ஆய்வுச் சிந்தனைகள்


மேலாண்மை பென்னுச்சாமியின் சிறுகதைகளில் மொழிநடை

முன்னுரை:

பொன்னுச்சாமியின் சிறுகதைத் தொகுதிகள் பல இருப்பினும் மானாவரி சம்சாரிகளுக்குச் சமர்ப்பணம் செய்த மானுடப்பிரவாகம் என்னும் சிறுகதை தொகுதியில் உள்ள பதிமூன்று கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றின் மொழிநடை எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மண்ணையும், மனிதனையும் நேசிக்கிற எதார்த்தமான சிறுகதைகள் ஏராளமாய் வருகின்ற சூழலில் மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் கிராமியச் சூழலையும் அங்கு வாழும் ஏழை எளியவர்களின் ஆசாபாசங்களையும் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் அவலங்களையும் நயமுடன் சித்தரிக்கின்ற ஒவ்வொரு கதையும் மனித நேயத்தை அடிச்சரடாகக் கொண்டு படைக்கப்பெற்றிருக்கிறது.

நடை(Style):

இலக்கியத்திற்குப் பலம் கொடுத்து சொற்களுக்கு உயிரும், ஊட்டமும் கொடுப்பதற்கு முக்கியமான அம்சமாக விளங்குவது இனிய எளிய நடைதான். நடை என்பது ஓர் ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லது. "The Style Reveals the Personality of the Author" என்பார். ஒரு படைப்பின் தன்மையை அளவிடும் பல்வேறு உத்திகளுள் நடையை ஆய்வதும் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாவல், சிறுகதை போன்றவற்றுள் பாத்திரங்கள் தமக்குள்ளே உரையாடும்போது ஒரு நடையும், ஆசிரியர் கூற்றாக வரும்போது மற்றொரு நடையும் கையாளப்படுகிறது. இதனைக் கதை கூறும் எழுத்து நடை, கதைமாந்தர் உரையாடும் பேச்சு நடை என்கிறது படைப்பிலக்கியம்.

"இலக்கியத்தைச் சுவைப்பதற்கு அடிப்படையான தேவைகளாக நிலை, பின்னணி, வடிவம், கருத்து ஆகிய நான்கும் கருதப்படுகின்றன" நிலை பின்னணி இவை இரண்டும் படைப்பிற்கு வெளியே இருந்து புறப்பட்டவை, வடிவம், கருத்து ஆகியவை படைப்பிற்கு உள்ளிருந்து புறப்பட்டவை. "கருத்து வடிவம் ஆகிய இரண்டும் நடையியலில் இன்றியமையாத இடத்தினைப் பெறுவதால் இவ்விரண்டிற்குமிடையே அமையும் உறவுமுறைகளை அறிந்து கொள்வதற்கு நிலையும் பின்னணியும் இன்றியமையாத தேவைகளாகின்றன."

வடிவம்:

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் நீண்ட தொடர், சிறிய தொடர் ஒரு சொல்லே தொடராக அமையும் அமைப்புகளும் காணப்படுகின்றன. நீண்ட தொடர்கள் பெரும்பாலும் கதை ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக "மானுடப் பிரவாகம்" என்னும் கதையில் "ராசாத்தி மகன் பாண்டி செத்துப் போனான் என்ற அதிர்ச்சி தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது". "மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகள் பெரும்பாலும், படைப்பாளி தானே கதையைச் சொல்வதாக அமைந்துள்ளது. பாத்திரங்களின் மனஉணர்வுகளைக் கூறும்போது வருணனையுடன் நீண்ட தொடராக அமைந்துள்ளன. சான்றாக "இயலாமை" என்னும் கதையில் "தான் குடிக்கிற சாராயத்தினால் இரண்டு இதயங்கள் கிழிபட்டு கந்தல் கந்தலாய்க் கிடக்கிற குற்ற உணர்வு மனசில் முள்ளாக உருத்தி வேதனைப்படுத்த ஏதோ அவலமாய் முனகிவிட்டு அப்படியே செத்துப்போனது" என்பது போன்ற நீண்ட தொடர்கள் அமைந்துள்ளன.

சிறிய தொடர்கள் பெரும்பாலும் கதையை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்ற அமைப்பிலே காணப்படுகின்றன. சான்றாக "இயலாமை" என்னும் கதையில், கண்ணாடியைக் கீழே வைத்துவிட்டுச் செருமினான். தலையோடு சேர்ந்து மனசும் பாரமாய்க் கனத்தது. பார்வதியையும் ராசுவையும் நினைத்துக் கலங்கியது மனசு. என்ன ஆனாலும் சரி இந்தத் தண்ணிச் சனியனை கையாலே தொடவே கூடாது" என்று வரும் தொடர்கதை நிகழ்ச்சியை விவரிக்கும்பொழுது அமைந்துள்ளது. சிறு சிறு தொடர்களை பயன்படுத்தும் பொழுது ஒரே எழுவாயின் செயல்களே தொடர்ந்து வருமானால் வினைமுற்றுகளை எச்சங்களாக மாற்றி ஒரே தொடராகப் பயன்படுத்தாமல் வினைமுற்றுகளாகப் பயன்படுத்திச் சிறுசிறு தொடர்களாகப் பயன்படுத்துகின்ற அமைப்பினையும் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணலாம். சான்றாக "மானுடப் பிரவாகம்" என்னும் கதையில் "இவனுக்கு ஆத்திரமாய் வந்தாலும் சகித்துக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்" என்று வினைமுற்று தொடர்களாக அமைந்துள்ளன.

தாக்கங்கள்:

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் வட்டார வழக்குச் சொற்களும் மக்களின் இயல்பான பேச்சுக்களில் காணப்படும் பொருளற்ற சொற்களும் விரவிக் காணப்படுகின்றன. சான்றாக "உயிரைவிட" என்னும் கதையில் "மசக்கம் கிசக்கம் வந்துராம பார்த்துக்கோ" பதறி துடித்த மனிதர்கள் அல்லோல கல்லோலப்பட்டனர்" என்றும், "மறுமுகம்" என்னும் கதையில் "நல்லது பொல்லதுன்னு ஒரு வீட்டுக்குப் போனா நகையுமில்லாம நட்டுமில்லாம, வெறுமனையா நிக்க வேண்டியிருக்கு" என்றும் "விசாரணை" என்னும் கதையில் "அலையக் குலையப் பெரு வாய்க்காலுக்குள் ஓடினான்" என்றும் பொருளற்ற சொற்கள் வருவதன் மூலம் பாமரரும் புரியும் அளவிற்குச் சிக்கல் இல்லாத தெள்ளிய நடையாக அமைந்துள்ளது. மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பாமரமக்களின் உரையாடலில் காணப்படும் ஆங்கிலச் சொற்கள் விரவிக் காணப்படுகின்றன. சான்றாக "இயலாமை" என்னும் கதையில் சில்வர் கேனிலிருந்து தண்ணீரைப் பிடித்து இரண்டு கிளாஸ் குடித்தான் என்றும் "பஸ்சை தட்டி ரைட் போகலாம் என்று சத்தம் கொடுக்கிறார்" என்றும் ஆங்கிலச் சொற்கள் விரவிக் காணப்படுகின்றன.

மரபுத்தொடர்புகள்:

உரையாடலில் மேலாண்மை பொன்னுச்சாமி பற்பல இடங்களில் மரபுத் தொடர்களையும் கையாண்டுள்ளார். சான்றாக "மானுடப் பிரவாகம்" என்னும் கதையில் சபையிலே கரியைப் பூசிட்டானே இவனெல்லாம் மச்சானா என்று சாடை மாடையாய்ப் பேசினான் என்றும் மாயமான் என்னும் கதையில் சரி, இது கை சேர்றகாரியமில்லே, ராமரை ஏமாத்துன மாயமான் கதைதான் போலிருக்கின்னு முடிவுக்கு வந்து கை கழுவியாச்சு என்றும் "இயலாமை" என்னும் கதையில் "என்ன ஆனாலும் சரி இந்த தண்ணிச் சனியனை கையிலே தொடவே கூடாது" என்றும் பல மரபுத் தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

ஒலி உணர்த்தும் சொற்கள்:

பற்பல இடங்களில் ஒலி உணர்த்தும் சொற்களைக் கதையில் பயன்படுத்தியிருப்பதும் கதையின் அமைப்பிற்கும் ஓட்டத்திற்கும் கதாபாத்திரங்களின் மேலே காட்டிய தொடர்களில் அமைந்து வரும் ஒலி உணர்த்தும் சொற்கள் பெரிதும் உதவுவனவாகவும் அமைந்துள்ளன.

"ச்சே இதுக்குப் பிறகு அந்த வீட்டு வாசப்படி நா மிதிக்கவா"
"ம்ம்..........வாரேன்"

கதாபத்திரங்களின் செயல்களை விளக்கவோ நிகழ்ச்சிகளை விவரிக்கவோ இன்றியமையாததாகவும் அமைகின்றன.

உவமைகள்:

மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகளில் பற்பல இடங்களில் பல உவமைகள் ஆட்சி பெற்றுள்ளன. இவ்வுமைகள் கதை அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கதை செய்திகளை விளக்குவதாகவும் இனிய தன்மையுடையதாகவும் காணப்படுகின்றன. சான்றாக "பிறந்த போதினிலே" என்னும் கதையில் "பொட்டை கண்ணுதான் போட்டிருக்கு என்பதை உடைந்த இசை தட்டுப்போல நாராயணி ஓயாமல் உல்லாசக் குரலில் கத்தினாள்" என்றும் "அரும்பு" என்னும் கதையில் இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபிஸ் "பஸ்ஸின் ஹாரன்" என்றும் ஒரு பிரேதத்தைப் போல அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது அந்த அரும்பு என்று பொன்னுச்சாமியின் கதைகளில் வரும் உவமைகள் கதாப்பத்திரங்களின் நிலைமைக்கு ஏற்றாற் போல் உவமைகளை அழைத்துள்ளார். பொதுவாகப் படைப்பிலக்கியங்களில் உவமை ஆட்சி பெறுவது கருத்துச் சுருக்கத்தினைத் தெளிவுபடுத்தவும், அதோடு வாசகன் நினைந்து நினைந்து மகிழவும் துணை செய்யும்.

அடுக்குத் தொடர்கள்:

மேலும் பல இடங்களில் நிகழ்ச்சிகளை விவரித்து அதனை வளர்த்து உயிரோட்டம் உள்ளனவாகச் செய்யும் பொழுது ஒரு சொல்லையோ அல்லது ஒரே வகையான அமைப்புடைய சொற்களையோ பயன்படுத்துவதனையும் காணலாம். சான்றாக, "மானுடப் பிரவாகம்" என்னும் கதையில் மனசில் சுரீரிடுகிற உணர்வுகள். வெக்கை அடிக்கிற அனலாக நினைவுகள். ரோஷமாய் எழுகிற அக்கினி என்றும் உள்ளே சின்ன முகம் காட்டுகிற பாண்டி பூஞ்சிரிப்போடு எச்சில் வடிக்கிற பாண்டி கால் முளைத்த பூச்செண்டாக ஓடுகிற பாண்டி என்று அடுக்கி வருவதைச் சான்றாகக் காணலாம். இத்தொடர் கதாப்பாத்திர வருணணையாக அமைந்துள்ளது.

முடிவுரை:

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் கதையோட்டத்தை வளர்க்க நீண்ட தொடர்களும் சில இடங்களில் குறுகிய தொடர்களும் அமைந்துள்ளன. பிறமொழிச் சொற்கள் கலந்ததும் மக்களின் பேச்சு வழக்கில் காணப்படும் பொருளற்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன மற்றும் உவமைகள், அடுக்குத்தொடர்கள், மரபுத்தொடர்கள் இடம்பெறுவதால் உய்த்துணர வேண்டிய சிக்கல் இல்லாத தெள்ளிய நடை என்று கூறலாம். மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகள் சிறப்புற்றமைய அவர் கையாண்ட மொழி நடையும் தலையாய ஒன்றாகும்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link