ஆய்வுச் சிந்தனைகள்


உமாசந்திரன் நாவல்களில் பெண்கள் நிலை

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மறுமலர்ச்சி காலம் எனலாம். ஐரோப்பியரின் வருகையில் தொழிற்புரட்சியின் தாக்கமும் மக்களின் வாழ்வியலிலும் கலைப்படைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. அதன் விளைவாக நவீன இலக்கிய வகைகள் பலவும் முகிழ்ந்தன. தமிழில் நாவல், சிறுகதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றி மக்களிடம் செல்வாக்குப் பெற்றன.

வாழ்க்கைப் பதிவுகள்:

காப்பியங்கள் செய்த பணியை நாவல்கள் செய்யத் தொடங்கின. வாழ்க்கையை முழுமையாக வெளியிடும் வடிவமாக நாவல்கள் விளங்கியமையால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அறத்தையும் நீதியையும் வழங்கின. கவிதையின் கற்பனை, அழகியல், உணர்ச்சி போன்ற கூறுகளில் நாவலில் அமைந்து சிறந்ததொரு படைப்பிலக்கியம் என்னும் தகுதியைப் பெற்றுத் தந்தன.

முதல் நாவல்:

மேலைநாட்டுக் கலைவடிவமாக இருந்த நாவல் இலக்கியம் தமிழுக்கே உரிய இன்சுவைகளைக் கொண்டு சிறந்த இலக்கிய வகையாகச் சிறப்புப் பெற்றது. தமிழில் நாவல் இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவரது பிரதாப முதலியார் சரித்திரம் (1876) என்னும் நாவலே தமிழின் முதல் நாவல் என்ற சிறப்பினைப் பெற்றது. இந்நாவல் சமுதாய நடப்பியலை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பெற்றது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையைத் தொடர்ந்து இராஜம் ஐயர், மாதவையர் போன்ற பலரும் நாவல்களைப் படைத்தனர். இலங்கை திரிகோண மலையைச் சார்ந்த தி.த.சரவண முத்துப்பிள்ளை என்பவர் மோகனாங்கி (1895) என்னும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவலே தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என்பர். தமிழின் முதல் நாவல் ஆசிரியரான வேதநாயகம் பிள்ளை தனது நாவலைச் "சமுதாயம்" என்னும் தளத்திலேயே படைத்துள்ளார். அவரது காலத்துச் சமுதாய வாழ்வியலை இந்நாவல் விளக்குகிறது.

மக்கள் செல்வாக்கு:

நாவல் இலக்கியத்தின் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்த காலம் எனக் கூறலாம். பலரும் நாவல் எழுத தலைப்பட்டனர். கல்கி, சாண்டில்யன், அகிலன் எனப் புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் படைப்புகளைத் தந்தனர். நாவலில் இடம் பெறும் வருணனையும், கற்பனையும் வாசகர் உள்ளங்களை ஈர்த்தன. வாசகர் எண்ணிக்கைக்கு ஏற்பப் படைப்புகளும் அதிக அளவில் வெளிவந்தன.

நடப்பியல்:

நாவலின் கதைக்கரு, பின்னணி, சூழல் போன்ற பலவும் பல்கிப் பெருகின. நாவல் இலக்கியமும் சமுதாய நாவல், வரலாற்று நாவல், துப்பறியும் நாவல், மொழிபெயர்ப்பு நாவல் என வெவ்வேறு வகைகளில் வெளிவந்தன. சமுதாய நாவல் மக்களின் நடப்பியலைச் சமூக உறவுகளைக் கொண்டுவந்து காட்டும் திறன் பெற்றமையினால் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

நாவல், வாழ்க்கையை அதன் பல்வேறு அம்சங்களுடன் அவற்றின் சிக்கல்களுடன் அவற்றின் பிணிப்புகளுடன் எடுத்து வாழ்க்கையின் ஜீவநாடி குன்றாமல் எழுதுவது.

என்று குறிப்பிடும் புதுமைப்பித்தனின் கருத்து நாவலின் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்களை, பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி எழுதும் நாவலாசிரியர்களில் கல்கி, அகிலன், மு.வ. முதலியோர் புகழ் பெற்றவர்கள். இவர்களைப் பின்பற்றிச் சமுதாய நாவல்கள் படைப்பதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் நாவலாசிரியர் உமாசந்திரன் என்றால் அது மிகையாகாது.

உமாசந்திரன் நாவல்கள்:

எழுத்தாளர் உமாசந்திரன் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் படைப்புகளை வெளியிட்டிருந்தாலும் நாவலே அவரது சிறந்த படைப்புகளாக விளங்கின. இவர் பதினைந்திற்கும் மேற்பட்ட சமுதாய நாவல்களை எழுதியுள்ளார். அன்புச் சூழல் (1960) என்னும் நாவல் இவரது முதல் நாவல்.

ஒன்றிய உள்ளங்கள், முள்ளும் மலரும், பொழுது புலர்ந்தது, சக்கர வியூகம், காயகல்பம், ஆகாய பூமி, முழுநிலா, வாழ்வே வா, அனிச்சமலர், இதயகீதம் போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள் எனக் கூறலாம்.

நாவலின் நோக்கம்:

நாவலாசிரியர் உமாசந்திரன் தனது படைப்புகள் வழியாக நடுத்தரக் குடும்பங்களின் பல்வேறு வாழ்வியல் சிக்கல்களை, சமுதாய வாழ்வியல் சூழல்களை விளக்கமுறச் செய்தவர். இவர் வெறும் பொழுதுபோக்கிற்காக நாவல்கள் படைக்காமல் சமுதாய முன்னேற்றம் என்னும் நோக்கத்திற்காக எழுதியவர்.

நாவலாசிரியர் உமாசந்திரன் நெல்லை, திருச்சி, சென்னை போன்ற தமிழக ஊர்களில் வாழ்ந்தவர். இவரது வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த குடும்பங்களின் சிக்கல்களும் நாவல்களின் கதைக்கருவாக அமைந்தன எனலாம். உமாசந்திரனின் நாவல்களில் நடுத்தர மக்களின் வாழ்வியல் சிக்கல்கள், குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள், பெண்களின் வாழ்க்கை நிலை, மரபுகளுக்கும், புதுமைகளுக்கும் இடையில் ஏற்படும் தடுமாற்றங்கள் போன்றன பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயிரோட்டம் மிக்க பாத்திரங்கள்:

உமாசந்திரனின் நாவல் பாத்திரங்கள் பலவும் உண்மை மனிதர்களை, நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பலரைக் கண்முன் காட்டுவனவாக இருக்கின்றன. கிராமியச் சூழலிலும், நகரியச் சூழலிலும் காணப்பெறும் முரண்பாடுகளையும், பழமை மரபுகள் என்னும் கட்டுக்களில் சிக்கித் தடுமாறும் வாழ்க்கை நிலைகளையும் உமாசந்திரனின் எழுத்து வெளிப்படுத்தியுள்ளது.

பெண்ணுரிமைக்குரல்:

நடுத்தரக் குடும்பங்களில் வாழும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் மரபினை மறுக்க முடியாமல் ஏற்கும் பெண்களின் வாழ்வியல் சூழல்களையும் உமாசந்திரன் நாவல்கள் காட்டுகின்றன. பெண்களின் வாழ்க்கைச் சுதந்திரத்திற்குத் துணிவுடனும் வலுவுடனும் குரல் கொடுக்கும் போக்குடையனவாக உமாசந்திரன் நாவல்கள் அமைந்துள்ளன.

நாவலாசிரியர் உமாசந்திரன் தனது படைப்புகளான சமுதாய நாவல்களில் சமுதாயத்தில் பெண்களின் நிலை, வாழ்க்கைத் தரம், அவர்களின் மீது நடைபெறும் ஆணாதிக்கக் கொடுமைகள், சமூக பொருளாதாரக் காரணிகள் அவர்களைப் பாதிக்கும் விதம் போன்ற பலதரப்பட்ட செய்திகளைப் பதவு செய்துள்ளார்.

வாழ்க்கை அனுபவமும், கூர்ந்து நோக்கும் கற்பனைத் திறனும் இவற்றையெல்லாம் கலந்து படைக்கும் திறமையும் சேர்ந்ததே நாவலாகப் பிறக்கிறது என்னும் திறனாய்வாளரின் கருத்திற்கேற்ப உமாசந்திரன் நாவல்கள் படைக்கப்பட்டுள்ளன.

ஆணாதிக்கச் சமுதாயம்:

சமுதாயம் என்பது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் அமைப்பாகவே உள்ளது. பெண்களைப் பற்றிய சமுதாய எதிர்பார்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண் என்பவள் இனப்பெருக்கம், இல்லறக் கடமைகள் ஆகியவற்றைச் சார்ந்தவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆணுக்கிணையாக அல்லது ஆணைவிட அதிக ஆற்றல், திறன், அறிவு பெற்றிருந்தாலும் சமுதாயம் அவளை அங்கிகரிக்க மறுக்கிறது.

சமுதாயம் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கிறது. பெண் ஆணைப் போல உள்ளமும் உணர்வும் பெற்ற "மனுஷி" என்பதை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.

வழிகாட்டுதல்:

பெண்ணின் பிறப்பு முதற்கொண்டு அவளது இரண்டாம் நிலையை நினைவூட்டி அவளின் சுய ஆற்றலைக் கட்டுப்படுத்தும் வேலையைச் சமுதாயம் செய்யத் தொடங்கிவிடுகிறது. சமுதாயத்தில் பெண் என்பவள் தாய், மகள், மனைவி, தோழி என்னும் நிலையில் வைத்தே பார்க்கப்படுகிறாள். இல்லம் என்பது பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் சிறையாக மாற்றம் பெற்றுவிட்டது. பெண் தனது உரிமைகளுக்காகச் சமுதாயத்தில் பல தளங்களில் போராட வேண்டிய நிலையில் உள்ளாள். அவளுக்கான வழிகாட்டுதலையும் இலக்குகளையும் உணர்த்தும் நோக்கில் உமாசந்திரன் நாவல்கள் படைக்கப்பட்டுள்ளன.

சமுதாய மாற்றத்தின் தேவை:

பெண்களின் வாழ்க்கை மலர்ச்சியடையத் தேவையான சமுதாய மாற்றங்கள் பலவற்றை உமாசந்திரன் தனது நாவல்களில் பதிவு செய்துள்ளார். ஒரு சமுதாயத்தின் உயர்வும் தாழ்வும் அச்சமுதாயப் பெண்களின் வாழக்கை நிலையைப் பொறுத்தே அமைகிறது. சமுதாயம் என்பது சமூக உறவுகளைக் கொண்ட சிலந்தி வலை போன்றது என்பர். உறவுமுறைகளின் ஆண், பெண் உறவு முறைகள் மிகவும் நெருங்கியதும், நிலையானதுமாகும். பெண்களின் முன்னேற்றமே அச்சமுதாயத்தின் முன்னேற்றத்தைக் காட்டும்.

ஒரு சமுதாயம் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் கொடுக்கிறது என்பதன் அடிப்படையில் அச்சமுதாயத்தின தன்மையும் மேன்மையையும் அளவிடலாம். என்னும் அறிஞர் கூற்று இவண் குறிப்பிடத்தக்கது.

பெண்மையின் மேன்மை:

நாவலாசிரியர் உமாசந்திரன் பெண்மையைப் போற்றும் உள்ளம் பெற்றவர். பெண்மை என்பது உயர்ந்த தத்துவம். அதன் மேன்மையே சமுதாய உயர்வைத் தரும் என்று வலியுறுத்தியுள்ளார் இதனை,

பெண்மையென்ற தத்துவம் நாடு, இனம், மதம், ஆசாரம் என்ற குறுகிய எல்லைக்குள் அடங்கியதல்ல. எல்லாவற்றுக்கும் அப்பால் நின்று மனித வாழ்க்கையை இன்பமயமாக்கும் சக்தியாக அது திகழ்வது. என்னும் உமாசந்திரனின் கருத்து அவர் பெண்களின் முன்னேற்றம் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

பெண் வளர்ப்புமுறை:

பெண்கள் மீதான ஒடுக்குமுறை அவர்களது பிறப்பு முதற்கொண்டே தொடங்கி விடுகிறது. குழந்தை வளர்ப்பின் போதே ஆண் - பெண் வேறுபாடு போதிக்கப்படுகிறது. பெண் என்பவள் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கக் கூடியவளாகவும் ஆண் மட்டுமே சமுதாயச் செயல்பாட்டிற்குரியவனாகவும் கற்பிக்கப்படும் சமுதாயச் சூழலை மாற்றுவதற்கு உமாசந்திரன் நாவல்களின் மூலம் முயற்சி செய்துள்ளார்.

நாவல்கள் மனித வாழ்க்கை முழுவதையும் விளக்கும் கலைவடிவமாகத் திகழ்கின்றன. இக்கலை வடிவத்தைச் சிறந்த முறையில் படைக்கும் ஆற்றல்மிக்கவராக எழுத்தாளர் உமாசந்திரன் விளக்கியுள்ளார்.

பதினைந்திற்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ள உமாசந்திரன் தனது நாவல்களில் கதைக்கருவாகக் கிராமியம் மற்றும் நகரியம் சார்ந்த நடுத்தரக் குடும்பச் சிக்கல்களைத் தேர்வு செய்துள்ளமையை அறிய முடிகிறது.

எழுத்தாளர் உமாசந்திரன் தனது நாவல்களில் பெண்மையைத் தனித்ததொரு தத்துவமாகக் கருதி அதற்குரிய மதிப்பினைச் சமுதாயம் அளித்திட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தியுள்ளார்.

பெண் என்பவள் ஆணைப் போன்று அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு உரியவள் என்றும் அவளது மணவாழ்க்கை அவளது விருப்பத்தை மையமாகக் கொண்டு அமைதல் வேண்டும் என்றும் உமாசந்திரனின் நாவல்கள் வலியுறுத்துகின்றன.

மணவிலக்கு, மறுமணம் போன்றவை பெண்களின் நலனைப் பாதுகாப்பவை என்னும் கருத்து உமாசந்திரனின் நாவல்களில் விளக்கப்பெற்றுள்ளது.

ஆண் - பெண் நட்பு சமுதாய மலர்ச்சியை உருவாக்கும் என்பதையும் எழுத்தாளர் உமாசந்திரன் நாவல்கள் தெளிவுபடுத்துகின்றன.

பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு பெறும்போதே சமுதாயம் சிறக்க முடியும் என்ற கருத்தை உமாசந்திரன் தனது நாவல்களில் பதிவு செய்துள்ளார்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link