ஆய்வுச் சிந்தனைகள்


'சத்தியானந்தன்' நாவல்: ஒரு பார்வை

ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மரபு போன்ற கூறுகளில் மாற்றங்களும், ஏற்றங்களும் நிகழும். வேறொரு நாட்டின் பண்பாட்டுத் தாக்கத்தால் இவை நிகழும். ஆங்கிலேயர் வருகையால் இந்திய நாட்டில் அத்தகு மாறுதல்கள் திணிக்கப்பட்டன. அதை அக்காலப் படைப்பாளிகள் தமது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளனர். நாவலாசிரியரான மாதவையாவின் சத்தியானந்தன் நாவல் கல்வி, சாதி, மதம், பெண் சமுதாயம் ஆகியவற்றில் ஏற்பட்ட சமூக மாறுதல்களைச் சித்திரிப்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

கதைச்சுருக்கம்:

மாதவையா இந்நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்டது. சப்-ஜட்ஜ் ரங்கையர் விதவைப் பெண் ஆண்டாளைக் கர்ப்பமான நிலையில் கை விடுகிறார். தனது அடாத செயலை மறைக்க அவள்மீது வீண்பழி சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். அவளது குழந்தை சத்தியானந்தனை பிரிட்டிஷ் பாதிரியார் மாற்கு என்பவர் வளர்க்கிறார். பத்து வருடம் சிறைத்தண்டனை முடிந்து வரும் ஆண்டாள் மகனிடம் தன் அவலவாழ்வைக் கூறிய பின் உயிர் விடுகிறாள். சத்தியானந்தன் பவுல் கல்லூரியில் படித்து பாசன்கெத்துவின் பள்ளியில் வேலை செய்கிறான். அவரது மகள் புளோரா மான்டுரோஸை விரும்பி ஏமாற்றமடைகிறான். பாசன் கெத்துவின் சம்பளச் சுரண்டலைத் தட்டிக் கேட்டதால் வீண்பழி சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படுகிறான். மீண்டும் "பெத்லகேம்" பள்ளியில் வேலைக்குச் சேர்கிறான். வித்தியாவின் கல்லூரித் தோழன் ராபர்ட் மூலம் சத்தியானந்தன் தன் மகன் என ரங்கையர் அறிகின்றான். அவனிடம் ஆண்டாளுக்கு இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோருகிறான். தன் சொத்தில் ரூ15,000 அவனுக்குப் பங்காகக் கொடுக்கிறார். சதாசிவஐயரின் விதவை மகளின் மரணத்தைத் தடுத்து நிறுத்துகிறான். அவள் கிரேஸ் மூலம் கிறித்துவ மதம் மாறுகிறாள். "சத்திய சமாஜம்" அமைத்து அனாதை விடுதிகள், விதவை மறுவாழ்வு பேணுகிறான். கல்யாணியை மணக்கிறான்.

கல்விச் சிறப்பும் சீர்கேடுகளும்:

இந்நாவல் அக்காலத்தில் நிலவிய கல்வியின் சிறப்பையும் சீர்கேடுகளையும் கூறுகிறது. ஆங்கிலேயரின் ஊடுருவல் நாட்டின் தொன்மைக் கல்வியைச் சிறிது சிறிதாக அழித்தது. அவர்தம் ஆட்சி நலனுக்கும் செய்திப் பரிமாற்றத்திற்கும் நிர்வாக எளிமைக்கும் என ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டது. கி.பி.1853 இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங்கு பிரபு மெக்காலே கல்வி முறையை ஊக்குவிக்க ஒரு இலட்சம் வரை செலவிட்டார். இக்கல்வி முறை மக்களுக்கு விழிப்புணர்ச்சியைத் தருமென உணர்ந்த இராஜராம் மோகன்ராய் இதனை ஆதரித்தார். ஆங்கிலக் கல்விமுறை அறிமுகமானவுடன் சென்னை கிறித்துவக் கல்லூரி புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றைச் சமயப் பரப்பாளர்கள் நிறுவி அதன் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணை புரிந்தனர். இதனை, "நாட்டில் முதன் முதலாக உயர்தரக் கல்விகற்பதற்கான கல்லூரிகளை நிறுவியவர்கள் பிரிட்டிஷ் மிஷினெரிகளாவர்" (ம.பொ.சி. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு. ப.6) என்ற கருத்து உறுதிப்படுத்தும், ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கே அரசு அலுவலகங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டதால் மக்கள் மேனாட்டுக் கல்வியில் ஆர்வம் காட்டினர் என்றாலும் இக்கல்விமுறை வேலை தேடித்தரும் அமைப்பாக அடிமைச் சாதியை உருவாக்கக் கூடியதாக இருந்தது. ஏனெனில் பிரிட்டீஷ்காரர்களுக்கே உயர்பதவி கொடுக்கப்பட்டதால் இந்தியர் உயர்நிலை அடைய முடியவில்லை. அந்நாவலில் வரும் ஆசிரியர் ஸர் ஜான் தாட்மன், உதவி கலெக்டர் லயன்ஸ் ஆர்தர் செசில், கல்வி இயக்குநர் டாக்டர் இர்விங், ஆராய்சியாளர் மான்டுரோஸ், டாக்டர் ராபர்ட் மன்றோ போன்ற அனைத்துப் பாத்திரங்களும் உயர்பதவி வகித்து வரும் பிரிட்டிஷ்காரர்களாவர். இவர்களது ஆங்கில மொழி முதலிடம் வகிக்கிறது. ஆனால் பிரதேச மொழிகள் தள்ளப்படுகின்றன.

கல்வியின் மூலம் பெற்ற சிறப்பு:

பிராமண விதவையின் மகன் சத்தியானந்தன் மாற்குப் பாதிரியாரால் வளர்க்கப்பட்டவன். அதனால் அவன் ஐரோப்பியர்களிடம் அதிகமாகப் பழக நேர்கிறது. அவர்களோடு தங்கியும் உறவாடமுடிந்தது. இந்தியர் நெருங்க முடியாத இடத்தையும், உயர் கல்வியையும் அவன் மாற்கு பாதிரியாரால் பெற முடிந்தது. இவர் பெத்லகேம் கல்விச்சாலை அமைத்து தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கற்பித்து வருகிறார். இந்தியர்கள் கல்வியறிவு பெற அயராது உழைக்கிறார். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு முதலிடம் கொடுக்கிறார். தாழ்த்தப்பட்ட சாணார் வகுப்பினரின் கல்விக்காக உழைக்கிறார். இதனை, "அந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உறங்கியும் தேங்கியும் கிடந்த அவர்களது அறிவை விழிப்படையச் செய்து அவர்களுக்கு கல்வி புகட்டினார்" (மாதவையா, சந்தியானந்தன் ப.49) என்ற கருத்து விளக்கும்.

ஆங்கிலக் கல்வியினால் இரங்கையர், தண்டபாணி, நாராயணன், சுந்தரம், சத்தியானந்தன் போன்ற பாத்திரங்கள் நன்மையும் மேன்மையும் எய்துகின்றன. மேலும் சத்தியானந்தன் தான் பெற்ற கல்வியை "சத்திய சமாஜம்" அமைத்து அதன் மூலம் மக்களுக்கு புகட்டுகிறான்.

கல்விச் சீர்கேடுகள்:

பிரிட்டிஷாரின் ஆங்கிலக் கல்வி முறையால் நன்மைகள் காணப்பட்ட போதும் சீர்கேடுகளும் மலிந்து கிடந்தது. குறிப்பாக நிர்வாக அமைப்பில் அவை காணப்பட்டன, சுதேச மொழியை ஆங்கிலேயர் புறக்கணித்ததால் தேச பக்தர்கள் பிரதேச மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

பாசன்கெத்துப் பாதிரியார் தன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பெறும் சம்பளம் 75 ரூபாய் என கையெழுத்து வாங்குகிறார். ஆனால் கையிலோ 45 ரூபாய்தான் கொடுக்கிறார். இதனை அறிந்த சத்தியானந்தன் தட்டிக் கேட்கிறான். அவன் மீது வீண்பழி சுமத்தி வேலை நீக்கம் செய்கிறார். கல்வி அதிகாரி இர்விங்கிற்கும் இது தெரியும் என்பதால் பிறரிடம் மறைக்கிறார். இவர்களது செயலை சத்தியானந்தன் மான்டுரோஸிடம் கூறி வருந்துகிறான். ஆனால் அவரோ தனக்கு அவையெல்லாம் நன்கு தெரியும் என்கிறார். மேலும், "குறைந்த பீஸ்கட்டுகின்ற அல்லது பீஸே கட்டாத மாணவர்களும் முழு பீஸ் கட்டுவதாகத்தான் பட்டியலில் காணப்படுவர். பல தனியார் பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் இது சாதாரணமாக நடக்கிறது". (மாதவையா, சத்தியானந்தன் ப.149) என்று கூறுவது பிரிட்டிஷாரின் கல்விச் சீர்கேடுகளையும் நிர்வாக அவலத்தையும் சுரண்டல் போக்கையும் புலப்படுத்தும். பிரிட்டிஷாரின் ஒரு சாரார் இந்திய மக்களின் விழிப்புணர்வுக்குப் பாடுபட்டனர். மறுசாரார் அவர்தம் ஆட்சியைப் பயன்படுத்திச் சுரண்டினர். மேலும் ஒரு சாரார் எதுவும் செய்ய முடியாது வாழாதிருந்தமை மான்டுரோஸ் பாத்திரம் விளக்குகிறது. அவர்தம் சுரண்டலைத் தட்டிக்கேட்கும் நிலை உருவானபோது இந்தியர்கள் அடக்குமுறைக்கு ஆளாக நேர்ந்தது.

சாதியுணர்வும் மதமாற்றமும்:

இந்தியச் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோர் உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்டும் மனதளவில் நொறுக்கப்பட்டும் கிடந்தனர். அவர்கள் கோயில், குளம், கிணறு போன்ற பொது இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. உயர் சாதியினர் இவர்களை இழிவாக எண்ணி நடத்தினர். அதனால் பிரிட்டிஷார் இவர்களை ஆதரிக்க முன் வந்தபோது பொருளாதார தேவைகளுக்காகக் கூட்டம் கூட்டமாக மதம் மாறினர். பிரிட்டிஷாரின் உதவிகளை ஏற்றுக்கொண்டனர். பிராமணர், சாணார் ஆகிய இரு சாதியினரின் செய்திகளை இந்நாவல் காட்டுகிறது. பெரும்பாலும் உயர் சாதியினர் பெரிய பதவிகளில் இருந்தனர். பிராமணர்கள் சாதிக்கட்டுப்பாடு மிகுந்திருந்தனர். பிராமணர்கள் இடையே வடகலை, தென்கலை என்ற பிரிவு நிலவி வந்தது. சாம்பசிவஐயர் வடகலைப் பிரிவைச் சார்ந்தவர்.

"தென்கலை ஐயங்கார் சூத்திரர்களுக்குச் சமம். அவர்களுக்கு சமஸ்கிருதம், வேதம் ஒன்றும் கிடையாது. அவர்கள் வேதமெல்லாம் தமிழ்ப் பாட்டுதான். அதெல்லாம் வேதகாலத்து ரிஷிகள் எழுதிவச்சது இல்ல. இந்தக் காலத்துச் சில்லறைக் கவிராயர்கள் பாடிவச்சது. பேருதான் பெரிசா தென்கலை வைஷ்ணவாள்ணு சிரர்த்தத்தின் போது ஹோமம் கிடையாது. ஒன்னும் கிடையாது. சந்தியாவந்தணம் கூட ஒழுங்காப் பண்ணறதில்லை. பிராமணான்னு சொல்றதுக்கே அவாளுக்கு யோக்கியதை கிடையாது" என்று தென்கலைப் பிரிவினரை இகழ்ந்து கூறுவது அவர்தம் பிரிவுணர்ச்சியை வெளிப்படுத்தும்.

தாழ்ந்த சாதியினராகக் கருதப்பட்ட சாணர் வகுப்பினர், கல்வியறிவு இல்லாது இருந்தனர். இவர்கள் "கள்" இறக்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் முன்னேற மாற்கு பாதிரியார் உழைக்கிறார். இரங்கையர் தன் சாதி கட்டுப்பாட்டிற்குப் பயந்து விதவைப் பெண்ணைக் கர்ப்பமான நிலையில் கைவிடுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கும் கிறித்துவ மதம் நிழல் தருகிறது.

அக்காலத்தில் கிறித்துவ மதம் இந்தியாவில் எப்படி வேரூன்றியது எனவும், எப்படி இந்துக்கள் கிறித்துவ மதம் தழுவினர் எனவும் நாவல் காட்டுகின்றது. அக்காலத்தில் கிறித்துவக்கழகம் கிறித்துவ மதத்தைப் பரப்பும் நோக்கத்திற்காகவே கல்வி நிலையங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியது. தவிர பெண்களுக்கென பாளையங்கோட்டையில் ஏற்படுத்தப்பட்ட சாராள் தக்கர் கல்லூரி மற்றும் கோயில் மிஷனரி கழகக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி போன்றவற்றையும் நிறுவியது (நூறு ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம்) என்று நூல் கூறுவது இங்கு நினைவுகூறத் தக்கது. இந்நாவலில் வரும் மான்டுரோஸ், கிரேஸ் இருவரும் பிறமதத்தினரை கிறிஸ்துவமதம் மாற்றினர். பெத்லகேம் பள்ளித்தலைமை ஆசிரியர் மகள் கல்யாணி விதவை. அவள் சத்தியானந்தனை விரும்புவதை அறிந்த கிரேஸ் அவளை நயமாக மதம் மாற்றுகிறாள். இது "வங்கராசி" பத்திரிக்கையில் வெளிவருகிறது. இதனைக் கண்ட பெற்றோர் வருந்துகின்றனர்.

மதமாற்றத்தை பழமைவாதிகள் முழுமையாக எதிர்த்தனர். சமுதாயமும் இழிவாக எண்ணியது. சொந்த ஜனங்களால் இவ்வித மதமாறிகள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் இரண்டுங்கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டபோது புதிதான பண்பாட்டுக் கலாச்சாரம் தோற்றுவிக்கப்பட்டது. கீழ்ச்சாதி மக்களைக் கிறித்துவச் சமயத்திற்கு மாற்றுவதைத் தங்களின் ஒரு முனையாகவும் மேலைக் கல்வி பரப்புவதைத் தங்களின் மறுமுனையாகவும் கருதிச் சமயப் பரப்புநர் செயல்பட்டு வந்ததால் பண்பாட்டுத் தளங்களில் நெகிழ்வுகள் ஏற்படத் தொடங்கின. ஆங்கிலக் கல்வி விழிப்புணர்வையும் கொடுத்தது.

மான்டுரோஸ் தீவிர கிறிஸ்துவ வெறியாளராகக் காட்டப்படுகிறார். சத்தியானந்தன் சமயப்பொறை உடையவனாகத் தீட்டப்பட்டுள்ளான். தாழ்ந்த சாதியினருக்கு உணவு கொடுத்து மதம் மாற்றினர். உயர் சாதியினரின் பலவீனம் உணர்ந்து அதன் மூலம் மதம் மாற்றினர்.

பெண்கள் பிரச்சினை:

அக்காலத்தில் பெண்களுக்குப் படிக்க வாய்ப்பு இல்லை. கணவன் இறந்துவிட்டால் மறுபடியும் திருமணம் செய்யும் வாய்ப்பும் இல்லை. இவர்கள் முன்னேற்றத்திற்காக இராஜாராம் மோகன்ராய், பாரதியார் போன்றோர் அரும்பாடுபட்டனர். குறிப்பாகத் தென்னிந்தியாவில் முதன் முதலாகப் பெண்கள் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்கள் ஆங்கிலப் பாதிரிமார்களாவர். (டி.எச். ஜார்ஜ் குமரி மாவட்டப் பெண்ணுரிமைப் போராட்டம் ப.109)

ஆண்டாள் சமஸ்கிரதமும் தமிழும் நன்கு கற்றவள். கணவனை இழந்த இவளை இரங்கையர் ஆசைகாட்டி கர்ப்பமான நிலையில் கைவிட்டு விடுகிறான். தன் குற்றத்தை மறைக்க பொய்ப்பழி சுமத்தி சிறைத்தண்டனை வழங்குகிறார். "பாம்பே கார்டியன்" என்ற பத்திரிக்கையில் பண்டிதை இராமாபாய் எழுதிய செய்தி இங்கு ஒப்புநோக்க தகுந்தது. "விதவைப் பெண்கள் சிலர் துன்மார்க்கனுடைய கையில் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் இரக்கமற்ற தங்கள் எஜமான்களாலேயே இயன்றமட்டும் அனுபவிக்கப்பட்ட பிறகு......... (எலிசபெத் சொர்ணம் அப்பாசாமி, பண்டிதை ரமாபாய் சரஸ்வதி வாழ்க்கைச் சரித்திரம். ப.70)

கல்யாணி படித்தவள், விதவை, கோலமேற்க வற்புறுத்தி முடிகளைய முனையும்போது இறக்கத் துணிகிறாள். அக்காலத்தில் விதவைக் கோலம் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. முடி களைந்து முரட்டு வஸ்திரம் உடுத்தி, நெருங்கிய உறவினர்கள் தவிர பிற ஆண்களோடு பேசாமல் விரதமிருந்து சிறிதளவே உண்டு வாழவேண்டுமென்ற எழுதாச்சட்டம் நிலவிவந்தது. அப்படியெல்லாம் கடைப்பிடித்து விதவைகள் ஒழுகினால் சொர்க்கத்தில் வாழும் கணவருடன் போய் சேரமுடியும் என்று போதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் உணவுக்கும், உடைக்கும் பிறரை நம்பும் அவலம் நிலவியது. சமுதாயத்தினரால் விதவையர்கள் ஒடுக்கப்பட்டுக்கிடந்தனர். விதவைக் கோலமேற்காதவர்களை சமுதாயமே முழுவதுமாகப் புறக்கணித்தது. யோகாம்பாள் தன் விதவை நாத்தியார் தன் புருஷனால்படும் அவலத்தையும் கூறுகிறாள். விதவையர் அவமானச் சின்னங்களாகக் கருதப்பட்டனர். அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. ரங்கையர் தன் மகள் யோகாம்பாளுக்குச் சொத்து கொடுக்க முற்படும்போது சகோதரனால் அடக்கப்படுகின்றாள்.

ஆங்கிலேயர் வருகையால் பெண்கள் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் விதவா விவாகத்தை ஆதரித்தனர். விதவை கல்யாணியை விரும்பும் சத்தியானந்தன் நோக்கமறிந்த கிரேஸ் மதம்மாற்றி திருமணம் செய்ய உதவுகிறாள். சத்தியானந்தன் ஏற்படுத்திய "சத்திய சமாஜம்" "பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்" (பாரதி, பாரதிகட்டுரைகள் ப.23) என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. தந்தையின் ஊக்கத்தால் கற்ற கல்யாணி கணவன் துணையால் மற்ற பெண்கள் முன்னேற கைதூக்கி விடுகிறாள். அக்காலத்தில் வைதிகக் கட்டுப்பாடுகளால் அடக்குமுறைக்கு ஆளாகிச் சீரழிந்த பெண்கள் நிலைமையும், பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஆண்களின் உள்ள உறுதியையும் இந்நாவல் காட்டுகிறது.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link