ஆய்வுச் சிந்தனைகள்


டாக்டர் எச். பாலசுப்பிரமணியத்தின் மொழியாக்கநிலை

இந்தி இலக்கிய வரலாறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இவ்வரலாற்றைப் பலர் பலவகையில் பகுத்துக் கூறியிருப்பினும் ராமச்சந்திர சுக்லா என்பவர் பகுத்துக் கூறிய காலப்பகுப்பே சிறப்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவர் இந்தி இலக்கிய வரலாற்றை நான்கு காலகட்டத்திற்கு உரியதாக வகைப்படுத்தியுள்ளார். அவை,

1. ஆதிகாலம் (அ) வீரக்கதைக்காலம் (கி.பி. 1050 முதல் 1375 வரை)
2. இடைக்காலம் (அ) பக்திகாலம் (கி.பி. 1375 முதல் 1700 வரை)
3. பின் இடைக்காலம் (அ) நீதிகாலம் (கி.பி1700 முதல் 1900 வரை)
4. உரைநடைக்காலம் (அ) நவீன காலம் (கி.பி.1901 முதல் இன்று வரை)

நவீன காலத்தின் இடைப்பகுதியில்தான் இந்தி மொழியில் சிறுகதைகள் தோன்றின. அதுவும் முதலில் வங்காள, ஆங்கில சிறுகதைகள் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டன. பின்னரே இந்தியில் சிறுகதைகள் எழுதப்பட்டன.

பணிஷ்வர்நாத்ரேணு இந்திச்சிறுகதையின் இரண்டு காலகட்டங்களுக்கு நடுவில் ஓர் இணைப்புப் பாலம் போல் திகழ்ந்தவர். இவரின் முதல் சிறுகதை 1944-ல் ஆலமரத்து தாத்தா (வாட்பாபா) விசுவாமித்திர வார இதழில் வெளியாயிற்று. இவரது புகழ்பெற்ற புதினம் மைலா அஞ்சல் 1954-ல் வெளிவந்தது.

இந்திக் கதைகளின் மரபில் இவரது கதைகள் கட்டமைப்பிலும் இயல்பிலும், வடிவிலும், சுவையிலும், தனித்துவம் பெற்றன. சின்னாபின்னமாகச் சிதைந்து கொண்டிருக்கும் ஆதர்சங்களை நொறுங்கும் வாழ்க்கை இலட்சியங்களைத் தன் கதைகளில் வேதனையுடன் விளக்குகிறார். இவர் கதைகளில் சூழல்கள் கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கை வரையிலும் விரிந்து பரந்தவை. இவரது மொழிநடை நாட்டுப்புற மொழி வழக்கு எனும் வளமான நிலத்தில் மிடுக்காக நடைபயிலுகிறது. புதுப்புது ஓசைகளையும் சந்தங்களையும் பெற்றுப் புதுமைகள் புரிகின்றது.

பணிஷ்வர்நாத் ரேணுவின் சிறுகதைகள் எனும் தலைப்பில் ரேணுவின் 21 கதைகளைப் பாராத்யாயாவர் என்பவர் தொகுத்து அளித்துள்ளார். இச் சிறுகதைகளை டாக்டர் எச். பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இவ்விரு தொகுதிகளையும் நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா வெளியிட்டுள்ளது. பக்க எல்லை கருதி பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழியாக்கம் செய்த "பயில்வானின் மத்தளம்" எனும் கதை மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பெறுகின்றது. இதன் வழி பாலசுப்பிரமணியத்தின் மொழியாக்க நிலைப்பாட்டை இக்கட்டுரை முன்வைக்க முனைகின்றது.

கதைச்சுருக்கம்:-

லுட்டன்சிங் பயில்வான் 9 வயதில் அனாதையாக ஆனவன், விதவை மாமியார்தான் அவனை வளர்த்தார். சிறுவயதில் மாடு மேய்ப்பான். ஒழுங்காகத் தேகப்பயிற்சி செய்து பயில்வான் போன்று தன் உடலை வைத்துக் கொண்டான். மத்தளம் எனும் இசைக்கருவியை நன்கு இசைக்கத் தெரிந்தவன்.

ஒரு முறை சியாம் நகர் மேளா (திருவிழா)வில் குஸ்திசண்டை பார்க்க சென்றவன் முன்பின் யோசியாமல் அவன் போர்க்களத்தில் சிங்கக் குட்டியை (சாந்த்சிங்) மல்லுக்கு அழைத்தான். தான் தோற்கும் நிலையில் மத்தள ஒலியினால் புத்துணர்வு பெற்று சாந்த்சிங்கை வென்றான். அரசர் சியாமானந்த் ஆதரவோடு ஆஸ்த்தான பயில்வான் ஆனான்.

பதினைந்து ஆண்டுகள் ஓடி மறைந்தன. மாமியார் காலமாகிவிட்டாள். மனைவியும் இரண்டு சிறு பயில்வான்களைத் தந்துவிட்டு கண்மூடிவிட்டாள். மகன்கள் இருவரும் தந்தையைப் போலவே கட்டுமஸ்தான உடல்வாகுடன் வளர்ந்தார்கள். பார்த்தவர்கள் அப்பனை மிஞ்சுடும் படா சிங்கக்குட்டிங்க என்பார்கள். இந்நிலையில் அரசர் இறந்து விட்டார். அரசகுமாரன் பதவி ஏற்றான். பல மாற்றங்களைச் செய்தான். குத்துச்சண்டைகளம் குதிரைக்களமாக மாறியது. பயில்வான் வேலை இழந்து தன் இருமகன்களுடன் கிராமத்திற்குத் திரும்பினான். கிராமத்தில் மழை பொய்த்தது. பஞ்சம் வந்தது. நோய்களும் வந்தன. மக்கள் தெறித்து விழும் கடலைகள் போலச் செத்தார்கள். அப்பா எடுடா புடை ... டாஜதியை வாசிங்களேன் என்றனர். அவனும் வாசித்தான். காலையில் இரண்டு குட்டிப் பயில்வான்கள் இறந்திருந்தனர். நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு பயில்வானும் பிணமானான். நரிகள் அவனுடைய தொடை, வயிறு, மாமிசத்தைப் புசித்தன. மத்தளம் உருண்டு கிடந்தது. நரிகள் அதையும் கிழித்திருந்தன.

மொழியாக்க நிலைப்பாடு:-

1. இக்கதையில் வரும் மாந்தர்களின் பெயர்களை மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிடலாம். அவை,

1. தனித்தனிப் பெயர்கள் - லுட்டன்சிங், சாந்த்சிங், காலாகான், பாதல்சிங், சியாமானந்த்
2. பொது (அ) காரணப்பெயர்கள் - சீடர்கள், சிப்பாய், மானேஜர்.
3. முறைப்பெயர்கள் - அப்பா, அம்மா, மாமியார், மனைவி, மகன்கள், அரசகுமாரன்.

இவற்றில் தனிப்பெயர்களையும், பொதுப்பெயர்களையும் மூலத்தில் உள்ளது போலவே தமிழில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எவ்வித மாற்றமும் இன்றி ஒலிபெயர்த்துத் தந்துள்ளார். முறைப்பெயர்களை மட்டும் அப்பா, அம்மா.... என்பது போன்று மொழியாக்கம் செய்துள்ளார்.

2. கதைமாந்தன் கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்குச் சென்று, பின்பு கிராமத்திற்கே திரும்பி, வறுமையால் மரணித்துவிடுகின்றான். இதில் கிராமத்தின் பெயர் மூலத்திலும் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்பெறவில்லை நகரத்தின் பெயர் சியாம்நகர் என்று மூலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் ஒலிபெயர்த்துள்ளார்.

3. டோலக் என்பதைத் தமிழில் மத்தளம் என்று மொழிபெயர்த்துள்ளார். தங்கள் என்பதை மற்போர் என்று பெயர்த்துள்ளார்.

4. மூலத்திலும் மொழிப் பெயர்ப்பிலும் ஒரே ஓர் இடத்தில் மட்டும் உவமைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மக்கள் மரணிப்பதை - வாணலியில் வறுபடும் கடலைகளைப் போல மக்கள் தவித்தார்கள். தெறித்துவிழும் கடலைகள் போல் செத்தார்கள் என்பது ஆகும்.

5. சிறுகதை கிராமத்தில் தொடங்கி நகரத்தில் வளர்ந்து மீண்டும் கிராமத்தில் முடிகிறது.

லுட்டன் சிங் கிராமத்தில் சிறுவனாக, அனாதையாக, மாடு மேய்ப்பவனாக, தேகப் பயிற்சி செய்பவனாக, மத்தளம் இசைப்பவனாகத் திருவிழாக்களைக் காணச் செல்லும் சாதாரண மனிதனாகக் கதையின் தொடக்கம் அமைந்துள்ளது. லுட்டன் சிங் பயில்வானாகி நகரத்தில் பல வீரர்களை வீழ்த்தி அரசர் சியாமானந்த் அவர்களால் ஆஸ்தான பயில்வான் ஆகி அங்கு 15 ஆண்டுகள் வாழ்ந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு லுட்டன் தன் இருமகன்களுடன் கிராமத்திற்கே திரும்பி அங்கு பஞ்சம், நோய், வறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தன் மகன்களை இழந்து அவனும் மடிவது முடிவாக அமைந்துள்ளது.

இந்தத் தொடக்கமும் வளர்ச்சியும் முடிவும் மூலத்தில் எப்படி உள்ளனவோ அப்படியே தமிழில் அளிக்கப்பெற்றுள்ளன.

6. இன்றைய சமுதாயத்தில் அதிகமாக விவாதிக்கப்படும் தலைமுறை. இடைவெளி பற்றிய கருத்து 1940 களிலேயே இருந்திருக்கின்றது. இச்சிறுகதையில் சியாம்நகரின் அரசர் சியாமனந்த் மறைவிற்குப் பின் அவரது மகன் ஆட்சியைப் மேற்கொண்டான். புரட்சிகரமான மாற்றங்கள் என்று அரசரின் காலத்தில் ஏற்பட்டிருந்த போக்குகள் மாற்றப்பட்டன. அவற்றுள் குத்துச் சண்டைக்களம் குதிரைப்பந்தைய மைதானமாக மாற்றப்பெற்றது. இந்த மாற்றத்தை மூலத்தில் உள்ளவாறே ஆசிரியர் மொழிப்பெயர்த்துள்ளார்.

7. மத்தள ஒலியும் மற்போரும் ஒரே நேர்க்கோட்டில் செல்வது போன்ற கதையோட்டம் -

கிராமத்தின் அவலங்கள் -
நகரத்தின் மாறிவரும் இரசனைகள் -
மத்தள ஒலிக்கும் பொருள்கொள்ளும் அதிசய மனித உணர்வுநிலை -

உடல் வலிமை அதிகரித்த அளவுக்கு மூளையின் பரிமாண வளம் பெறா நிலை - எனப் பல்வேறு மன ஓட்டங்களை மூலத்தில் உள்ளவாறே மொழிப்பெயர்ப்பிலும் பாலசுப்பிரமணியம் அமைத்துள்ளார்.

இக்கருத்துக்கள் வழி இக்கதையின் கதைமாந்தர்களையும், நிகழ்விடங்களையும் ஆசிரியர் மூலத்தில் உள்ளவாறே ஒலிபெயர்த்துள்ளதையும் உவமை, உறவுப்பெயர்கள், கதையின் சிறு கூறுகள் ஆகியவற்றை நேரடியாக மொழிப் பெயர்த்துள்ளதையும் அறிய முடிகின்றது. எனினும் இந்திக் கதையை வாசிக்கும் பொழுது ஏற்படும் மன உணர்வையே தமிழாக்கத்தை வாசிக்கும் பொழுதும் கிடைக்கச் செய்திருப்பது ஆசிரியரின் மொழிப்பெயர்ப்பு ஆற்றலின் சிறப்பு எனலாம்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link