ஆய்வுச் சிந்தனைகள்


புறநானூற்றுப் பாடல்கள் உணர்த்தும் கொடை

சங்கக்கடலில் "புறநானூறு" என்னும் நூல் வரலாற்று பெட்டகமாக விளங்கக் காணலாம். இதன் கண் வீரம், கொடை இரு கண்களாக போற்றப்படுகின்றன. உலகத்தில் வாழும் உயிர்களின் முதல் தேவையாக கருதப்படுபவை உணவு. எனவே அனைத்து இலக்கியங்களிலும் உணவுக் கொடை முதன்மைபடுத்துவதை காணலாம்.

"ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு"

என்னும் பாடலடிகள் ஒரு பெண் யானை படுக்கும் இடத்தில் வேளாண்மை செய்தால் ஏழு ஆண் யானைக்கு தேவையான உணவை விளைச்சலாகப் பெறலாம் என்று வேளாண்மையின் வளத்தை விளக்கினாலும் வறுமையும் இருக்கத்தான் செய்திருக்கிறது என்பதை தெரிவிக்கின்றன. வறுமை என்ற கொடிய நோய் மக்களையும் சில நேரம் மன்னனையும் விட்டு வைக்கவில்லை. வறுமை ஏற்பட்ட பொழுது அரசன் கவிபாடும் புலவர்களுக்கும், மக்களுக்கும் வாரி, வாரி செல்வத்தை அளித்துள்ளான் என்பதைச் சங்கப்பாடல்களில் தெரியமுடிகிறது. மன்னன் புலவர்களுக்கு வழங்கப்பட்ட கொடையானது அப்புலவனுக்கு தேவையான கொடையா? தேவைக்கு அதிகமான கொடையா? என்னும் கேள்விகளுக்கு விடை காணும் கண்ணோட்டத்தில் பார்த்து அதன் மூலம் எழும் சிக்கல்களை அறிய முயலும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடை குறித்தனவற்றை கீழ்க்கண்ட முறையில் பிரித்தறியலாம். 1. சோறளித்த சிறப்பு, 2. பெருஞ்செல்வம் கொடுத்த சிறப்பு, 3. தேர்க் கொடை, 4. யானைக் கொடை என்று வரிசை நீண்டு செல்லும்.

சோறளித்த சிறப்பு:-

உயிர்களின் இன்றியமையாத தேவை உணவு. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி நானூற்றில் வரும் பாடலடி உணவின் தேவையை முதன்மைப்படுத்துகிறது.

மோசிக்கீரனார் என்ற புலவர் நாட்டை ஆளும் மன்னனின் இன்றியமையாமையை,

"நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்று பாடுகின்றார். பரந்த இந்த உலகத்துக்கு மன்னன் மட்டுமே உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை என்பது உயிரை நிலைப்பெறச் செய்யும். நெல்லும், நீரும் மன்னன் ஆட்சி செலுத்தினால் மட்டும் நிலை பெறுகிற காரணத்தால் மன்னன் உலகத்துக்கு உயிர் என்பதை அறிய முடிகிறது.

ஒளவையார் "கோன் உயர" என்ற பாடலடி மூலம் மன்னன் உயர வேண்டும் எனில் நெல் வளர்ந்து செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மேற்கண்ட செய்திகள் மூலம் அரசனின் கீழை குடிகள் வாழ்கின்றனர். அரசன் தன்னுடைய நாட்டில் பஞ்சம், பட்டினி வந்த போது அக்காலத்துக்கும் பல்வேறு வகையான உணவைச் சமைத்து புலவர்களுக்கும், மக்களுக்கும் மன்னன் உணவளித்த செய்தியைக் காண முடிகிறது.

"எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே"

என்ற பாடலடியின் மூலம் அக்காலத்தில் மன்னர்கள் இரந்து பின் நின்ற புலவர்களுக்கு உணவு கொடுத்துச் சிறப்பித்த செய்தியை காணமுடிகிறது.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் சிறப்பித்துப் பாடும் போது உணவளிக்கும் சிறப்பைப் பாடுகின்றார்.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே!"

பெருஞ்செல்வம் கொடுத்த சிறப்பு:-

சேர்மான் கடுங்கோ தன்னைப் பகைத்தவரின் காவல் அரண்களை அழித்த செய்தியைப் பாடிய பாடினிக்குப் பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களைப் பரிசாக அளித்தான். அவளோடு பாணனும் பொன் தாமரை பெற்றுச் சென்ற செய்தியும் கூறப்படுகிறது. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடும் போது நலங்கிள்ளி இரக்கமுள்ளவன். அவனை நாடி ஒருவன் பிச்சைப் பாத்திரம் யாசித்தால் கருவூர் நகரத்தையே தரும் பண்புடையவன். விறலியர் வேண்டின் மாட மாளிகைகள் விளங்கும் மதுரை நகரையே தரும் இயல்புடையவன். இதன் மூலம் பெருஞ்செல்வம் கொடுத்த செய்தியானது பெறப்படுகிறது. மேற்கண்ட செய்திகளின் மூலம் புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடின் மன்னம் வாரிச் செல்வத்தை வழங்கினான் என்பது புலவர்களின் கற்பனையே அன்றி உண்மையாகாது. கவிபாடும் புலவனுக்கு இப்பொருளானது தேவையற்றவையாகக் கருத முடிகிறது. அவ்வாறாயின் புலவன் ஏன்? மன்னனை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பாடவேண்டும் எனப்பார்க்கும் போது பாடப்படும் மன்னன் அப்புலவனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

தேர்க்கொடை:-

கபிலர், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனைப் போற்றுகிறார். அவன் பொன்னால் செய்யப்பட்ட தேர்களைக் கொடையாக வழங்குகிறான். அவன் வழங்கிய தேர்கள் எண்ணிக்கை முள்ளுர் என்னும் மலையில் பெய்த மழைத்துளிகளை விடப் பலவாகும். மேற்கண்ட முறையில் பல மன்னர்கள் இலவலருக்குத் தேர் அளித்த செய்தியை காணமுடிகிறது.

யானைக் கொடை:-

சங்கப் பாடல்களில் பல இடங்களில் அரசன் இரவலருக்கு யானைக் கொடை கொடுத்துச் சிறப்பித்தமையைக் காணமுடிகிறது. வானத்தில் விளங்கும் நட்சத்திரங்களினும் மேலாக யானைகளை இரவலருக்கு கொடுத்தான் என்று ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பை எடுத்துகாட்டுகிறார் ஏணிச்சேரி முடமோசியார். இதன் மூலம் அக்காலத்தில் தன்னிடம் பொருள் வேண்டி நின்ற இரவலருக்கு யானையைக் கொடுத்துத் தன்னுடைய புகழையும் பெருமையையும் பறைசாற்ற அரசன் முற்ப்பட்டானா என வினவத் தோன்றுகிறது.

ஆடை அளித்தல் அதியமான் பொருட்டெழினி ஒளவையாரின் கந்தல் ஆடையைக் களைந்து புது ஆடையைக் கொடுத்துக் கௌரவித்தான் என்பது கூறப்படுகிறது.

"ஊருண் கேணி பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீங்கி நேர்கரை
நுண்ணற் கலிங்கம் உடீஇ உண்மெனத்
தேன் கடுப்பு அன்ன நாட்படு தேறல்"

ஊரார் நீருண்ணும் கேணியில் படர்ந்த பெரிய இலையை உடைய பாசியின் வேர் போலக் கிழிந்த என் உடையை நீக்கி விட்டு, நேரிய கரையை உடைய நுட்பமான நூலால் ஆன ஆடையைத் தந்து உடுக்கச் செய்து "உண்ணுங்கள்" என்று தேனின் கடுப்பினை போன்று புளிப்பேறிய கள்ளை எமக்களித்தான். இதனையே மணிமேகலையும்,

"அறம் எனப்படுவது யாதென கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுள் கண்டது இல்"

எனப் பாடுகின்றது. மன்னர்கள் மக்களுக்கும், புலவர்களுக்கும் உணவு ஆடை கொடுத்து அவர்களைக் காத்து வந்தனர் என்ற செய்தியை இப்பாடலடிகளால் தெரியலாம். இதன் மூலம் அக்காலத்தில் வழங்கப்பட்ட உணவுக் கொடையானது ஒரு புலவனுக்கு அடிப்படையில் தேவையானக் கொடையாகக் கருதமுடிகிறது.

புலவரும் அரசரும்:-

புலவர்கள் பாடிய பாடல்கள் மூலமே மன்னர்தம் சிறந்த கொடைத்தன்மைகள் தெரியவருகின்றன. புலவர்கள் பெரும்பாலும் தமக்கு பொருளுதவி அளித்துத் தம்மைப் பாதுகாத்த அரசனையே கொடைத் தன்மைகளில் சிறந்தவர் வீரர் என்று போற்றிப்பாடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். அதியமான் கொடைத் தன்மையையும், வீரத்தையும் ஒளவையார் மட்டும் அதிக பாடல்களில் புகழ்ந்து பாடுகிறார். அதேப்போல் கபிலர் - பாரி கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் - பொத்தியார் - சோழன் கிள்ளிவளவன் - கோவூர்கிழார் என்றிவ்வாறான புலவர், அரசர் நட்பையும் தெரியமுடிகிறது என்பதை நோக்கும் போது தம்மை ஆதரித்துக் காத்து வரும் அரசனின் புகழ் வேண்டி கற்பனையாகத் தேவைக்கு அதிகமான பொருள் கொடுத்ததாக பாடல்களில் காண முடிகிறது.

புவி ஆளும் அரசன் மக்களுக்கும், புலவர்களுக்கும் பல்வேறுவகையான கொடைகளை அளித்துள்ள செய்தி புறநானூற்றுப் பாடல்களில் கிடைக்கப் பெறுகின்றன. கவிபாடும் புலவனுக்கு உணவும், ஆடையும் கொடுத்த கொடையே தேவையானவை என்றும், உண்மையானவை என்றும் கருதலாம். பெருஞ்செல்வம் கொடுத்த சிறப்பை பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட புலவன் தன்னைப் புகழ்ந்து பாடின் புகழில் மயங்கிய மன்னன் விலை அதிகமுள்ள யானை, குதிரை, பொன்னால்ஆன தாமரை, நிலம், மாட மாளிகை என்பனவற்றைக் கொடுத்துள்ளான் என்று பாடப்பட்டிருப்பது கற்பனைப்புனைவாகக் கொள்ளலாம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link