ஆய்வுச் சிந்தனைகள்


அமைப்பியல் நோக்கில்

சுந்தர பாண்டியன் என்ற புனை பெயர் கொண்ட எழுத்தாளர் காவ்யா சண்முக சுந்தரம் எழுதிய படைப்பே அந்தி என்னும் நாவல். இந்நாவல் 1998ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. இதன் 2ம் பதிப்பு 2001ல் வெளிவந்தது. இந்த நாவலின் கட்டமைப்பினை விளக்க முயல்கிறது இக்கட்டுரை. அமைப்பியல் என்றவுடன் பெர்டினாண்ட் டி சசூரின் அமைப்பியலா? லெவிஸ்ட்ராஸின் அமைப்பியலா? விளாடிமீர் பிராப்பின் அமைப்பியலா? உருசிய நாட்டு உருவவியலார் குறிப்பிடும் அமைப்பியலா? என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

அமைப்பு என்பது பல உறுப்புகளை உடையது. இவ்வுறுப்புகள் ஒன்றாக இணையும் போது இணைதல் என்ற செயல் காரணமாகத் தனித்து இருந்தபோது இருந்த இயல்பிலிருந்து மாறுபடுகிறது. இந்த மாறுபாட்டால் புதிய பொருள் உண்டாகிறது. இந்த இணைதல் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவு பற்றியும் விளக்குவதே அமைப்பியல் எனலாம். ஒரு கதை எழுத இரண்டு முதன்மை உறுப்புகள் தேவை. ஒன்று கருத்து மற்றொன்று அதனைச் சொல்ல ஒரு மொழி. இந்த இரண்டு முதன்மை உறுப்புகளும் பல உள்உறுப்புகளைக் கொண்டமைகின்றன. கதையின் தலைவன், தலைவி, துணைமாந்தர்கள் அவர்களின் செயல்களால் நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் கருத்து என்னும் முதல் உறுப்பின் உள்ளுருப்புகள் ஆகின்றன. சொல், தொடர், சொல்லும் முறை, பயன்படுத்தும் உத்திகள், பொருட்புலப்பாடு முறை, முதலியன இரண்டாவது உறுப்பான மொழியின் உள்ளுறுப்புக்களாகின்றன. இவ்விரண்டு உறுப்புக்களின் இணைவே முழுமையான கதையாக உருவகம் பெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால் எந்தவொரு படைப்புக்கும் ஒரு வடிவம் உண்டு அந்த வடிவத்திற்கும் அந்த வடிவம் கூறும் உள்ளடக்கத்திற்கும் உள்ள பொறுத்தப்பாடு குறித்த விளக்கமே அமைப்பியல் ஆய்வு எனலாம். வடிவத்தின் சிறப்பு எவ்வாறு படைப்பின் சிறப்பிற்கு துணைபுரிகிறது. என்று விளக்குவதே கட்டமைப்பியல் ஆய்வு என்ற கருத்தமைவின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு அமைகின்றது.

"அந்தி" நாவலின் "எச்சரிக்கை" என்ற முன்னுரையில் "இது என் கதைதான், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன் ஒரு கோடை காலத்தில் என் உச்சந்தலையில் விழுந்த இடி அது தொண்டைக்குழிக்குள் இத்தனை வருசங்களாய் வார்த்தைகளுக்காய் தவமிருந்து இன்று அதன் வரம் நாவலாக உங்கள் கையில்" என்று படைப்பாளி கூறுவதிலிருந்து அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்ச்சியே இந்த நாவலுக்குக் கருவானது என்பது தெளிவாகிறது. நாவல் ஆசிரியரின் அப்பாவைப் பெற்ற ஆத்தாளின் இறப்பே அந்தச் சோகநிகழ்ச்சி. ஒரு மரணம் நாவலாக மலர்ந்திருக்கின்றது. ஒரு மரணத்தை - இன்னும் சொல்லப்போனால் ஒரு தற்கொலையை - அதற்குரிய காரணகாரியங்களை எல்லாம் இணைத்து இத்துணை சுவையாகச் சொல்ல முடியுமா என்ற வியப்பே விஞ்சி நிற்கின்றது.

ஆறுமுகத்தம்மாள் வெள்ளையப்பத்தேவரைத் திருமணம் செய்து கொண்ட போது அவரிடம் இருந்தவை கொஞ்சம் ஈடுகள் மட்டுமே. வெள்ளையப்ப தேவர் ஒரு புத்திசாலியாகக்கூட இல்லை. ஈடுகளை விற்று நிலம்வாங்கிக் கிணறு தோண்டி நிலத்தைப் பண்படுத்தியது எல்லாம் ஆறுமுகத்தம்மாள்தான். ஆறுமுகத்தம்மாள் குடும்பத்தைத் தாங்குகிறாள். முத்துச்சாமித்தேவர். கந்தசாமித்தேவர். குப்புச்சாமித் தேவர், மாடசாமித்தேவர் என நான்கு ஆண்கள், பார்வதி, பாப்பாத்தி என இரண்டு பெண்கள் ஆக மொத்தம் ஆறு குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிய ஆறுமுகத்தம்மாள் பிற்காலத்தில் கணவன் மறைவுக்குப் பின்னர் தனியாளாகிப் போனாள். ஆறுமுகத்தம்மாளின் பிள்ளைகள் எல்லோரும் அவரவர்தம் பாட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆறுமுகத்தம்மாள் திருட்டுக் குற்றம் சாட்டிக் கேவலப்படுத்துகிறாள் ஒரு மருமகள். மற்றொரு மருமகளோ மகன் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தம்மாளை "இங்கு வேலை செய்தால் தான் சாப்பாடு" என்று பேசி விரட்டி விடுகிறாள். இப்படித்தான் பெற்று வளர்த்த பிள்ளைகளின் வீடுகளில் தனக்கு அன்பும், ஆதரவும் இல்லாததால் தனித்து வாழ்ந்த ஆறுமுகத்தம்மாள் இறுதியில் தற்கொலை செய்துகொண்டு விடுகிறாள். அவள் இறந்தபின் அதுவரை அவளுக்கு ஆதரவுதராத அவளுடைய மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் சடங்குகள் செய்கிறார்கள். இறுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சுயநலம் பேணுபவர்களாகவே நிலைத்து நிற்கின்றனர். இது தான் அந்தி நாவலின் கதைச்சுருக்கம்.

நாவல் திறனாய்வாளர்கள் பொதுவாக நாவலின் அமைப்பை - கதைப்பின்னலை விளக்கும்போது தொடக்கம் - வளர்ச்சி - உச்ச கட்டம் - வீழ்ச்சி - முடிவு - என்று ஏற்ற இறக்கக் கோணங் கொண்ட வரைபடத்தால் விளக்குவார்கள். ஆனால் அந்தி நாவல் அத்தகைய எளிய அமைப்புடைய நாவலாக அமையவில்லை. ஆறுமுகத்தம்மாள் இறந்த நாளில் தொடங்கி கருமாதி நடைபெறும் பதினாறாம் நாள் முடிய பதினாரு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூறும் வகையில் பதினாரு இயல்களில் நாவல் அமைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு இயலும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியில் தொடங்கினாலும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பின்னோக்கு உத்தியிலோ அல்லது நனவோடை உத்தியிலோ கடந்த கால நிகழ்வுகளைத் தொகுத்துக் காட்டுவதாக அமைந்து இறுதியில் மறுபடியும் நிகழ்காலத்தில் வந்து முடிவதாக அமைகிறது. சில இயல்கள் பின்னோக்கு உத்தியின் மூலம் விளக்கிய கடந்தகால நிகழ்வுகளுடனேயே முடிந்து விடுகின்றன. இந்த அமைப்பினால் நாவல் நிகழ்வுகள் நிகழ்வில் தொடங்கி இறப்புக்குள் சென்று பின்னர் நிகழ்வுக்குத் திரும்பி மறுபடியும் இறந்தகாலத்திற்குள் பயணம் செய்து மறுபடியும் நிகழ்வுக்குத் திரும்புதல் என்ற வகையில் மறுபடி மறுபடி இறப்புக்குச் செல்வதும் நிகழ்வுக்கு வருவதுமான அமைப்பு காணப்படுகிறது. 174 பக்கங்களைக் கொண்டமைந்த இந்நாவலில் ஏறத்தாழ 110 பக்கங்கள் முன்னோக்கு மற்றும் நனவோடை உத்திகளால் இறந்தகால நிகழ்வுகளைக் கூறுவனவாகவே அமைகின்றன.

இந்த அமைப்பினால் இந்த நாவலின் கரு எவ்வாறு சிறப்புற வெளிப்படுகிறது என்ற வினா எழுவது இயல்பே. ஆறுமுகத்தம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மரணம் - தற்கொலை தான். இந்த நாவலின் மைய நிகழ்வாகும். இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்ன? இது ஏன் நடந்தது? என்ற வினாவிற்கு இறுதிவரை நாவலில் விடை இல்லை. ஒவ்வொரு இயலிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தினுடனான ஆறுமுகத்தம்மாளின் உறவு சித்தரிக்கப்படுகிறது. ஆறுமுகத்தம்மாள் உயிரோடு இருந்த போது அவள் மற்றவர்களோடு கொண்டிருந்த உறவும், மற்றவர்கள் இவள்மீது கொண்டிருந்த பாசமும், அவளை மதியாமல் செய்த அவமதிப்புக்களும் ஒவ்வொரு இயலிலும் தனித்தனியாக விரிவாகப் பேசப்படுகின்றது. இவையாவும் முன்னோக்கு உத்தியோக = பிற பாத்திரங்களின் கூற்றாக அல்லது அவள் மீது பாசங்கொண்ட பாத்திரங்களின் சனவோட்டத்தில் அமைவது போல படைக்கப்பட்டுள்ளது.

இந்நாவலின் ஒவ்வொரு இயலிலும் ஆறுமுகத்தம்மாளின் சாவுக்குக் காரணம் என்று ஒவ்வொருவர் மீதும் குற்றம் சாட்டுவது போல அமைந்து இறுதிவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகாமலே கதை முடிந்துவிடுகிறது. ஒவ்வொருவர் பார்வையிலும் தன்னைத் தவிர மற்றவர்கள் தான் குற்றவாளியாக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் ஆறுமுகத்தம்மாளின் மரணத்திற்கு மற்றவர்களின் செயல்தான் காரணம் என்று நிலைநாட்டப் பார்க்கின்றனர். இந்நாவலில் ஆறுமுகத்தம்மாளின் மனமுறிவுக்குப் பல நிகழ்வுகள் காரணமாகப் படைக்கப்படுகின்றன. ஆனால் எதனால் அவள் தற்கொலை செய்து கொண்டாள்? என்பது மட்டும் தெளிவாக இல்லை. இதற்கு அந்நிகழ்வுகள் காலவரிசைப்படி கூறாததும் ஒரு காரணம் ஆகிறது. அதற்குப் பின் நவீனத்துவத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட தொடரில் எழுத்துமுறை காரணமாகிறது. ஆறுமுகத்தம்மாளின் சுயகௌரவம் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் பல. அவை ஒவ்வொரு இயலிலும் ஒவ்வொருவர் கூற்றாக வெளிப்படுகிறது.

மூன்றாவது இயலில், மூத்தமருமகள் தன்மீது ஐந்து ரூபாயைத் திருடியதாகத் திருட்டுப்பட்டம் கட்டியபோது மனமுடைந்து போகிறாள் ஆறுமுகத்தாய். இந்த நிகழ்வு மூத்தமருமகள் பகவதி ஆறுமுகத்தம்மாளைத் திருட்டுக் குற்றம் சாட்டி அவமானப்படுத்தியதாக அமைகிறது. (ப.37) அப்போது அவளுக்கு வருத்தமெல்லாம் மூத்தமகன் பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு தன்ன நம்பாம போய்விட்டானே என்பதுதான் (ப.38) நான்காவது இயலில், "இன்னிக்கு காலையில் பெரிய அத்தை வீட்டுக்குப் போனேன். அவா சொல்றதப்பாத்தா வள்ளயூரு சித்திதான் காரணமுன்னு சொல்றா" என்றமையும் பகுதி இரண்டாவது மருமகள் கிடா வெட்டியகறிகளைக் கொடுக்காமல் அவமதித்ததுதான் ஆறுமுகத்தம்மாளின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது (ப.48). இது இரண்டாவது மகன் மருமகளால் ஆறுமுகத்தம்மாளுக்கு ஏற்பட்ட மனமுறிவைக்காட்டுகிறது.

ஆறாவது இயலில் தன் சின்ன மருமகன் தன் அண்ணன் மகன் என்பதால் உரிமையோடு தன் மகளைச் சொத்து வாங்கிவரும்படி அனுப்பியதால் தன் மருமகனிடம் "ஒனக்கு அத்த வேணுமா சொத்து வேணுமா என்று கேட்கிறாள்" அத்த எதுக்கு...? சொத்துதான் வேணும் என்று அவன் கூறவும் தோட்டத்துல பாதிய அவனுக்கு எழுதிக்கொடுத்துவிட்டாள். அப்போது சொத்து போனது கூட அவளுக்கு வருத்தம் இல்ல. தொப்புள் கொடி உறவு அறுபட்டு விட்டதே என்பதில் அவளுக்குத் தாங்க முடியாத துக்கம். இது மகள் மருமகள் செயல்களால் தன் சொந்த அண்ணனின் செயலால் ஏற்பட்ட மனமுறிவு ஆகும்.

இதே இயலில் சொத்தைத் தன் மருமகனுக்குக் கொடுத்ததை எதிர்த்துப் பேசிய மூன்றாவது மகன் குப்புச்சாமித்தேவர் இறுதியில் "நீ செத்தாலும் வரமாட்டோம்" என்று கோபித்துக் கொண்டு போகிறார். அதனாலும் ஆறுமுகத்தம்மாள் மனம் உடைகின்றாள். ஏறக்குறைய இதுபோல்தான் அம்மாவுக்கும், எல்லாப்பிள்ளைகளுக்கும் இடையில் உறவில் விரிசல் விழுந்தது. ஆனால் எது பிந்தியது? எது இறுதியில் அவள் உயிரைக்குடித்தது என்பது தெளிவுறா வகையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. இதற்கு இந்த அமைப்பே துணையாகிறது மரணத்திற்குக் காரணம் யார் என்று சொல்ல முடியாத குழப்பமே இத்தகையதொரு கதைப் பின்னலைத் தந்திருக்கிறது நாவலாசிரியரின் கூற்றிலேயே இக்கருத்து, "எங்க குடும்பத்தின் கலங்கரை விளக்கு ஒருநாள் அணைந்து போயிற்று காற்றடித்தது என்றார்கள் எண்ணை இல்லை என்றார்கள் திரிதீர்ந்துவிட்டது என்றார்கள் எப்படியோ அவள் இல்லை என்பதற்கு என்னைச் சுற்றி கவிழ்ந்த இருட்டு மட்டுமே சாட்சியம் என்று முன்னுரையில் வெளிப்படுகிறது.

இந்நாவலின் சில எதிர்வுகள் பாத்திரப்படைப்புக்கும் நாவல் ஓட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆறுமுகத்தம்மாள் வெள்ளையப்பதேவர் ஜோடியில் ஆறுமுகத்தம்மாள் பாத்திரம் புத்திசாலித்தனம் + வீரம் + குடும்பத்தைத்தாங்கும் சக்தி என்ற பண்புகள் கொண்டும், வெள்ளையப்ப தேவர் பாத்திரம் - புத்திசாலித்தனம் - சுறுசுறுப்பு = வீரம் என்ற பண்புகள் கொண்டும் கட்டமைக்கப்படுகிறார்கள்.

இந்த நாவல் ஒரு யதார்த்தவாத நாவல் என்கிறார் ஞானி. இந்த யதார்த்த வாதம் கதை நிகழ்வுகளின் தன்மையால் மட்டும் அமைந்தது அல்ல. கதை கூறும் உத்தியாலும் இந்த யதார்த்தவாதத்தை காணமுடிகிறது. கதைகளை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக கூறாமல் படைப்பாளி ஓர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர் என்பதால் தம் ஆய்வுகளின் போது சேகரித்த நாட்டார் பாடல்களான ஒப்பாரிப்பாடல்களையும், மாரடிப்பாடல்களையும் 16 இயல்களில் 12 இயல்களில் பயன்படுத்தியுள்ளார்.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link