ஆய்வுச் சிந்தனைகள்


'தாசில்தார் நாடகம்'-சமூகச் சிந்தனைகள்

காவி விசுவநாத முதலியார் அவர்கள் தமிழில் முதன் முதலில் சமூகச் சிந்தனையுள்ள நாடகங்களை இயற்றி அரங்கேற்றிய நாடக ஆசிரியர் ஆவார். இன்றைய சென்னை சைதாப்பேட்டை அன்று சைதாபுரம் என்று வழங்கப்பெற்றது. சைதாபுரம் காசி விசுவநாத முதலியார் 1806-ல் பிறந்தவர். 1891 இல் இறந்தார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வடமொழி பயின்றவர். நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராகத் தம் பணியைத் தொடங்கிய அவர் 1886-ல் மாவட்ட முன்சீபாக ஓய்வு பெற்றார்.

தமிழில் இதிகாசப் புராணக் கதைகளையும் மத சம்பந்தமான விஷயங்களையும் தழுவாது, பொது ஜன விஷயத்தைத் தழுவிய நாடகங்களுள் முற்பட்டது டம்பாச்சாரி விலாசம் என்னும் நாடகமே என்பார் பம்மல் க. சம்பந்த முதலியார் அவர்கள். இக்கருத்தைப் பல்வேறு தடைவிடைகளால் தெளிவுபடுத்துகிறார் சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கிருஷ்ணசாமி அவர்கள்.

காசி விசுவநாத முதலியார் எழுதிய முதல் சமூக நாடகம் "டம்பாச்சாரி விலாசம்" என்பது அவர் காலத்து இளைஞர் சிலர் விலைமகள் வயப்பட்டுப் பொன்னையும் பொருளையும் இழந்ததோடு தன்னைச் சார்ந்த மனைவி மக்களையும் அவல நிலைக்குக்கொண்டு வந்து நிறுத்தினர். இந்தச் சமூக அவல நிலையை எண்ணி அப்படிப்பட்ட தீயொழுக்கம் உள்ள பிள்ளைகளைத் திருத்தும் நோக்கோடு படைக்கப்பட்ட சமூகச் சிந்தனையுள்ள நாடகம் இது. இரண்டாவதாக அவர் படைத்த நாடகம் "தாசில்தார் நாடகம்". தாசில்தார் போன்ற உயர் பதவியில் இருந்த உயர் சாதிக்காரர்கள் அக்காலத்தில் எளிய குடிமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை வாட்டிவதைத்ததையும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு சமுதாயத்தைக் கெடுத்ததையும் அழகுற எடுத்துக்காட்டியுள்ளார். அவர் மூன்றாவதாகப் படைத்த நாடகம் "பிரமம் சமாஜநாடகம்" இதில் கைம்பெண்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குழந்தை மணத்தால் நேர்ந்த அவலங்கள், மக்களிடம் மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கண்டித்து அவற்றை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்திருக்கின்றார்.

தாசில்தார் நாடகம் எழுதப் பெற்றமைக்கான காரணம் என்ன என்பதைக் காசி விசுவநாத முதலியார் அவர்களே கூறக் கேட்போம். சித்தூர் புரோவின்ஷியால் கோர்ட்டிலிருக்கும்போது பல தடவைகளில் சர்க்கியூட் ஜட்ஜிகளுடன் கடப்பை, பல்லாரி, செங்கற்பட்டு, கூடலூர் ஜில்லாக்களுக்குப் போய் வந்திருக்கிறேன். இந்தச் சமயங்களில் அங்கிருந்த ரிவின்யூ ஜீடிசையால் டிப்பார்ட்மெண்டுகளில் இருக்கின்ற உத்தியோகஸ்தர்களில் அநேகர் மிகவும் நம்பிக்கையும் நல்ல நடத்தையும் திறமும் உடையவர்களாய் இருக்கக் கண்டிருக்கிறேன். ஆகிலும் ஒரு எருமை மாடானாது தண்ணீர் குடிக்கப்போன குட்டையைக் கலக்கிச் சேறாக்கித் தன்னுடம்பெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு நடக்கிற வழியெல்லாஞ் சேறாக்கி வழியிற் போகிறவர் வருகிறவர் பேரிலும் சேற்றைப் பூசித் தன்னைக் கட்டுகிற கொட்டத்தில் கட்டுத்தறி புல் இதுகளையெல்லாம் சேறாக்கி கட்டடிப்புல் போட வந்த தன் எஜமானனுக்குங் கொஞ்சஞ் சேறு பூசி வைப்பது போலக் கிடைத்த உத்தியோகத்தில் பண ஆசையினால் லஞ்சம் வாங்க ஆரம்பித்து தங்களுடைய பேர்களையும் துரைத்தனத்தார் பேர்களையும் கெடுப்பதும் அல்லாமல் அக்கிரமங்களுக்கு உட்பட்டு அனேக ஜனங்கள் அநியாயமும் துன்பமும் நஷ்டமும் அடையும்படி செய்து வருகையால் அவைகளைப் பல விவகாரங்களிலும் அறிந்து அனுபவமுடைய அநேகராலும் நொந்தவர்களும் சொல்லக் கேட்டும் உணர்ந்தவனாய் இருக்கிறேன். அவர்களுடைய அதிகாரத்துக்குட்பட்ட உத்தியோகஸ்தர் தாசில்தார் கிராம மணியக்காரர் கணக்கர் இவர்களில் கெட்ட நடத்தை உள்ளவர்களுடைய செய்கைகளும் அறிந்து கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றியபடியால் இவ்விதமான பேர்களால் செய்துவரப்படும் மாறுபாடான நடக்கைகளை விவரமாகவும் காட்சி அளவாகவும் அறியும்படி இந்நாடகஞ் செய்யத்துணிந்தேன் என்பார்.

இந்த முன்னுரை 1857-ல் எழுதப்பெற்றுள்ளது. இது முதல் பதிப்பின் முன்னுரை. பின் இதே நூல் இரண்டாம் பதிப்பாக 1868 இல் வெளிவந்துள்ளது. அதன் முன்னுரையில் இவரே பின் வருமாறு எழுதுகிறார். "இந்நாடகம் பிரசரமான காலமாகிய 1858- ஆம் வருஷத்துக்குப் பின்பு ரிவின்யு டிபார்ட்டுமென்டிலும், ஜீடிசியல் டிபார்ட்டுமென்டிலும், எஜியுகேஷன் டிபார்ட்டுமென்டிலும், போலீசு டிபார்ட்டுமென்டிலும் அனேக சீர்திருத்தங்களும் விருத்திகளும் ஆகிவந்திருப்பதாலும் தாசில்தார் முதலாகிய பெரிய உத்தரவாதமான உத்தியோகங்களுக்குக் கல்வித் திறமும் விவேகமுடையோரைத் தெரிந்தெடுத்து நியமகஞ் செய்யப்பட்டு வருகிறபடியாலும் லஞ்சமும் பட்சபாதமும் நீங்கி நீதியடையலாம் என்கிற கோரிக்கையும் சந்தோஷமும் அடைந்து வருகிறார்கள்".

இந்த இரு முன்னுரைகளுக்கும் இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள். அவர் தனது தாசில்தார் நாடக நூல்வழி முதல் பதிப்பின்போது சுட்டிக்காட்டிய குறைபாடுகள் அதிகாரிகளால் திருத்திக்கொள்ளப்பட்டன என்பது புலனாகிறது. ஒரு படைப்பாளி சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையை அவர் செவ்வனே செய்து முடித்தார் என்பது விளங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டுக் காலச் சூழலில் இந்த அளவிற்கு அழுத்தமாகக் கருத்துகளைச் சொல்லிச் சமுதாயத்தைத் திருத்த முயன்ற காசி விசுவநாத முதலியார் பாராட்டுக்குரியவர். இந்தச் சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அன்றைய ஆங்கில அரசும் தன்னால் இயன்ற உதவிகளைச் சட்டத்தின் மூலம் நிலை நிறுத்தியிருக்கிறது. அவர் அடிக்குறிப்பாகச் சேர்த்துள்ள அரசாணைகள் மூலம் இக்கருத்து விளங்குகின்றது.

சமூகப்பொறுப்புள்ள ஆங்கில அரசு:

ஆங்கில அரசாங்கமாக இருந்தாலும் உள்நாட்டு மக்களின் மனநிலை அறிந்தவர்களாகவும் வாழ்க்கை முறைகளைத் தெரிந்தவர்களாகவும் அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர். உயர்பதவியில் இருப்பவர்கள்தான் மக்களின் குறைகளை அறியவும் அறிந்தபின் குறைகளைக் களைய வேண்டுவன செய்ய வேண்டும் என்று ஆணையிட்டனர் என்பதைக் கீழ்க்கண்ட அரசாணை மூலம் அறிந்துகொள்ளலாம். 1854 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அரசு கெஜட்டில் வந்த ஒரு அறிவிப்பு வருமாறு; "அஸிஸ்டாண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு நியமனமாயிருக்கிற பாலிய துரைகள் மாஜிஸ்திரேட்டு ரிவினியூ விசாரனைக்கு வேண்டிய சட்ட திட்டங்களைக் கவனிக்க வேண்டியதுமல்லாமல் ஆபீசு ரிக்கார்டில் சாதாரணமாய்க் கையோட்டமாய் எழுதியிருக்கப்பட்ட கடிதாசுகளை வாசிக்கவும் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் கச்சேரிக்கணக்குகள் தாலுக்குக் கணக்குகள் கிராமக்கணக்குகள் இதுவரையில் நடந்தேறி வந்த ரிவினியூ சரித்திரங்கள் அறிய வேண்டுமென்று கண்டிருக்கிறது". என்ற பகுதியால் அக்காலத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் உயர் அதிகாரிகள் அந்தந்த வட்டார மொழி நடைமுறை வாழ்க்கை முதலியன பற்றி அறிய வேண்டியது கடமை என விதிக்கப்பட்டது தெரிகிறது. இப்படிப்பட்ட உயர் பதவிகளுக்குச் சமூகச் சிந்தனையும் பொறுப்பும் உள்ளவர்களையே அக்காலத்து ஆங்கில அரசு நியமனம் செய்தது என்பது தெரிகிறது. 1856 ஜீலை 4 ஆம் நாள் வெளியிட்ட ஆங்கில அரசின் ஆணை இவ்வாறு கூறுகிறது. கல்வியும் நன்னடத்தையும் உள்ளோரைப் பார்த்துத் தாசீல் உத்தியோகத்துக்கு நியமித்து அலுவல்களை நிதானமாக யோசித்து நடத்தும்படிச் செய்யக் கட்டளை இடப்பட்டது".

சமூக நீதி ஆங்கில அரசு:

ஆங்கில அரசு அக்காலத்திலேயே சமூக நீதி காத்து வந்தது என்பதையும் காசி விசுவநாத முதலியார் குறித்துள்ள அடிக்குறிப்பு ஆணைகள் வழி அறியலாம். 1855 மார்ச் மாதம் 5 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஒரு ஆணை அதற்குச் சான்று பகரும் கலெக்டர் கச்சேரியில் இரண்டு சிரஸ்தாரர்களும் தேசஸ்த பிராமணர்களாக இருக்கக் கூடாது. பிராமணாளைப் போலவே மற்ற ஜாதியஸ்தர்களும் தாசில்தாரர்களாக நியமிக்கப்பட வேண்டும். இந்துக்களையும் முகமதியர்களையும் வேறுபடுத்தக் கூடாது என்றும் ஒரு சட்டம் கூறுகிறது. "பிராமணன் முசல்மான் என்கிற முகாந்திரத்தினால் நிலத்ததை தரம் கம்மி செய்ய வொண்ணாது" என்கிறது 1854 ஆகஸ்ட் மாதம் 31 இல் போடப்பட்ட ஒரு அரசாணை.

உழவுக்கு முதலிடம்:

அரசு அதிகாரிகள் உழவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று பல ஆணைகள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கின்றனர் ஆங்கில ஆட்சியாளர்கள் உழவர்களிடம் பணம் வசூலிக்கக் கிட்டிக்கோல் முதலானது போட்டுத் துன்பப்படுத்தக் கூடாது என்றும் (1841 ஜீன் 17 ஆம் நாள் சட்டம்) யாராவது ஒருவர் தம்மைச் சித்திரவதை செய்ததாகப் புகார் கொடுத்தால் அதன் நகலை உடனே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் (1856 ஜீன் 20 ஆம் நாள்) செய்யாத குற்றத்தை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சி சித்திரவதைக்கு ஒப்பாகக் கருதப்படும் (1856 செப்டம்பர் 23 ஆம் நாள் ஆணை) என்றும் பல ஆணைகள் மக்கள் நலம் கருதிப் போடப்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறார் காசி விசுவநாக முதலியார்.

அன்றைய காவல்துறை:

காவல் துறை திறமையற்றிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிள்ளது. இதனைக் கண்ணுற்ற அரசு பல வழக்குகளில் அரசின் வழக்குகள் தோற்றுப் போவதைக் கண்டு கீழ்க்கண்ட ஆணை பிறப்பித்தது. "அனேக போலீசு ஆபீசரில் போலீசு கேசு விசாரணை குறைவாயிருப்பதால் மேலான கோர்ட்டுகளில் தள்ளுபடியாகிறது. அவர்களுடைய நடத்தையில் (போலீசு நடத்தையில்) திருஷ்டி வைத்துப் பார்த்து வரவேண்டும் (1850 மார்ச் 18) என்பது அரசாணை காவல் துறையைச் சார்ந்தவர்களையே கண்காணித்து வரவேண்டிய அளவு அத்துறையில் ஊழலும் திறமையின்மையும் மலிந்திருந்தன போலும்.

தாள்மொழிக்கு முன்னுரிமை:

அரசு அலுவல்கள் அனைத்தும் அந்தந்தத் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்திருந்த அளவுக்கு நாம் இன்னும் உணரவில்லை என்பது கீழ்க்கண்ட ஆணை மூலம் விளங்கும். 1854 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் போடப்பட்ட ஆணை இது; ஜில்லாக்களில் சர்க்கார் கணக்குகளில் மராட்ட பாஷையை உபயோகப்படுத்தாமல் எடுத்துப்போட்டு தேசபாஷை வழங்க வேண்டும்".

ஊக்கப்பரிசும் பாராட்டும்:

மக்களின் திறமையை வெளிக்கொணர அக்காலத்து ஆங்கில அரசு முயற்சி செய்த செய்தியும் நமக்கு ஒரு ஆணை மூலம் தெரியவருகின்றது. பரிசு வழங்கும் திட்டம் மூலம் மக்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது. 1855 மார்ச் 5 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆணை "ஆடு மாடு முதலிய கால்நடைகள் தானியங்கள் குடித்த ஏனங்கள் துணிவகைகள் நீலம் பருத்தி கரும்பு முதலிய தினுசுகள் உண்டாக்கிக் குடித்த சங்கத்தார்" முன்பாகக் கொண்டு வந்து காண்பித்தால் சிரேஷ்டமானவைகளுக்கு நல்ல இனாம் கொடுக்கப்படும்".

காசி விசுவநாக முதலியார் இயல்பாகவே சமூக சீர்திருத்த எணணம் கொண்டவர். எனவேதான் இது போன்ற மக்கள் நல ஆணைகளைத் தம் நாடகத்தில் எடுத்துக்காட்டி மக்கள் நல்வாழ்வு வாழவும் தெளிவு பெறவும் உதவி செய்தார் என்று தெரிகிறது. நாடக ஆசிரியர் ஒருவர் மூடத்தனத்தில் மூழ்கிப்போன 19 ஆம் நூற்றாண்டுச் சமுதாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து சமுதாயச் சிற்பிகளுள் ஒருவராக இருந்தார் என்பது நாடக இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும் அறிஞர் உலகம் அவரது படைப்புகளை மேலும் ஆய்வு செய்து பல உண்மைகளை உலகறியச் செய்தல் வேண்டும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link