ஆய்வுச் சிந்தனைகள்


சங்க இலக்கியத்தில் உணவு வகைகள்

உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவு ஆகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அவற்றின் செயல்பாடுகள் உணவு தேடுவதையே அடிப்படையாக கொண்டுள்ளன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களை சமைப்பதில் தேர்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகளும் உணவு முறைகளும் வேறுபட்டு இருந்தன. அவரவரின் பொருளாதார நிலையை ஒட்டியும் உணவின் தரம் வேறுபட்டிருந்தது. சங்கத் தமிழர் மரக்கறி உணவைக் காட்டிலும் புலால் உணவையும் விரும்பியுண்டனர் என்பதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. சங்கத்தமிழர் பலவகையான மதுவகைகளையும் பருகுநீர் வகைகளையும் விரும்பிப் பருகும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்கள் உணவின் தேவையை எடுத்து விளக்குவதோடு அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வது இன்றியமையாத செயல் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்துகின்றன. உண்ணும் உணவினைப் பல்வேறு பகுதிகளாக பிரித்துக் சுவைபடச் சமைத்து உண்பதில் அறிவையும் உணர்வையும் தமிழர்கள் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளனர்.

சங்க இலக்கிய உணவு வகைகள்:

இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய உணவு வகைகள் வருமாறு. 1. மரக்கறி உணவு 2. கனி உணவு 3. இறைச்சி உணவு 4. அரிசி உணவு 5. பிற உணவு 6. பருகுநீர் 7. மது.

மரக்கறி உணவு:

சங்ககால தமிழர்கள் காய், கிழங்கு, கீரை, பருப்பு போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய உணவுப்பொருள்களை உண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. பண்டைத் தமிழர்கள் நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து உண்டுள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. பொதுவாக மரக்கறி உணவோடு இறைச்சி உணவைச் சேர்த்து உண்ணும் வழக்கம் இல்லை. ஆனால் மருத நிலத்து மக்கள் பீர்க்கங்காயோடு நண்டுக்கறியையும் இணைத்து உண்ட செய்தி புதுமையானதாகும். இப்புதிய உணவுப் பழக்கம் பற்றி சிறுபாணாற்றுப்படையின் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது.

கவைத்தா ளலவன் கலவையொரு பெறுகுவீர் (சிறுபாண 195)

இதற்கு கவைத்த காலினையுடைய நண்டும், பீர்க்கங்காயும் கலந்த கலப்புடனே பெறுகுவீர் என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன் மூலம் பண்டைத் தமிழர் நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயையும் சேர்த்து உண்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பீர்க்கங்காயையும் நண்டையும் கலந்து செய்யும் சமையற் குறிப்பினை நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவே அறிய முடிகின்றது. மேலும் மாதுளங்காய், மாங்காய், வெள்ளரிக்காய் போன்ற பல காய்களையும் உண்டுள்ள செய்தி சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

கனி உணவு:-

சங்க இலக்கியங்களில் ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களைச் சங்ககால மக்கள் பெரிதும் விரும்பியுண்டனர் என்ற செய்தியை அறியமுடிகிறது. பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.

"கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்
டெயினர்...................................." (புறம் 177 11-3)

உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை

"சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாத னின்னகத் தடக்கிக்
சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.

இறைச்சி உணவு:

சங்ககால மக்கள் புலால் உணவை விரும்பியுண்டனர். போரும் வீரமும் பேணுவதற்கு இப்புலால் உணவு ஊக்கமளிக்கும் உணவு ஆகும். போரெனின் உவக்கும் சங்ககால இயல்புக்குப் புலால் உணவே பொருத்தமான உணவாயிற்று.

மான் இறைச்சி:

கோப்பெருநற்கிள்ளி தீக்கடைக்கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சியைக் சுட்டுப் பதப்படுத்தி வழி தப்பிச் சென்ற மறவர்கள் வந்து கூடுவதற்கு முன் உண்க எனப் புலவர்களுக்குக் கொடுத்தான் என்றும், அதனை உண்டு புலவர்கள் பசி தீர்ந்தனர் என்றும் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

இழுதினன்ன வானினக் கொழுங்குறை
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி" (புறம் 150)

அம் மன்னன் தான் வேட்டையாடிய மான் தசையைப் புழுக்கி அதனை நெய்போன்ற மதுவுடன் புலவர்களுக்குக் கொடுத்தான். இச் செய்தியை

"தானுயிர் செகுந்த மானினப் புழுக்கோ
டானுவருக் கன்ன வேரியை நல்கி" (புறம் 152)

என்ற புறப்பாடல் வழி அறியலாம். மேலும் மானிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி, உடும்பு, இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, போன்ற பல்வேறு இறைச்சிகளையும் உண்டதாகச் சங்க இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.

அரிசி உணவு:

சங்க காலத் தமிழர் சுவையும் பயனும் கெடாவண்ணம் இருக்கக் கைக்குற்றல் அரிசியையே பயன்படுத்தியுள்ளனர். இது தொடிமாண் உலக்கைப் பருஊக் குற்றரிசி (புறம் 399 2) என்று அழைக்கப்பட்டது. கொழுத்த ஊன் துண்டங்களைத் தீயிலிட்டுச் சுட்டு அவற்றுடன் தினைச் சோற்றைச் சொரிந்து பாணர்கள் உண்டனர்.

"செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை
மென் நினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொரு
................... பருக்கும் .................... " (அகம் 237.9.13)

பிறஉணவு:

பலவகையான சுவையையுடைய பொருட்களைச் சேர்த்து பலவகைத் திண்பண்டங்களைச் சங்ககால மக்கள் உண்டுள்ளனர். அவை அப்பம், பண்ணியம், மோதகம், துவையல், மீன்குழம்பு, தயிர்க்குழம்பு போன்றவையாகும். நெல்மாவில் இனிப்புச் சுவையான பொருட்களைச் சேர்த்து ஆக்கப்படும் ஒரு வகை சிற்றுண்டி பண்ணியம் எனப்படும். ஊனையும் சோற்றையும் உண்டு வெறுத்த மக்கள் அவ்வெறுப்பை மாற்றுவதற்கு வெல்லப்பாகையும் பாலையும் அளவாகக் கலந்து செய்யப்பட்ட பண்ணியங்களைத் தின்றனர் என்பதை.

"உனு மூணு முனையி னினிதெனப்
பாலிற்பெயதவும் பாகிற் கொண்டனவும்"

என்ற புறப்பாடல் தெரிவிக்கிறது.

பருகுநீர்:

இளநீர், கரும்புச்சாறு, அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர் போன்றவற்றை சங்க கால மக்கள் பருகியுள்ளனர்.

அருவிநீர்:

பலவகையான உணவுகளை உண்டபின்னர், மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்து வரும் குளிர்ச்சியான அருவிநீரை குறிஞ்சி நில மக்கள் அருந்தினர்.

"அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
நன்மர னளிய நறுந்தண் சாரற்
கன்மிசை யருவி தண்ணெனப் பருகி" (புறம் 150 14-16)

கரும்புச்சாறு:

இனிமையான சுவை நீர்களில் கரும்பின் சாறும் அடங்கும். அதியமான் நெடுமான் அஞ்சி (கரும்பை விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்குக் கொணர்ந்து கொடுத்தான் என்பது ஒரு தொன்மச் செய்தியாகும் இதனை,

"அறபெரன் மரபிற் கரும்பி வட்டந்தும்" (புறம் 99 2)

ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டு ஆட்டினர் என்ற செய்தியை கரும்பி னெந்திரங் கட்டினோதே என்று மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.

மது:

வீரநிலைக் காலத்தில் மதுவும் கள்ளும் உண்ணல் சமுதாயத் தகுதியாகத் கருதப்பட்டன. மதுவும் கள்ளும் ஆற்றல் பானங்களாகப் போற்றப்பட்டன. ஒளவையார் தம்மைப் போற்றிச் சிறப்பு செய்த அதியமான நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் தமக்குச் செய்த சிறப்புகளுள் இக்கள்ளினைத் தமக்குக் கொடுத்துக் தானும் உண்ட செயலைப் பாராட்டிக் கையறுநிலையாகப் பாடியுள்ளார்.

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே - (புறம் 23 1-3)

மேலும் சங்ககால மக்கள் மயக்கமும் உற்சாகமும் கொடுக்கக்கூடிய பானங்கள் பலவற்றை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன. அவைகள் நறவு, மது மட்டு, தேறல் போன்றவையாகும்.

முடிவுரை:-

பண்டைத்தமிழர்களால் பலவகை உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவர்களால் தயார் செய்யப்பட்ட அனைத்து உணவு வகைகளும் அவர்களால் விரும்பி உண்ணப்பட்டன. தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகளுள் குறிப்பிடத்தக்கவை.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link