ஆய்வுச் சிந்தனைகள்


குறளும், கிரந்தமும் : நீர்

நீர் தூய்மைப்படுத்துவது, நீர் உலக உயிர்களுக்கெல்லாம் முதற்பொருள், நீர் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. மழை என்பது இறைவன் தரும் வரம் என்றே நம்பப்படுகிறது. மழை வரும் அறிகுறிகள் பற்றி விஞ்ஞானம் கூறினாலும் மழை வேண்டி அம்மனிடம் வழிபடுகிறது. கூழ்காய்ச்சிக் கொடுப்பது போன்ற பழக்கங்கள் இன்னும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பூமியில் வாழும் அனைவருக்கும் நீர் ஒரு வரப்பிரசாதம் என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்றே. மழை நீர் வருவதை எதிர்பார்த்தே உழவர்களின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அவர்கள் மழையே நம்பியே வாழ்கின்றனர். நீர் புனிதமாக்குவது. நீர் தீட்டுகளைப் போக்கும் தன்மை உடையது தீட்டுப்பட்ட ஏதாவது ஒரு பொருள் நீரைத் தெளிப்பதன் மூலம் புனிதமாகிவிடுகிறது என்ற நம்பிக்கை இன்றும் அனைவரிடமும் காணப்படுகிறது. புனிய ஸ்தலங்களில் உள்ள குளத்தின் நீரைக் குடித்தால் பிணி தீரும் என்பது பற்றிய ஐதீகம் மக்களிடையே இன்றும் உள்ளது. இத்தகைய நீரின் பெருமையைத் திருவள்ளுவர் கூறியுள்ள வான் சிறப்பு என்னும் அதிகாரத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும். சீக்கியமும் நீரைப் புனிதமானதாகவும். நீரில் இறைவன் வாழ்வதாகவும் கருணை மிகுந்ததாகவும் கூறுகிறது. வள்ளுவமும் சீக்கியமும் நீரின் முக்கியவத்தை எவ்வாறு புலப்படுத்துகின்றன என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறள் கூறும் நீரின் முக்கியத்துவம்: "வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிர்தம் என்றுரைற் பாற்று" (குறள்: 11) என்னும் வள்ளுவரின் குறளுக்குப் பரிமேலழகர் - அம்மழை தான் உலகத்திற்கு அமிழ்தமென்று உணரும் பான்மையையுடைத்தது என்று பொருள் கூறுகிறார். அமிழ்தம் உண்டோர் இவ்வுலகில் சாகாவரம் பெற்று நிலையாக வாழ்வது போல, உலக உயிர்களை வாழ வைக்கும் மழை நீரும் அமிழ்தெனப் போற்றப்படுகிறது. மழை அமிழ்தத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அமிழ்தம் என்பது சுவை மிகுந்த பானம். அமிழ்தம் தேவர்களுக்குரியது. நீண்ட நாட்கள் உயிரோடு வாழ வைப்பது, சாவா மருந்து, என்றெல்லாம் புராணங்கள் கூறுகின்றன. பிறந்த குழந்தைகளுக்குத் தாய்பால் முக்கியமானது போல பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மழை இன்றியமையாதது. தாய்ப்பால் அமிர்தத்திற்கு ஒப்பிடப்படுவது போல மழையும் உயிர்களைக் காப்பதால் அமிழ்து என்று கூறப்படுகிறது என்ற அடிப்படையில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கிய அயோத்திதாசர் "உலகத்தில் தோற்றம் சருவசீவர்களையும் தாய்ப்பால் போலுட்டிக் காத்து வருவது மழையே" என்று இக்குறளுக்குக் கருத்துரை எழுதியுள்ளார். அடுத்து

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை - (குறள்)

என்னும் குறளில் "உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவிப்பதற்குக் காரணமாக இருக்கும் மழை உணவாகவும் பயன்படுகிறது. உயிர் வாழும் மனிதர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, உணவுப் பொருட்களை விளைவிப்பதற்குக் காரணமாக இருக்கும். பயிர்களுக்கு நீர் உணவாக அமைகிறது என்கிறார் வள்ளுவர். இதனால் தான் வள்ளுவர்

"விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது" (குறள்.16)

என்கிறார். இக்குறளுக்கு வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் பார்க்க முடியாது என்பது விளக்கமாகும். வானத்திலிருந்து மழை பெய்யவில்லையென்றால் பூமியில் எதுவும் வளராமல் போய்விடும். மழை பெய்யவில்லையென்றால் இயற்கைச் செல்வங்கள் எல்லாம் வறண்டு போகும். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளும் விளையாமல் போய்விடும். என்று பொருள் கூறுவதன் மூலம் நீரின் இன்றியமையாமையை விளக்குகிறார்.

மேலும்

"கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை" (குறள்.15)

என்கிறார் வள்ளுவர். பூமியில் வாழ்பவர்களை மழை பெய்யாமல் வறண்டு போகச் செய்து அவர்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழையாகும். மழை பெய்யாமல் நின்று மக்களின் வாழ்வைக் கெடுப்பதும், அவர்களைத் துன்பங்கள் நீங்கி எல்லா வளங்களும் பெற்று வாழ வழி செய்வதும் மழையாகும்.

சீக்கியம், கூறும் நீரின் முக்கியத்துவம்:

சீக்கியம், மழை என்பது இறைவனின் செயல் என்றும் அது மக்களை நல்வழிப்படுத்துவது என்றும் கூறுகிறது. சீக்கிய மரபு உருவமற்ற ஒரே துவக்கமாக இறைவனைக் கொண்டுள்ளது. சீக்கியர்கள் விவசாயக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள், நீர் விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தென்னிந்தியக் கோவில்களைப் போலவே சீக்கியர்களின் குருதுவாராக்களும்
குளங்களுடன் காணப்படுகின்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்தத்தில்

"இந்த உலகின் கடவுளே
அருள் பாலித்த முதல்வர்
அனைத்திடத்திலும் மழையை
அனுப்பியவர் தாய்போல் உலகின் உயிர்களை
கவனித்துக் கொள்கிறார். (கு.கி. பாடல்.215)

என்று காணப்படுகிறது. சீக்கியம் உலகப் பொருட்கள் யாவும் இறைவன் படைத்த அனைத்திலும் இறைவன் உறைந்துள்ளான். நீரிலும் இறைவன் உள்ளான். இறைவன் கருணை மிகுந்தவனாகக் காணப்படுகின்றான். இதனடிப்படையில் கடவுளே இந்த உலகத்திற்கு அருளை வழங்கியவர். உலகப் பொருட்கள் அனைத்திலும் மழையை அனுப்பியவர். உலகத்தில் உலகப் பொருட்கள் அனைத்திலும் மழையை அனுப்பியவர். உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காப்பதும் வளர்ப்பதும் மழை நீராகும். அதனால் மழையை இந்த உலகிற்குத் தந்த கடவுள் என்றும் தாய்போல் உலகின் உயிர்களைக் கவனித்துக் கொள்கிறார் என்றும் குரு கிரந்தப்பாடல் கூறியுள்ளமை புலப்படுகிறது. மேலும்

"இறைவன் இல்லாமல் என் உயிர்
எரிந்து கருகுகிறதே(கு.கி.14)

என்னும் பாடலில் இறைவன் எனும் நீர் இல்லாததால் என் உயிர் எரிந்து கருகிறது. உணவுப் பொருட்களை விளைவிப்பதற்குக் காரணமாகவும், உண்பதற்கு உணவாகவும் நீர் பயன்படுகிறது. இவை அனைத்திற்கும் நீரே அடிப்படையாக உள்ளது. நீர் இறைவனுக்கே ஒப்பிடப்படுகிறது

"மனமே நீரின் மீது தாமரை கொள்ளும்
நேசத்தைப் போல் இறைவன் மேல் அன்பு கொள்
நீரலைகளால் தாக்குண்டாலும் அது
அன்பால் காதலால் மலர்கிறது
இறைவன் உயிர்களை நீரில்தான் படைத்தளித்தான்
நீரின்றி அவற்றின் மரணம் நிகழ்கிறது." (கு.கி)

என்னம் பாடலில் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் மழையே ஆதாரம். இறைவன் நீரில் தான் உயிர்களைப் படைத்தான் இல்லாவிட்டால் அவைகள் மறைந்து போகின்றன எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும்

"நீர் நிறைந்த குளமும் நீயே
குளத்தில் நீந்தும் அன்னமும் நீயே
நீயே, நீர்த் தாமரை நீயே அல்லி மலர்
அன்னத்தையும் தாமரையையும் அல்லிமலரையும்
தாங்கிக் கொள்வதில் நீ மகிழ்ச்சி அடைகிறாய் (கு.கி.23)

என்ற குரு நானக் பாடுகின்றார். இங்கு இறைவனின் இருப்பிடம் நீர் என்கிறார். மேலும், உலகத்து உயிர்கள் அனைத்தும் நீரினை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதால் நீரில் உள்ள அனைத்திலும் இறைவன் இருக்கிறான் என்றும் கூறப்படுகின்றது. இதனால் நீரில்லாமல் இறைவன் இல்லை என்பதை

"நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல
உடலும் மனமும் இறைவனில்
பேரின்பம் அடைகின்றன,
ஒரு கணம் கூட நீரின்றி
உயிர் வாழ்வதில்லை
உயிரின் வாட்டத்தை இறைவன் அறிவான் (கு.கி. 60)

என்கிறார் நானக். நீரில்லாமல் உடல் இல்லை. மனமும் இருக்காது ஒரு பொழுதேனும் உயிர் வாழ்தல் முடியாது நீரே உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது என்று குரு நானக் உணர்த்துகிறார்.

இயற்கைப் பொருட்கள் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் இயற்கைப் பொருட்களில் முதன்மையானதாக நீர் காணப்படுகின்றது. இக்கருத்தினை

"கடவுள் அனைத்திலும் பரவியுள்ளான்
கடலிலும் நிலத்திலும் அவரது
உண்மை மறைவாய் உள்ளது (கு.கி)

எனக் கூறப்படுகிறது. உலகமானது கடலால் சூழப்பட்டிருக்கிறது. இருப்பினும் மழை பெய்யவில்லை எனில் அவற்றின் தன்மை குறைந்து விடும். அவற்றில் வாழும் உயிர்ணங்கள் இறந்து விடுகின்றன. அந்நீரில் விவசாயம் செய்து வாழ்தல் இயலாது. மழை நீரினால் மக்கள் வாழ்கின்றனர் என்கிறது குருகிரந்தம், அது மட்டுமன்றி

"என் மனமே, மழை நீருக்காக ஏங்கும்
சுங்கப் பறவையைப் போல்
இறைவனிடம் அன்பு கொள்
நிறைந்த குளத்து நீரும்
பச்சைப் பூமிப் பரப்பும்
அதற்குத் தேவை இல்லை
ஏந்திய வாயில் வீழும் ஒரு மழைத்துளிக்காய்
அது ஏங்குகிறது (கு.கி.60)

என்ற பாடல் மூலம் இறைவனைக் கடலுக்கு ஒப்புமையாகக் காட்டுகின்றார். குருநானக், இதில் கடல் அலைகள் கடலோடு கலப்பது என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் உயிரும் இறுதியில் இறைவனையே சென்றடையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. உலகின் அனைத்துப் பொருட்களும் அவற்றின் செயல்பாடுகளும் இறைவனே என்று வலியுறுத்துகிறது.

வாய்மையும் நீரும்:

ஒரு மனிதனுக்கும் அகம், புறம் என இரு பகுதிகள் உண்டு. அகம் என்பது மனமாகும். புறம் என்பது உடலாகும் இம்மனத் தூய்மையாய் இருந்தால்தான் அவன் நல் ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ முடியும். புறத்தை நீரால் தூய்மை செய்து கொள்ள முடியும் இதைத்தான் வள்ளுவர்.

"புறத்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மை யால்காணப் படும்" (குறள் -298)

என்கிறார். அதாவது புறம் தூய்மையாக விளக்குதல் நீரினால் ஏற்படும் அதுபோல அகம் துய்மையாக விளங்குதல் வாய்மையில் உண்டாகும். இங்கு எல்லா நல்ஒழுக்கங்களுக்கும் அடிப்படை மனத்தூய்மை இது வாய்மையால் அமையும். சீக்கியத்தில்

"புனிதக் கடலில் பரிசுத்த நீரால்
பல பிறவிகளின் அசுத்தம் கழுவப்படுகிறது (கு.கி. 1179)

என்னும் குரு ராம்தாஸ் பாடல் காணப்படுகிறது. இவ்வுலகப் படைப்புகள் யாவும் நீரால் கழுவப்படுவதன் மூலம் அசுத்தம் நீங்கி விடும் என்று கூறுகிறது. இப்பாடல் நீர் தூய்மையாக்குவது நீரினால் புனிதத்தன்மை பெற முடியும் என்ற கருத்தைக் கூறுகிறது.

இத்தகைய நிலையை வள்ளுவர் மணத்துக்கண் மாசிலன் ஆதல், அறம் என்று உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார். நீரால் ஏற்படுத்தப்படும் தூய்மையும் மனிதனை நன்னெறிக்கு இட்டுச் செல்லும் எனலாம். எவ்வாறென்றால் மனிதன் செய்யும் பாவங்கள் நீரால் கரைக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை அன்று முதல் இன்று வரை பல்வேறு இனத்தாரிடமும் காண முடிகின்றது. வாய்மையால் அகத்தூய்மைப்படுத்திக் கொண்டால் போதாது. நீரினால் புறத்தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி நீரை வாய்மைக்கு ஒப்புமையாக்குவது காணமுடிகிறது.

ஆட்சி முறையும் மழையும்:

ஒரு நாட்டுக்குத் தலைவன் மன்னன். அவன் நல்லாட்சி, செங்கோலாட்சி நடத்தினால்தான் அந்நாட்டு மக்கள் சிறப்புடன் வாழ்வர் அந்நாட்டில் மழையும் பெய்து வளம் செய்விக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை திருவள்ளுவர்.

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்" (குறள் - 559)

என்னும் குறட்பா உணர்த்துகின்றார். அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால் அந்த நாட்டில் பருவமழை பெய்யாமல் போகும். அரசனது ஆட்சியில், பாரபட்சம், கொடுங்கோன்மை, சாதி வேறுபாடு, உயர்வு, தாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் இருந்தால் அந்த நாட்டில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் போய்விடும் மன்னவன் தான் செய்யும் ஆட்சியை முறை தவறிச் செய்தால் அந்நாட்டில் பெய்யும் பருவமழை பெய்யாமல் போகுமென்பது வள்ளுவரின் சிந்தனையாகும். சீக்கியத்திலும்

"எங்கே ஏழைகள் பேணிப்
பாதுகாக்கப் படுகிறார்களோ
அங்கு இறை அருள் எனும் மழை
தவறாமல் பொழிகிறது (குருகிரந்தப்பாடல்)

என்று நம்பிக்கை உள்ளத்தைக் குருகிரந்தப் பாடல் எடுத்துரைக்கின்றது. எங்கு உயர்வு தாழ்வு இல்லையோ அங்கு நல்ல இடமும் பாரபட்சமில்லாத அரசனின் ஆட்சியும் மக்களை ஒரு குடையின் கீழ் நிறுத்தும், அத்தகைய இடத்தில் இறைவனின் அருள் மழையாகப் பொழிகிறது என்று கூறப்படுகிறது. குறளும் குருகிரந்தமும் நல்லாட்சி தான் மழை பெய்வதற்கு அடிப்படை என்ற நம்பிக்கை கொண்டுள்ளாமை விளங்குகின்றது.

1. அன்று முதல் இன்று வரை கடல்நீரை மக்கள் தாங்கள் பாவங்களைப் போக்க பயன்படுத்துகின்றனர். அந்த அடிப்படையில் குரு கிரந்தப்பாடல் அமைந்துள்ளது. வள்ளுவர் எந்த நீர் என்று சொல்லவில்லை. 2. நீரால் புறத்துய்மை அமையும் என்ற நம்பிக்கை இரண்டு நூல்களிலுமே காணப்படுகிறது. 3. வள்ளுவர் இறைவனே நீருடன் ஒப்பிடவில்லை குருகிரந்தம் நீரை இறைவனாகக் காண்கிறது. வள்ளுவர் சமயவாதி அல்ல அதனால் சொல்லவில்லை. குரு கிரந்தம் சமயம் சார்ந்த நூல் அதனால் இறைவனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link