ஆய்வுச் சிந்தனைகள்


தமிழ்ஒளியின் நோக்கும் தீர்வும்

பாரதி பரம்பரையைப் போற்றியதோடு நில்லாமல் பாரதியின் தமிழ்த் தேசிய உணர்வினைத் தன் இலக்கிய நோக்கமாகக் கொண்டு கவிதைகளைப் படைத்தவர் தமிழ்ஒளி. பாரதியைப் பின்பற்றி, அவரைத் தாசனாக ஏற்றுக் கொண்ட பாரதிதாசனின் தமிழ்தொண்டினைப் போற்றி "அத்தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்"! என்று கூறி

"தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதை பல அளிக்க வந்தேன்
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!"

என்று அறிமுகம் செய்து கொள்ளும் தமிழ்ஒளியை அனைவரும் அறிவர். பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றி, பொதுவுடைமை இயக்கத்திற்கு தம் கவிதைகளைக் களப்போர் கருவிகளாக ஆக்கிய போது தமிழ் இலக்கிய வரலாற்றில், பாரதி, பாரதிதாசன் இருவரையும் தாண்டிய பெருமை தமிழ்ஒளியை அடைந்தது எனலாம். தமிழ்ப் பற்றும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீர்த்திருத்தத் துடிக்கும் துடிப்பும், "விஜயரங்கம்" என்ற தன் இயற்பெயரை விடுத்துத் "தமிழ்ஒளி" என்ற புனைப்பெயரை வைத்துக் கொள்ளத் தூண்டின. தமிழுக்கு ஒளி தர விஜயரங்கம் தமிழ் ஒளியானார்.

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த இயக்கங்களும், கொள்கைகளும் அக்கால படைப்புகளில் இடம்பெற்றன. தமிழ்ஒளியின் படைப்புகள் பலவற்றிலும், மார்க்சியம், திராவிடம் ஆகிய இயக்கங்களின் தாக்கமும், சோஷலிசம், ஜனநாயகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகளின் தாக்கமும் காணப்படுகின்றன. "சுதந்திரம், சோஷலிசம், ஜனநாயகம், சமாதானம் ஆகிய உலகு தழுவிய மாபெரும் இலட்சியங்களைத் தமது இதயத்திலும் கவிதைகளிலும் வீறுடன் ஏற்றிப் போற்றிய கவிஞர் தமிழ்ஒளி" என்று பகர்கிறார் சிவசங்கரன்.

உள்ளடக்கம்:

சமுதாயத்தைக் கண்டு கவிஞர் உள்வாங்கிய அவன் கவிதைகளின் உள்ளடக்கமாக அமையும். அதுவே, கவிஞனின் உள்ளத்தையும் வெளிக்காட்டும், தமிழ்ஒளியின் கவிதைகள் சமுதாய வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டக்கூடியவை. தமிழ்ஒளி சமுதாயத்தின் அவலங்களை உள்ளவாறு உணர்ந்து, அதை அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்றவர். சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழும் மக்களின் துயர்தீர கவிதைத் தொண்டினைச் செய்தவர். "சமுதாய படப்பிடிப்பை என்னிடம் பார்க்கலாம்". என்று தமிழ்ஒளி தன் கவிதையின் உள்ளடக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பிச்சை எடுப்பவனின் அவல வாழ்வும் இவர் கவிதையில் உள்ளடக்கம் தேடிக்கொண்டது.

"வீதியெல்லாஞ் சுற்றி
வீட்டுப்படி ஏறித்
தொண்டை நோகக் கத்தி
சோறில் லாமல் திரும்பி
எச்சிலையைத் தின்பான்
ஏங்கியுமே அழுவான்"

என்று, பிச்சைக்காரனின் வாழ்வை வெளிக்காட்டுகிறார் தமிழ்ஒளி. "சமூகக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒன்றி, உணர்ந்து, உருக்கமாக எழுதினார். சமூகக் கொடுமையை எடுத்துரைக்கும் போது சமுதாய மக்களைத் தாக்கும் போக்கிலே இவருடைய சிந்தனை செயல்பட்டது" என்பார் ஆய்வாளர் கனகசுந்தரம்.

பொதுவுடைமை நோக்கு:

திருடன் திருடுவதைக் குற்றம் என்று சுட்ட மறுக்கும் தமிழ்ஒளி "சுட்டெரிக்கும் பட்டினிதான் திருடத் தூண்டும்" என்று கூறித் திருட்டுக்குக் காரணம் சமுதாயமே என்று சமுதாயத்தைச் சாடுகிறார். நாட்டில் நிலவும் குருட்டறிவே திருட்டைப் பெருக்க செய்தது என்கிறார்.

"திருடியதிந் நாடாவனின் உழைப்பை! அன்னோன்
திருடுகிறான் நாட்டினிலே பிறர் செல்வத்தை!

"செல்வமெலாம் ஒருவர்க்கே சொந்தம்" என்னும்
"குருட்டறிவே பெருக்கியது திருட்டை" என்பேன்"

என்று விடையளிக்கிறார்.

தமிழ்ஒளியின் பார்வை இங்கு மார்க்சிய பார்வையாக விளங்குவதை அறிய முடிகிறது. உழைப்புச் சுரண்டலும், மூலதனக் குவிப்பும் வறுமைக்கும், பசிக்கும் காரணங்களாக உள்ளன. பிச்சைக்காரனின் அவலத்தைச் சுட்டும் தமிழ்ஒளி ஒரு புலம்பும் கவிஞனாக நின்றுவிடாமல், அந்த பிச்சைக்காரனின் நிலையைச் சற்று கூர்ந்து நோக்குகிறார். அவனுக்கு, வீடு, வேலை, சோறு, துணி என்பவை இல்லை! மேலும் ஒரு சொந்தக்காரரும் இல்லை! என்றும் கூறுகிறார். இதனோடு, இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்பதற்கு உண்மை தேடி அறிவுறுத்த முனைகிறார். கவிதை தொடர்கிறது;

"இந்த விதம் அவனை
இழிவு படச் செய்தோர்
பெரிய பணக்காரர்
பெரிய தீமை செய்தார்!"

என்று பிச்சைக்காரன், பிச்சை எடுப்பதற்குக் காரணம் பெரிய பணக்காரர் செய்த பெரிய தீமையே என்று மார்க்சிய கண்ணோட்டத்தில் விடை காணுகிறார். "உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணத்தை - வீறுகொண்ட எழுச்சியை அவர் அற்புதமாகப் பாடியிருந்தார். அதுமட்டுமல்ல, உழைக்கும் மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கையைச் சித்தரிப்பதிலும் அவர் வெளிப்படுத்தியிருந்த வேதனைகள், வெற்றுப் புலம்பல்களாக இல்லாமல், வீர உரைகளாக வெடித்துச் சிதறிய வேகம் தமிழ் ஒளியின் தனித்தன்மைகளுக்குச் சான்றாக விளங்கின" என்பர் சே.து.சஞ்சீவி.

கவிஞனின் பார்வை:

"பட்டினிச் சாவு" என்ற சிறுகதையில் கவிஞனுக்கும் நண்பன் ராமுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் கவிஞனின் சமுதாயப் பார்வையைச் சுட்டுகிறது. "சமுதாயம் முன்னேறுகிறது!" என்று கூறுகிறார். அதற்கு ராமு, "உனக்கு எப்பொழுதும் சாவு, பயங்கரம். ட்ராஜெடி இதுதான் நினைவு - எல்லாம் கற்பனை என்கிறான். அதற்கு பட்டினியால் மயங்கிச் செத்தக் குழந்தைகளைச் சுட்டிக்காட்டி, "எட்ட இருந்து கொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்" என்று கூறுகிறார். தொடர்ந்து, "நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது" என்று ராமு கூறுவதாக உரையாடல் அமைகிறது. இவ்வுரையாடல் மூலம் கவிஞன் என்பவனே மனித நல நாட்டமுடன் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி உண்மையை உணர்வதுடன் அதைப் போக்கும் வழியையும் தருவான் என்பது பெறப்படுகிறது.

"மனிதாபிமானம், மானுட மேம்பாடு பற்றிய பாக்கள் இருபதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியைக் காட்டுவது" என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ் ஒளியின் பாடல்கள் மனிதாபிமானத்தையும் மக்களிடையே வளரச் செய்வதாய் அமைந்தன. மனிதாபிமான பார்வையை உருவாக்க தமிழ்ஒளியின் கவிதைகள் துணைநின்றன.

சமுதாய படப்பிடிப்பும் சாடலும்:

தமிழ்ஒளியின் கவிதையில் உண்மை நிலை சுட்டுவதும் சீர்திருத்தவழி கூறுவதும் சமுதாயத்தைச் சாடுவதுமாக இந்த மூன்று கூறுகளும் ஒன்று கலந்தே இருக்கும். "கண்ணிருந்தும் குருடர்களாய்க் காதிருந்தும் செவிடர்களாய் இங்கே எண்ணற்ற மூடர் வாழ்கின்றார் என்று மனித சமுதாயத்தைச் சாடுகிறார் தமிழ்ஒளி, தமிழ்ஒளியின் பார்வையில் சமூகம், "குள்ளச் சமூகம், கறைகொள்ளும் சமூகம், கள்ளச் சமூகம் என அதனை கட்டுகளில் ஏழையர் துன்புற்று வாழ்கின்றனர். உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாதிருக்கின்றனர்." என சமூதாயத்தின் உண்மை நிலையைத் தமிழ்ஒளி படம்பிடித்துக்காட்டுகிறார்.

காடு கழனி திருத்தி:

வையத்தைக்காவல் செய்யும் உழவர்கள், உணவின்றி பசியால் கண்ணீர் சிந்தி வாழ்கின்றனர். வீடு கட்டித் தந்த கட்டிடத் தொழிலாளிக்கு வீடு இல்லை. ஆடை நெய்து உலகின் மானம் காத்தவர்களுக்கு கந்தல் ஆடைகளே சொந்தமாயிருக்கிறது. வெயில் என்றும் பணி என்றும் பாராமல் உழைத்தவர் தமக்கு வாழ்வில்லை. சொத்தையெல்லாம் விளைத்தவன் தொழிலாளி அவனை முதலாளித்துவ உலகம் சுரண்டுகிறது. கஞ்சிக்குத் தொழிலாளி வாடுகிறான். முதலாளி பஞ்சணையில் சுகமாக வாழ்கின்றான். இவ்வாறு சமுதாயம் ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகிறது என்று எடுத்துக்காட்டும் தமிழ்ஒளி "குருட்டுலகம், செவிட்டுலகம், கொலைகார உலகம், கொஞ்சமுமே ஏழைகளின் நிலை கருதல் இல்லை" என்று ஆதங்கக் குரல் கொடுக்கிறார். அதனோடு நில்லாமல் புரட்சியினால் இவ்வேற்றத்தாழ்வுகள் நீங்கும் என்ற வழியையும் கூறுகிறார்.

சமுதாய சிற்பி:

"தமிழ்ஒளி, நடமாடும் தெய்வங்களின் "ஓடப்பர்"நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை "ஒப்பப்ப ராக்கும் பணியில் முனைந்துள்ள கவிஞர் இதே உள்ளத்துடன் அவர் என்றும் இசை பாடி வருவாரானால் சமுதாயத்தைச் செப்பமிடும் சிற்பிகளில் கூட்டத்தில் ஒன்று கலப்பார் என்பதில் ஐயமில்லை" என்று எதிர்பார்த்தனர்.

"வீழும் வரையினிலே சாதிப்பிரிவுகளும்
நல்ல தொழிலாளர் தம்மை நசுக்கிவரும்
பொல்லா முதலாளி போயொழியும் தேதிவரை
எங்கும் எவருக்கும் எப்பொழுதும் துக்கந்தான்
கங்குல் இனிநீங்கும் காண்"

என்று பாடுவதன் மூலம் கவிஞர் சாதிப் பிரிவுகளும் தொழிலாளர்களை நசுக்கும் முதலாளியும் ஒழிந்தால்தான் ஏழைத் தொழிலாளரின் துயர் போகும் என்று சுட்டுவதை அறியமுடிகிறது. சமுதாயத்தைச் சாக்கடைச் சமுதாயம் என்று சுட்டும் தமிழ்ஒளி "சமுதாயத்திற்கே சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. அது, சாக்கடையாக மாறி விஷக்காற்று நிரம்பி, மிகக் கொடியதாக இருக்கிறது. அந்த சாக்கடையின் விஷக்காற்றில் சிக்கிக் கொள்ளும் ஏழைத் தொழிலாளிகள் எலிகள் மூஞ்சூறுகளைப் போல் விழுந்து செத்துப் போகிறார்கள்" என்றும் கூறுகிறார் சமூதாயத்தை விழுங்கும் கொடிய நோயினைப் போக்க சிகிச்சை செய்யத் துடிக்கும் தமிழ்ஒளியின் சேவை நாட்டிற்குத் தேவை.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link