ஆய்வுச் சிந்தனைகள்


சிலம்பில் சமய அறங்கள்

சிலப்பதிகாரத்தை சமுதாய நோக்கில் பார்க்கும் பொழுது சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஒன்றுபடுத்திக் கூறும் தேசியக் காப்பியமாகத் திகழ்கிறது. மேலும் சிலம்பு அனைத்துச் சமயங்களையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் மணிமேகலை பௌத்த சமயத்தை மட்டுமே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.

சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதைத் தான்

"இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை
நம்புவதுதான் சமயம் ஆகும்" என்கிறது வாழ்வியற் களஞ்சியம்.

சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்படுகிறார். காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். ஏனென்றால் அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது.

இவ்வாறு மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தம்மைச் சார்பற்றவராகவே காட்சி செல்கிறார். அதே வேளையில் சமயச் சார்பு என்ற போர்வையில் அறிவுக்குப் பொருந்தாத செயல்களையும் கண்டிக்கிறார். தமது காப்பியத்தின் முடிவான கூற்றில் அடிகள் சமயச் சார்பாக கூறிய அறக்கருத்துக்கள்,

1. தெய்வம் தெளிமின்
2. தவநெறி மேற்கொள்ளுங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.

தெய்வம் தெளிமின்

"இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம். மனிதனை அடிப்படையாகக் —‘கண்டது அறம். இருப்பினும் இறைவனை அறிவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்" என வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது.

"சிலம்பில், சைவம், வைணவம், சமணம், புத்தம் என்ற அனைத்து மதங்களும் சொல்லப்பட்டாலும் புத்தமும், சமணமும் கடவுள் கொள்கையிலிருந்து சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறாக இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

சிலம்பில் குணவாயிற்கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என்று அடியார்க்கு மதக்கொள்கைகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துக் கூறியிருத்தலாலும் இளங்கோவடிகளின் சமயம் சமணசமயம் என ஐயுற இடம் உண்டு"

என்று உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறுவதாக டி.மகாலெட்சுமி தனது சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் "செங்குட்டுவன் சைவன்" என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.

இவ்வாறு இளங்கோவடிகளின் சமயத்தைப் பல்வேறு ஊகித்தறியப் பல்வேறு சான்றுகள் சிலம்பில் இருந்தாலும், சமயம் சார்பாக அவர் சொல்லிச் சென்ற அறக்கருத்துக்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.

"தெய்வம் தெளிமின்" என்ற கருத்தின் மூலம் தெய்வம் இருக்கிறதா? எவ்வாறு இருக்கிறது? உலகத்தை இந்த உயிர்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற நோக்குடன் தெளிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

சிலப்பதிகாரம் சமண சமயக்காப்பியம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம். கவுந்தியடிகள் மூலம்,

"காமுறு தெய்வம் கண்டடிபணிய
நீ போ யாங்களும் நீள் நெறிப்படர்குதும்" என்னும் வரிமூலம் வைணவக்கடவுளை வசைபாடுவதாக எடுத்துக்கொண்டால் தெய்வத்தைத் தெளிந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறாரே தவிர தெய்வம் உண்டெனத் தெளிவு கொள்ளுங்கள் எனப் பொருள் கொள்வது தவறாகப்படுகிறது.

ஒரு மனிதனுடைய வாழ்வியற் போராட்டங்கள் அவன் முற்பிறவியில் செய்த கருமப் பயனைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. எனவே தான் தன்னை விட்டுப்பிரிந்து சென்ற கோவலனை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் கண்ணகி அமைதியாகவே இருந்துவிடுகிறாள். இங்குத் தம் தோழியின் துயர் தாங்காமல்

"சோமகுண்டம், சூரிய குண்டம், துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்"

என்று கூறித் தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறிச் சோமகுண்ட, சூரிய குண்டங்களில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாள்.

ஆனால் கண்ணகி, "பீடன்று" என்று கூறி மறுத்து விடுகிறாள். அதன்பின் சோமகுண்டம், சூரிய குண்டங்களில் நீராடாமலேயே காமவேள் கோட்டம் தொழாமலேயே, கோவலன் திரும்பியும் வருகிறான். இதன்மூலம் ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயலும் முற்பிறவியிலேயே முடிவு செய்யப்பட்ட அவனது கருமச் செயலாலேயே நடக்கின்றது என்ற சமண சமயத்துக் கருத்தை இங்கு வற்புறுத்திக் கூறுகிறார்.

சமண சமயம், கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சமயம். கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற உயிர்க் கொலைகளையும் புறப்பாலாகிய வேற்றுமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமணமும், புத்தமும் கடவுள் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன.

இவ்வாறு சமண சமயக் கருத்துக்களையும், சைவ சமயக் கருத்துக்களையும் மாறி மாறி மிகுதியாகச் சொல்லிச் செல்வதால்

"இளங்கோவடிகள் சைவராகப்
பிறந்து சமணராக மாறியிருக்கலாம்"

என்று மு.சண்முகன் அவர்கள் கூறுவதாகச் சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் டி.மகாலெட்சுமி குறிப்பிடுகிறார்.

சமண சமயக் கருத்துக்களைப் பரப்பக் கவுந்தியடிகளைப் படைத்ததைப் போல வைணவ சமயத்தின் சிறப்புக்களைச் சொல்வதற்கென்று மாங்கட்டு மறையோனையும் இடைக்குலப் பெண்களையும் காப்பியத்துள் கொண்டு வருகிறார்.

முல்லை நிலத் தெய்வமாக மட்டுமே தமிழர்க்கு அறிமுகமாயிருந்த திருமால் சிலம்பில் ஒரு மதத் தெய்வமாகவே காட்டப்படுகிறார்.

கோவலன், கண்ணகி இருவரும் மதுரை நோக்கிச் செல்லும் பொழுது நீர் அருந்தச் சென்ற கோவலனிடம் அக்கானகத்தில் உலவும் வானசாரிணி தெய்வம் வயந்தமாலையின் வடிவிலே தோன்றி, கோவலன் மாதவிமேல் உள்ள அன்பினால் இசைவான் என எண்ணி வயந்தமாலையின் உருவில் கோவலனை மயக்கும் பொருட்டு உருமாறித் தோற்றம் கண்டது. கோவலன் அவ்வனசாரிணியைச் செயலிழக்க வைக்கிறான்.

மாங்காட்டு மறையோன் திருமாலின் பெருமைகளைச் சிறப்பாகப் பேசுகிறான். சமண சமயச் சிறப்புக்களை எடுத்துக் கூற கவுந்தியைப் போன்றும், மாடலனைப் போன்றும், இங்கு மாங்காட்டு மறையோன் போன்ற மூன்று வழிகளைப் பற்றி எடுத்துரைக்கிறான்.

மேலும் அவ்வழிப் பயணத்தில் இருக்கின்ற புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று தடாகத்தின் சிறப்புக்களையும் அதனால் கிடைக்கும் அருளையும் சைவ சமயத்து அறக்கருத்தாக அவன் மூலம் எடுத்துக் கூறுகிறான்.

இதே போன்று வேட்டுவ வரியில் தெய்வ மேறப் பெற்ற பெண்ணொருத்தி கொற்றவைக் கோலத்துடன்,

"இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி
தென்றமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து
ஒருமா மணிஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி"

என்று கூறிக் கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறாள்.

மற்றொரு நிகழ்ச்சியாக மதுரை மாநகரில் அழற்படுகாதையில் கண்ணகிக்கு முன்னால் மதுராபதித் தெய்வம் தோன்றி நான் மதுரையின் காவல் தெய்வம் என்று கூறிக் கண்ணகிக்கு முன்னால் வந்து நின்று மதுரையைப் பற்றிய செய்தியையும் பாண்டிய மன்னர்களின் பெருமையையும் எடுத்துக் கூறி கண்ணகி கோவலனுடைய முன்பிறப்புச் செய்தியையும் விளக்குகிறது. மேலும் கண்ணகியின் சினத்தைத் தணித்து மதுரையை எரிக்கும் அனலை அணைக்கக் கேட்கிறது. இங்கு மதுராபதித் தெய்வம் மதுரையின் காவல் தெய்வம், கண்ணகியைக் கேட்காமல் நெருப்பை அணைத்திருக்க முடியும்.

ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப்பற்றிய சிறப்புக்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. திருமால் உலகளந்த வரலாறு, கடல் கடைந்த வரலாறு, பிறப்பு வளர்ப்பு வரலாறு, கம்சனை வென்ற நிலை, சேர அரசனை அழித்த வரலாறு, அர்ச்சுனனுக்கு உதவ கதிர் மறைத்த வரலாறு, பஞ்சபாண்டவர்க்குத் தூது சென்ற வரலாறு போன்ற பல்வேறு வரலாறுகள் காட்டப்படுகின்றன.

முருகன் சூரனாகிய மாமரம் பிளந்தமை, அவுணரை அழித்தமை, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரிடம் பால் பெற்று உண்டமை போன்ற முருகனைப் பற்றிய பல்வேறு செய்திகள் குன்றக் குரவையிலும், காட்சிக் காதையிலும் அதிகமாக இடம் பெறுகின்றன.

சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, பாண்டரங்கள் ஆகிய கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயிரம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன.

இயற்கை வழிபாடு, பத்தினி வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, இந்திர வழிபாடு, சிவபெருமான் வழிபாடு, அருகன் வழிபாடு, புத்த தேவன் வழிபாடு, கொற்றவை வழிபாடு, எனப் பல்வேறு சமயக்கடவுள்களையும் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சார்ந்து நிற்கவில்லை என்றாலும் எல்லாச் சமயத்தையும் கூறித்தாம் வற்புறுத்த நினைக்கின்ற அனைத்து அறக் கருத்துக்களையும் அச்சமயங்களின் போக்கிலேயே நின்று மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார். ஏனென்றால் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமயங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது.

எனவே தான் அடிகள் மக்களுக்குத் தாம் கூறவந்த அறக்கருத்துக்களைச் சமயக் கருத்துக்களின் மீது ஏற்றிச் சொல்கிறார்.

தவநெறிமேற்கொள்ளுங்கள்:

சிலப்பதிகாரத்தில் அணைத்துப் பாத்திரங்களுமே தவப்பெரியோர்களால் தான் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. புகார் நகரை விடுத்து இழந்த பொருளை மீட்கும் நோக்கோடு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகள் என்னும் சமண சமயத்துத் தவப் பெரியோர்களால்தான் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள்.

வைணவக் கருத்துக்களை மிகுதியாகப் பேசுகின்ற தவப் பெரியோனாகிய மாங்காட்டு மறையோன் இடம் பெறுகிறான். வஞ்சிக்காண்டம் முழுவதிலும் சேரன் செங்குட்டுவனும், மதுரைக்காண்டம் முழுவதிலும் மாடல மறையோனும் மிகச் சிறந்த சைவ பக்தர்களாக வருகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாலமறையோன் வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாங்காட்டு மறையோன். வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு கவுந்தியடிகள், பத்தினிவழிபாடு பற்றிப் பேச ஒரு சேரன் செங்குட்டுவன் எனச் சமயக் கோட்பாடுகளை விளக்கிக் கூறும் சார்பாளர்கள் காப்பியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். பல்வேறு சமயக் கருத்துக்களையும் அங்கீகரித்து நிற்கும் சமயப் பெருந்தன்மையைச் சிலப்பதிகாரம் முன் நிறுத்தியிருக்கிறது எனலாம்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link