ஆய்வுச் சிந்தனைகள்


'பிணங்களின் முகங்கள்' நாவலில் குழந்தைத் தொழிலாளர்

"பிணங்களின் முகங்கள்" நாவலின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன். இந்த நாவல் கோவை கல்லூரி சீனிவாசன் பரிசு பெற்றது. "பிணங்களின் முகங்கள்" நாவலில் தன் ஊராகிய திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர், பெண் தொழிலாளர், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதன் விளைவுகள் ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளார். உயிர் இருந்தபோதும் உயிரற்றப் பிணங்கள் போன்று இத்தொழிலாளர் காட்சியளிக்கக் காரணமான நிகழ்வுகளை ஆசிரியர் இந்த நாவலில் விவரித்துள்ளார். அவற்றுள் குழந்தைத் தொழிலாளர் குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைகள் வேலைக்குச் செல்வதற்குக் காரணமான சூழ்நிலைகள்:

இந்த நாவலில் படிக்கும் குழந்தைகள் பள்ளிப் படிப்பை விட்டு விலகி தொழிலாளர் ஆகக் காரணமான சூழ்நிலைகளை நாவலாசிரியர் விவரித்துள்ளார். அவ்வகையில் அவர் சுட்டியுள்ள சூழ்நிலைகள் இரண்டு. 1. கல்விச்சூழல் 2. பொருளாதாரச் சூழல்

1.1. கல்விச்சூழல்:

நாவலின் தொடக்கத்தில், வறுமையுடனான போராட்டத்திற்கிடையில் கல்வி கற்க வரும் மாணவர்கள்; அவர்களிடம் ஆசிரியர் காட்டும் கண்டிப்பு; அதன் விளைவாக அந்த இளம் உள்ளங்களில் எழும் போராட்டம் ஆகியவற்றை நாவலாசிரியர் சுட்டியுள்ளார். பள்ளிப்படிப்பின் மீது வெறுப்புற்ற குழந்தைகள் அதற்கு மாற்றாக வேலைக்குச் —ச்லல விரும்புகின்றனர்(ப. 109). வறுமையின் காரணமாக பெற்றோரும் இதற்கு உடன்படுகின்றனர்.

1.2. பொருளாதாரச் சூழல்:

செந்தில், கனகு என்ற இரண்டு குழந்தைகள் வழி இச்சூழலை நாவலாசிரியர் சுட்டியுள்ளார். வீட்டின் வறுமை காரணமாக, மேற்கொண்டு படிப்பைத் தொடர இயலாது என்பதால் செந்தில் தொழிற்சாலையில் பணிபுரியச் செல்கிறான். மேற்படிப்பு படிக்கும் கனவுடன் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த கனகு, அவன் தந்தையின் தொழில் நலிவடைந்ததால் தொழிற்சாலையில் பணிபுரியச் செல்கிறான். கலிவிச் சூழல் படிப்பிலும் பின்தங்கிய மாணவர்களைக் குழந்தைத் தொழிலாளர் ஆக்குகிறது. பொருளாதாரச் சூழல் படிப்பார்வமுள்ள, திறமை மிக்க மாணவர்களையும் குழந்தைத் தொழிலாளர் ஆக்குகிறது.

2. குழந்தைத் தொழிலாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:

வேலை கற்கும் நேரத்தில் குழந்தைகள் தாக்கப்படுகிறார்கள். செந்தில் தொழிற்சாலையில் சேர்ந்த நேரத்தில், அவனுக்குத் தொழில் கற்றுத் தந்தவர் தாக்கியதால் ஏற்பட்ட தழும்பு அவன் இமையின் மேல் காணப்படுகிறது (பக்: 98) தொழில் கற்ற பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மூன்று பிரிவுகளாகக் காணமுடிகிறது. அவையாவன: 1. ஒழுக்கம் சார்ந்தவை 2. உடல் நிலை சார்ந்தவை 3. உள்ளம் சார்ந்தவை

2.1 ஒழுக்கம் சார்ந்தவை:

வேலைப்பளு காரணமாக எளிதில் கோபப்படுதல், பிறரைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வேலை அதிகமுள்ள நாட்களில் இரவு, பகல் தொடர்ந்து வேலை செய்ய குழந்தைத் தொழிலாளர் நிர்பந்திக்கப்படுகின்றனர். செந்தில், அவ்வாறு வேலை செய்துகொண்டிருந்தபோது, கோமதி என்ற தன் சக தொழிலாளி செய்த தவறு அவனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்து வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் காரணமாக ஏற்பட்ட எரிச்சல் இதன் விளைவாகத் தன்னிலை மறந்து, தான் செய்வதறியாது கத்திரியை எடுத்து அவள்மீது எறிந்துவிடுகிறான் (பக்: 188-192). மேலும், தொழிற்சாலையில் பணிபுரியும் மூத்த தொழிலாளர்கள் கூறும் வேலைகளையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதன் விளைவாக தீய பழக்க வழக்கங்கள் எளிதில் இவர்களுக்கு அறிமுகமாகின்றன. செந்தில் முதலில் மது வாங்கி வரச்சொல்கின்றான். பின்னர் அருந்தவும் பழகுகிறான் (பக்: 133-137). மேலும் புகை பிடிக்கவும், சூதாடவும் பழகுகிறான். (பக்: 165-168).

2.2 உடல் நிலை சார்ந்தவை:

வேலைச்சுமை காரணமாகக் குழந்தைகளிடம் ஏற்படும் மாறுதல்கள், அவர்களின் தோற்றத்தை வயதுக்கு மீறியதாகக் காட்டுகிறது. (பக்: 165). இரவு பகல் பாராது வேலை செய்வதன் காரணமாகக் கண்களில் நீர்வடிதல், சோர்வு, எரிச்சல், கோபம் போன்றன சிறுவயதிலயே ஏற்பட்டு விடுகின்றன. (பக்: 122-124, 183-184).

தொழிற்சாலைகளில் மட்டுமன்றி வசதிமிக்க வீடுகளில் நிரந்தரமாகத் தங்கி வேலை பார்க்கும் குழந்தை குறித்தும் இந்த நாவலில் நாவலாசிரியர் சுட்டியுள்ளார். பூமணி என்ற சிறுமி வறுமை காரணமாக, வசதிமிக்க ஒரு நோயாளியை கவனித்துக்கொள்ள அனுப்பிவைக்கப்படுகிறாள். நோயாளிக்கு உடல்நோய் மட்டுமன்றி மனநோயும் இருக்கிறது. நாள்முழுவதும் அந்த நோயாளியுடனே இருக்கும் பூமணி, நோயாளியின் உடல், மன வேதனைகளை, மாற்றங்களைக் கண்டு அஞ்சுகிறாள். ஒரு கட்டத்தில் எங்கே தானும் நோயாளி ஆகிவிடுவோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. (பக்: 105-111) இதன் விளைவாகத் தூக்கமின்மையும் உடல் நலக்கேடும் அவளுக்கு ஏற்படுகின்றன.

சிறுவயதில் இக்குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த உடல்நலக் கேடுகள், அவர்களின் இயல்பான உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் சீர்கெட வழிவகுக்கின்றன.

2.3 உள்ளம் சார்ந்தவை:

வேலைக்குச் செல்லும் குழந்தைகள், அவ்வயதிற்குரிய விளையாட்டுகளில் ஈடுபட முடிவதில்லை. அக்குழந்தைகளின் உள்ளத்தில் அது குறித்த ஏக்கங்கள் காணப்படும். கனகு படிக்கும் காலத்தில் விடுமுறை நாட்களில் என விளையாட்டிற்குரிய நேரங்களில் தான் விளையாடிய விளையாட்டுகளை எண்ணி ஏங்குகிறான் (பக்: 142-144). மேலும் பணிபுரியும் இடத்தில், தங்கள் மீது அதிகாரம் செலுத்தும் மூத்த ஊழியர்களின் செயல்களைக் கண்டும் இவர்கள் கலங்குகின்றனர். வேலையில் சிறு குறை ஏற்பட்டாலும் இவர்கள் தாக்குதலுக்குள்ளாகின்றனர்.(பக்: 183-184).

ஒழுக்கம், உடல்நிலை, மனநிலை என அனைத்து பக்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை நாவலாசிரியர் சமூக நலச் சிந்தனையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

பல குழந்தைத் தொழிலாளர் தம் செய்திகளைக் கூறியுள்ளமையால், குழந்தைத் தொழிலாளர் தம் சிக்கல்களைப் பல கோணங்களில் அறிய முடியாது. குழந்தைத் தொழிலாளர் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள் அவர்தம் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கக் கூடியது; முரட்டுத்தனமும் முன்கோபமும் எளிதில் அவர்களைத் தன்னுணர்வை மறக்கச் செய்து தவறிழைக்கத் தூண்டக்கூடியவை; புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் எளிதில் அவர்களுக்கு அறிமுகமாகின்றன; சிறு வயதில் அவர்கள் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கல்கள் அவர்களின் மனநிலையையும் உடல்நிலையையும் சீர்கெடச் செய்யவல்லவை என ஆசிரியர் கூறியுள்ள கருத்துகள் வருங்காலத் தலைமுறை சீரழிவதைத் தடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.

குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணமான கூறுகளைச் சுட்டியுள்ளதன் வாயிலாக, அவை களையப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். தீர்வு ஏதும் கூறாது சிக்கல்களை, விளைவுகளை மட்டும் சுட்டியுள்ள தன் வாயிலாக குழந்தைத் தொழிலாளரை நியமிப்பது பெருங்குற்றம் என்ற கருத்தை நாவலாசிரியர் முன்வைத்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. இளைய சமுதாயத்தினரின் சீரழிவு நாட்டின் சீரழிவிற்கு வழிவகுக்கக் கூடும் என்ற உட்கிடக்கையுடன் இந்த நாவலைப் படைத்துள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link