ஆய்வுச் சிந்தனைகள்


கலித்தொகையில் அறக்கருத்துக்கள்

மக்கள் நல்ல முறையில் வாழப் புலவர்கள் அறநெறிகளை வழங்கினர். அறக்கருத்துக்களைக் கூறும் தனி நூல்கள் தனியாக தோன்றாத காலத்தில் அகப்பாடல்களின் மூலம் அறக்கருத்துக்களை எடுத்து ஓதினர். இவ்வாறு அகப்பாடல்களின் மூலம் கூறும் கருத்துக்கள் அகமாந்தர்களுக்கு மட்டுமின்றிச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு அறிவுறுத்திய நூல் கலித்தொகை ஆகும். அறம் என்பது ஒழுக்க நெறியாகும். பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம் ஆகும். மேலும் அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அறத்தின் தோற்றம்:

மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறருக்குத் துன்பம் தராத நல்ல நெறியிலேயே இவற்றைப் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவ்வாறு சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்கள் தோன்றின.

அறத்தின் பிரிவுகள்:

தமிழர் காதலையும் வீரத்தையும் தம் கண்களாகப் போற்றினர். காதல் உணர்வை அகம் என்றனர். வீரத்தைப் புறம் என்றனர். அகவாழ்விலும் புறவாழ்விலும் அறநெறி கொண்டு வாழ்க்கை நடத்தினர். அறத்தினை அக அறம், புற அறம் என்றும் புற அறத்தினைப் போரறம், சமுதாய அறம் என்றும் பிரிப்பர்.

அகத்திணையில் அறநெறிகள்:

ஆணும் பெண்ணும் காதல் உணர்வு கொண்டு இன்புற்று வாழும் வாழ்வு "அகம்" என்பர். இதை அகத்திணை என்றும் கூறுவர். அகத்திணை மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி, தந்தை, தமையன் ஆகியோர் அறஒழுக்கம் கொண்டு ஒழுகினர்.

கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைமகன், தலைமகள், தோழி என்போர் புலவர்களாற் படைத்துக் கொள்ளப் பெற்றோரே எனினும் அக்காலத்து நன்மக்களின் இயல்புகளும் வாழ்க்கைக் கூறுகளுமே அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன. ஆகவே கலித்தொகை இன்பச் சுவையை கொடுப்பதுடன் அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர் வேளாளர்களும், பிறருமாகிய ஆடவரும் மகளிரும் இளமையிலும் முதுமையிலும் அறியவேண்டிய நன்னெறிகளை எடுத்தியம்புகிறது.

அகவாழ்வில் அறத்தோடு பொருந்தி இல்லற வாழ்வினை மேற்கொண்டனர். ஓர் ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம் என்பதை,

"ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை" (9.23-24)

என்ற கலித்தொகை வரிகள் விளக்குகின்றன. கற்புடைய பெண்டிர் பிற தெய்வங்களைத் தொழுதல் இல்லை. கற்புடைய பெண்டிர் பிழையின்றி வறட்சி நிலவிய காலத்தும் மழையைப் பெய்விக்கும் ஆற்றல் வாய்ந்தவராக விளங்கினர். கற்புடைய பெண்ணினது கணவன் சென்ற வழியில் ஏற்படும் வெயிலின் வெம்மையை அறக்கடவுள் முன்னின்று விலக்கித் துணை செய்தது என்று கற்புத் திறம் போற்றப்படுகிறது. இதனை,

"வறனோடின் வையத்து வான்தரும் கற்பினாள்" (16. 18-12) என்ற வரி விளக்குகிறது.

புறத்திணையில் அறநெறிகள்:

புறத்திணையில் அறம் என்னும் பொழுது மக்கள் நல்வாழ்வுக்கு அரசு இன்றியமையாததால் அறத்தின் வழியே ஆட்சிபுரிந்து அரசின் தலையாய கடமையாகும். மன்னன் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், மன்னன் மட்டுமின்றி மன்னன் பயன்படுத்தும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறம் செய்பவையாக அமைகின்றன. அரசனது வெண்கொற்றக் குடை அறம் செய்யும் என்பதை,

"அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை" (99.8)

மன்னன் கையில் உள்ள செங்கோல் நடுநிலைமை தப்பாது உலகம் புகழும்படி விளங்குகின்றதை

"பொய்யாமை நுவலுகின் செங்கோலச் செங்கோலின்" என்னும் வரி விளக்குகிறது.

முரசானது மக்களின் பாதுகாப்பிற்குரிய அரணாக அமைகிறது. எனவே வேந்தனது செம்மையால் மாரி சுரக்கும். வெண்கொற்றக்குடை அறனிழவாகும், செங்கோல் பொய்யாமை நுவலும் முரசம் பாதுகாப்பை ஒலிக்கும் என்பன கலித்தொகை உணர்த்தும் அரச அறங்களாகும்.

போர்க்களத்தில் வலிமை இல்லாதவரோடு போர் செய்வது அறமாகக் கொள்ளப்படுவதில்லை. பகைவன் கருவியின்றி நிற்குமிடத்துத் தனக்கு நிகராகான் என்று அவனிடம் போர் செய்யாது விடுவதும் வீழ்ந்தவன் மேல் செல்வதும் வீரமன்று என்று கலித்தொகை உணர்த்துகின்றது.

சமுதாயவியல்:

சமுதாயத்தில் பின்பற்ற வேண்டிய ஈகை, இன்னா செய்யாமை, நிலையாமை ஆகிய கருத்துக்கள் சமுதாய அறமாக விளங்குகின்றன. ஈதலின் சிறப்பாக "இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும், பயன் கருதாது ஒருவருக்கு ஒரே பொருளைக் கொடுத்தலே ஈகையறமாகும். இதனை,

"ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்" (133.6)

என்று நெய்தற் கலிப்பாடல் மூலம் அறியமுடிகிறது. ஈகை செய்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகும் என்பதை,

"ஈதலின் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல்" (27.2)

என்ற வரிகள் அறிவுறுத்துகின்றன. மேலும் செய்த வினைப்பயன் பற்றுவிடாது பயன் தறுதல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றில் அறத்தின் திறஞ்சேரார் மடலூர்தல் ஆகியவை கலித்தொகை கூறும் சமுதாய அறங்களாகும்.

மனவியல்:

"மகிழ்ச்சியினால் அறிவு பொலிவு பெறும்" மன ஒழுக்கத்தினால் வாழ்நாள் சிறக்கும்" "உண்கடன் வழிபொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங்கொண்டது கொடுக்குங்கால் மகனும் வேறாகும்", "நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை", என்பவை மனவியல் வழங்கும் உண்மைகளாகும்.

பறவை விலங்குகளின் வாழ்வை விளக்குவதன் மூலம் கலித்தொகை பல அறக்கருத்துக்களைக் கூறுகின்றது. மேலும் இறைவனின் படைப்பு ஓருயிர் மற்றொருயிரை செகுத்துண்ணுமாறு அமைக்கும் நோக்கமில்லாதது என்னும் உயரிய அறம் புலப்படுகின்றது.

நிலையாமை:

மன்னர் உலகத்து மன்னுதல் குறித்தோர் உணர வேண்டிய நிலையாமையை நெஞ்சில் நின்று நிலைபெறுமாறு கலித்தொகை கூறுகின்றது. வாழ்நாள், அழகு, இளமை, பொருள், காமம், ஆகிய ஐம்பெரும் நிலையாமை அழகான உவமைகளின் மூலம் விளக்கப்பெற்றுள்ளது.

"வளியினும் வரைநில்லாதது வாழுநாள் ஆகவே,
கடைநாள் இதுவென்று அறிந்தாரில்லை" (கலி. 20.9)

அழகு, நீள்கதிர், அவிர்மதி நிறைவு போல் நிறையாது நாள்தோறுந் தன் நிலை குலைந்து விடும் என்பன இளமை பற்றிய செய்திகளை கலித்தொகை அறிவுறுத்துகிறது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் சிதறிக் கிடைக்கின்றன. இவ்வாறில்லாமல் ஒரேவொரு பாட்டாலும் பல அறவுரைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

"ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை
அறிவெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது மறைபிற ரறியாமை
முறையெனப் படுவது கண்ணோட்டா துயிர்வெளவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்", (133-14)

என்றிவ்வாறு அறநெறிக் கருத்துக்களைக் கலித்தொகை முதன்மைப்படுத்திக் கூறுகின்றது.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இப்பாடலில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறவுரைகள் ஒரே பாடலில் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை அகப்பாடலின் வாயிலாக மென்மையாக எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினர். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அறிவு புகட்டும் வகையில் கலித்தொகையில் அறநெறிகள் மிகுந்து காணப்படுகிறது.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் பொருளேபோல் தமியவே தேயும்" என்று கலித்தொகையில் அறிவுரைக்கு அறவுரையே உவமையாக கூறப்பட்டுள்ளது. இதைக் காணும் பொழுது,

"அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு" (குறள்.35)

என்னும் நீதிக்கு நீதியையே உவமை காட்டும் திருக்குறளை எண்ண வைக்கின்றது. ஆகவே நீதி இலக்கியப் பண்புகள் சங்க காலத்தில் தோன்றிய கலித்தொகையில் அரும்பத் தொடங்கியுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. கலித்தொகைப்பாடல்கள் அறநெறிகளோடு வாழவேண்டும் என்கின்ற பொதுவான கருத்துக்களைத் தெளிவுபட விளக்குகின்றன. அறவாழ்க்கையின் நோக்கத்தைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் கலித்தொகைப் பாடல்கள் தெளிவிக்கின்றன.

நன்றி: கட்டுரை மாலை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link