ஆய்வுச் சிந்தனைகள்


ஞானனின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

மனிதர்களின் கூட்டம் சமுதாயம் எனப்படும். அச்சமுதாயத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் காணப்பெறுவர். அத்தகையோரால் ஏற்படும் நல்லது நிலைத்திட, கெட்டது அழிந்திட, அவற்றைச் சமுதாயச் சிந்தனைகளாக, வெளிப்படையாகவும், இலைமறை காயாகவும் ஞானன் தமது சிறுகதைகளில் காட்டியுள்ளார். இத்தகு கதைகளுக்குச் சமுதாயம் பின்புலமாக அமைவது இயல்பாயினும், ஞானனது வாழ்வியல் பின்புலங்களை விளக்குவதாகவும் அவரது படைப்புகளுள் சில விளங்குகின்றன. ஞானனது சிறுகதைகளில் இடம்பெறும் சமுதாயச் சிந்தனைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சமூகம்:

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சமூகம். தமிழ்நாட்டவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த முறையில் சமூக அமைப்பினைக் கண்டனர். இதனை "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற சங்ககாலத்துப் பாடல் வரியால் காணலாம். "சமூகம் என்பது ஒருவகை மக்கட்பகுதி" என்ற பொருளுடையதாக எண்ணப்படினும், பரந்த உள்ளமுடையார்க்குச் சமூகம் கட்டுப்படாத ஒன்று. ஆகவே, சமூகம் என்பது பரந்துபட்ட இந்நிலப்பகுதியில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு வாழ்வதைக் குறிப்பது எனக் கொள்ளலாம்.

இலக்கியமும் சமுதாயமும்:

"இலக்கியம் ஒரு சமுதாய நிறுவனம்" என்பர். சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் தன்னைக் கருதிக்கொண்டு, படைப்பாளன் படைக்கும் படைப்புகளே சமுதாய இலக்கியங்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்குப் படைப்பாளர் படைத்த நூல்கள் பெருந்துணை புரிகின்றன. ஞானன், தமது கதைகளுக்கு வெறும் கற்பனையை மட்டும் அடித்தளமாகக் கொள்ளவில்லை. அவர் தம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் உள்ள பொதுவான சிக்கல்களைக் கூர்ந்து நோக்கிப் பயன் தருவனவற்றை இனம் பார்த்துத் தமது படைப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தார் எனலாம். எனவே அவரை நடப்பியல் மெய்ம்மைகளைப் படம்பிடித்துக் காட்டுபவராகக் கருதலாம்.

பெண்டிரின் சிறப்பு:

பெண்களுக்கு முதன்மை கொடுத்து எழுதுவது என்பது இன்றைய படைப்புலகில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவற்றைக் காலத்தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் பெண்களைக் கற்புத் தெய்வங்களாகவும், பண்பாட்டுப் பாதுகாவலர்களாகவும் படைத்து வருகின்றனர். "கன்ரிகேர்ல்" என்ற சிறுகதையில் பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவமானத்தை ஒரு நாட்டுப்புறப் பெண்ணே தட்டிக் கேட்பதாக ஆசிரியர் காட்டியுள்ளார். ஆண்கள் பலர் அக்கொடுமையைக் கண்டுகொள்ளாத நிலையில், சமுதாயக் கொடுமை கண்டு பெண்கள் கொந்தளிக்க வேண்டும். போராட வேண்டும் என்பதே ஞானனது எண்ணமாம்.

"மாதாப்பாட்டி" என்னும் சிறுகதையில் மகனிடம் போட்ட சபதத்தை நிறைவேற்றிக் காட்டும் முதிய பெண்ணாக மாதாப்பாட்டியைப் படைத்துள்ளார். இதன்மூலம் இளம் பெண்கள் மட்டுமல்லாமல் முதுபெண்டிர்கூட இலட்சிய வாழ்வு வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார். இவ்வாறு சமுதாயத்தில் பெண்களை உயர்நிலையில் வைத்துப் பார்க்கிறார் ஆசிரியர்.

வறுமை:

வறுமை என்பது தொன்றுதொட்டே சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பிணியாம். இதன் கொடுமையினை நவில நல்குரவு என்ற ஓர் அதிகாரத்தையே வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார். அன்றாடத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவை இல்லாத நிலையில் அவற்றைப் பெறுவதற்காக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கக் கூடிய நிலையை வறுமை என்று கூறலாம்.

சமுதாயத்தில் உருவாகும் பல்வேறுபட்ட சீர்கேடுகளுக்கு வித்திடுவது வறுமையே எனலாம். இச்சீர்கேடுகளுக்கு வித்திடுவது வறுமையே எனலாம். இச்சீர்கேடுகள் உருவாவதற்கு இன்றுள்ள சமுதாயக் கட்டமைப்பே காரணமாகும்.

திருட்டு என்ற சிறுகதையில் வறுமையின் காரணமாக ஒரு பள்ளியின் ஆயா, பசி தாங்காமல் இரண்டு பிஸ்கோத்துக்களைத் தின்றுவிடுகிறாள். இதற்காக, பள்ளி நிர்வாகத்தினர் அவளை வேலையை விட்டு நீக்கிவிடுகின்றனர். அவள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதும் பயனில்லை. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் வேலைக்காரியை, வீட்டின் சொந்தக்காரி கொடுமைப்படுத்துகிறாள். அக்கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு அவள் வேலை செய்கிறாள் (குறுணி சுமக்காமல்) இருப்பவன் - இல்லாதவன், முதலாளி, தொழிலாளி போன்ற ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும் வறுமையாளர் உரிமைக்குப் போராடவும் ஞானன் தமது கதைகளில் வலியுறுத்துகின்றார்.

தொழிலாளர் நிலை:

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது. உழைப்பாளர்கள், உலகினர் உண்ண உணவும் உடுக்க உடையும் அளித்துக் காக்கின்றனர். ஆனால் பாடுபடும் பாட்டாளித் தோழர்களின் வாழ்க்கை வளம் பெறவில்லை என்பது ஆசிரியரின் எண்ணம் போலும். இந்தியத் தொழிலாளர்களின் நிலை மிகவும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது என்பதை உணர்ந்த ஞானன், உழைத்து வாழக்கூடிய அனைத்து மக்களும் சமுதாயத்தில் அடிமைகள் போன்று உரிமைகள் இழந்து தவிக்கும் அவல நிலையை எதார்த்த உணர்வுடன் தமது படைப்புகளில் எடுத்துரைக்கின்றார்.

முதலாளியுடன் சுமூகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளியை முதலாளியின் அடியாட்கள் கொலை செய்துவிடுகின்றனர் (பிள்ளையார் விஜயம்) சாம்பிராணி என்னும் தொழிலாளி முதலாளியின் சூழ்ச்சியால் செய்யாத குற்றத்திற்காகச் சிறை செல்ல நேர்கிறது (சாம்பிராணி). கடின உழைப்பினை உலகிற்கு ஈந்தும் அவர்கள் இன்றைய சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலை ஞானன் தனது கதைகளில் காட்டுவது, இத்தகு அவலநிலை ஒழிந்து சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என்ற அவரது ஆசையைக் காட்டுவதாம்.

கையூட்டு:

பத்தாயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் கல்லூரியில் தன் மக்களுக்கு வேலை வாங்க முடியும் என்ற நிலையில், தான் இறந்தாவது அப்பணத்தைக் கிடைக்கச் செய்ய வேண்டும் எனச் செயல்படுவதாக ஒருவரை நண்டு என்ற சிறுகதையில் ஞானன் காட்டியுள்ளார். கையூட்டுப்படுத்தும் பாட்டை இக்கதை மூலம் எடுத்துக்காட்டுவதால் லஞ்சம் ஒழிய வேண்டும் என்ற ஞானனது உள்ளக் கிடக்கையை அறியலாம்.

வரதட்சணைக் கொடுமை:

"அவளுக்கு வாழ்க்கை வேண்டும்" என்ற சிறுகதையில் வரதட்சணை கொடுக்க இயலாச் சூழலில் கோமதி என்ற ஓர் இளம்பெண் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுவதும், அவன் ஆண்மை இல்லாதவன் என்ற உண்மை தெரிந்ததும் பிழைப்புக்காகத் தனது இளமைக்கால இன்பக் கனவுகளையெல்லாம் அழித்துக்கொண்டு தனது எதிர்கால வாழ்வை நினைத்துக் கவலையுறுவதாக ஞானன் காட்டியுள்ளார். இதன் மூலம் பெண்களின் வாழ்வினைச் சீரழிக்கும் வரதட்சணைக் கொடுமை ஒழிய வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணம் புலனாகும்.

சிறுகதை ஆசிரியர்கள் தத்தம் காலச் சமுதாயத்தைத் தம் கதைகளில் எதிரொலிப்பது இயல்பாகும். ஞானன் தாம் வாழும் காலத்துச் சமுதாயச் சீர்கேடுகளை வெளிப்படுத்துவதுடன், அவற்றுக்கான தீர்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்டிர் சிறப்பு, வறுமை, தொழிலாளர் நிலை, கையூட்டு, வரதட்சனைக் கொடுமை போன்ற பல்வேறு தன்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பெருமை ஞானனையே சாரும். ஞானனுக்குச் சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையைக் காட்டுவதாக இவை அமைந்துள்ளன.

நன்றி: ஆய்வுக் கோவை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link