ஆய்வுச் சிந்தனைகள்


சமகாலச் சூழலில் மாற்று இதழியல்

சமூகங்கள் என்பது சாதி, மதம், இனம், நிறம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அதிகாரச் சமூகங்களாக இருந்துவருகின்றன. இச்சமூகங்கள் வெளித்தோற்றத்தில் மக்களுக்கான அரசு மற்றும் அதிகாரக் கட்டமைப்பைக் கொண்டதாகக் காணப்பட்டாலும் அடிப்படையில் இவை ஆளும் வர்க்கத்திற்குரிய அமைப்பாகவே இருந்து வருகின்றன. இத்தகைய அதிகாரச் சமூகங்களுக்கு மாற்றாக அடித்தள மக்களின் வளர்ச்சிக்கான அரசு மற்றும் அதிகாரங்கள் குறித்து முதன் முதலில் பேசிய தத்துவம் மார்க்சியம் ஆகும்.

பழைமைவாத அரசுகளுக்கு மாற்றாக மக்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் மக்களாட்சி முறையை மார்க்சியம் முன்வைத்தது. ஆனால் மார்க்சியத்தின் பெயரால் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அரசு மற்றும் அதிகாரங்களுக்காகவும், பொதுஉடைமை சமத்துவத்தை முன் வைத்து வெற்றிபெற்ற கம்யூனிச நாடுகளில் கூட இன்று மக்கள் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் போன்றவற்றைப் பெறமுடியாமல் அந்நியப்பட்டு நிற்கின்றன. இப்போக்குகள் அதிகாரக் குவியத்தையே காட்டுகின்றன.

குறிப்பாக மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவியத்தைக் கொண்ட இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் காலனி நாடுகளாக இருந்து விடுதலைப்பெற்ற இந்தியா போன்ற நாடுகள் இலத்தீன், அமெரிக்கா மற்றும் பிரான்சு போன்ற தேசிய விடுதலை பெற்ற நாடுகள், இசுரேல், பாகிஸ்தான் போன்ற மத அடிப்படைவாத நாடுகள், நிறவெறி ஒடுக்குமுறைக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சாதிய அடிப்படைவாதம் கொண்ட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் அடிப்படைவாத நிறுவனங்களில் திட்டமிட்டக் கருத்தியல் செயல்பாடுகளால் விளிம்புநிலைக்குழுக்கள் அடிபணிந்த தன்னிலைகளாக மாற்றப்படுகின்றன. தனது வசதிக்கேற்ப விளிம்புநிலைக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளும், அடிப்படைவாத நிறுவனங்கள் அரசு எந்திரம் மூலம் சமூகச்சிக்கல்களுக்கு காரணம் அரசு அல்ல மக்களேதான் என்கிற உளவியல் ஒழுங்கை ஏற்படுத்துவதை பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார் அ.மார்க்ஸ்.

அரசில் எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பளிக்கப்படுகிறது. தங்களது திறமைக்கேற்ப யாரும் முன்னேறிக் கொள்ளலாம். தங்களது விருப்பத்திற்குரிய ஆட்சியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். சனத்தொகை பெருக்கமே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம் என்பன போன்ற புனைவுகள் உருவாக்கப்பட்டு தொடர்புச் சாதனங்கள் மற்றும் பள்ளி, குடும்பம் மற்றும் மதம் போன்ற நிறுவனங்கள் மூலமாக மக்கள் உணர்வில் பதிக்கப்படுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றிற்குரிய முழுமையில் வைத்தளிக்கப்படாமல் ஒடுக்குபவர்களுக்கு வசதியான ஒரு கோணத்தில் குவிக்கப்பட்ட பார்வையிலேயே கட்டப்படும் ஒவ்வொரு பிரச்சினையும் ஒட்டு மொத்தமான அமைப்புடன் தொடர்புடையது என்கிற பார்வையை இழப்பதன் மூலமாக ஒட்டுமொத்தப் பிரச்சினைகளிடமிருந்து ஒடுக்கப்படுபவர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். தங்களது விமர்சனப்பார்வையை இழக்கின்றனர். இவ்வாறு ஒரு திரிபு செய்யப்பட்ட உலகப் பார்வை அவர்களுக்கு மேலிருந்து வகுத்தளிக்கப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து விடுதலை அடைந்த மூன்றாம் உலக நாடுகளில் அ.மார்க்ஸ் மேலே குறிப்பிட்டுள்ளது போன்று ஆளும் வர்க்கப்பொதுப் புத்தியை அப்படியே ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் தொடர்ந்து இவர்கள் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதிய மேலாண்மை கொண்ட நிறுவன வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு அவற்றின் உள்ளடக்கத்தை மட்டும் உழைக்கும் மக்களாக மாற்றினால் போதும் என்கிற நிலைப்பாடே இந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. அதனால் ஆட்சியாளர்கள் மட்டும் மாறினார்களே ஒழிய அதிகாரச் சமூக அமைப்பு மாறவில்லை. எனவே இந்நிறுவனங்கள் மீண்டும் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளிய அதிகாரச் சமூகமாகவும் இந்தியா போன்ற நாடுகளில் மேல் சாதியினர் ஆதிக்கச் சமூகமாகவும் இருந்துவருகின்றன. ஆகவே இச்சமூகங்களுக்கு மாற்றாகப் புதிய சமூகத்திற்கான பண்பாட்டு கருத்தியல் தளத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை எழுகிறது. அரசு என்பதை வெறுமனே ஆட்சிமுறை, ஆட்சியாளர்கள், காவல்துறை, நீதிமன்றம், இராணுவம் ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு அதன் கட்டமைப்பை மாற்றுவது மட்டுமே விடுதலை பெற்று தராது கூடாகவே அதன் பண்பாட்டு கருத்தியல் தளங்களான நீதி, பண்பாடு, குடும்பம், நல்வாழ்வு, உற்பத்தி, உறவுகள் மற்றும் தொடர்பியல் முறைமை ஆகிய கருத்தியல் நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு துறையிலும் நாம் மாற்றுக்களைத் தேட வேண்டியுள்ளது. மாற்று என்பது பழைய கட்டமைப்பைத் தலைகீழாக்குவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. பழைய வடிவங்களை உடைப்பது, உள்ளடக்கத்தை மாற்றுவது, அம்பலப்படுத்த உதவுமேயொழிய அதிகாரங்களைத் தகர்க்க உதவாது. மாற்று என்பது இணை அதிகாரம் அல்ல. உண்மையில் அது எதிர் அதிகாரம். எனவே தான் மாற்றுக்கல்வி, மாற்றுக்கலாச்சாரம், மாற்று நீதி என்பனவெல்லாம் உண்மையில் எதிர்க்கல்வி, எதிர்க் கலாச்சாரம் மற்றும் எதிர் நீதி என்பவையாகவே உள்ளன என்கிறார் அ.மார்க்ஸ்

மேற்காணும் கருத்தியலை இந்தியச் சமூக அமைப்பின் பல்வேறு கூறுகளோடு இணைத்து ஏகாதிபத்தியம் மற்றும் சாதி இந்துக்களின் வாழ்வியல் விழுமியங்கள், அதிகார உறவுகள், கலை, இலக்கியம் மற்றும் மக்கள் திரள் தொடர்பியல் ஊடகங்களின் பழைய உள்ளடக்கங்களுக்குப் பதிலாக மாற்று உள்ளடக்கங்களை முன் வைப்பதில்தான் விளிம்புநிலை மக்களின் இருப்பை விளங்கிக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் பொதுக் கருத்தை உருவாக்கவும் முடியும். "மைய அமைப்புடைய மதம், அரசியல், பண்பாடு ஆகிய அனைத்து நிறுவனங்களின் கொள்கை மற்றும் செயல்பாட்டில் காணப்படுகின்ற ஏகாதிபத்தியத் தன்மையில், பாதிக்கப்படுகின்ற விளிம்பு நிலையிலுள்ள மக்களும் பிற அதிருப்தியுற்றக் குழுக்களும் மாற்றுச் சமூக அமைப்பைக் கொண்டுவர நினைக்கும்பொழுது அங்கே மாற்றுத் தொடர்பியல் முகிழ்க்கிறது என்ற கருத்து மேற்கூறப்பட்டுள்ள கருத்தை விலயுறுத்துவதாய் அமைகிறது. மாற்றுத் தொடர்பியல் நிகழ்வு பரிசோதனைக் கூடங்களில் இல்லாமல் மக்கள் சமூகத்திலிருந்தே தோற்றம் கொள்கிறது. மாற்றுத் தொடர்பியல் ஆதிக்க சக்திகளின் அதிகார வரம்பிற்குள் இயங்கும் மைய நீரோட்ட ஊடகங்களால் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டத் தரசு நிலங்களில் பயிரிடப்படுகின்றன என்கிறார் டௌனிங் மைய நீரோட்ட ஊடக முதலாளிகள் ஊடக ஆசிரியர்கள், செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் முதலானோர் பெரும்பான்மையானவர்களின் சமூக, அரசியல், பண்பாட்டு எதார்த்தங்களைப் புறக்கணிக்கின்றபொழுது அல்லது திரித்துக் கூறுகின்றபொழுது அதை விவாதிப்பதற்குரிய மேடையும் பின் தகவல்களும் தேவைப்படுகின்றன. இந்நிலையில் புறக்கணிக்கப்படுகிறவர்கள் கருத்துக்களை வெளியிடத் தங்களுக்குச் சொந்தமான ஊடகங்களை உருவாக்கிக் கொண்டு பொருத்தமான தொடர்பியல் முறைகளைக் கையாளும்பொழுது அங்கே மாற்றுத் தொடர்பியல் முறை உருவாகிறது என்பர் தொ. மனோன்மணி அவர்கள்.

விளிம்பு நிலையில் உள்ள அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காக ஏற்பட்டது மாற்றுத் தொடர்பியல் முறைமை. இவை பெரும்பாலும் குறிப்பிட்டக் குழுவினரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அதனால் மாற்றுத் தொடர்பியல் அமைப்புக்கள் குழுதொடர்பியல் உத்திகளையே கையாளுகின்றன எனலாம். மைய நீரோட்ட மக்கள் திரள் தொடர்பியல் முறையில் தகவல்கள் மக்கள் திரள் நோக்கியவையாக இருப்பதால் அவை தனிமனித பொறுப்பைச் சிதைத்துவிடுகின்றன என்பதாலும், மக்கள் திரள் மந்தைகளாகி, சந்தைகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதாலும், இங்கு மக்கள் குழுவை மையப்படுத்தித் தகவலை அமைத்துக்கொண்டு குழுத்தொடர்பியல் ஊடகங்களைப் பயன்படுத்தும்பொழுது அத்தகவல் கருதிய விளைவை அக்குழுவினரிடம் ஏற்படுத்துகிறது.

சமூக அசைவியக்கத்தில் மக்களின் பண்பாடு, அரசியல், பொருளாதார வாழ்வோடு தகவல் தொடர்புச் சாதனங்கள் ஒன்றியுள்ளமையை மறுத்தற்கியலாது. அதனால் அல்தூஸர் கருத்தியல் நிறுவனங்களை வரிசைப்படுத்தும் பொழுது தொடர்பியல் நிறுவனங்களையும் இணைக்கிறார். தகவல் பரிமாற்றம், அறிவூட்டல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை மட்டும் தொடர்பியல் ஊடகங்களின் பணிகளாகக் கொள்ளாமல் மக்கள் திரளைச் செயலூக்கப்படுத்துவதும் அதன் மூலம் சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் பெறுவதும் அவற்றின் நோக்கமாகின்றன. மக்கள் திரள் ஊடகங்களுள் முதன்மையானதும், பழமையானதும் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளதுமான இதழ்கள் முதன்மையிடம் பெறுகின்றன.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வெளிவருகின்ற இதழ்கள் அனைத்தும் இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அதனால் அவைகள் முதலாளித்துவச் சிந்தனையின் அடிப்படையில் மேட்டுக்குடியினர் சார்ந்த சமூக அரசியல் மற்றும் பண்பாடு, வாழ்வியலையே தூக்கிப் பிடிக்கின்றன. அக்கருத்தியலைச் சமூகவயப்படுத்துவதிலும் நியாயப்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன.

சமூகத்தில் உள்ள அடித்தள மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவ மறுக்கும் இவ்விதழ்கள் மேற்கத்திய வாழ்வியல் முறைகளை அறிமுகப்படுத்துதல் தனிமனித உறவுகளைத் தூக்கிப்பிடித்தல் மற்றும் ஆதிக்க சாதிப் பண்பாட்டு விழுமியங்களை அனைவருக்குமான பண்பாடான மொத்தத்துவமாக்கி ஏற்கவைத்தல் என்பது போன்ற ஒடுக்குமுறைக் கூறுகளை நாளிதழ்களை விடப் பருவ இதழ்களில் வெகுவாகக் காணமுடிகிறது.

தற்சார்பான் நிலையில் வெளிவரும் மேற்காணும் கருத்தியல் சார்ந்த இதழ்கள், அடித்தள மக்கள் மற்றும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறை மற்றும் அவமதித்தல் என்பன போன்ற தகவல்களை முழுமையாக மக்கள் திரளின் கவனத்திற்குக் கொண்டுவருவதில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் தகவல்களின் அடிப்படையிலேயே பொதுக்கருத்து உருவாக்கப்படுவதால் மேட்டுக்குடி மற்றும் நகர்புற, நடுத்தர மக்களுக்கான மேட்டுக்குடி கருத்தாகவே உருப்பெறுகின்றன. அதனால் மக்கள் திரள் இதழ்களின் செயல்பாடுகள் மேற்குறிப்பிட்டப் போக்கிலேயே அமைகின்றன என்பது பரவலான குற்றச்சாட்டாகக் காணப்படுகிறது.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை மைய நீரோட்ட இதழ்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் விளிம்பு நிலை மக்ளுக்காகவே விளிம்பு நிலைக் குழுக்களால் விளிம்பு நிலைக் குழு இதழ்களின் தோற்றம் இன்றியமையாததாகிறது. தொடர்பியல் ஊடகங்களுள் குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கான இதழ்களின் தோற்றத்திற்கான சமூக கட்டாயங்களையும், அவற்றின் வரலாற்று வளர்ச்சியையும் கண்டறிவதிலும் விளிம்புநிலை மக்களின் பாமரத்தன்மையைக் களைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மாற்று இதழ்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மாற்று இதழ்களின் பண்புகள்:

1. நடைமுறைச் சிக்கல்களுக்கும் கோட்பாட்டு விடயங்களுக்கும் முதன்மை தருதல்.
2. வடிவம், உள்ளடக்கம், கருத்தியல் என மைய நீரோட்ட இதழ்களிலிருந்து வேறுபட்டு நிற்கும்.
3. மாற்றுக் கருத்தாளர்களை இதே போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தும் பொருட்டு தாங்கள் பயன்படுத்தும் தொழில் நுட்ப விவரங்களைத் தம் இதழ்களிலேயே அச்சிடுதல்.
4. பல்வேறு துறை சார்ந்த மாற்றுச் சிந்தனை இதழ்கள் மற்றும் நூல்கள் ஆகியவற்றின் பட்டியல்களை வெளியிடுவது. இவைகள் கிடைக்கும் முகவரிகளை அச்சிடுவது என ஒவ்வொரு இதழிலும் முதன்மை அளித்தல்.
5. மையப்படுத்தப்பட்ட அச்சின் அதிகாரத்தை உடைப்பதில் இவை கவனம் செலுத்துதல் அதாவது மைய நீரோட்ட இதழியல் துறை என்பது மேலிருந்து கீழான கருத்தியல் தளத்தைக் கொண்ட நிறுவனம். இதில் யார் வேண்டுமானால் தங்களது கருத்துக்களை அச்சில் கொண்டுவந்துவிட முடியாது. இதழ் ஆசிரியர் வெளியிடுபவர் மற்றும் தணிக்கை குழு போன்ற அதிகார அமைப்புகளின் எல்லாவற்றையும் தாண்டித்தான் ஒருவர் தம் கருத்தை மட்டும் அச்சில் ஏற்ற முடியும்.
6. நவீன அச்சு எந்திரங்களின் வருகையை சரியாகப் பயன்படுத்திக் கொண் மாற்று இதழியலாளர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல முடியும். அக்கருத்துக்கள் மீதான எதிர்வினைகளையும் சொல்ல முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தினர் அச்செழுத்துக்கள் மீதான புனிதத்தை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது கேள்வி கேட்பது என்பதான விமர்சனப்பார்வை ஊக்குவித்தல் மூலம் எழுத்தாளருக்கும் வாசகருக்குமான ஆளுமை உறவிலான இடைவெளியைத் தகர்த்தல்.
7. முறையான கால ஒழுங்குடன் வெளிவருவதில்லை.
8. பொருளாதாரச் சிக்கலை சந்தித்தல்
9. விளிம்புநிலை பற்றிய ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யும் அல்லது திரித்து கூறும் மையநீரோட்ட இதழ்கள் ஒவ்வொன்றின் பின்னாலுள்ள அரசியலை தோலுரித்துக் காட்டுதல்.
10. நீதி, தொடர்பியல் முறைமை, அரசியல், கல்வி, இராணுவம், மருத்துவம், உளவியல் ஆகியவற்றின் எல்லாம் அரசியலாக்கக்கூடாது என்ற மைய நீரோட்ட வாதத்தை மறுத்து அதன் பின்னாலுள்ள அரசியலை வெளிக்கொணர்தல்.

விளிம்பு நிலைக் குழுக்களில் இன்று பரவலாக உச்சரிக்கப்படுபவர்கள் தலித்துக்கள் ஆவர். இவர்களின் விடுதலைக்கான எதிர்ப்புக் குரலோசையை வெளிப்படுத்தும் தலித் இயக்கங்களின் நோக்கங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று மேட்டுக்குடிக் கருத்தியல் நிறுவனங்களைத் தலைகீழாக்குவது என்பதாகும். மொத்தத்துவத்திலிருந்து தங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியக் கட்டாயத்தினால் கலை, இலக்கியம், மொழி, தொடர்பியல் முறைமை ஆகியவற்றில் தங்களது அடையாளப் பதிவுகளைப் பதிப்பிப்பது அவர்களது இயக்கக் கோட்பாடுகளில் முதன்மையானது. அவர்களுக்குக் கையகப்படக்கூடிய இதழ்களில் இப்பதிவுகளைக் காண முடிகிறது. இவ்விதழ்களின் உள்ளடக்கம், உத்திகள், செயல்பாடுகள் மற்றும் அணி திரட்டல்கள் ஆகிய அனைத்தும் மையநீரோட்ட இதழ்களின் எல்லா அம்சங்களிலிருந்து இவை வேறுபட்டு வருகின்றன.

நன்றி: பிறதுறைத் தமிழியல்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link