ஆய்வுச் சிந்தனைகள்


நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்

மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு வளமும், நலமும் பெறும் என்று மக்கள் நம்புகின்றனர். மனித வாழ்வில் காணப்படும் நம்பிக்கைகளை, 1. கருவுற்றிருக்கும் பெண்கள் பற்றிய நம்பிக்கைகள், 2. குழந்தைப்பேறு தொடர்பான நம்பிக்கைகள், 3. பூப்பு பற்றிய நம்பிக்கைகள், 4. திருமணம் பற்றிய நம்பிக்கைகள், 5. உணவு, உடை அணிகலன்கள் தொடர்பான நம்பிக்கைகள், 6. வீடு, கனவு பற்றிய நம்பிக்கைகள், 7. இறப்பு தொடர்பான நம்பிக்கைகள் எனக்கொண்டு அவற்றைப் பற்றி பின்வரும் கட்டுரையின் மூலம் காணலாம்.

கருவுற்றிருக்கும் பெண்கள் பற்றிய நம்பிக்கைகள்:

சூரிய, சந்திர கிரகணத்தின் பாதிப்புக் கருதி, கருவுற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படாதிருக்க வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அந்நேரங்களில் காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல், பிற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்றும், கிரகணம் முடியும் வரை எவ்வித உணவும் உண்ணுதல் கூடாது என்றும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் நாய், பூனை போன்ற விலங்குகளைத் தாண்டிச் செல்லுதல், ஊசி, நூல் இவைகளைக் கொண்டு துணிகளைத் தைத்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் விரும்பிக்கேட்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் காணப்படுகிறது.

குழந்தை பற்றிய நம்பிக்கைகள்:

குழந்தை கொடி சுற்றிப் பிறத்தல் கோத்திரத்திற்கு (குடும்பத்திற்கு) ஆகாது என்றும், மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும் நம்புகின்றனர். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் வளமான வாழ்வு பெறுவர். அவர்கள் வீட்டிலுள்ள பானையிலும் தங்கம் இருக்கும் என்றும் நம்புகின்றனர். சிலரின் கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தியிருப்பதால் அவர்களின் கண் குழந்தையின் மீது படும்போது நோய் வரும் என்று நம்புகின்றனர். வெற்றிலை, சுண்ணாம்பு, மஞ்சள், கரி ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து அதில் நீர் ஊற்றி குழந்தையைச் சுற்றி மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் எறிவதாலும், கடுகு, உப்பு, மிளகாய், குப்பை, மண் ஆகியவற்றைக் கலந்து குழந்தையைச் சுற்றி எறிவதாலும் கண்ணேறு கழியும் என்று நம்புகின்றனர். குழந்தையின் நெற்றியிலும் கன்னத்திலும் கருமை நிறப் பொட்டு வைப்பதால் மற்றவர்களின் தீய பார்வை குழந்தையின் மீது பட்டிருந்தாலும் குழந்தைக்குத் தீங்கு விளையாது என்றும் நம்புகின்றனர்.

பூப்படைதல் தொடர்பான நம்பிக்கைகள்:

பூப்பெய்திய பெண்கள் அசுத்தம் உடையவர்கள் என்பதாலும், அவர்களைத் தீண்டுதலும் அப்பெண்கள் தீண்டிய எந்தப் பொருளையும் தொடாமல் தீட்டு என்று கருதியும் இருப்பதால், புனிதமானதாகக் கருதப்படும் கோயில்களுக்கோ, பூசை அறைக்குள்ளோ போகக்கூடாது என்றும், பிரசாதங்கள் வாங்கக் கூடாதென்றும் விலக்கி விடுகின்றனர். பூப்படைந்த பெண்கள் செடி நடுதல், விதை விதைத்தல் போன்ற வேலைகள் செய்தல் பயிர் வாடிவிடும் என்பதால் நிலங்களுக்குச் செல்லக்கூடாது என்றும், குழந்தைகளை எடுக்க கூடாதென்றும் எடுத்தால் நோய் வரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். பூப்படைந்த பெண்கள் தாம் உண்ணும் உணவை வெளியே எறியக் கூடாதென்றும, அப்படி செய்வதால் மாதவிலக்குக் காலங்களில் வயிற்று வலி உண்டாகும் என்றும் நம்புகின்றனர். செவ்வாய்க்கிழமை பூப்படைந்தால் நல்ல கணவன் கிடைக்கமாட்டான் என்றும், சனிக்கிழமை பூப்படைந்தால் தரித்திரியாவாள் என்றும், ஞாயிற்றுக்கிழமை பூப்படைந்தால் குழந்தைப்பேறு கிட்டாது என்றும் நம்புகின்றனர்.

திருமணம் தொடர்பான நம்பிக்கைகள்:

மனித வாழ்க்கை என்னும் உயிர் நெருப்பு அணையாது சுழன்று கொண்டிருக்க வீசும் மெல்லிய காற்று திருமணம் என்றும், இவ்வுலகத்திலுள்ள ஆடவர், மகளிர் இருவரும் ஒருவரோடொருவர் அன்னியோன்யமாய் அளவளாவி இல்லறம் நடத்தும் பொருட்டு ஏற்படுத்திக் கொள்ளும் ஒருவித உடன்படிக்கை என்றும், திருமணத்தைப் பற்றி கூறுகின்றனர். திருமணம் நடத்த ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் உகந்த நாட்களாகும். மணப் பெண்ணுக்கு மாதவிலக்கு உண்டாகும் தினம் அல்லது நெருங்கும் சமயத்தில் திருமணம் செய்யக்கூடாது என்றும், மணமக்கள் பிறந்த தேதி, கிழமைகளில் திருமணம் நடைபெறக்கூடாது என்றும் நம்புகின்றனர். இரண்டு திருமணங்கள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் நடந்தால் ஒரு குடும்பம் சிறக்கும், மற்றொரு குடும்பம் தாழ்நிலை அடையும். புதுமணத் தம்பதிகள் புதுவீடடில் குடியேறக் கூடாது, திருமணம் பற்றிய கனவு நல்லதன்று என்றும் நம்புகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணமக்கள் எந்தத் துன்ப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், குடும்பத்தில் நிகழும் முதல் திருமணத்தைத் தை மாதத்திலும், குடும்பத்தில் நிகழும் கடைசித் திருமணத்தை கார்த்திகையிலும் செய்தால் குடும்பத்திற்குத் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். திருமணமான பெண் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கோ பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது என்றும் நம்புகின்றனர். வீட்டு வாசலில் கோலமிட்டால் அவ்வீட்டில் வளம் சேரும் என்றும், நீர்க்கோலம் அழிவைத் தரும் என்றும் நம்புகின்றனர். வீட்டு வாயிற்படியில் எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது. அவ்வாறு உட்கார்ந்தால் லட்சுமி அவ்வீட்டை விட்டு வெளியே போய்விடுவாள் என்று கூறுகின்றனர். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென விழுந்து உடைந்தால் அவ்வீட்டில் ஏதாவது துக்க நிகழ்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. கடுகை வீட்டிற்குள் தூவக்கூடாது. அவ்வாறு தூவினால் அக்கடுகு வெடிப்பதைப் போன்று அவ்வீட்டில் பலத்த சண்டை நிகழும் என்று மக்கள் நம்புகின்றனர். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்றும், விருந்தினர்கள் சென்றதும் வீட்டைப் பெருக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். முதன் முதலில் வரும் விருந்தினர்களுக்கு அசைவ உணவு படைக்கக்கூடாது என்றும் அவ்வாறு படைத்தால் உறவு முறிந்து விடும் என்றும் நம்புகின்றனர்.

கனவு பற்றிய நம்பிக்கைகள்:

கனவுகள் மக்களுக்கு வாழ்வில் பின் நிகழப்போவதை முன்னர் உணர்த்துகின்றன என்று நம்புகின்றனர். மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமெனவும், பகலில் கனவு கண்டால் பலிக்காது எனவும் நம்புகின்றனர்.

இறப்பு தொடர்பான நம்பிக்கைகள்:

இறப்பு மனித வாழ்வில் இறுதிநிலை என்றும் அதற்குப் பின்னரும் அவன் வாழ்கிறான் என்றும், மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்றும் நம்பும் நம்பிக்கைகள் உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவி வருகின்றன. பிண ஊர்வலம் எதிர்ப்பட்டால் எடுத்த காரியம் நல்ல முறையில் முடியும் என்றும் இறந்தவரைப் புதைத்த குழிமேட்டின் மீது எள்ளும், பாலும் தெளித்து அந்த எள் நன்றாக முளைவிட்டு வளருமாயின் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்றும் நம்புகின்றனர். மரண செய்திகளைத் தாங்கிவரும் கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்து வீட்ற்கு வெளியே எறிந்துவிட வேண்டும் என்றும் நம்புகின்றனர். நீண்ட நாள் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அமாவாசை ஒரு கண்டமாகக் கருதப்படும். ஏனெனில் எமன் அந்நாளில் கூடுதலான வேலை செய்யும் நாளாக மக்கள் நம்புகின்றனர். மேற்கண்டவற்றின் மூலம் மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் பிரிக்கமுடியாதபடி வேரூன்றிக் காணப்படுகின்றன என்றும் நாகரிகம், பண்பாடு ஆகியவை மனிதனை மாற்றியிருந்தாலும் நம்பிக்கையால் பின்னப்பட்ட அவனது மனதை மாற்ற முடியாது எனபதையும் அறியலாம்.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link