ஆய்வுச் சிந்தனைகள்


தமிழச்சியின் கத்தியில் பெண்ணியச் சிந்தனைகள்

"நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
புதிய அறம் பாடவந்த அறிஞன்".

என்று பாராட்டப்பெறும் மகாகவி பாரதியின் வழியில் வந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தன் கவிதைகளில் நாடு, மொழி, இனம், இயற்கை, பெண்மை என்ற அனைத்துக் கூறுகளிலும் முற்போக்குச் சிந்தனையைப் புரட்சி நோக்கோடு வெளிப்படுத்தியவர் பாரதிதாசன் என்பது வெள்ளிடைமலை.

ஈராயிரம் ஆண்டு பண்பாட்டினைப் பறைசாற்றிவரும் நம் இலக்கியங்களில் பெண்மையின் பல பரிமாணங்கள் ஆராய்தலுக்குரியது. கல்வி, வீரம், காதல், இயற்கை, ஆன்மீகம் என எல்லா துறைகளிலும் பெண்மை பல இடங்களில் வளர்ச்சிக்குரியது ஆகவும் சில இடங்களில் வீழ்ச்சிக்குரியதாகவும் உள்ளது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் சீரிய படைப்பான தமிழச்சியின் கத்தியில் பெண்ணியச் சிந்தனைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்மை ஒரு பார்வை:-

"வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்"

என்கிறது குறுந்தொகைப்பாடல். இது இல்லறம் கடமையாய், கணவனே தெய்வமாய் வாழ்ந்த சங்ககால பெண்களின் பெரும்பான்மை நிலை என்றால் அது மறுக்க இயலாது. இதற்குப் பல்வேறு இலக்கியங்கள் சான்றுகளாக அமைகின்றன.

பெண்மை என்பது அடக்கம், தியாகம், பொறுமை, நீர்மை, பரநலம் என்பார் திரு.வி.க. ஆனால் இக்கருத்தைத் தொடக்க காலத்தில் இருந்து தவறாகப் புரிந்துகொண்டு இச்சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்தது உண்மை. பழங்காலத்தில் ஒளவையார், கண்ணகி, ஆண்டாள் என்று பெண்கள் சமூகத்தில் சிலர் உயர்நிலை அடைந்து இருந்தனர். ஆனால் அறிவியல் ஆட்சி செய்யும் தற்காலத்தில் பெண் கொடுமைகள் தொடர்வது வியப்பிற்குரியது.

தமிழச்சியின் கத்தி:-

ஆற்காடு 172 பாளையப்பட்டாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு வடக்கன், தமிழரை இகழ்பவன். அவன் ஆட்சிக்குப்பட்ட புதுச்சேரி பகுதியில் அப்பாவி விவசாயி திம்மன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சுப்பம்மாள். அவர்கள் தோட்டத்திற்கு வந்த சிப்பாய்களில் சுதர்சன் என்பவன் சுப்பம்மாவை அடையும் நோக்கத்தோடு சூழ்ச்சி செய்து திம்மனைச் சிறையில் அடைத்தான். குப்பு, முருகி என்ற இரு நயவஞ்சகப் பெண்களின் வாயிலாகச் சுப்பம்மாவின் கற்பினைச் சூரையாடினான். அரசனிடம் சுப்பம்மாவிற்கு தண்டனையும் பெற்றுத் தந்தான். இறுதியில் பகைவர்கள் தன் அங்கங்களைச் சிதைக்கும் முன்னர் தானே தன் மூச்சை இழுத்துக்கொண்டு உயிர் விட்டாள் சுப்பம்மா.

பெண்ணியச் சிந்தனைகள்:-

கணவனின் சொல்லிற்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் பெண்களின் சூழல் அன்று இருந்தது. இதைக் காவியத்தின் தொடக்கத்தில் பாரதிதாசன் நன்கு உணர்த்துகிறார். திம்மன் தன் மனைவி சுப்பம்மாவிடம் செஞ்சிக்குச் சென்று சிப்பாயாக பணிபுரிய வேண்டும் என்கிறான். சுப்பம்மா மறுக்கிறாள். எனினும் அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு சுதர்சனை நம்பி செஞ்சிக்குப் புறப்படுகிறான்.

கற்பு நெறி:-

தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தமட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. பாரதியார் தம் கவிதையில்,

"கற்புநிலை எனச் சொல்லின் இருகட்சிக்கும்
அதைப் பொதுவில் வைப்போம்"

என்கிறார். இதனையே பாரதிதாசனும் தமிழச்சியின் கத்தியில் மிக நுணுக்கமாக விளக்குகிறார். சுப்பம்மாளை மிரட்டுகிறான் சுபேதார். அப்பொழுது அவள்,

"எனது கற்புநிலை கெட்டபின்னர் இந்த
நீணில் வாழ்வை வேண்டேன்"

என்கிறாள். தமிழகப் பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கோட்பாட்டில் உயிரை வைத்திருந்தனர் என்பது நமக்குப் புலனாகிறது.

பெண்ணுக்குப் பெண் எதிரி:-

"தமிழச்சியின் கத்தி" கதைமாந்தருள் குப்பு, முருகி என்ற இரு பெண்கள் சுப்பம்மாவிற்குத் தீங்கு விளைவிக்கிறார்கள். சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் தீமைகளுக்கும் பல வேளைகளில் பெண்களே காரணமாகிறார்கள். குப்பு, முருகி ஆகிய இருவரும் சுபேதாரின் ஆசைக்குச் சுப்பம்மாவை இணங்கச் சொல்கிறார்கள். அப்போது சுப்பம்மா,

"கண்ணகி என்னும் இந்தத்
தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டிருப்பீர்
அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
பெரும் பண்பே உமக்கும் வேண்டும்"

என்கிறாள்.

வீரவுணர்வு:-

கற்பு நிலையை ஒட்டியே தமிழ்ப் பெண்களின் வீரவுணர்வு, தமிழர்தம் மாண்பு ஆகியவற்றை இக்காவியத்தின் அடித்தளமாகச் சுட்டுகிறார் பாரதிதாசன்.

ஊரைவிட்டுப் போகும் முன்னரே காட்டு வழியில் கண்ட தமிழரிடம் சுப்பம்மா தன் பாதுகாப்பிற்குக் கத்தி ஒன்றைப் பெற்றுக் கொள்கிறாள். தேசிங்கிடம் உச்சக்கட்டத்தில் சீறுகிறாள்.

உமது நாட்டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய், உயிர் பதைப்பார் தமிழனைக் கனவில் கண்டால். மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது என்று தன் உயிரைத் தானே போக்கிக் கொள்கிறாள்.

இக்கட்டுரையின் மூலம் சில முடிவுகள் பெறப்பட்டன. அவையாவன,

கணவனின் சொற்படி பெண் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் மிகுந்திருக்கிறது. பெண்ணுக்குப் பெண் எதிரி என்பது சரியான புரிதல் என்பது மனித உறவுகளில் இல்லை என்பது புலனாகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள், பாலுணர்வு பற்றிய விழிப்பு மக்களிடம் முழுமையாக ஏற்படவில்லை.

நன்றி: கட்டுரை மாலை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link