ஆய்வுச் சிந்தனைகள்


கம்பராமாயணத்தில் உள்ளுறை

சங்க அகப்பாடலுக்கு உரிய உத்தியாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் "உள்ளுறை" குறிப்புப் பொருளாகவும் தொனிப்பொருளாகவும் பிற இலக்கியங்களிலும் இடம்பெறுவதைக் காணுகின்றோம். கவிஞன் மனத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும்போது அவற்றை வெளிப்படுத்துவதற்கு இக்குறிப்புப் பொருள் வாயிலாக அமைகின்றது. பின்வரும் நிகழ்வை முன்னுணர்த்தும் மறைச்சுட்டாகவும், கவிஞனின் காப்பியப் பொதுநோக்கில் இடம்பெறும் சில பாவிக எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளியிடவும் உள்ளுறை பயன்படுகின்றது. இவ்வாறு உள்ளுறை உத்தியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உள்ளுறையில் ஒன்றுக்கொன்று மாறான இருநிலைகள் உள்ளன.

1. ஒரு கருத்தைச் சொல்லுவதனால் அதற்கு இணையான மற்றொரு பின் கருத்தைக் குறிப்பாகச் சுட்டுவது.
2. வலியுறுத்தப்படுகின்ற கருத்தால் எதிர்மறைக் கருத்து வெளிப்படுவது. இவற்றைத் தக்க சான்று மூலம் கம்பராமாயணத்தைக் கொண்டு விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒத்த எண்ண இணைவுக் குறிப்பு - கம்பனின் சகோதரத்துவச் சிந்தனை:

கம்பன் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் வளத்தையும் மருதநிலச் சிறப்புக்களையும் வெளிப்படுத்தும்போது பல்வகை உயிரிணைவைக் காட்டுகின்றான். அன்னமும் எருமையும் தவளையும் இணைந்து வாழும் ஒரு இன்பப் பின்னணி வருணனைப் பாங்கில் சுட்டப்பெறுகின்றது.

"சேல்உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மால்உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
கால்உண்ட வேற்றுமேதி கன்ற உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால்உண்டு துயில் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை"

பலவகை உயிரினங்களும் வாழும் மருத நிலத்தில் பறவையினத்தைச் சார்ந்த அன்னமும், விலங்கினத்தைச் சேர்ந்த எருமையும், நீரிலும், நிலத்திலும் வாழும் தவளையும் அன்பு பூண்டு ஒன்றையொன்று ஆதரித்து முரணின்றி வாழ்வது இங்குச் சுட்டப்பெறுகின்றது. கோசல நாட்டின் இயற்கைப் பின்புலத்தைப் புலப்படுத்தும் இக்காட்சி, அந்நாட்டு இளவரசனான இராமனின் வருங்கால இயல்பைக் குறிப்பாகச் சுட்டுவதாகத் தொனிப்பொருளில் அமைகின்றது. இறைவன் அவதாரமாகிய இராமன் அரச மரபில் வந்து மானுடனாகத் தோன்றிய போதும் பலவகை உயிரினங்களோடும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு வாழ்கின்றான். பறவையினத்துச் சடாயு, குரங்கினத்துச் சுக்கிரீவன், அனுமன், அங்கதன், அரக்கர் இனத்து வீடணன், வேடர் இனத்துக் குகன் ஆகியோர் இராமனுக்குச் சகோதரர்களாகவும் நெருக்கமுடையவர்களாகவும் அமைகின்றனர். குகனைத் தம்பியாக ஏற்றதால் ஐவராகவும், சுக்கிரீவனையும், வீடணனையும் இணைக்கவே எழுவராகவும் அமைய இராமன்.

"குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின்குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம் எம்உழை அன்பின்வந்த
அகன் அமர்காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அருங்காமை தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை"

எனக் குறிப்பிடுவதிலிருந்து இதனை அறியலாம். இந்த உயிரிணைவுச் சிந்தனை பல்இனஒற்றுமைக் கருத்து நாட்டுப் படலத்தில் கோசலக் காட்சியில் குறிப்பாகச் சுட்டப்படுகின்றது.

எதிர்மறைச் சிந்தனை:

நாட்டுப் படலத்தில் குறிக்கோள் நாட்டைக் கற்பித்து அதனைக் கோசலமாகப் பொருத்திக் காட்டுகின்றான் கம்பன். ஆயினும் இக்குறிக்கோள் தன்மையிலிருந்து முரண்பட்ட நிறைகளும் குறைகளும் உடைய ஒரு நாடு தொடர்ந்து வரும் படலங்களிலும் காண்டங்களிலும் சுட்டப்படுவதையும் காணுகின்றோம். சான்றாக,

"கூற்றம் இல்லை ஓர்குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவும் இல்லையால்"

என்னும் பாடல் எதிர்மறையாக வரும் கூற்றத்தையும், குற்றத்தையும், சீற்றத்தையும் செம்மையில்லாச் சிந்தனையையும் மறத்தையும் இழிவையும் குறிப்பாகச் சுட்டுவதையும் காணுகின்றோம். காப்பியத் தொடக்கத்தில் நிலவிய இன்பமான சூழல் கூனியின் சீற்றத்தாலும் செம்மையில்லாச் சிந்தனையாலும் மாறுகின்றது. அவளது கூற்றமன்ன சொற்கள் கைகேயியை நிலையிழக்கச் செய்து மறவழியில் செலுத்துகின்றன. உருவாகிய குற்றம் தசரதன் உயிரைக் குடிக்கின்றது. அயோத்தி பொலிவிழக்கின்றது. இராமன் காட்டிற்குச் செல்லுகின்றான். இவ்வாறு காப்பியத்தின் தொடக்கப்படலப் பாடல்களில் சில எதிர்நிலையாக வரும் நிலையழிவுக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. குறிக்கோள் உலகை முன்வைத்த காப்பிய நோக்கம், பிற்பகுதிகளில் குற்றத்தையும் போரையும் உயிரிழப்புக்களையும் கூற்றத்தையும் காட்டுவதும் சிந்திக்கத் தக்கதாகும்.

சொல்லில் குறிப்புப் பொருள்:

சொல்லிலும் குறிப்புப் பொருள் அமையும் பாங்கு நகர் நீங்கு படலத்தின் இராமன் உரையில் அமைவதைக் காணுகின்றோம். ஓரளவு இங்கு வெளிப்படையாகவே பொருள் சுட்டப்படுகின்றது. தானும் இராமனுடன் காட்டிற்கு உடன்வருவேன் எனச் சுற்றி நிற்கும் சீதையை விலக்க எண்ணிய இராமன், "விளைவு உன்னுவாய் அல்லை. போக அமைந்தனை ஆதலில் எல்லை அற்ற இடர்தருவாய்" என அறிவுறுத்துகின்றான் இங்கு வெளிப்படையாக இன்ன இடர் உறும் என விளக்கப் படாதபோதிலும், சீதை இராமனுடன் காட்டிற்குச் சென்றால் துன்பம் வரும் என்பது ஓரளவு புலப்படத் தொனிக்குறிப்பாக வெளிப்படுவதைக் காணுகின்றோம்.

எரியில் புகுவதுபோலத் தாமரையில் அமர்ந்த அன்னங்கள்:

பம்பை வாவிக் காட்சியில் எரியில் புகுவது போன்ற தோற்றத்துடன் தாமரையில் அமர்ந்த அன்னங்களைக் கம்பன் அமைத்துக் காட்டுகின்றான்.

"அரிமலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரிகுழல் புக்க இடம் புகல்கிலாதயாம்
திருமுகம் நோக்கலாம் இறந்து தீர்றும் என்று
எரியினில் புகுவனஎனத் தோன்றும் ஈட்டது"

சீதையை இழந்த பிரிவுச் சூழலில் இராமனின் மனத்துயரத்திற்கு ஏற்றவாறு இந்தத் தற்குறிப்பேற்றக் காட்சி அமைக்கப்பட்டிருப்பினும், ஏற்கனவே பலமுறை கம்பன் சீதையை அன்னமாகக் காட்டியிருப்பதால், இவ்விடத்தில் ஒரு குறிப்பையும் தருவதாகச் சொல்லலாம். இராவணன் அழிவிற்குப் பின்னர் இராமனின் ஐயம் நீங்கச் சீதை தீப்புகுந்ததன் முற்குறிப்பு இங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் கவிவன்மை:

இவ்வாறு ஆழமாக நோக்கினால் கம்பனின் ஒவ்வொரு காட்சியிலும் புனைவிலும் சொற்றொடரிலும் தொனியும் குறிப்பும் உள்ளுறையும் புலப்படுவதைப் பரவலாகக் காணலாம். குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் இக்கவிவன்மை, உலாவியற் படலத்தில் - இராமனைக் கண்ட மகளிர்,

"தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம்அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே"

எனச் சுட்டுவதிலிருந்து அறியலாம். அம்மகளிர் இராமனின் மூன்று செயல்களின் குறிப்பான புலப்பாட்டை இங்குக் காணுகின்றனர்.

1. தோள்கண்டார் - இராமன் மிதிலை மக்கள் முன்னிலையில் வில்லொடித்த நிகழ்ச்சி
2. தாள்கண்டார் - இராமன் பாதம்பட்டு அகலிகை உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி
3. தடக்கை கண்டார் - இராமன் செய்த தாடகை வதம் பற்றிய நிகழ்ச்சி

இவ்வாறு சங்க அகப்பாடலுக்குரிய உள்ளுறை உத்தியைக் கம்பம் தன் காப்பியக் கட்டமைப்பில் செறிவாகவும் பொருத்தமாகவும் அமைத்துக் கற்பனை வளத்தினால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியச் சுவைமிக்க உள்ளுறைகள் காப்பியம் முழுமையும் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணுகின்றோம்

நன்றி: ஆய்வுக்கோவை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link