ஆய்வுச் சிந்தனைகள்


வாய்ப்பும் வெற்றியும்


"வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னைச் சேரும்" என்ற திரை இசைப்பாடலும்,

"முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்" என்ற வள்ளுவர் வாய்மொழியும்,

"உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்" என்ற வள்ளுவத்தின் உயர்ந்த நோக்கமும் வெற்றிக்கனியைத் தட்டி பறிக்கும் தாரக மந்திரங்களாகும்.

"மந்திரம் கால் மதி முக்கால்" என்றே ஆன்றோர் முதுமொழியும் அறிவுக்குதிரை என்ற சிந்தனைக் கதவுகள் திறக்கப்படும் போது வெற்றி எனற மாணிக்கம் உன்னுள் ஒளிவிடும். அது உனக்குமட்டும் அல்லாது "பழு மரம் உள்ளூர் பழுத்தற்கால்" என்ற வள்ளுவத்தின் வாசகத்திற்கேற்ப எல்லோருக்கும் பயன் உடையதாக அமையும்.

வாய்ப்பு ஓர் விளக்கம்:

"வாய்ப்பு என்பது கிடைப்பதற்கு அரியது" என்றும் போட்டிகளில் முதன்மையாக வருவது. அதிஷ்டமாகக் கிடைப்பது. "முயற்சியின் மூலம் கிடைப்பது", "விருப்பத்தின் அடிப்படையில் பிறரால் வழங்கப்படுவது" சில நிகழ்வுகளின் மூலமாக கிடைப்பது" "பரம்பரை செல்வத்தின் மூலமாக ஒரு சிலர் பெறுவது" இவ்வாறு பல்வேறு வடிவங்களாக வாய்ப்பு வந்து சேரும்.

வாய்ப்புகளின் வகைகள்:

(1) அரசியல் (2) சமுதாயம் (3) பொருளாதாரம் (4) ஆன்மீகம் என்று பல வகைப்படுத்தலாம்.

அரசியல் வாய்ப்பு:

பிரஞ்சுநாட்டின் போர்வீரனாகச் சேர்ந்த நெப்போலியன் அந்நாட்டு முதன் கான்சலேட்டாக பதவி உயர்வு என்ற வாய்ப்பை பெற்று 1804ம் ஆண்டு பிரஞ்சு நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

"பிரஞ்சு நாட்டின் கிரீடம் மண்ணில் கிடந்தது. அதனை என் வாளின் வலிமையால் என் தலையில் சூடிக்கொண்டேன்". என்று குறிப்பிடுகின்றான்.

சமுதாய வாய்ப்பு:

மக்களின் பிரதிநிதியாகும் வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கின்றது. தலைவராகும் வாய்ப்பு குழுவில் துடிப்பானவர்க்குக் கிடைக்கின்றது. காந்தியடிகளின் அயராத போராட்டம் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இந்திய மக்கள் அனைவரும் போற்றும் தலைவராக அவர் விளங்குகின்றார். வீட்டுக்காவலில் "சூசி" என்ற மியான்மார் (பர்மா) பெண்மணியும், "தலாய்லாமா" என்ற திபெத்தியத் தலைவரும் அம்மக்களுக்காக அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தொண்டாற்றும் சமுதாயத் தலைவர்கள்.

பொருளாதார வாய்ப்பு:

பணம் படைத்தவர்களாக, நிலச்சுவான்தார்களாகத் தோன்றுகின்றனர். புத்தரைச் சொல்லும்போது, "பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தார்" எனக் கூறுவார். பொருளாதாரத்தில் ஒரு சிலரே உயர்ந்த நிலையை அடைகின்றனர். அவ்வாறு அரிதில் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தினால் அது அவர் வளர்ச்சிக்கு வித்திடும். "பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லை" என்ற வள்ளுவர் வழிபொருளை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஆன்மீக வாய்ப்பு:

உலகில் பிறந்த ஒரு சிலரே மகான்களாக உயர்கின்றனர். "வாழ்க வளமுடன்" என்ற தாரகமந்திரத்தைக் கூறும் "வேதாத்திரி மகரிசி" வாடிய பயிரைக் கண்டு வாட்டமுற்ற வள்ளலார், உன்னால் பிறருக்கு உதவமுடியவில்லை என்றாலும் அன்னை வார்தையைக்கூறு என்று எடுத்துரைத்த திருமூலர், அருணகிரிநாதர், அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், திருமங்கையாழ்வார் போன்ற சிலரே தம் மனவலிமையால் மனிதர்களில் மாணிக்கங்களாக விளங்குகின்றனர்.

வெற்றியின் தடைக்கற்கள்:

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்" என்ற கூற்றினை மதிக்கத்தவறியவர்களே வாய்ப்பினை இழந்து வாடுகின்றனர். வழியறியாது திகைக்கின்றனர்.

"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற சீர்தூக்கும் சிந்தனையும், உற்றாய்வும் இல்லாமையே இதற்குக் காரணம். "வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்" என்ற வாசகத்தின் வழி சொர்க்கவாசல் திறக்கும்போது விரைந்துசென்று பயனை அடைதல் வேண்டும். "தீது நன்றும் பிறர்தர வாரா" என்றார் கணியன் பூங்குன்றனார்.

சோம்பல்:

சோம்பல் என்ற வியாதி மனிதனை எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் முடக்கிவிடுகின்றன. அதுவே அவனை அசைவற்றநிலைக்கு இட்டுச் செல்கிறது. நம்பிக்கையின்மை, தன்னையும் தனது காரியத்தின்மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்தி தோல்வியைத் தோற்றுவிக்கிறது.

இயலாமை:

புறத்தாக்குதல் வீட்டுப்பிரச்சனை மற்றும் புத்திர இன்மையை இதற்குக் காரணமாக அமைகின்றன.

வறுமை:

வறுமை மனிதனின் முதல் எதிரி. அது அவனை அழித்துவிடுகின்றது. "கொடிதினும் கொடிது இளமையில் வறுமை" என்பதற்கேற்ப வறுமை மனிதனை எத்தகைய தவறுக்கும் தூண்டிவிடுகிறது.

"ஈன்றாள் பசிகாண்பாளாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் சொல்" என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க வறுமை மனிதனின் வாழ்வில் பின்னடவை ஏற்படுத்தும்.

கோபம்:

மனிதனின் முதல் எதிரி கோபமாகும். கோபம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவற்றையும் கெடுக்கும். சில சம்பவங்கள் மனிதனின் மனதைப் புண்படுத்துவதுடன் அதன் உச்சநிலை கோபமாக முடிந்து வாய்ப்பை நழுவவிடும். அல்லது வாய்ப்பே கிடைக்காமல் செய்துவிடும்.

அறியாமை:

அறியாமை மனிதனின் வாழ்வில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் அது அவன் முயற்சியையே அழித்துவிடும். நீ நடக்கும்போது உன் நிழலையும் நீ கண்காணிப்பாயாக என்று கூறுவர். இல்லையென்றால் நிழலே உனக்கு எமனாகும். அதுவே பெருந்தடையாகும்.

நெகிழ்ச்சியின்மை:

ஒருவன் வளைந்து கொடுக்கும் இயல்பினைக் கொண்டிருந்தால் அவன் காலத்திற்கேற்பத் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றிக் கொள்வான். ஆனால் அவன் நெகிழ்ச்சியுற்றிருந்தால் அவனால் செயல்பட முடியாது. இதுவும் அவன் வாய்ப்பைப் பெறுவதற்குத் தடைக்கல்லாக அமையும்.

தனிமை:

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பதற்கேற்ப ஒன்றுபட்டு வாழ்ந்தால் அது தனி மனிதனுக்கும், குழுவுக்கும் வெற்றியைத் தரும். தனிமைப்பட்டுக் கிடக்கின்ற பொதுவாழ்க்கையில் தடுமாற்றத்தினை ஏற்படுத்தும். தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவோ, அறிவுரைகள் கேட்கவோ இயலாமல் போய்விடும். எனவே, தனிமை என்ற இருளில் இருந்து விடுபட்டால் வாழ்வு சுபிட்சமாகும்.

வெற்றிக்கனி:

நல்ல எண்ணம் இருந்தாலே வெற்றி உன்னைத் தேடிவரும்.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதன்றி
தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற வரிகளில் வள்ளுவர் புகழின் பெருமையை எடுத்துறைக்கிறார்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வொரு
தீமையும் மேற்கொள்ளார்.....

...."கருமமே கண்ணாயினார்" என்ற நீதி நெறியினைப் பின்பற்றினோமானால் வெற்றிக்கனி உன்னைத் தேடிவரும்.

"கடின உழைப்பிற்கு ஈடுஇணை எதுவுமில்லை" என்ற அன்னை இந்திராவின் வழி நின்றால் வெற்றி உண்டு.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனாரின் வழி நின்று செயல்பட்டால் வெற்றி உண்டு.

"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற திரை இசைப்பாடல் வெற்றிக்கனியைத் தட்டில் தரும்.

நிறைவு:

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்" என்ற வள்ளுவர் வழி நின்றால்,

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்; அன்பே வசமாய் அமர்ந்திருந்தாரே என்ற திருமந்திரத்தின் வழியில் செயல்பட்டால் அன்பினால் அகிலத்தையும் அடக்கி ஆளலாம். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். "வாய்ப்பும் வெற்றியும் வந்து உனைச் சேரும் உலகம் உன் கையில்".

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link