ஆய்வுச் சிந்தனைகள்


செந்நெல் - பாத்திரப்படைப்பு

தஞ்சை வட்டாரத்தில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சோலை. சுந்தரபெருமாள். 2000ம் ஆண்டில் "செந்நெல்" என்னும் புதினத்தை வெளியிட்டுள்ளார். இப்புதினம் தஞ்சை வட்டாரத்தில் உள்ள கீழவெண்மணி என்ற கிராமப் பகுதியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெற்ற வர்க்க முரண்பாட்டைக் கதைக்கருவாகக் கொண்டு அமைந்துள்ளது. இப்புதினத்தில் இடம் பெறுகின்ற வர்க்க முரண்பாடுடைய பாத்திரங்களின் பண்புகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாத்திரப்படைப்பு:

புதின இலக்கியத்தைப் பொறுத்த வரையில், கதை மாந்தர்களின் பண்பே இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. "ஒரு செயலை அல்லது ஒரு நிகழ்ச்சியைப் படைத்துக் காட்ட மனிதர்களைப் படைக்க வேண்டி உள்ளது. புனைகதையில் இச்செயற்கைப் பண்பே பாத்திரப் படைப்பு" என்பர். கதைப்பின்னலை விட புதினத்தில் பாத்திரப்படைப்பே முதன்மை பெற்று விளங்குகிறது. "ஆசிரியர் கவனிக்க வேண்டிய அம்சம் பாத்திரங்களின் படைப்புகளே. இரண்டாவது கதையின் இன்பப்போக்கு என்பர்.

மக்கள் புதினத்தின் கதையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பாத்திரங்களுக்குப் பெயர்கள் இடப்படுகின்றன. அதன் அடிப்படையில் "செந்நெல்" என்ற புதினத்தில் இடம் பெறும் பாத்திரப்படைப்பை,

1. முதன்மைப் பாத்திரங்கள்.
2. துணைமைப் பாத்திரங்கள்.
என்ற இரண்டு வகைகளாகப் பகுக்கலாம்.

முதன்மைப் பாத்திரங்கள்:

முதன்மைப் பாத்திரம் என்பது கதையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை தொடர்ந்து வருவது ஆகும். இப்பாத்திரங்கள் கதையின் மையக் கருத்தைப் படிப்படியாக வளர்த்துச் செல்கின்றன. இவ்வகைப் பாத்திரங்கள் ஒன்றிலிருந்து மூன்று வரை இடம் பெறும். பெரும்பாலும் ஒரே பாத்திரம் இடம் பெறுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. சோலை. சுந்தரபெருமாளின் "செந்நெல்" வர்க்கப் போராட்டத்தைச் சித்திரிப்பதால் பண்ணையார்களுக்குத் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடுவையும், விவசாயக் கூலி மக்களுக்குத் தலைவரான வடிவேலுவையும், ஆசிரியர் முதன்மைப் பாத்திரங்களாகப் படைத்துள்ளார். அப்பாத்திரங்கள் புதினத்திற்குச் சிறப்பூட்டுவனவாக அமைகின்றன.

கோபாலகிருஷ்ண நாயுடு:

இருஞ்சூரு பண்ணையாரான கோபாலகிருஷ்ண நாயுடு அங்குள்ள மிராசுதாரர்களுக்கும், பண்ணையார்களுக்கும் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் தலைவராக விளங்கினார். பெண்களிடம் அவர் தவறாகப் பழகுவதை ஆசிரியர், "பல தண்ணிக் குடிச்சவனும் பல பொண்டுவ ருசி கண்டவனும் ஒரு எடத்தில நிக்கமாட்டான்" (செந்நெல் ப.55) என்று பெரியான் என்பனுடைய கூற்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய பண்ணையில் பணியாற்றும் வேளாண் மக்கள் கூலி உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட்டம் நடத்தினர். அவர்களுக்குச் சிவப்புக் கொடிக்கட்சி ஆதரவாகச் செயல்பட்டது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ண நாயுடு வேளாண் மக்களையும் செங்கொடிகளையும் அவருடைய கூலிப்படையைக் கொண்டு வேரோடு அழித்தார். இதனால் ஆசிரியர் இவரைத் தீய பண்புகளை உடைய மிகக் கொடிய பாத்திரமாகப் படைத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

வடிவேலு:

சிலம்பாட்டத்தில் சிறந்தவனான வடிவேலு சிலம்பாட்டக் கலையைச் சாதி, சம வேறுபாடின்றி அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் வைத்துக் கற்றுக் கொடுத்தான். பின் மணலி கந்தசாமியுடன் சிவப்புக் கொடிக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கைகளைக் கற்றுக்கொண்டான். பண்ணையார்களின் அதிகாரத்தையும், சுரண்டலையும் வேளாண் மக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களையும் சிவப்புக் கொடிக்கட்சியில் சேர்த்துவிட்டான். பின்பு அவர்களுடன் ஒன்று சேர்ந்து பண்ணை ஆதிக்க நிலைக்கு எதிராகப் போராடினான். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காகப் பாடுபட்ட அவன் வயிற்றுப் பிழைப்புக்காக டீக்கடை ஒன்றை நடத்தி வந்தான். இதனை, "வித்தக் கத்துக் கொடுக்கன்னு ஆரம்பிச்சப் பள்ளிக்கூடம், கம்யூனிஸ்ட் கட்சி பாடத்தையும் படிச்சுக் கொடுத்து அந்த சனங்களுக்கு ஒரு வழி காட்டுற பள்ளிக்கூடமாகவும் வளர்த்துட்டு. வடிவேலு தன்னோட, சோத்துப் பாட்டுக்குன்னு டீக்கடையைக் கவனிச்சிக்கிட்டான். இதிலேயே பொழுது சரியாப் போயிடுது. இந்த கூத்துல கல்யாணம் காட்சியினா எதையும் முழுசா செஞ்சிக்க முடியாதுன்னு கல்யாணமே பண்ணிக்காம தன்னை ஒடுக்கிட்டான்" (செந்நெல், ப.46) என்ற பகுதியின் வழி அறிய முடிகின்றது. போராட்டம் நடத்தியதால் பண்ணைகளின் கோபத்திற்கு ஆளான வடிவேலு, அவர்களின் கொலைச் சூழ்ச்சியால் அகப்பட்ட பொழுது நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். எனினும் மனம் தளராமல் உடம்பில் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை அவன் போராடத் துணிந்தான். வடிவேலுவை மன உறுதியுடையவனாகவும், பண்ணையார்களின் ஆதிக்கத்தை இறுதி வரை எதிர்த்துப் போராடுபவனாகவும் ஆசிரியர் படைத்துள்ளமையை அறிய முடிகின்றது.

துணைமைப் பாத்திரங்கள்:

முதன்மைப் பாத்திரங்கள் முழுமை அடையவும், அவர்களது பண்பு நலன்களையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்துபவர்களாகவும் துணைமைப் பாத்திரங்கள் செயல்படுகின்றனர். மேலும் அவர்கள் கதை ஓட்டத்திற்கும் முழுமைக்கும் உதவி செய்கின்றவர்களாக அமைகின்றனர். எனலாம்.

ரெங்கபாஷ்ய நாயுடு:

வெண்மணி கிராமத்தில் சிறு பண்ணையாராக இருக்கும் இவர் அவருடைய பண்ணையில் விவசாயக் கூலிகளுக்கு வேலை கொடுக்காமல் மேல் இன வேளாண் மக்களுக்கே வேலை கொடுத்தார். விவசாயக் கூலிகளையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் சிவப்புக் கொடிக் கட்சியையும் அழிக்க எண்ணி, கோபால கிருஷ்ண நாயுடுவுடன் சேர்ந்தார். செல்வி என்ற பெண் மீது ஆசைப்பட்ட அவர், அவளைத் தன் காம இச்சைக்கு உட்படுத்த முயன்றார். அம்முயற்சி தோல்வியடைந்தது. கோபாலகிருஷ்ண நாயுடுவுடன் சேர்ந்த பிறகு, அவருக்காக வீரப்பன் என்பவனுடைய துணையோடு செல்வியைக் கடத்திய பொழுது வடிவேலும், கண்ணுச்சாமியும் அவளைக் காப்பாற்றினர். இதனால் கோபமடைந்த அவர் காவல்துறையைப் பய்ன்படுத்தி வடிவேலுவைக் கொல்லத் திட்டம் வகுத்தார். இறுதியில் அவர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் துணையுடன் சாதி வெறியாலும், அதிகார வெறியாலும் விவசாயக் கூலிகளை இரக்கமின்றி நெருப்பு வைத்து அழித்தார். இதன் வழி ரெங்க பாஷ்ய நாயுடுவை மிகக் கொடிய பண்புகளையுடைய பாத்திரமாக ஆசிரியர் படைத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

கண்ணுச்சாமி:

பெரியான் - ஆராயியின் இளைய மகனான கண்ணுச்சாமி, அவனுடைய தந்தைக்கு உதவியாக வேலு நாடார் என்பவனுடைய பண்ணையில் வேலை செய்தான். எந்த வேலையையும் விரைவாகச் செய்து முடிக்கும் அவன், பண்ணையில் அடிமைத் தொழில் செய்யும் மக்களின் அறியாமை நிலையையும், அடிமை நிலையையும் கண்டு வருந்தினான். அத்தகைய இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவேலுவுடன் சிவப்புக் கொடிக் கட்சியில் சேர்ந்து போராடியதால் பண்ணையார்களின் ஆளாயினான்.

செல்வியின் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த அவன் செல்வியைக் கடத்திய போது வடிவேலுடன் இணைந்து அவளைக் காப்பாற்றினான். பண்ணையார்களின் கொலைச் செயல்களுக்கு ஆளான வடிவேலுவை அவன் காப்பாற்றினான். இறுதியில் பண்ணையார்களின் செயல்களுக்கும், கொடுமைகளுக்கும் உறுதுணையாக இருந்த வீரப்பனைக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்றான். பண்ணையார்கள் மட்டுமின்றி, அவர்களுக்குக் கைக்கூலியாக இருந்துகொண்டு அடித்தள மக்களை அடிமைப்படுத்துபவர்களை அழிப்பவனாக ஆசிரியர் கண்ணுச்சாமியைப் படைத்துள்ளார் எனலாம்.

செந்நெல் என்னும் புதினம் வர்க்க முரண்பாட்டைச் சித்தரிப்பதால் மேல்மட்ட வர்க்கப் பிரதிநிதிகளாக கோபாலகிருஷ்ண நாயுடு, ரெங்கபாஷ்யநாயுடு போன்றோரையும், அடித்தட்டு மக்களின் உரிமைக்காகப் போராடும் பாத்திரங்களாக வடிவேலு, கண்ணுச்சாமி போன்றோரையும் ஆசிரியர் இப்புதினத்தில் படைத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link