்தி, இனி மேலேனும் பாரதியைப் பரப்ப முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழ்ஒளி ஒரு கொள்கை வகுத்துக் கொண்டார்.

2. தமிழ்ஒளி ஏழைகளின் சார்பாகக் கவிதையைப் படைத்துத் தம் சார்பை வெளிப்படுத்திக் கொள்கிறார். ஏழைகளையும் தொழிலாளர்களையும் பற்றிப் பாடும்போது ஒரு கதை சொல்வதுபோல உண்மை நிகழ்ச்சிகளைக் கவிதையாக அமைத்து அவர்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

3. வர்க்க முரண்பாட்டைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டி, ஏழைகளின், தொழிலாளிகளின் வேதனைகட்கும் வாழ்க்கைச் சீரழிவுகட்கும், ஆளும் வர்க்கமும் முதலாளி வர்க்கமுமே காரணம் என்று தீர்மானமாகச் சொல்கிறார்.

4. ஆகவே வர்க்க முரண்பாட்டை ஒழிக்க வேண்டும். அதற்கு உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும். அந்தப் புரட்சியை நோக்கித்தான் உலகம் நடைபோடுகிறது என்று தம் தூரநோக்குச் சிந்தனையைப் புலப்படுத்துகிறார். கவிஞர் தமிழ்ஒளி இந்தக் கருத்தில் உறுதியாக இறுதி வரை இருந்துள்ளார்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link