ஆய்வுச் சிந்தனைகள்


பண்முகப் படைப்பாளி குயிலன்

தமிழ் ஆய்வுலகில் முன்னைய படைப்புகள் அனைத்தும் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் மறைக்கப்பட்டோ அல்லது அலட்சியப்படுத்தப்பட்டோ வருகின்ற படைப்பாளிகளை ஆவணப்படுத்தலும் நிகழந்து வருகின்றது. இதன் வழித்தடத்தில் வைகைக்கரைக் கவிஞர் குயிலனின் எழுத்தும், பணியும் முன்னிலைப்படுத்தப்பட்டு, பொதுப்பார்வை என்ற நோக்கில் ஆவணப்படுத்தப்படுகிறது.

தொடக்க கால வாழ்வு:

கு. இராமலிங்கன் என்ற இயற்பெயர் கொண்ட குயிலன் முகவை மாவட்ட பூசேரி கிராமத்தில் பிறந்தார். பிறந்த ஆண்டு கி.பி.1922, செப்டம்பர் 14. தந்தை திரு. குருமூர்த்தி பிள்ளை, தாய் திருமதி. வெயில் உவந்தாள் அம்மாள். கு.ரா. ராலின், மாயாக்கார்க்கி, ரவிப்பிரியகுமார், சீதாலெட்சுமி, சங்கரன் ஆகிய புனை பெயர்களோடு ஐந்து மொழி அறிவுடன் (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஓரளவு வடமொழி) படைப்பாக்கங்களைப் தந்திருக்கும் குயிலன் ஆறாம் வகுப்பின் (ஃபர்ஸ்ட் ஃபார்ம்) தொடக்கத்திலே பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார்.

படைப்பாளியின் படைப்புலகம்:

குயிலனுடைய படைப்புக்களின் மொத்த எண்ணிக்கை நூற்றுப்பதினாறு நூல்களாகும். எண்ணிக்கையில் பிரமிக்கவைக்கும் இவரது படைப்புகளை இரண்டாகப் பகுக்கலாம். 1. தமிழ் ஆக்கங்கள் 2. மொழி பெயர்ப்பு ஆக்கங்கள்.

ஏழு கவிதைநூல்களும், நாவல்களும், குறுநாவல்களுமாக ஒன்பது நூல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு நாடகங்கள், ஐம்பத்தாறு உரைநடை நூல்கள் எனத் தமிழ்துறைச் சார்ந்த பன்முகப்பட்ட ஆக்கங்கள் குயிலனால் படைக்கப்பட்டுள்ளன. திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் இருந்த படைப்புகளைத் தமிழுக்குக் குயிலன் மொழிமாற்றம் செய்துள்ளார். மேலும் தமிழும் மலையாளமும், தமிழும், கன்னடமும் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் இருந்து எமிலி ஜோலாவின் "தெரஸா" (Theresa) பியன் எஸபக்கின் "தி பாண்ட் மெய்டு" (The bond maid), யுனஸ்கோ இதழுக்காக "மக்கள் பெருக்கமும், இயற்கை வளமும்" (The Growded Planet), "அணுவின் சத்தியும் பயனும்" (Atomic energy), ஆகிய படைப்புகளையும் மொழிமாற்றம் செய்துள்ளார். வடமொழியில் எழுதப்பட்ட "விவேகசூடாமணி"யைத் தமிழில் கவிதையாக்கி உள்ளார். "ஆங்கில தென்னக மொழி அகராதியும்", மணிமேகலைப் பதிப்பகத்தாருக்குப் பல நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் தந்தை பெரியார் ஈ.வெ.ராவுக்கு காணிக்கையாக்கி "ஒலியும், வரியும், மொழியும்" என்ற நூலைச் சமீபத்தில் எழுதியுள்ளார்.

கவிஞர் குயிலன்:-

குயிலன் கி.பி. 1939 - இல் பர்மாவில் பணிபுரிந்து கொண்டே கவிஞராக எழுத்துப் பணியைத் தொடங்கினார். வ.ராவின் பாரததேவியில்தான் "காக்கை மனிதனைப் பார்த்துக் கேலி செய்யும்" அவரின் முதல் கவிதை வெளிவந்தது. தொடர்ந்து சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தவிகடன், கல்கி, சக்தி, தொழிலாளர் உலகம், தமிழ்முரசு, ஹிந்துஸ்தான் ஆகிய இதழ்களிலும், "திருமகள்" மாத இதழில் தொடர்ந்தும் எழுதினார்.

கி.பி.1947-இல் "நீதிபதிகளும் மனிதர்களே" என்ற உட்கருத்தோடு "செங்குமுதம்" என்ற குறுங்காப்பியமும் "குயிலனால்" இயற்றப்பட்டது. இரண்டாம் முறையாக இக்குறுங்காப்பியம் வெளிவந்தபோது தான் "குயிலன்" ஆனார். "குருவிக்கூடு" என்ற குழந்தை இலக்கியக் கவிதை நூலும், "நனவாக வேண்டிய கனவு", "வழிப்போக்கன்" ஆகிய கவிதை நூல்களும் எழுதியுள்ளார். ம.பொ.சியின் "தமிழ்முரசு" மாத இதழில் திரு.வி.க., மு.வரதராசனார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை ஆகிய தமிழறிஞர்கள் வரிசையில் தமிழ் இன உணர்வைத்தூண்டும் கவிதைகளைக் குயிலனும் எழுதியுள்ளார்.

குயிலனின் சில கவிதைகள் கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, செக் மொழிகளில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் "வழிப்போக்கன்" உட்பட்ட சில குயிலன் கவிதைகளை பிரேமா நந்தகுமார் (Poet மாத இதழ்) மொழி பெயர்த்துள்ளார்.

இதழாசிரியர் குயிலன்:-

இலக்கிய மாத இதழான "தென்றல்" கி.பி. 1948 - இல் கம்யூனிஸ்ட் கட்சிக்காக "முன்னணி" (முற்போக்கு அரசியல் இலக்கிய வார இதழ்), கி.பி. 1952 இல் "வாரம்" (முற்போக்கு கலை இலக்கிய அரசியல் வார இதழ்) போன்றவற்றில் குயிலன் இதழாசியராகப் பணியாற்றி உள்ளார். "கவிமலர்" என்ற மாத இதழோடு நூலக இயலுக்காகவே "நூலகம்" என்ற மாத இதழையும் நடத்தி வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பதிப்பாசிரியர் குயிலன்:-

குயிலன் கி.பி. 1946 - இல் "இலக்கிய மன்றம்" கி.பி. 1961 - இல் "குயிலன்" ஆகிய பதிப்பகங்களை நடத்தினார். பதிப்பக வெளியீடுகளாக ம.பொ.சி. (முதல் அரசியல் நூல்), தி. ஜானகிராமன், எம்.வி, வெங்கட்ராம் போன்ற பலரின் படைப்புகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டார்.

திரையுலகில் குயிலன்:-

திரைப்படத்துறையில் குயிலன் கி.பி. 1951 - இல் "உலகம்" என்ற திரைப்படத்திற்குப் பாடல் எழுதி பிரவேசித்தார். பதினேழு தமிழ்ப்படங்களில் மொத்தம் ஐம்பத்திரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் மொழி மாற்றுப் பாடங்களில் பாடல்களும், வசனமும் எழுதி பணி செய்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் துணைச் செயலாளராகவும், துணைத்தலைவராகவும், பதவி வகித்துள்ளார்.

அரசியலில் குயிலன்:-

தன் திருமணக் கோலத்தில் கதர்க்குல்லாயுடன் காங்கிரஸ்காரராக இருந்தவர் குயிலன். பின்னர் பொது உடமைவாதியாக மாறி தொடர்ந்து முழுமையாக கம்யூனிஸ்ட் கட்சிப்பணியில் ஈடுபட்டார்.

கல்வி அமைச்சராக இருந்த திரு.பக்தவச்சலத்தின் முன்னிலையில் வானொலிக் கவியரங்கில் காங்கிரசுக்கு எதிராக "நம்பிக்கை" பற்றி குயிலன் கவிபாடினார். பேரறிஞர் அண்ணா, தான் நடத்திய வந்த "திராவிட நாடு" இதழில் காங்கிரசுக்கு எதிராக குயிலன் பாடிய கவிதையை மேற்கோள் காட்டியதோடு "கோட்டைக்குள்ளேயே எதிர்த்தவர்" என்றும் கவிஞரைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

"மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்" என்று தேர்தல் எதிர்ப்புத் தலையங்கம் குயிலனால் எழுதப்பட்டது. எனவே காவல் துறையினர் கைது செய்ய முற்பட, கவிஞர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும், மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகவும் இருந்தார். கைது வழக்கில் குயிலனுக்காக வாதாடியவர் தொழிற்சங்கவாதியும், சென்னை மேயராகவும் இருந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆவார். தலைமறைவு வாழ்க்கையில் குயிலனோடு உடனிருந்தோர் கே. பாலதண்டாயுதம், எஸ். ராமகிருஷ்ணன், ஆர்.எச். நாதன், ஐ. மாயாண்டி பாரதி, தோழர் கல்யாணசுந்தரம் ஆகியோர்.

கவிஞரின் தலைமறைவு வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் தோழர் எஸ்.ஆர்.கே. தோழர் முகவை ராஜமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோரால் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கி.பி 1950 - இல் தொழிற்சங்கத்தலைவர் சர்க்கரைச் செட்டியார் தலைமையேற்ற சமாதான மாநாட்டில் கவிஞர் குயிலனும் கட்சியின் சார்பாகக் கலந்து கொண்டார்.

எழுத்துலகத் தொடர்புகளும் பாராட்டுகளும்:-

குயிலன் பல்வேறு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்ததோடு, புகழ்பெற்ற எழுத்தாளர்களிடம் நெருங்கிப்பழகியும். அவர்களால் பாராட்டும் பெற்று சிறப்புச் செய்யப்பட்டிருக்கிறார். நாமக்கல் கவிஞரின் உதவியால் சின்ன அண்ணாமலையின் தமிழ்ப்பண்ணையிலும், இதன் வெளியீடான "மாலதி" வார இதழ் ஆசிரியர் குழுவிலும், தமிழரசுக் கழகத்தவரின் "தமிழன் குரல்" மாத இதழிலும் பணியாற்றினார்.

"மாலதி" வார இதழில் பணிபுரிந்தபோது அதன் ஆசிரியராக திரு. குயிலனும், மூத்த உதவி ஆசிரியர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த திரு. பாலனும் (நீதிபதி. பாலசுப்பிரமணியம்) பிரபல நடிகர் திரு.வி.எஸ் இராகவனும் பணியாற்றி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிஞர் அண்ணா (திராவிட நாடு 5.12.48), சிலம்புச்செல்வர் ம.பொ.சி., ஆர்.வி. வெங்கட்ராமன் (3.5.1998), வா.செ.குழந்தைசாமி (17.7.2001), பிரேமா நந்தகுமார் (8.8.1995, 23.6.2001), திருப்பூர் கிருஷ்ணன் (தினமணி, 16.3.1997), இரவி தமிழ்வாணன் (23.1.97) ஆகியோர் கவிஞரை இதழ்களிலும் தனிக்கடிதங்கள் மூலமும் பாராட்டியுள்ளார். மேலும் தினத்தந்தியும் (மண்ணின் மணிகள், 7.6.94), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் (மானாமதுரை, 10.3.96) பாராட்டி சிறப்புச் செய்திருக்கின்றன. தமிழ் ஆய்வுலகில் போதிய கவனம் பெறாமலேயே கவிஞர் குயிலன் டிசம்பர் 8,2002 இல் மானாமதுரையில் காலமானார்.

முடிவுரை:

குயிலனின் பன்முகப்பட்ட படைப்புத்திறன் அவரின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை, நாடகம், மொழி பெயர்ப்பு மற்றும் பிறமொழி அறிவு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுவதை அறியமுடிகிறது. வார, மாத இதழ்களில் எழுதப்பட்ட படைப்புகளில் எள்ளல் சுவையுடன் கூடிய சமூகநோக்கு, தார்மீக ரீதியான சமூகக் கோபம், தமிழ் இன உணர்வு, தத்துவச் செறிவுடன் கூடிய கவித்துவம் என குயிலனின் பற்றிய இப்பதிவுகள் பொதுப்பார்வை என்ற நோக்கில் மட்டுமே ஆய்வாளரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆய்வியல் முறைகளைப் பின்பற்றி ஆழ்ந்த ஆய்வைக் கவிஞரின் ஆக்கங்களில் மேற்கொண்டால் முழுமையான படைப்பாளியை, படைப்பு நுட்பத்தை அறிந்து கொள்ள வழிவகை செய்யும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link