ஆய்வுச் சிந்தனைகள்


ஊராளி மக்களின் புத்தரிச் சடங்கு

உலகில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களிடம் பல்வேறு வகையான வழக்காறுகள் நிலைகொண்டிருக்கின்றன. இந்த வழக்காறுகள் அவர்களை இனம்காட்டும் கருவிகளாய் உள்ளன. இந்த வழக்காறுகளைச் சேகரித்துத் தொகுத்து வகுத்து ஆய்வுக்கு உட்படுத்தும்போது பலவகையான பண்பாட்டுத் தளங்களை அடையாளம் காணமுடிகிறது. இன்று வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் துறையான நாட்டார் வழக்காற்றியல் துறை இப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இக்கட்டுரை கேரள மாநிலத்தில் வாழும் மக்களின் ஊராளி இனமக்களின் புத்தரிச் சடங்கு முறையை ஆய்கிறது.

பழங்குடிகள்:

காடு மலை ஆகிய இடங்களை வாழிடங்களாகக் கொண்டு முழுமையான நாகரிக வளர்ச்சியடையாத மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். பழமையான எச்சங்களை அதிக அளவில் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ள இவர்களையே பழங்குடிகள் என்கிறோம் "மனித சமுதாயம் இன்று கொண்டுள்ள பல்வேறு அமைப்புகளிலும் பின்தங்கிய நிலையினைக் கொண்டுள்ளவர்களே ஆதிக்குடிகள்(Primitive Tribes)" என்னும் கருத்தை வாழ்வியற் களஞ்சியம் முன்வைக்கிறது, "Tribe" என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பழங்குடி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இனக்குழு மக்கள் என்றும் மலைவாழ் மக்கள் என்றும் இச்சொல்லுக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழறிஞர்களால் கூறப்படுகின்றன. வெரியர், எல்வின், லூயிஸ் போன்றோர் "Tribe" எனும் சொல்லை நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் எனும் பொருளிலேயே பயன்படுத்துகின்றனர்" காலந்தோறும் மக்கள் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்கள் கொண்டிருப்பதைக் காணலாம். இன்று உலகம் மாறினாலும் இன்னும் மாறாத பழங்குடியினர் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர்.

கேரளாவில் பழங்குடி மக்கள்:

இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலைவளமும், காடுவளமும் பொருந்திய இம்மாநிலத்தில் "53 பழங்குடி இனமக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது" இம்மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 3,20,467 (1.10 சதவீதம்) பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் கேரளாவில் வாழும் பழங்குடி இன மக்களில் அடியன், இருளர், ஊராளி, காடர், காணிக்கார், குரும்பர், பணியர், பளியர், மலைப்பண்டாரம், மலைக்குறவன், மலையடியார், மன்னான் போன்ற இனமக்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஊராளி இன மக்கள்:

கேரள மாநிலத்தில் ஊராளி இன மக்கள் பத்தனம்திட்டை, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உப்புதற, கண்ணம்படி, வஞ்சிவயல், தேக்குத்தோட்டம், புன்னப்பாறை ஆகிய இடங்களிலும் தொடுபுழாவில், மூலமட்டம், கோழிப்பள்ளி, நாடுகாணி, உப்புகொன்னு, மாட்டுக்கட்டை, கோடாலிப்பாறை, சின்னநாயக்கன் பூவந்தி, ஈராற்றுப்பேட்டை, மாவடி ஆகிய இடங்களிலும் பத்தனம்திட்டை மாவட்டத்தில் பொன்னம்பல மேடு சார்ந்த பகுதிகளிலும் இவ்வினமக்கள் வசித்து வருகின்றனர்.

கள ஆய்வின் போது ஊராளிகள் தங்களைப் பற்றிக் கூறிய செய்திகள் பின்வருமாறு:

1. ஐயப்பனின் உறவுக்காரர்கள் 2. ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒருமுறை தங்கியிருக்கும் இடைத்தைவிட்டு வேறொரு இடத்தற்குச் சென்று ஊர் அமைத்து வாழ்வதால் ஊராளி 3. பண்டைக்காலத்தில் மேற்கூறியபடி ஒவ்வொரு ஊரிலும் சென்று தங்கும் பொழுது அங்குள்ள நிலத்தில் நெல்லைப்பயிரிட்டு உணவு உட்கொள்வர்.

மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களையும் ஊராளிகளும் தங்களைப்பற்றிக் குறிப்பிட்ட கருத்துக்களையும் அவர்கள் வாழிடங்களையும் கூர்ந்து நோக்கும் பொழுது இவர்கள் ஒரு மலைச்சாதியினர் உழவுத் தொழிலை மேற்கொண்டவர்கள் என்றசெய்தி தெளிவு ஆகிறது. ஆக ஒரு ஊரை இவர்கள் உருவாக்கி அதை ஆளுகின்ற தன்மையைப் பெற்றிருப்பதால் ஊராளிகள் என அழைக்கப்படுகின்றனர். எனலாம்.

சடங்குகள்:

மக்கள் வாழ்வில் சடங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைச் சடங்குகளின் அடிப்படையில் நிறைவேற்றிக் கொள்கின்றனர். மக்களிடம் திருமணச்சடங்கு, பிறப்புச் சடங்கு, பூப்பெய்தல் சடங்கு, இறப்புச் சடங்கு எனப் பல்வேறு வகையான சடங்கு முறைகள் காணப்படுகின்றன. இந்தச் சடங்குகள் ஒவ்வொரு இனமக்களிடமும் வேறுபட்ட நிலைகளில் வெளிப்படுவதைக் காணலாம். "ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் பல உள இணைப்புத் தொடர்பான மரபு விழா நிகழ்வுகள் சடங்குகள் எனக் குறிப்பிடப்படுகின்றன."

ஊராளிகளின் புத்தரி சடங்கு:

காடுகளை வாழிடங்களாகக் கொண்டு வாழ்க்கையை நடத்திவரும் ஊராளி இன மக்கள் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிராமல் காடுகளில் சுற்றித்திரிந்தனர். ஆனால் தற்பொழுது அரசாங்கம் இவர்களுக்கென ஒதுக்கிக் கொடுத்த ஐந்து ஏக்கர் நிலப்பகுதியில் நிலையான வாழிடங்களை அமைத்துக் கொண்டு இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நாடோடிகளாகச் சுற்றித்திரிந்த காலகட்டங்களில் காரணவர் என்ற குழுத்தலைவனின் கீழ் பலபேர் கொண்ட குழுவாக இயங்கி வந்தனர். அங்ஙனம் இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோது தற்காலிகக் குடியிருப்புக்களை உருவாக்கி அங்கே வயல்வெளியை ஏற்படுத்தி நெல்லைப் பயிரிட்டு அறுவடை செய்து பயனை அனுபவித்து வந்தனர். இதனை இவர்கள் சடங்காக் கொண்டிருந்தனர். இதையே புத்தரிச் சடங்கு என அழைத்துக் கொள்கிறார்கள். புத்தரி என்றால் புதுமை+அரி புதிதாக உருவாக்கப்படும் அரி என்று இதற்கு விளக்கம் கூறலாம்.

நிலம் தேர்ந்தெடுத்துப் பண்படுத்துதல்:

ஊராளி மக்கள் ஓரிடத்தைவிட்டு இன்னொரு இடத்திற்குச் செல்லும்பொழுது வளமான நீர்வசதியுள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் அங்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்குவதற்குரிய குடில்களை அமைக்கின்றனர். குடில்களைத் தயாராக்கியவுடன் இவர்கள் நெல்விதைப்பதற்குரிய இடத்தை உறுதிப்படுத்துகின்றனர். பிறகு மந்திரக்காரர் பூஜையிட்டு மந்திரம் சொல்லி வேலையைத் துவக்கி வைக்கிறார். உடல் வலுவுள்ள ஆண்களும் பெண்களும் அந்த இடத்தில் நிற்கும் புல்பூண்டுகளை வெட்டியெறிந்து சுத்தம் செய்கின்றனர். இதனை அவர்கள் நிலம் தெளித்தல் என்கின்றனர். பின் மண்வெட்டிகளைக் கொண்டு வெட்டி நெல்விதைப்பதற்கேற்ப மண்ணைப் பண்படுத்துகின்றனர்.

நெல் விதைத்துப் பாதுகாத்தல்:

பண்படுத்திய மண்ணில் நல்லநாளும் நல்ல நேரமும் பார்த்து மந்திரக்காரர் பூஜை செய்து மந்திரம் சொல்ல காரணவர் நெல்விதைப்பதைத் தொடங்கி வைக்கிறார். பெண்களே நெல்விதைப்பில் ஈடுபடுகின்றனர். நெல் முளைவிட்டு வளரத்தொடங்கும்போது போதிய பாசனவசதிகளைச் செய்கின்றனர். காட்டு விலங்குகளிடமிருந்து பயிரைக் காக்க பரண்களை அமைத்துக் காவல் காப்பர் ஆயினும் அக்காலங்களில் விலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதில்லை என்றும் அதற்குக் காரணம் தங்களின் அளவுக்கதிகமான தெய்வநம்பிக்கை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

அறுவடைக்குரியச் சடங்குகள்:

நெல்முற்றி அறுவடை செய்வதற்கான காலம் தொடங்கியவுடன் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவர். அறுவடையை தொடங்கும் முன்பாக இவர்கள் இருவிதமான சடங்குகளைச் செய்கின்றனர். அவை 1. புத்தரிப்பந்தல் அமைத்தல் 2. விரதம் இருத்தல்.

1. புத்தரிப் பந்தல் அமைத்தல்:

ஊராளி மக்கள் அறுவடை செய்த நெல்லைப் பாதுகாப்பதற்காக முதலில் ஒரு கிடங்கினை உருவாக்குகின்றனர். இந்தக் கிடங்கானது மேல் கூரை மட்டும் கொண்டதாக அமைக்கப்படும். பக்கச் சுவர்கள் இருக்காது. இந்தக் கிடங்கினை இவர்கள் புத்தரிப்பந்தல் என் அழைக்கின்றனர்.

2. விரதம் இருத்தல்:

அறுவடை தொடங்கும் மூன்று நாட்களுக்கு முன்பு ஆண்கள் மாமிச உணவைத் தவிர்த்து விரதம் இருப்பர். இதை அவர்கள் நோன்பு எடுத்தல் என்கின்றனர். இங்ஙனம் விரம் இருக்கும்போது ஆண்கள் தனியாக குடில் அமைத்து வசிப்பர். கூடவே மந்திரக்காரன் ஒருவனும் இருப்பான். இந்நாட்களில் ஆண்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வர்.

அறுவடைச் செய்தல்:

நோன்பு தொடங்கிய மூன்றாம் நாள் காலையில் ஆண்கள் வயல்வெளிக்குச் செல்வர். கூடவே பெண்களும் குளித்துச் சந்தனம் பூசி நெல்லறுக்கப் புறப்படுவார்கள்.மாதவிலக்குள்ளப் பெண்கள் இச்சடங்கில் கலந்து கொள்வதில்லை காரணம் அறுவடைச் செய்யும் நெல்லை இறைவனுக்குப் படைத்தால் அப்பெண்கள் அறுவடையில் ஈடுபட்டால் தெய்வக்குற்றம் ஏற்படும் என இவர்கள் நம்புகின்றனர். வயல் பகுதியில் ஆண்களும் பெண்களும் கூடுவர், அங்கு மந்திரக்காரர் பூஜை செய்ய காரணவர் அறுவடையைத் தொடங்கி வைப்பர். பின் பெண்கள் நெற்கதிர்களை அரியத் தொடங்குவர். ஆண்கள் வீட்டிற்குச் செல்வர். அறுவடை செய்தலை இவர்கள் நெல் கொய்தல் என்கின்றனர். மாலையில் ஆண்கள் வயல்வெளிக்குச் சென்ற பெண்கள் அறுத்து வைத்திருக்கும் நெற்கதிர்களைக் கட்டுக்களாகக் கட்டி புத்திரிப் பந்தலில் கொண்டு சேர்ப்பார்கள். வயலிலிருந்து முதலில் அறுத்தெடுத்த நெற்கதிர்களைக் கொஞ்சம் எடுத்து கூவ இலை என்ற ஒருவித இலையுடன் சேர்த்து புத்திரிப் பந்தலிலுள்ள தூண்களில் கட்டுவார்கள் அங்ஙனம் கட்டும்பொழுது நடுவிலுள்ள தூணில் முதன் முதலில் கட்டுவர்.

நெல்லைப் பிரித்தெடுத்தல்:

ஆண்கள் நெற்கதிர்களைத் தரையில் இட்டு மிதிப்பார்கள். அப்போது கதிரிலிருந்து நெல்மணிகள் பிரித்தெடுக்கப்படும். பெண்கள் நல்ல நெல்மணிகளை முறத்தில் இட்டுப் புடைத்தெடுப்பார்கள். இதனை அவர்கள் "பாற்றி எடுதுத்தல்" என்கின்றனர். அங்ஙனம் புடைக்கும் பொழுது அவர்கள் "ஓ"வென ஒலி எழுப்புவர் இதனை அவர்கள் "ஒச்சை வைத்தல்" என்கின்றனர்.

நெல் குத்துதல்:

பிரித்தெடுத்த நெல்மணிகளைத் தீயிலிட்டு வறுத்துப் பின் அதனை உரலில் இட்டு இடிப்பார்கள் நெல்லை இடிக்கத் துவங்குவதற்கு முன்பு மந்திரக்காரர் மந்திரம் ஓதுவார். நெல்குத்தும்போது உரலிலும் உலக்கையிலும் கூவ இலையைக் கட்டி வைப்பார்கள் இதனை அவர்கள் ஒரு சடங்காகக் கொள்கின்றனர். நெல் குத்துதலில் பெண்களே ஈடுபடுகின்றனர். பெண்கள் நெல் குத்தும்போது குதித்துக் குதித்துக் குத்துவார்கள். அப்போது சிச்சூளி மாமாலி என்று பாடுவார்கள் ஒரு உரலில் ஐந்து அல்லது ஆறுபேர் சேர்ந்து நின்று குத்துவார்கள் அங்ஙனம் குத்தும்போது உரலைச் சுற்றிச்சுற்றி வந்து குத்த வேண்டுமென்பதை ஒரு சடங்காகக் கொண்டுள்ளனர். அங்ஙனம் குத்தி எடுத்த நெல்லை வேக வைத்து அதிலிருந்து அரிசியும் அவலும் எடுப்பார்கள். முதலில் எடுத்த அரிசி அவல் ஆகியவற்றை மந்திரக்காரர் இறைவனுக்குப் படைப்பார். இங்ஙனம் ஐந்து நாட்கள் நெல்லை வறுத்துக் குத்தி கஞ்சி காய்த்துக் குடிப்பார்கள்.

புழுங்கல் புத்தரிச் சடங்கு:

ஆறாவது நாள் புழுங்கல் புத்தரிச் சடங்கு என்ற சடங்கினை நடத்துகின்றனர். அன்று வயலிலிருந்து நெற்கதிர்களைக் கொய்து வந்து நெல்லைப் பிரித்தெடுத்து அதனைக் கலத்தில் போட்டு வேக வைப்பார்கள். பின்னர் அதனைக் காய வைத்து உரலில் இட்டு குத்தி கஞ்சி காய்த்துக் குடிப்பார்கள் புழுங்கல் புத்தரிச் சடங்கு அன்றுதான் இவர்கள் நெல்லை வேகவைத்து அரிசி உருவாக்குகிறார்கள். அதற்கு முன்புவரை வறுத்தெடுக்கிறார்கள். நெல்லை வேகவைத்து அரிசி எடுப்பதால் இதனை புழுங்கல் புத்தரிச் சடங்கு என்கின்றனர்.

காலவூட்டுச் சடங்கு:

புழுங்கல் புத்தரிச் சடங்கு கழிந்து மூன்று நாட்களுக்குப் பின்பு காலவூட்டு என்ற சடங்கினை இவர்கள் நிகழ்த்துகின்றனர். இச்சடங்கினை அவர்கள் மிகப்பெரிய விழாவாகவே கொண்டாடுகின்றனர். இச்சடங்கு நடைபெறும் அன்று வயலின் கரையோரத்தில் அனைவரும் வசதிக்கேற்ப களம் அமைத்துக் குடில் அமைப்பார். இதனை அவர்கள் களம் உருட்டுதல் என்கின்றனர். காவூட்டும் அன்றுதான் வயலை முழுமையாக அறுவடைச் செய்து எடுப்பர். அன்று பச்சை நெல்லை எடுத்து குத்தி சோறு சமைப்பார்கள். அனைவரும் வீட்டிலிருந்து தாங்கள் வளர்க்கும் கோழிகளைக் கொண்டு வருவர். ஒருவர் மந்திரம் சொல்ல இன்னொருவர் கோழியை வெட்ட அதனைச் சுத்தம்செய்து சமைப்பார்கள் சோறும் கோழிக்கறியும் தயாரானவுடன் மந்திரக்காரர் இறைவனுக்குப் பூஜை வைப்பார். அதன் பிறகு அனைவரும் சேர்ந்தமர்ந்து உணவு உண்பார்கள்.

வித்துவாருச் சடங்கு:

காலவூட்டு அன்று நெல்லை கதிரிலிருந்து பிரித்தெடுத்தவுடன் அடுத்துச் செல்லும் இடத்தில் வயலில் விதைப்பதற்காக நல்ல வித்துக்களைத் தனியாக சேமிப்பர். ஈற்ற இலையால் செய்யப்பட்டப் பெட்டி ஒன்றில் வித்துக்களை வைப்பர், இப்பெட்டியை அவர்கள் அலகில் என்கின்றனர். இங்ஙனம் வித்தைச் சேகரிக்கும் போது மந்திரக்காரர் மந்திரம் சொல்லி ஒருபிடி நெல்லை முதலில் வாரிப் பெட்டியில் போடுவார். அதன்பிறகு காரணவர் தேவையான அளவு நெல்லைப் பெட்டியில் வாரிப் போடுவார்.

வீடு வழிப்போதல்:

காலவூட்டுச் சடங்கு முடிந்த பிறகு மறுநாள் காலையில் அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்வர். இதனை அவர்கள் வீடு வழிப்போதல் என்கின்றனர். இதன் பொருள் இனி வயலில் எடுப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால் வீட்டிற்குப் போவோம் என்பதாகும்.

வேறு இடம் புறப்பாடல்:

ஓரிடத்தில் தங்கியிருந்து அந்த இடத்தில் விவசாயம் செய்து பலனை முழுமையாக எடுத்தப்பின்பு வளம் பொருந்திய இன்னொரு பகுதியை நோக்கி புறப்புட்டுச் செல்கின்றனர்.

பூஜை வைத்தல்:

புத்தரிச் சடங்கின் போது பல இடங்களில் இவர்கள் தெய்வத்திற்குப் பூஜை போடுகின்றனர். ஐயப்பன் படத்தை கிழக்கு நோக்கி வைத்து அதன் முன்னால் கூவ இலையை வைத்து அதில் அவர்கள் விவசாயம் செய்து எடுத்தப்பொருட்களான கிழங்கு, சேம்பு, காய்ச்சில் துவரை, நெல் போன்றவற்றை வைத்து வழிபடுவர் காலப்போக்கில் வெளியுலகத் தொடர்பு ஏற்பட்டபோது தேங்காய் சாம்பிராணி போன்ற பொருட்களைக் கடையிலிருந்து வாங்கி வந்து படைப்பர், அங்ஙனம் வெளியிலிருந்து வாங்கிவரும் பொருட்களைத் தண்ணீர் தெளித்தே பயன்படுத்துவர். தெய்வத்திற்குப் பூஜை வைக்கும் பூசாரி மந்திரமும் கற்றிருப்பதால் இவரை மந்திரக்காரர் எனவும் அழைக்கின்றனர்.

புத்தரிச் சடங்கும் தெய்வ நம்பிக்கையும்:

ஊராளி மக்கள் ஐயப்பனை முழுமையாக நம்புகின்றனர். நெல்பயிரிட்டு அது வளரும்போது ஐயப்பன்தான் அந்த நெல்லை மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதாக இவர்கள் நம்புகின்றனர். ஆதலால் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெல் விளைந்து அறுவடைச் செய்யும்பொழுது முதலில் அறுத்தெடுக்கும் முதல்கட்டை மாற்றித் தனியாக வைப்பர், அதுபோலவே நெல்லை மிதித்துப் பிரித்தெடுக்கும் போது முதலில் பிரித்தெடுத்த நெல்லை ஏழு கட்டாகக் கட்டி வைத்திருப்பர். இவற்றை மகரமாதம் 1ஆம் தேதி சபரிமலைக்குச் செல்லும்
பொழுது கொண்டு சென்று ஐயப்பனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவர்.

புத்தரிச் சடங்கின் இன்றைய நிலை:

தற்காலத்தில் அரசு இவர்களுக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தக் காரணத்தினால் இடம் பெயர்வை விட்டுவிட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் வெளியுலகத்தொடர்பு ஏற்பட்ட காரணத்தினால் தங்களுக்குத் தேவையான பொருட்களைச் சந்தைகளில் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். ஆதலால் நெல் பயிரிடும் பழக்கம் இன்று இவர்களிடம் இல்லை.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link