ஆய்வுச் சிந்தனைகள்


இரட்சணிய யாத்திரிகம்

ஜான் பனியனின் "பில்கிரிம்ஸ் புராகிரஸ்" எனும் உரைநடை வடிவிலான ஆங்கில நூலை அடிப்படையாகக் கொண்டு முக்திவழி அம்மானை (1887) இரட்சணிய யாத்திரிகம் (1894), மோட்சப்பிரயாண காவியம் (1991) எனும் மூன்று செய்யுள் நூல்கள் வெளிவந்துள்ளன. உரைநடை வடிவில் வெளிவந்த நூல்களுள் அருள்திரு. சாமுவேல் பவுல் அவர்களின் பரதேசியின் மோட்சப்பிரயாணம் எனும் நூல் இன்றும் பாராட்டுக்குரியதாக விளங்குகிறது. இம்மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்புக் கலைக்கே முன்மாதிரியாகக் காணப்படுவதுடன் தமிழ் உரைநடையின் கலங்கரை விளக்காகவும் திகழ்கின்றது. விவிலிய நூலுக்கு அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் ஜான்பனியன் எழுதிய பில்கிரிம்ஸ் புராகிரஸ் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாவம் நிறைந்த ஓர் ஊரிலிருந்து பயணம் மேற்கொண்டு வழியில் பல துன்பங்களைச் சந்தித்து அவைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்று, இறுதியில் மோட்ச உலகைச் சென்று அடைந்த ஒரு கிறித்தவனின் ஆன்மீகப் பயண அனுபவங்களைச் சொப்பனப் பாங்காக இந்நூல் எடுத்துரைக்கின்றது. பயணம் செய்யும் கிறித்தவனின் கதை உண்மையான வாழ்வில் நடப்பது போன்று சுவையாகவும் கோர்வையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. உலக இலக்கிய வரிசையில் அமைந்த முற்றுருவக நூல்களுள் ஜான் பனியனின் "பில்கிரீம்ஸ்" புராகிஸ் தனிச்சிறப்புடையது என்பது திறனாய்வாளர்கள் கருத்து. இந்நூலை ஆதாரமாகக் கொண்டே தமிழ் மொழிபெயர்ப்பு நூற்களின் அடிப்படையில் இரட்சணிய யாத்திரிகத்தையும் முற்றுருவகக் காப்பியமாகப் படைத்து கிருஷ்ணபிள்ளை தமிழ் மொழிக்கும் கிறித்துவ இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முற்றுருவகம்:

பிறிது பொருள் குறிக்கும் உருவகம் ஒருவகைக் குறி. அதுவும் குறியாப் பொருளைக் குறிக்கவல்லது. ஆதலால் முற்றான உருவகம், அல்லது முற்றுருவகம் எனப்படும். மேற்போக்கான கதையுடன் மறைபொருள் கொண்டுள்ள தொடர்ச்சியான ஒருகதையை இச்சொல் குறிக்கும். இவ்வாறு உட்பொருளைச் சொல்லும் கதை விறுவிறுப்பாகவும் தொடர்ச்சியாகவும் அமைவது இயல்பு, முற்றுருவகக் கதைகளில் வரும் கதைத்தலைவனும் பிற மாந்தர்களும் பகை, செருக்கு, மெத்தனம், அமைதி, போன்ற பண்புகளின் உருவகங்களேயாவர். உவமையின் முறுகிய நிலை எனப்படும் உருவகம் கருத்தினை ஆற்றல்படச் சொல்லும் வலிமையுடையது. உருவகங்களே ஒரு கதையைத் தொடக்க முதல் முடிவு வரையிலும் பொருளைப் புலப்படுத்துமானால் அதை முற்றுருவக நூல் என்பர். ஸ்பென்சரின் "தேவதை அரசி பனியனின் "மோட்சப் பிரயாணம்" ஆகியன ஆங்கில இலக்கியங்களுள் சிறந்த முற்றுருவக நூற்களாகும். வாசகரின் சூழலுக்கு ஏற்புடைய பொருளும், நல்ல கதையும் நல்ல முற்றுருவகத்திற்கு வேண்டியவைகளாகும். இப்பண்புகள் இல்லையேல் நீண்ட முற்றுருவகம் சிறக்காது. இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் ஓவியத்திலும் சிற்பத்திலும் முற்றுருவகம் உண்டு. இலக்கிய முற்றுருவகம் வாய்மொழி வடிவிலும், எழுத்து வடிவிலும் அமையலாம். பொதுவாக, குறியீட்டுத் தன்மையுள்ள கதைமாந்தரின் மூலம் பொது உண்மைகளை உணர்த்துவது முற்றுருவகம் ஆகும். உருவப்பொருள் மூலம் அருவமான ஆன்மிக. அறிவுசார்ந்த கருத்துக்களையும் கோட்பாடுகளையும் முற்றுருவகம் வெளிப்படுத்தும். 13 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியமான "உரோமன் டிலா ரோஜா" எனும் நெடுங்கவிதை ரோஜா போன்ற உருவகங்களால் வேத்தியல் காதலைப் புலப்படுத்துகிறது.

முற்றுருவக இலக்கியத்தில் படைக்கப்பட்டுள்ள மாந்தர்களும், அவர்களது செயல்களும் வாழும் மக்களையும் நிகழ்ச்சிகளையும் குறிக்கும் வகையில் அமையும். இதில் உள்ள கதையமைப்பு சமயக் கொள்கைகளையும் தத்துவக் கோட்பாடுகளையும் உண்மைகளையும் வெளிப்படுத்தப் பயன்படும். இக்காலத்தில் முற்றுருவக இலக்கியங்களுக்கு வரவேற்பு இல்லை. ஆனால் சிலவகை அங்கதக் கதைகளிலும், அறிவியல் பூர்வமான கதைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் முற்றுருவக நூல்கள்:

கிருஷ்ணமிசிரர் 1200 இல் வடமொழியில் "பிரபோர சந்திரோதயம்" எனும் பெயரில் முற்றுருவக நூலாக நாடகம் ஒன்றை இயற்றியுள்ளார். ஆன்மீக வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளவை மனம், அகங்காரம், காமம், கோபம், மாச்சரியம் முதலியன. ஆன்மீக வளர்ச்சிக்குத் துணை செய்வன விவேகம், பொறுமை, சுசீலம், தவம், முதலியன இப்பண்புகளைக் கணவன், மனைவி, மக்கள் முதலிய மாந்தர்களாக உருவகப்படுத்திச் சமயத் தத்துவங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. வடமொழியில் அமைந்த இந்நூலை 1600 இல் திருவேங்கடநாதன் என்பவர் மெய்ஞான விளக்கம் எனும் பெயரில் தமிழில் காப்பியமாகப் பாடினார். மேலும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்ட "பிரபுலிங்கலீலை" முற்றுருவக நூல் வீரசைவசமயத்தைச் சார்ந்த இந்நூல் அல்லமர் மாயையை வென்ற செய்தியை விவரிக்கின்றது. சமயக்கொள்கை, தத்துவக்கோட்பாடு ஆகியவற்றை விளக்குவதற்கு உருவகக்கதை வடிவமும், உருவக மாந்தர் படைப்பு மிகுதியும் பயன்படுவதை விவிலியத்தின் மூலம் அறிந்த ஜான் பனியன், தமது நூலை உருவக வடிவில் படைத்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணபிள்ளையும் இரட்சணிய யாத்திரிகத்தை உருவகக் காப்பியமாகப் புனைந்தார். இரட்சணிய யாத்திரிகம் மேலோட்டமான பொருளில் ஒருவன் உலகத்தில் செய்யும் யாத்திரையை விவரிக்கிறது. ஆனால் உள்ளுறைப் பொருளில் ஒரு கிறித்தவனது வாழ்விலுள்ள ஆன்மீகச் செலவைச் சொல்லுகின்றது. அதாவது கிறித்தவ வாழ்க்கையே யாத்திரையாய் உருவகம் செய்யப்பட்டுள்ளது. உருவகத்தைப் பயன்படுத்தி மெய்ப்பொருளை விளக்குவது கிருஷ்ணபிள்ளையின் இலக்கியக் கொள்கையாகும்.

இரட்சணிய யாத்திரிகம் எனும் நூலின் தலைப்பும் உருவக அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது., சிறப்பிற்குரியது. கதையில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகள், மாந்தர்கள், இடங்களின் பெயர்கள் அனைத்தும் உருவக அடிப்படையில் அமைந்து முற்றுருவகத் தன்மைக்குச் சிறப்பினை அளிக்கின்றது. உலகம் நாசதேசம் என உருவகிக்கப்பட்டுள்ளது. நிதானபருவம், இரட்சணியபருவம் எனும் பெயர்கள் உருவக நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

மாந்தர்கள்:

இரட்சணிய யாத்திரிகத்தில் படைக்கப்பட்டுள்ள மாந்தர்கள் உண்மை வாழ்வில் உள்ளவர்களே. இவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் நடுநிலையில் உள்ளவர்களும் உள்ளனர். இவர்களது பெயர்கள் அனைத்தும் மக்களின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவகங்களாகப் படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணபிள்ளை மாந்தர்களின் பெயர்களை மொழியாக்கத்தில் உள்ளது போல் படைக்காமல் காப்பியக்கதைக்கு ஏற்றவகையில் உருவகமாகப் பெயர் சூட்டிப் படைத்துள்ளார். பாவத்தில் உழன்ற ஒருவனே கிறித்தவனாக உருவகம் செய்யப்பட்டுள்ளான். கிறித்தவன் எனும் பெயரைக் கொண்டு காப்பியத் தலைவன் தனக்கு ஏற்பட்ட சோதனைகள் அனைத்தையும் வென்று இரட்சணியத்தைப் பெற்றுத் தன்னிகரில்லாத் தலைவனாக விளங்குகிறான். கிறித்தவனின் பல்வேறு பெயர்கள் அனைத்தும் மக்களின் பல்வேறு பண்புகளைக் குறிக்கும் வண்ணம் உருவகமாகப் படைக்கப்பட்டுள்ளன. ஆன்மீகன், ஆத்துமா விசாரி வேதியன், நிவர்த்தன், மறைக்கிழவன், பனவன், ஆரியன், மெய்விசுவாசி, செஞ்சொலரணன் வேதியர் திலகன் மறைவலாளன் ஆரணக்கிழவன் எனும் பல்வேறு பண்புகளைக் குறிக்கும் பெயர்கள் காப்பியத் தலைவனான கிறித்தவனுக்கு உருவகமாகச் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் மூலம் கிறித்தவனின் அனைத்துப் பண்புகளும் தெரியலாகின்றன. காப்பியத்தில் வரம் குரு, நிதானி, நம்பிக்கை ஆகியோரை இன்றியமையா மாந்தர்களாகக் குறிப்பிடலாம். யாத்திரையில் கிறித்தவனின் மனம் சோர்வுறும் போதெல்லாம் அவனிடம் தோன்றி அவனை நெறிப்படுத்துபவராக குரு விளங்குகிறார். யாத்திரையில் கிறித்தவனுக் நிதானி, நம்பிக்கை ஆகி இருவரும் வழியில் துணைவர்களாக இணைகின்றனர். நிதானி மாயாபுரியில் கொலைத் தண்டனையுற்று இரத்த சாட்சியாகிறான். கிறித்தவன் மனம் தளரும் இடங்களில் நம்பிக்கை நெறிப்படுத்தி வழி விலகாமல் அழைத்துச் செல்கிறான். இறுதியில் இருவரும் மரண ஆற்றைக் கடந்து முத்தியடைகின்றனர். துணைமாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ள மென்னெஞ்சன், வன்னெஞ்சன், காமமோகிதன், பிரபஞ்சன், சகாயன், அழிம்பன், விமலன், அறிவீனன், நிலைகேடன், தூர்த்தன், அறப்பகை, விடாதகண்டன், கார்வண்ணன், இணங்கு நெஞ்சன், மாயசாலகன், மாயவேடன், கண்ணிலி, நன்றிலி, குரோதி, காமி, வீணன், துணிகரன், வம்பன், விரோதி, சழக்கன், நிட்டூரன், இருட்பிரியன், முழுப்பொய்யன், விவேகி, யூகி, பக்தி, சிநேகிதி எனும் மாந்தர்பெயர்கள் அனைத்தும் பண்பு உருவகப் பெயர்களே. மனத்தின் நன்மை, தீமை கூறுகளே நல்ல மாந்தராகவும் தீய மாந்தராகவும் உருவாகமாகப் படைக்கப்பட்டுள்ளன.

இடங்கள்:

இரட்சணிய யாத்திரிகத்தில் இடம்பெற்றுள்ள இடங்களின் பெயர்களும் உருவக அடிப்படையில் அமைந்துள்ளன. எழிற் சத்திரம், நாசபுரி, மாயாபுரி, தருமபுரி, மரணநிழலின் பள்ளத்தாக்கு, துன்பமலை, அவநம்பிக்கைஉளை, வருத்தமெனும் மலை, ஈடெற்றமதில், மரண ஆறு, உபாதி மலை, ஆனந்த மலை, தாழ்மைப் பள்ளத்தாக்கு சோகபூமி, அவமார்க்கபுரம், தருமசேத்திரம், சீயோன்மலை, திட்டிவாயில், அறமலை, சந்தேக துர்க்கம், பொருளாசைத் திடர் போன்றவை பல்வேறு பண்புகளின் அடிப்படையில் உருவகமாக அமைந்த பெயர்களாகும் கிறித்தவன் மோட்சப் பிரயாணம் செய்யும் போது இவ்விடங்களின் வழிச்சென்று இறுதியில் இரட்சணியத்தை அடைகிறான்.

நிகழ்ச்சிகள்:

கிறித்தவன் அழிம்பனோடு செய்யும் போர் தீயமனத்தோடு செய்யும் உருவகப் போரேயாகும். கிறித்தவன் தாழ்மைப் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது அழிம்பன் எனும் அரக்கன் கிறித்தவன் முன் தோன்றுகிறான். அவனை கிருஷ்ணபிள்ளை.

"நஞ்சமும் அவித்தையும் இருளம் நாசமும்
வஞ்சமும் கொடுமையும் மறமும் தீமையும்
செஞ்சவே திரண்டு உருத்தெரிய நன்றிடும்
அஞ்சனக் கருநிறத்து அவுண யாக்கையன்"

எனக் கூறுகிறார். கிறித்தவன் அழிம்பனின் அஞ்சத்தகும் தோற்றத்தினையும் ஆரவாரத்தினையும் கண்டு அஞ்சினாலும் தேவ வல்லமையினால் அழிம்பனை எதிர்த்து நிற்கிறான். அழிம்பனின் நயவுரைகளைக் கேட்ட கிறித்தவன், அழிம்பனை நோக்கி நீ சொல்வது வீடுதோறும் சென்று மீதமுள்ள உணவை உண்ணும் நாய் ஒரு சிங்கத்தினை நோக்கி, உனக்கு முடி சூட்ட வழி செய்வேன் எனக் கூறுவது போல் இருக்கிறது என்றான். பின்னர் இருவருக்கும் இடையே கடுமையான போர் நடைபெறுகிறது. அழிம்பன் எரிமுக, வசை, கார்முக, கொடுஞ்சொல், சாபம், பகைமை சினம் எனும் அம்புகளைக் கிறித்தவன் மீது செலுத்துகிறான். அதைக் கிறித்தவன் விசுவாசம் எனும் கேடயத்தால் முறியடித்து விடுகிறான். சின அம்புகளால் காயமுற்று கிறித்தவன் மயங்குகிறான். அசதியின் காரணமாக சிறிது நெகிழ்ந்த பட்டயம் இறைவனின் திருவருளால் கரங்களில் மீண்டும் வந்தது. இறுதியாக அழிம்பனது மார்பில் திருமறை எனும் மந்திரவாளைச் செலுத்தி வெற்றி ஆரவாரம் செய்கிறான். அழிம்பன் மார்பில் வாளைப்பாய்ச்சி ஆன்மிகன் வெல்வது தீயமனதை நல்மனம் வெற்றி கொள்வதாகும்.

பாடல்களில் உருவகம்:

இவ்வாறு காப்பியமே முற்றுருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு பாடல்களிலும் உருவக அணி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக பரிசுத்த ஆவியின் செயல்களை உழவுத் தொழில் முறைமை மாறுபடாமல் உருவக முறையில் ஆசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார்.

"கோட்டமற்று உளம் திருத்திக் குலவுமெய்ப் பக்தி வித்தி
நாட்டம் வைத்து அருள்நீர் பாய்ச்சி நலிவெலாம் அகற்றி யாதும்
வாட்டம் இன்றாக ஓம்பி வரகதி விளைவித்து அன்பர்
ஈட்டம் ஆர்த்து உய்த்துய்ப்பிக்கும் இதயநாயகனே போற்றி"

எனும் இப்பாடலில் பரிசுத்த ஆவி மனம் எனும் வயலை உழுது, மெய்ப்பக்தி எனும் விதைவிதைத்து, அதனைப் பாதுகாத்து, அன்பு எனும் நீர்ப்பாய்ச்சி நலிவு எனும் களையகற்றி முளைத்த பயிரை வாடாமற் காத்து நற்கதி எனும் விளைச்சலை விளைவித்து அடியவர்களை வாழச் செய்யும் என்று உருவக நிலையில் கூறப்பட்டுள்ளது. தமிழில் அமைந்த முற்றுருவகத் தன்மை கொண்ட இலக்கியங்களில் இரட்சணிய யாத்திரிகம் தனிச்சிறப்பு கொண்டதாக விளங்குகிறது. காப்பியமாந்தர், இடங்கள் நிகழ்ச்சிகள் முதலிய பல்வேறு நிலைகளில் இரட்சணிய யாத்திரிகத்தின் முற்றுருவகத் தன்மை முழுமையும் செழுமையும் கொண்டதாகத் திகழ்கின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link