ஆய்வுச் சிந்தனைகள்


பாரதியின் சக்தி

மனித மனம் எல்லாவற்றிலும் தன் மனதை இலயிக்க வைத்தாலும் தனக்கென விருப்பமுடைய ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதன்மீது மிகுந்த பற்று கொண்டிருக்கும். இறைப்பற்று உள்ள மனிதன் தனக்கென ஓர் இஷ்ட தெய்வத்தைக் கொண்டிருப்பான். அதுபோலவே பாரதியும் சக்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுபாட்டின் காரணமாக, பாரதி படைப்பில் சக்திக்கென தனியிடம் அளித்துள்ளார்.

சக்தி வழிபாட்டின் பழமை:

சக்தி வழிபாடு எந்தக் காலத்தில் தொடங்கியது என்பதை வரையறை செய்து கூறமுடியாது.

சக்தியானவள் வேதங்கள் தோன்றிய காலத்திற்கு முன்னமே எழுந்தவள். வேதங்களின் தலைமையாக வாழ்பவள். இக்கருத்தைப் பாரதியார்,

"............................ஆதி
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி" (நெஞ்சோடு சொல்வது)

எனக் குறிப்பிட்டுள்ளார். சக்தி வழிபாடு, வேதங்கள் தொடங்கிய காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "கொற்றவை" என்று சக்தி அழைக்கப்படுகிறாள். கலிங்கத்துப்பரணியில் கொற்றவை வழிபாடு பேசப்படுகின்றது. அதுமட்டுமின்றி இரட்டைக் காப்பிய நூல்களிலும் அகம் பற்றிப்பேசும் அகநானூற்றிலும், புறம் பற்றிப்பேசும் புறநானூற்றிலும் சக்தியைப் பற்றிப் பலவாறு கூறப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் சக்தியின் வெளிப்பாடு உண்டு என்பதைப் பாரதியார் தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

"மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி" (புதிய ருஷ்யா)

வேத காலங்களுக்கெல்லாம் முற்பட்டு விளங்கும் மஹாசக்தி இவ்வுலகிற்கு ஆதி மூலமாகத் திகழ்கிறாள். பராசக்தி எப்படி தோன்றினாள் என்பது யாருக்கும் தெரியாது. அவளே தானாய் உருவாயினாள். அவள் யார் என்று விளங்கிக் கொள்ள முடியாதவள்.

பராசக்தி முத்தொழில் தெய்வங்களுடனும் உறவுக் கொண்டிருப்பவள். இதைப் பாரதி,

"பிரமன் மகள் கண்ணன் தங்கை
சிவன் மனைவி கண்ணன் மனைவி
சிவன் மகள் பிரமன் தங்கை
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்" (வசன கவிதை/சக்தி)

எனத் தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். சக்தி மும்மூர்த்திகளுடன் கொண்டுள்ள உறவுகளை வைத்து அவள் இத்தகையவள் என விளங்கிக் கொள்ள முடியாது.

பராசக்திக்கு அவளின் அவதாரங்கள் கொண்டு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல பெயர்கள் வழங்கினும் சக்தி ஒன்றே. பராசக்தி அனைத்திற்கும் ஆதிமூலமாக விளங்குபவள். வேதத்தின் தாயாகவும் இருப்பவள். இக்கருத்தினை,

"வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே" (நவராத்திரி பாட்டு)

என்று குறிப்பிட்டுள்ளார். வேதங்களுக்கெல்லாம் தாயாக சக்தி இருப்பதால் சக்தி வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும்.

அனைத்திற்கும் ஆதாரம் சக்தி:

சக்தி உலகில் உள்ள அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவள். சக்தியில்லாமல் இவ்வுலகில் எதுவும் இயங்காது. இந்த உலகம் முழுவதையும் படைத்து அளிப்பவள் மஹாசக்தி ஆவாள்.

உலகில் அனைத்துப் பொருள்களும் சக்தியின் ஆக்கத்தால் எழுந்தவை ஆகும். சக்தியில்லாமல் சிவன் இல்லை. சிவனுக்கே ஆதாரமாக விளங்குபவள் சக்தி. சிவனே என்று சும்மாகிட எனக் கூறுவார்கள். சக்தியில்லாமல் சிவன் கூட எதுவும் செய்ய முடியாது. சக்தியினால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது. சக்தி எல்லாவற்றிற்கும் மூலமாய் அமைந்தவள்.

"சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது" (வசனகவிதை/சக்தி)

சக்தியானவள் சிவனில் இரண்டறக் கலந்திருப்பவள். இவள் உயிர்களை உருவாக்கம் செய்கின்றாள். முத்தொழில் செய்யும் மும்மூர்த்திகளின் தேவியாகவும் அவர்களின் அன்னையாகவும் விளங்குபவள் சக்தியேயெனப் பாரதி சக்தியின் நிலையினை விளக்குகின்றார்.

"பத்துப்படைகொளும் பார்வதிதேவியும்
கமலத்திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ" (ஜாதீய கீதம்)

உலக உயிர்களைப் படைத்தவள் சக்தி என்பதை வசன கவிதையில் குறிப்பிட்டுள்ளார். உலக இயக்கங்கள் முதல் உயிர் இயக்கங்கள் வரை அனைத்தையும் இயக்குவது சக்தியின் தொழில் ஆகும். சக்தி என்னும் தலைப்பில் அமைந்த வசன கவிதையில் சக்தியின் மகத்துவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார். "சக்தி முதற்பொருள் பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு" (வசன கவிதை/ சக்தி)

சக்தியே அனைத்துப்பொருளுக்கும் முதற்பொருளாக விளங்குகிறாள். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவளும் அவளே. அண்டத்தில் உள்ள உயிர்கள் முதல் விண்மீன்கள் வரை அனைத்தையும் படைத்துக் காப்பாற்றுபவள்.

"மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் (நவராத்திரி பாட்டு)
யாதுமாகி நின்றாய் - காளி
எங்கும் நீ நிறைந்தாய்........" (காளி பாட்டு)

சக்தியை வணங்குவதால் கிட்டும் நன்மை:

அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சக்தியை வணங்குபவருக்குச் சகல நன்மைகள் வந்து சேரும். நாம் கேட்கும் வரங்களைப் பராசக்தி தருவாள் என்பதை,

"..................வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்" (முருகன் பாட்டு)

எனக் குறிப்பிட்டுள்ளார் பாரதி. சக்தியின் அருள் அடைந்தவர்களுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாம் வசமாகிவிடும். தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் அருளைப் பொழிவதால் உலகம் வசப்பட்டுவிடும் என்பதை,

"ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டு போமடா" (மூன்று காதல்/காளிகாதல்)

எனப் பாரதி பாடுகின்றார். சக்தியையே சரணம் என்று அவள் அடிசேர்வோருக்கு முக்தி நிலை கிட்டும். எல்லாத் தீங்குகளும் கவலைகளும் நோய்களும் தீரும்,

சக்தியிடம் அனைத்தையும் உடைமையாக்கினால் நன்மை பல கிட்டும் என்பதை பாரதி, "சக்திக்கு ஆத்மஸமர்ப்பணம்" என்னும் பகுதியில் கூறியுள்ளார். பாரதி சக்தியிடம் வரங்கள் கேட்கிறார். சக்திதான் நாம் இம்மண்ணில் வரக் காரணமானவள். அத்தகையவளானச் சக்தியிடம் பாரதி காணி நிலம் வேண்டுகிறார். அந்த இடத்தில் தான் விரும்பிய வண்ணம் வசதிகள் வேண்டும். அத்துடன் சக்தியின் துணையும் வேண்டும். இவை அனைத்தும் தன் நன்மைக்காக அன்றி தான் பெறும் வசதிகள் மூலம் நல்ல பாட்டுக்கள் இயற்றி இந்த உலகத்தைப் பாலித்திட எண்ணியே இவ்வாறு வேண்டுகிறார். அது மட்டுமல்லாது மஹாசக்திக்கு விண்ணப்பம் ஒன்றை விடுக்கின்றார் பாரதி அதில்,

"எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்" (மஹாசக்தி விண்ணப்பம்)

என வேண்டுகோள் விடுக்கிறார். சக்தியேகதியென்று சரண்புகும்போது அவள் அதிகமான வரங்களை நமக்குத் தருவாள் எனப் பாரதி பாடுகிறார்.

"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
அம்பிகையைச்சரணடைந்தால் அதிகவரம் பெறலாம்..." (தேசமுத்துமாரி)

என உறுதியுடன் கூறுகின்றார். "மஹாசக்தி அருள் பெறுதலே வாழ்தல்" எனப் பாடுகின்றார். சக்தியைப் பற்றுக்கொண்டு வாழ்வதாலே நாம் நலமாய் வாழ்கிறோம் எனப் பாரதி விளக்குகின்றார்.

பாரதிக்கு சக்தியின் மீதுள்ள ஈடுபாடு:

பாரதி சக்தியின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பாரதியின் படைப்புகள் அனைத்தையும் கூர்ந்து நோக்கும்போது, அதில் சக்தி தத்துவமே மேவி நிற்கும். அவர், எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் சக்தியைத் தன் முழுமூச்சாகக் கொண்ட காரணத்தைப் பாரதி தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதியின் படைப்புகள் அனைத்திற்கும் காரணம் சக்தியே. சக்திதான் தன் மனதினுள் நின்று தம்மை எழுதத் தூண்டுகின்றாள் எனக் கூறுகின்றார்.

"மனதினிலே நின்றிதனை யெழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி" (பாரதி அறுபத்தாறு)

என்று பாடுகிறார் பாரதி. எந்த மாற்றமும் இன்றிப் பராசக்தியின் புகழ் பாடுகின்றேன் எனக் குறிப்பிடுகின்றார். பாரதி சக்தியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தம்மை சக்திதாசன் எனக் கூறிக்கொண்டார். இவர் சக்திதாசன் என்பது பாரதி மாதர் தலைப்பில் அமைந்த பெண் கட்டுரையில் இடம் பெறுகின்றது.

பாரதி தன் நெஞ்சை சக்தியின் வசப்படுத்துகின்றார். அதனால் "நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே" எனப் பாடுகிறார். சக்தியின் மீதுள்ள ஈடுபாட்டிலேயே அவர் படைப்புகளில் சக்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவர் படைப்புகளில் சக்தி, பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளாள். பாரதியை அவரின் பால்ய பருவத்திலேயே சக்தி கவர்ந்துவிட்டாள். இதனால் பாரதி தன் இளம் பருவத்திலேயே சக்தியை முழு ஈடுபாட்டுன் வணங்கினார்.

"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்" (காளிஸ்தோத்திரம்)

என்று சக்தி மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப் பாடுகின்றார். பாரதி சக்தியின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டைப் போலவே சக்தியும் பாரதிமேல் கொண்ட அன்பின் காரணத்தால், அவரின் கவிதைகள் அனைத்தையும் தனக்கெனக் கேட்கின்றாள். இவ்வாறு பாரதி சக்தியின் மீதும், சக்தி பாரதியின் மீதும் அன்பு கொண்டு விளங்குகின்றனர்.

பாரதம் சக்தியின் வடிவம்:

சக்தி என்பவள் பெண். பாரதி பாரதத்தைப் பெண்ணாகப் பாவிக்கின்றார். சக்தி எல்லா வடிவங்களாக இருக்கிறாள். இதனை நம் பாரத நாட்டிற்கு ஒப்பாகக் கூறுகின்றார்.

"முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்புமொழிபதி னெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடையாள்" (எங்கள் தாய்)

பாரதத்தைத் தாயாக பாவித்து அவள் எழுச்சி கொண்டு எழச்செய்ய திருப்பள்ளியெழுச்சியினைப் பாடுகின்றார்.

"மாதர் கோடி வந்தாலும் - கணம்
மாய்த்துக் குருதியிற் றிளைப்பாள்" (வெற்றி கொண்ட தாய்)

எனக் கூறுவதன் மூலம் கொற்றவையின் வடிவாகப் பாரதத்தைக் காண்பது புலனாகின்றது. வெற்றி கொள்ள பாரதத்தாய் "கொற்றவை" போலே செயல்படுவாள் என்கிறார்.

பராசக்தி எவ்வாறு தம்மைநாடி வருபவர்களுக்கு அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகள் செய்வாளோ, அதுபோலவே பாரதத் தாயும் நம்மை நாடி வருபவர்களுக்கு நலன்களை வழங்குகின்றாள். இதை,

"அறுபது கோடி தடக்கை களாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாள்" (எங்கள் தாய்)

எனக் குறிப்பிடுகின்றார். சக்தி வேதங்களுக்கெல்லாம் முன்தோன்றி பழமையானவளாக விளங்குகின்றாள். அதுபோலவே பாரதமும் மிகப்பழமை வாய்ந்த நாடு ஆகும்.

"பாரத நாடு பழம்பெரு நாடே" (எங்கள் நாடு)

பாரதியார் பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காண்பதால்,

"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குது மென்போம்" (பாரத நாடு)

என்று பாடுகின்றார். வேதங்களை வழங்கியவள் சக்தி. அவளின் வடிவமே பாரதம். பல வேதங்களைத் தந்தவள் பாரதத்தாய் என்பதை,

"நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக்கை" (பாரத மாதா)

என்று பாடுகின்றார். பாரதியார் சக்தியின் மீது கொண்ட ஈடுபாடும், தேசத்தின் மீது கொண்ட பற்றும் சேர்ந்து பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காணச் செய்தது. அனைத்தும் சக்திமயமாக இருக்கும்போது பாரதமும் சக்தியின் வடிவமாக பாரதி படைத்ததில் தவறொன்றும் இல்லை.

பாரதியின் படைப்பில் சக்திக்கெனத் தனியிடம் உள்ளது. சக்தி வழிபாடானது காலங்கள் கடந்து நிற்கின்றது. பாரதிக்குச் சக்தியின்மேல் கொண்ட ஈடுபாடே பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காணச்செய்தது. இதனால் தான் பாரதத்தைப் பாஞ்சாலியாகப் பாவித்து சபதத்தைப் படைத்தார் பாரதி. சக்தியே அனைத்திற்கும் மூல காரணமாய் அமைபவள். சக்தியே எல்லாயிடங்களிலும் நிறைந்திருப்பவள். அவள் இன்றி எதுவும் நிகழாது என்பது உறுதி.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link