ஆய்வுச் சிந்தனைகள்


சங்க இலக்கியத்தில் போரும் அமைதியும்

இயற்கைத் தன்மை:-

சங்க காலத்தை வீரயுகக்காலம் எனக் குறிப்பிடுகின்றார் க. கைலாசபதி (Tamil Heroic Poetry. p.4), ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் அழிதலும் உலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு.

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம்.70)

சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர். "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" (புறம்.31) பொதுவாகப் போர் என்பது இரு வேந்தர்களுக்கிடையே நடைபெறும் செயலாகும். மற்போர், வாட்போர் என இரு தனிமனிதர்களுக்கிடையே நடைபெறுவதை அது குறிப்பதில்லை.

போர் வகை:

வெட்சிப்போர், வஞ்சிப்போர், உழிஞைப்போர், தும்பைப்போர் என்று நான்கு வகையாகப் போர் மரபுகளைப் பகுத்தார் தொல்காப்பியர். போரில் படைமறவர்கள் அழிவர்; யானை, குதிரை, தேர் விளைநிலம், அரண் ஆகியவற்றோடு மக்களும் அழிவர்; வேந்தர்களும் மடிவர். சேரமான் நெடுஞ்சேரலாதனும், சோழன் பெருவிறற்கிள்ளியும் போரிட்டு மடிந்ததைப் புறநானூறு கூறுகின்றது.

"எடுத்தேறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே" (புறம்.62)

புதல்வன் கடமை:

போரிடுதலே புதல்வன் கடமை என்பதை,

"ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறம்.312)

"தோன்றுவன் மாதோ போர்களத் தானே" (புறம்.86)

எனவும் வரும் பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன.

மறக்குடி மகளிர்:

தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,

"ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென" (புறம்.279)

விடுத்தாள் எனப் பாடினார் ஒக்கூர் மாசாத்தியார். தன் மகன் புறப்புண்பட்டு மாய்ந்தான் எனக் கேட்ட ஒரு தாய்,

"மண்டு அமர்க்கு உடைந்தனனாயின் உண்டஎன்
முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇ" (புறம்.278)

என்று சூளுரைத்தாள்.

விழுமங்கள்:

மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை,

"வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல்.1003)

எனவும்,

"ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின் (புறம்.9)

எனவும் வரும் சான்றுகள் உணர்த்தும்.

போரின் விளைவுகள்:

போரில் மடிந்துபோன சேரமானுடைய நாட்டில் தோன்றிய அவலத்தைக் கழாத்தலையார் சுட்டியுள்ளார். "முழவு மண் (மெழுகு) இடுதலை மறந்தது. பெரிய பானை கவிழ்ந்து வெண்ணையை மறந்தது. சுற்றம் தேறல் மறந்தது; உழவர் ஓசையை மறந்தனர்; சிற்றூர், விழாவை மறந்தது (புறம்.65) என்கின்றார். எழினி என்ற அரசன் தகடூரில் நிகழ்ந்த போரில் மாண்டபோது அரிசில்கிழார். "தாயை இழந்த குழந்தையைப் போல அவனுடைய சுற்றம் வருந்தியது; உலகம் இடும்பைகூர் நெஞ்சமொடு வருந்தியது" (புறம்230) என்று பாடினார். வீரர்கள் மாண்டால் அவ்வீரர்தம் மனைவிமார்கள் தங்கள் கூந்தலைக் களைந்துவிட்டுக் கைம்மைக்கோலம் பூணுவர். மகளிர் களைந்த தலைமுடியைக் கயிறாகத் திரிந்து, பழையன் மாறனின் காவல் மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி வண்டியில் ஏற்றி யானைகளைப் பூட்டி ஒட்டிவந்தான். வேட்டுவன் எனப் பரணர் பாடியுள்ளார். (பதிற்.44).

கரிகாலன், பகைவர் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தினான் (புறம்.7) வளமிக்க வயல்களை அழித்தான் என உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார் (பட்டினப்.240-245) கழுதை ஏர் பூட்டி விளைந்த நெல் வயல்களை அழித்து, கொள்ளும் கவடியும் விதைத்துவிட்டுச் செங்குட்டுவன் திரும்பினான் என்ற செய்தியையும் தெரிகின்றோம் (சிலம்பு, நீர்ப்படை, 226-230) முதுகுடுமிப் பெருவழுதி பகைவருடைய தேர்வழங்கு தெருக்களைக் கழுதை ஏர்பூட்டி உழுதான். புள்ளினங்கள் மேயும்படியான விளைந்த வயல்களைத் தேர்களை விட்டு அழித்தான். நீர்நிலைகளை யானைப் படையினை விடுத்துக் கலக்கிச் சேறாக்கினான் (புறம்.15). இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பகைவர்களுடைய நெல்விளை கழனிகளைக் கொள்ளையடித்தான். பனை மரத்தை விறகுக்காக வெட்டினான். மாந்தர் நீராடவும் உயிரினங்கள் பருகவும் உதவுகின்ற பொய்கைகளில் யானைகளைப் படியவைத்துச் சேறாக்கினான்; ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினான் (புறம்.16). இச்செய்திகள் போரினால் ஏற்படும் பொருளாதாரச் சீரழிவுகளையும் இன்னபிற கொடுமைகளையும் உணர்த்துகின்றன. இத்தகைய கொடிய தீமைகளை உளங்கொண்ட சான்றோர் அமைதி ஏற்படுத்த முயன்றனர்.

அமைதி முயற்சி:

அதிகாரவர்க்கத்தினர் முனைப்பு, போருக்குக் காரணமாக இருந்தாலும் சான்றோரும் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் தொழிலாளர்களும் அமைதியை நாடிச்செல்லும் இயல்பினர். சான்றோர் போரைத் தவிர்க்கப் பல்லாற்றாலும் முயன்றார். கோப்பெருஞ்சோழன் தம் மக்களோடு போரிட முயன்றபொழுது எயிற்றியனார் அவனை அமைதிப்படுத்தினார் என அறிய முடிகின்றது (புறம்.213). பாரி வள்ளலுக்கும் மூவேந்தருக்கும் நிகழ்ந்த போரில் அமைதி ஏற்படுத்த முயன்ற கபிலர் தோற்றார் (புறம்.110). அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்று அமைதியை ஏற்படுத்தி வென்றார் ஒளவையார் (புறம்.95).

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று. அதனைக் கண்ட புலவர் கோவூர்கிழார் இருவருக்கும் அறிவுரை வழங்கினார். உங்கள் இருவருடைய மாலையும் ஆத்திமாலையாகும்; நம்முள் ஒருவர் தோற்பினும் சோழர் தோல்வி எய்தினர் என்றே குடிப்பெயரால் பழிவரும்; இருவரும் வெற்றியடைதல் இயற்கையுமன்று; ஆதலால் உங்கள் மாறுபாட்டினை விடுதல் உமக்கு நல்லது என்றார் (புறம்.45), மன்னர்கள் பகை மறந்தனர்; சோழநாடு அமைதிப்பூங்காவாயிற்று. சோழர்களுக்குள் உட்பகை ஒழிந்து அவர்கள் சிறப்புற்றனர். அதனால் சேர, பாண்டியரின் குடைகள் சோழர் குடையினும் தாழப்பறந்தன எனக் குறிப்பிடுகின்றார் கோவூர்கிழார்:

"சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய ஒருகுடை
உருகெழு மரபின் நிவந்தசேண் விளங்க" (புறம்.30)

மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி, காண்டற்கரிய காட்சியாக இருந்தது என்றார் காரிக்கண்ணனார்.

"நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதல் நெஞ்சில் நும்இடைபுகல் கலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி" (புறம்.58)

உக்கிரபெருவழுதி, மாரிவெண்கோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்ட ஒளவையார்,

"ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்டக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்" (புறம்.367) என்று பாராட்டினார்.

சிலப்பதிகாரத்தில் அமைதியை வேண்டிச் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுரை கூறினான் மாடலமறையவன். தோல்வியுற்ற ஆரிய அரசர்களைப் பிடித்து அவர்களுடைய தலையில் கல்லை ஏற்றி வருதல் பெருமைக்கூரிய செயலன்று என்று சோழனும் பாண்டியனும் சொல்லக் கேட்டதாக நீலன் கூறினான். அதைக் கேட்டுச் சினங்கொண்ட செங்குட்டுவன் அவர்கள் மீது போர் தொடுக்க நினைத்தான். அப்பொழுது மாடலன் எழுந்து "மறக்கள வேள்வி வேண்டாம்; அறக்கள வேள்வி செய்வாயாக" (சிலம்பு. நடுக்கல்.132-133) என்று சொல் அமைதிப்படுத்தினான்.

முடிவுகள்:

தொல்காப்பியப் புறத்திணையியல், தமிழர் போரியல் (Warfare) பற்றியதாகும். வீரயுகப் பாடல்கள் வெறும் வெற்றிகளை மட்டும் பாடாமல், போரினால் ஏற்பட்ட அழிவுகளையும், அவலங்களையும் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் போரினால் வரும் தீமைகளும் உணரப்பட்டன.

போரைத் தவிர்க்கவேண்டி அமைதி முயற்சியில் ஈடுபட்ட ஒளவையார், கபிலர், எயிற்றியனார், கோவூர்கிழார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்தமிழ்ச் சான்றோர்கள் வேந்தர்கள் புறப்பகையும் உட்பகையும் இன்றி அமைதியாக நட்புறவுடன் வாழ வழிகூறினர்; முயன்றனர். இக்காலத்தில் வேண்டப்படும் உலக அமைதிக்கு அச்சான்றோர்கள் வித்திட்டுச் சென்றுள்ளனர் என்பது செம்மையான கருதுகோளாகும்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link