ஆய்வுச் சிந்தனைகள்


பழமொழிகளும் மொழிபெயர்ப்பு சிக்கல்களும்

தாய்மொழியாக பேசப்படுகின்ற மக்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் தன்னகத்தே கொண்டது மொழி. ஒவ்வொரு மொழியின் பின்னனியில் உள்ள மக்களின் பண்பாடுகள் ஒரே மாதிரி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றால் ஓரளவு பண்பாட்டு ஒற்றுமை இருக்க வாய்ப்புகள் உண்டு. வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் பின்னனியில் உள்ள பண்பாடுகள் என்றால் அவைகளுக்கிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகளின் இடைவெளிகள் கூடும். இதனால் ஒரு சமூகத்தில் நிலவி வரும் ஒரு சில பண்பாடுகள் மற்றொரு மொழி சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய மாறுபட்டப் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வரும் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் நிறைந்ததாகவும், ஒற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் குறைவாகவும் இருக்கும். மேலும், ஒவ்வொரு மொழியிலும் பண்பாட்டு தொடர்களாக பழமொழிகளும் (Proverbs), மரபுத்தொடர்களும் (Idioms and phrases) உள்ளன. இத்தகைய பண்பாட்டு தொடர்கள் மொழி பெயர்க்கப்படும்போது எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், முடிந்தவரை அதற்கான தீர்வுகளையும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.

பழமொழி:

பழமொழி என்பது மக்களின் அனுபவமொழி, இது மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் சூழலுக்கேற்ப பயன்படுத்தக்கூடிய ஒன்று. மூதுரை, முதுமொழி என வேறு பல பெயர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொழிக்குள்ளே அனுபவ மொழியாக இருப்பது இதன் சிறப்பாகும். டச்சு நாட்டு பழமொழி ஒன்று "அனுபவம் பெற்ற குழந்தைகளே பழமொழிகள்" (Proverbs are the daughters of daily experience) என்று கூறுகிறது. "மக்கள் நீண்ட காலமாக வழங்கி வருவதும், பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்" என்று கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரையறுக்கின்றது. உலகோர் பெற்றுவரும் அனுபவ உண்மைகளே முதுமொழிகளாகின்றன.

இதனை சங்க காலப் புலவராகிய சொல்லூர் கோசிகன் கண்ணனார் (அகம் 66-இல்)

பல்லோர் கூறிய பழமொழியெல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி" (அகம் 66) என்று கூறுகிறார்.

பழமொழியும் பயன்பாட்டு சூழலும்:

பழமொழி என்பது பயன்படுத்தக்கூடிய சமூகத்தின் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. எனவே சூழலுக்கேற்றார்போல பயன்படுத்தப்படும்போது மட்டுமே தெளிவான பொருள்தரும் சூழலுக்கேற்ப பயன்படுத்தாவிட்டால் பொருள் தராது. "காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்" Make hay while sun shines

என்ற இந்த பழமொழியை ஒருவர் பெற்ற அனுபவத்தின் மூலமாக சூழலுக்கேற்ப சமூகத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய பழமொழி ஒரு காரியத்தை செய்கின்ற போது அதற்கேற்ற தருணத்தில் செய்யப்பட வேண்டும். அதற்கேற்ற சூழலிலும் தருணத்திலும் செய்யாவிட்டால் அதனால் பயன் ஏதும் இராது. அக்காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்த்துகிறது. எனவே இதை அதற்கேற்ற சூழலில் பயன்படுத்த வேண்டும் மேலும் நேரடியாக ஒருவர் கதிர் அடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது காற்றடிக்கும் போதே நெல்மணிகளை தூற்றிக் கொள்ளலாம் என்று சொன்னால், அது நேரடி வாக்கியமாகும். இத்தகைய பயன்பாட்டுச் சூழலில் பழமொழியாகாது.

பழமொழிகளை இனம் கண்டறிதல்:

பழமொழிகளை இனம் கண்டறிவதில் பெரும்பாலும் சிக்கல்கள் நிலவி வருகின்றன. பழமொழிகளையும், பொன்மொழிகளையும் ஒன்றென நினைக்கும் போக்கு பெரும்பாலான மொழிபெயர்பாளர்களிடமும், பழமொழிகள் தொகுப்பாளர்களிடமும் நிலவி வருகின்றன. இதற்கான முக்கியகாரணம் வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் பிரித்தரிய முடியாததே ஆகும். மேலும் பழமொழிகளை எப்படி எந்த கூறுகளின் அடிப்படையில் இனங்காண்பது என்ற தெளிவான வரையறைகள் இல்லாததே இதற்கு காரணம்.

பழமொழிகளைக் கீழ்க்கண்ட பண்புகளின் அடிப்படையில் இனங்காணலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் பழமொழிகளையும், மரபுத்தொடர்களையும் மொழிபெயர்த்தல் எனும் செயலரங்கில் (Workshop) மொழியியல் அறிஞர்கள் முனைவர் வே.தயாளன் மற்றும் எல்.இராமமூர்த்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1. பழமொழிகளில் நேரடிப்பொருண்மை Denotative meaning) ஒன்றாகவும், சமூகப் பொருண்மை (Social meaning) வேறாகவும் அமையப் பெற்றிருக்கும்.

2. சூழலுக்கேற்ப (Context) பயன்படுத்தினால் மட்டுமே தெளிவான பொருண்மையை பெற முடியும், சூழலுக்கேற்றவாறு பயன்படுத்தாத போது பொருள் விளக்கம் பெற இயலாது.

3. பழமொழிகள் பண்பாட்டுக் கூறுகளையும் சமூகக் கருத்துக்களையும் தன்னுள்ளே கொண்டவையாகவும், பொதுப்படையானதாகவும் இருக்கும்.

4. பழமொழிகளின் புதைஅமைப்பு (Deep structure) ஒன்றாகவும் புற அமைப்பு (Surface structure) ஒன்றாகவும் இருக்கும்.

பழமொழியும் மொழிபெயர்பும்:

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் சொல்லப்படும் செய்திகளை மற்றொரு மொழிக்கு மாற்றியமைக்கும் அல்லது மொழியில் எடுத்துச் செல்லும் முறையாகும். பொதுவாக சொன்னால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள கருத்துக்களை மற்றொரு மொழியில் மாற்றும்பொழுது மூலமொழியில் காணப்படும் பொருள், சுவை, தன்மை போன்றவை சிறிதும் மாறாமலும், பெயர்க்கப்படும் மொழியின் அமைப்பு மற்றும் தன்மைக்கேற்பவும் அமைக்கப்படும் முறையாகும். (சி. சிவசண்முகம் மற்றும் வே.தயாளன், 1989).

மொழி தன்னுள்ளில் கொண்டுள்ள அனைத்து வகையான கருத்துகளையும் செய்திகளையும் மொழிப்பெயர்க்க ஒரே மாதிரியான மொழி பெயர்ப்பு முறையை கையாண்டால் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையுமா? எனவே, அறிவியல் கருத்துகளை மொழி பெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும், இலக்கியங்களை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும் கையாள வேண்டும். அதேபோல பழமொழிகளை மொழிப்பெயர்க்கப்படும்போது அது தன்னகத்தே கொண்டுள்ள பண்பாட்டுக் கூறுகளையும், சமூக கருத்துக்களையும் ஒரு சேர மொழிபெயர்த்தலே சிறப்பானதாகும்.

1. நாய்விற்ற காசு குலைக்குமோ? 2. கிழவன் கொடுத்த காசுக்கு நரையுண்டா? 3. பூ விற்ற காசு மணக்குமா? 4. கருவாடு விற்ற காசு நாறுமா? 5. கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்குமா? 6. வேப்பெண்ணை விற்ற காசு கசக்குமா? 7. கரி விற்ற காசு கருப்பா இருக்குமா?

இந்த பழமொழிகள் அத்தனையும் ஒரே பொருண்மை (Meaning) உடையதாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்படும் சூழல் மட்டுமே மாற்றம் பெறக்கூடியதாக உள்ளது. (மொழியியல் அறிஞர் செ. சண்முகம் நிகழ்த்திய உரையில் இருந்து) எனவே இந்த பழமொழிகள் அனைத்திலும் வெளிப்படுத்தக்கூடிய சமூகப் பொருண்மை (Social meaning) இவ்வாறு அமைகிறது. அதாவது, ஈட்டக்கூடிய பணம் அது ஈட்டும் வழிகளுக்கேற்ப மாற்றமடையாது என்பதைக் காட்டுகிறது. ஒரே பொருண்மை உடைய பழமொழிகளை மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மொழி பெயர்த்துள்ளனர். மேலும் கொங்கு நாட்டு பழமொழிகள் என்ற நூலில் இரண்டு விதமான மொழி பெயர்ப்புகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள 1,7 என்ற இரண்டிற்கும் இரண்டு விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

* Value of money will not change by the manner in which it was obtained
* Monetary qualities will not change with sale product

இப்படி ஒரு சமூக பொருண்மை உள்ள பழமொழிகளை வெவ்வேறு விதமாக மொழி பெயர்க்கப்படும்போது, அது வேறு கலாச்சார பின்னனியில் உள்ள மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தத் தவறிவிடும். எனவே ஒரே பொருண்மையுள்ள பழமொழிகளை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து அதை மொழிபெயர்ப்பது கற்றுக் கொள்வோர்களுக்கும், பயன்படுத்துவோர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும்.

பழமொழியும் பின்புலமும்:

ஒவ்வொரு பழமொழியும் சமூகம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே ஒரு பழமொழியை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கான சமூகப் பின்புல கதைகளையும் கண்டறிவது சிறப்பானதாக அமையும் "நாயானாலும் தாய் தாய்தான்" என்ற இந்த பழமொழியின் பின்புலம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

கதைபின்புலம்:

ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்ததாம். அந்த நாய்க்கு ரொம்ப அழகான ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாம். அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்ததாம். பிறகு அதோட ரெண்டு பெண்களையும் நல்ல வசதி வாய்ப்பு படைத்த வரன்களைத் தேடி மணமுடித்ததாம். திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து சின்னமக வீட்டுக்கு போனதாம். வீட்டுக்கு போன உடனே ஏண்டி நாயை வீட்டுக்கு உள்ளே வாரன்னு சொல்லி அடிச்சதாம். அடியை வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட அதோட பெரிய பொண்ணு வீட்டுக்கு போனதும், உடனே அம்மா என்னம்மா ஆச்சி என்று அழுது கொண்டே உள்ளார கூட்டிட்டு போய் மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்தாலாம். மாத்திரையெல்லாம் ஒன்னும் வேணாம் நான் இன்னும் இரண்டு மூணு நாள்ல செத்து போயிடுவேன், என் தலமேல உன் தங்கச்சி பலமா அடிச்சிட்டா நானு செத்துட்டா என்னை ஒரு சாக்குபயில போட்டுக் கட்டி நடுவீட்டுக்கு நேர்ல உள்ள துளத்துல கட்டிரு. கட்டிட்டு மூணுமாசம் கழிச்சி மறுபடியும் தொறந்து பாருன்னு சொல்லிட்டு செத்துப்போச்சாம்...... அப்புறம் ........

மூணுமாசம் கழிச்சி, தங்கச்சி அம்மா மூணுமாசமா காணமேன்னு தேடிட்டு அக்கா வீட்டுக்கு வந்து அக்காள கேட்டாளா. கேட்டதும் ஓ.....ன்னு அழுதுட்டே அம்மாவே இப்படி அடிச்சே கொண்ணுட்டேடி, என்னாத்தா நாயா இருந்தாலும் அவ தாய் இல்லியாடின்னு சொல்லி நடந்ததெல்லாம் சொல்லி சாக்கே பிரிச்சு காட்டினாளா, சாக்கு நெரையா தங்க காசு இருந்ததா. அப்பத்தா, சின்னபுள்ள "நாயா இருந்தாலும் தாய் தாய்தான்ணு" தாயின் பெருமையை உணர்ந்து ரெண்டுபேரும் சேர்ந்து அழுதாங்களா அப்புறம் அந்த தங்ககாசை எல்லாம் ஆளுக்கு பாதியா எடுத்துக் கொண்டார்கள்.

தீர்வுகள்:

பழமொழிகள், இனம் கண்டறிந்து அவைகள் சமூக கருத்தோடு பண்பாட்டுப் பின்புலத்தையும் கொண்டுள்ளதா அல்லது சமூக கருத்துகளை மட்டும் கொண்டுள்ளதா என்பதை மொழிப்பெயர்க்கப்படும் முன் கண்டறியப்பட வேண்டும். மொழிபெயர்ப்பு மொழியில் இணையான பழமொழி உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான ஒத்த பண்பாட்டுப் பின்புலம் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான பழமொழிகள் இருக்கும் தருவாயில் மூலமொழியில் உள்ள பழமொழிகளை பெருமொழியில் அப்படியே பொருத்தி விட வேண்டும். மொழி பெயர்க்கப்படும்போது, பழமொழிகள் கொண்டுள்ள பண்பாட்டு கூறுகளையும், கருத்தையும் மாறாமல் பெறுமொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும். எத்தகைய சூழலில் பழமொழிகள் பயன்படுத்தப்படுகினறன என்பதையும் கண்டறிந்து மொழி பெயர்த்தலே சிறப்பானதாக அமையும்.

மேற்கூறிய தீர்வுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்னும் சில கூறுகளையும், பண்புகளையும் கண்டறிந்து காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றாற்போல பழமொழிகளை மொழிபெயர்த்து தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மக்களின் பண்பாட்டை மேன்மேலும் பரவலாக்கம் செய்வது சிறப்பாகும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link