ஆய்வுச் சிந்தனைகள்


புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் நோக்கில் சமுதாயம்

தாய்மொழியில் மிக சிறந்து விளங்கிய சங்கச் சான்றோர் பலராவர். அவர்களுள் பெண்பாற் புலவர்கள் முப்பதின்மரும் அடங்குவர். சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் புறநானூற்றுப் பாடல்களைப் பற்றி பெண்பாற் புலவர்கள் பற்றி சமூகநோக்கு இங்கு கூறப்படுகின்றது. புறநானூற்றில் வரும் பெண்பாற் புலவர்களுள் அதிகப் பாடல்கள் பாடியவர்கள் ஒளவையாரும் மாறோகத்து நப்பசலையாரும் ஆவர்.

சமுதாயம்:

ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றக் கூட்டமாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். தனிமனிதர்கள் குடும்பமாகவும் பல குடும்பங்கள் சேர்ந்து சமுதாயமாகவும் உருவாகின்றன. தனிமனிதர்களின் எண்ணம், ஒழுக்கம், போக்கு தெய்வ நம்பிக்கை, குறிக்கோள் முதலியன சமுதாயம் ஒன்றுபட்டு வளர்ச்சி எய்தி விளங்கும் வகையில் அமைகின்றன. சங்ககால மக்கள் வாழிடங்களாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களாக பாகுபாடு செய்துள்ளனர். ஒழுக்கத்தை அகம், புறம் எனப் பிரித்துள்ளனர். காதல், நட்பு, வீரம், கொடை, ஈகை, விருந்தோம்பல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

அரசு செலுத்தும் முறை:

அரசு செலுத்தும் முறை என்பது நாடாளும் அரசன் திட்டமிட்டுப் புரிந்திடும் செயல்பாட்டைக் கூறலாம். குடிகளைக் காக்கவேண்டியது அரசனின் கடமையாக உள்ளது.

"குடிதழீஇக் கோலாச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு"

அரசு செங்கோல் செலுத்தும் முறையை இவ்வடிகள் உணர்த்தும். அரசுரிமை வழிவழியாக வந்துள்ளது. தந்தைக்குப் பிறகு மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றல் இங்கு குறிப்பிடத்தக்கது. அதியனின் மகன் பொருட்டெழினி அரசு கட்டில் ஏறியதை ஒளவையார் குறிப்பிடுகிறார்.

புலவர் போரில் பங்கேற்றல்:

போர் நிகழும் காலத்தில் புலவர்களும் அவற்றில் பங்கு கொண்டனர். போர் நிகழும் காலத்து மன்னர்க்கு வீரவுணர்வூட்டிப் புலவர்கள் ஊக்கமளித்துள்ளனர். பகைகொண்ட மன்னர்களைச் சேர்த்தும் வைத்துள்ளனர். அதியமான் சார்பாக ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றதைச் சிறப்பாகக் கூறலாம். அதியனின் படையைப் பழிப்பதுபோல் புகழ்ந்தும் தொண்டைமானின் படையைப் புகழ்வது போலப் பழித்தும் கூறிப்போரைத் தடுத்ததைக் கூறலாம்.

"இவ்வே, பீலியணிந்து மாலைசூட்டிக்
கண்டிர ணோன் காழ் திருத்தி ணாய் யணிந்து
பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
கொற்றறைக் குற்றில மாதோ வென்றும்"

பழக்க வழக்கங்கள்:

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிக்கிறது எனலாம். பழக்க வழக்கம் என்ற சொற்களோடு, மரபு என்ற சொல்லும் தொடர்புடையதாகும். மரபு என்பது வழக்கமாகத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.

கலந்தொடா மகளிர்:

பெண்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் வீட்டுப் பண்டங்களைத் தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர் என்று கூறுவர். பொன் முடியார் கலந்தொடா மகளிர் பற்றிக் குறிப்பிடுதலைக் காணலாம்.

"உழுத்த தருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின்
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்து நின்றவ்வே"

மாதவிலக்கு கொண்ட பெண் ஒருத்தி இனிய பழம் தரும் மரத்தடியில் நின்றால், அம்மரத்துப் பழத்தினுடைய இனிப்பு கொடிய கசப்பாக மாறிவிடும். அவள் தானியத்தைத் தொட்டால் அத்தானியம் விதைப்பதற்கு உதவாது, முளைக்கும் சக்தியையும் இழந்துவிடும்.

கைம்மை மகளிர்:

கணவனை இழந்த மகளிர், "கைம்மை மகளிர்" எனப்படுவர். இத்தகையோரை விதவை என்றழைக்கின்றனர். இவர்கள் "கழிகல மகளிர்", "உயவற் வெண்மர்", "பருத்தி பெண்டிர்", என்றும் அழைக்கப்படுகின்றனர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, அவள் கணவன் இறந்துவிட்டதால் அதனை ஆற்றாது தீயில் பாய்ந்து உயிரிழக்க, முற்பட்டபோது அவளைச் சான்றோர்கள் தடுத்தபோது, கைம்மை நோன்பினைப் பற்றிக் கூறுகிறார், இதனை,

"அடையினைக் கிடந்த கைமிழி பிண்டம்
வேளை வெந்தை வல்சி யாகப்
பரந்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாதோ"

என வரும் செய்யுட் பகுதியால் அறிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் மனைவியை இழந்த கணவன் நிலையைத் தபுதார நிலை என்றும் சுட்டுகின்றனார். தாயங்கண்ணியார் கணவனை இழந்த கைப்பெண்கள் கூந்தலைக் கொய்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியினை உணவாக உட்கொண்ட நிலையினை,

"கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி யுணவின் மனைவியோ டினியே"

என வரும் செய்யுட் பகுதிகளால் அறியலாம்.

விரும்தோம்பல்:

பழந்தமிழர் விருந்தோம்புதலையே சிறந்த பண்பாடாகக் கொண்டனர். திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று தனி அதிகாரத்தையே வைத்துள்ளார்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று"

அள்ளூர் நம்முல்லையார், மறப்பெண் ஒருத்தி நாளும் விருந்தினர் தன் இல்லத்திற்கு வரப்பெறுதல் வேண்டும் என்று வழிபட்டதாகக் கூறுகிறார்.

"நடுகற் கைதொழுவு பரவு மொடியாது
விருந்தெதிர் பெறுகதில் யானே"

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனிடம் விருந்தோம்பற் பணியைச் செய்ய இயலாது வாழ்ந்த நிலையினை நினைத்து வருந்திக்கூறுவதைக் காணலாம்.

"அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

இதிலிருந்து விருந்தோம்பலை இல்லறத்திற்குரிய சிறந்த பணியாகக் கொண்டதனை அறிய முடிகிறது.

மகளிரின் வீரவுணர்வு:

சங்ககால மகளிர் மிகவும் நாட்டுப்பற்றுடையவர்களாக விளங்கினர் என்று கூறலாம். பகைவர்களிடமிருந்து தாய்நாட்டைக் காப்பதற்கு தங்கள் கணவர், மக்கள் ஆகியோரைத் தியாகம் செய்வதைப் பெருமையாகக் கருதினார்கள். இது அவர்களுடைய வீரவுணர்வைப் புலப்படுத்துகிறது. மகனின் மார்பில் புண்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக இருந்த நிகழ்ச்சி, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என வள்ளுவம் கூறுவதுபோல் காக்கைபாடினியார், நச்செள்ளையார்,

"செங்களத் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தணளே"

எனப் பாடியிருக்கின்றனர்.

நரைத்த கூந்தலையுடைய முதியோள் மகன் போர்க்களத்தில் பகைவர் யானைகளைக் கொன்று தானும் விழுப்புண்பட்டு இறந்துவிடுகிறான். அதனைச் சான்றோர் வாயிலாகக் கேட்ட அம்முதியோள் அவன் பிறந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் பேருவகை கொண்டதாகப் பூங்கணுத்திரையார் கூறுகின்றார்.

"களிறெறிந்து பட்டன னென்று முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து"

இவ்வடிகள் போரில் இறத்தலையே சிறப்பாகக் கருதிய சங்ககால மகளிரின் வீரவுணர்வைப் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் பெண்கள் தங்கள் மகன் சிறந்த வீரனாக விளங்க வேண்டும். பகைவர்களோடு போர் செய்து நாட்டைக் காக்க வேண்டும் என்று விரும்பினார். இதிலிருந்து அவர்கள் உயர்ந்த பண்புள்ளம் கொண்டவராக இருந்தனர் என்பது அறியலாகும்.

துறவு:

உலகில் யாக்கை, இளமை, செல்வம் முதலியன நிலையில்லாமல் கழிவது கண்டு நிலைத்த வாழ்வு பெறவிரும்புவோர் இவற்றைத் துறந்து செல்லுதலே தகுதி எனக் கருதுவர். ஆகவே துறவு பூண்டு துறவுக்குரிய நெறிகளை ஒழுகுவர். மாற்பித்தியார் தலைமகன் ஒருவன் துறவு பூண்ட நிலையினைக் கூறுகின்றார். இதனை,

"கழைக்கண் நெடுவரை அருவி யாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே"

எனவரும் செய்யுளால் அறியலாம்.

சங்ககாலத்தில் போரில் இறத்தலையே வீரமாகக் கொண்டனர். இறந்தவர்களைச் சுடுகாட்டில் தீமூட்டி எரித்தல் அக்காலத்திலேயே இருந்துள்ளது. இறந்த வீரர்களுக்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தையும் பண்டைய தமிழர் கொண்டிருந்தனர். பாடை கட்டுதலும் உண்டு. இதனை ஒளவையார் பாடல் மூலம் அறியலாம் பாடையைக் கால்வழி கட்டில் என்று குறிப்பிடுகிறார்.

"கால்வழிக் கட்டிலிற் கிடத்
தூவெள் ளுறுவை போர்ப்பித் திலதே"

தொழில்:

சங்க காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நாகரீகமாக அமைத்துக் கொள்ளத் தொழில் இன்றியமையாததாக இருந்தது எனலாம். மக்களை அவரவர் தொழிலுக்கு ஏற்ப உழவர், ஆயர், வேட்டுவர், உமணர், வண்ணார், கொல்லர், தச்சர், வணிகர் என்று பெயரிட்டு அழைத்தனர், சங்க காலத்தில் வாணிகம் சிறந்து விளங்கியது. கடல் வாணிகம் பண்டு தொட்டே சிறந்து விளங்குகிறது. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்ற தொடரே சான்றாகிறது என்பர்.

உப்பு வாணிகம்:

உணவுப் பொருள்களுள் மிகச்சிறந்தது உப்பு. உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உப்பு வணிகர் பலர் ஒன்றுகூடியே செல்வர் என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

"உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
கொடுங்கோ லுமணர் பகடுதொழி தென்விளி
நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள் இயம்பும்"

நக்கண்ணையார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் வீரத்திற்கு உமணர் செயலை ஒப்புமையாகக் கூறுகிறார். புலத்தி என்ற சொல் வண்ணாத்தி என்ற பொருளைக் குறிக்கும். அழுக்குத் துணிகளைப் புலத்தி எடுத்துச் சென்று வெளுத்துவருபவள் ஆவாள். இதனை ஒளவையார்

"களர்ப்படு கூவற் தோண்டி நாளும்
புலைத்தி கழிஇய தூவெள் ளறுவை
தாதெரு மருகின் மாகன விருந்து" எனக் குறிப்பிடுகிறார்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link