ஆய்வுச் சிந்தனைகள்


நாட்டுப்புறத் தற்காப்புக் கலைகளில் களரிப்பயிற்று


சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் "தற்காப்புக் கலைகள்" என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில் களரிப்பயிற்று பற்றியும் களரியில் சிலம்பம், வர்மம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

களரிப்பயிற்று:

களரிப்பயிற்று என்ற கலை "களரி" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம் (கழகத் தமிழகராதி) என்றும் பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைந்து "களரி பயிற்றுவித்தல்" என்று வழங்கப்படுகிறது. களரி பயிற்றுவித்தல்" என்ற தமிழ்ச்சொல் "களரிப்பயிற்று" என்று மருவி வழங்கப்படுவதாகக் கருதப்படுகிறது. (க.இரவீந்திரன் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை) இது தமிழகத்தின் பழமையான வீரவிளையாட்டுக் கலையாகும். எதிரியைத் தாக்கவும் மடக்கவும் இக்கலை உதவுகிறது.

களரிப்பயிற்றின் வகைகள்:

மக்களிடையே இக்கலை வழங்கப்படும் நோக்கில் இரண்டு வகை, மூன்று வகை, நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். வடக்கன் களரி, தெக்கன் களரி, என இரண்டு வகைப் பிரிவுகள் உள்ளன. (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை). வடக்கன் களரி, தெக்கன் களரி, மத்திய களரி என மூன்று வகைப் பிரிவுகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர் (கோபுடா எஸ்.கிருஷ்ணமூர்த்தி உலக தற்காப்புக் கலைகள்). வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் களப்பணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் திருவிதாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெக்கன் களரி உருவானதாகவும் கேரளாவில் மலபார், கோகர்ணம் போன்ற பகுதிகளில் வடக்கன் களரி உருவானதாகவும் குறிப்பிடுகின்றனர். கோட்டயம், திருச்சூர் போன்ற பகுதிகளில் தெக்கன் களரி மற்றும் வடக்கன் களரி கலந்த பயிற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது. இதை மத்திய களரி என்று வழங்குகின்றனர். இக்கலையை முற்காலங்களில் சத்திரியர்களும் போர் வீரர்களும் அரச குடும்பத்தினரும் கற்றுள்ளனர். நாளடைவில் சாதி மத அடிப்படை இல்லாமல் அனைத்து மக்களும் கற்று வருகின்றனர்.

களத்தின் அமைப்பு:

களரிக் களமானது 42 அடி நீளமும் 21 அடி அகலமும் சுற்றிலும் 9 அடி உயரத்திற்கு மதில் சுவர் கட்டப்பட்டதாகவும் இருக்கும். 42 அடி நீளமும் 21 அடி அகலமும் கொண்ட களம் தரை மட்டத்திற்குக் கீழ் அமைக்கப்பட்டு மேல் பகுதியில் தென்னங்கீற்றுக் கூரை வேயப்பட்டிருந்தால் அது "குழிக் களரி" என்று அழைக்கப்படுகிறது. களரிக் களத்தின் தென் மேற்கு மூலையில் (கன்னி மூலை) கால் வட்ட வடிவில் ஏழு படிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஏழாவது படியில் களரி தெய்வத்தை (சிவன் அல்லது விஷ்ணு) வைத்து பூஜிப்பர். இந்தப் பகுதிக்கு "பூத்தறை" என்று பெயர். இந்த படிகளின் இரு பக்கங்களிலும் ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

பயிற்சியின் வகைகள்:

வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கதாரி, வெறுங்கைப் பிரயோகம் என்னும் பயிற்சி முறைகள் உள்ளன.

வாய்த்தாரி:

வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்வர். இவ்வாறு வாய்மொழியாகப் பாடும் பாடலை வாய்த்தாரி என்று வழங்குகின்றனர். இப்பாடல் பிறருக்குப் புரியாத அடையாள வார்த்தைகளால் அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.

"தொழுது மாறினு வச்சு வலத்து சவுட்டி
வலந்திரிஞ்நு இடது கொண்டு இடது காலின்றெ வெள்ள தொட்டு
கைநீர்த்தி கைக்கு நோக்கி கை நெற்றிக்கு வச்சு வணங்கியமர்ந்து
வலத்து நேரே மும்பில் சவுட்டி இடத்து கொண்டு
இடது காலின்றெ....."

மெய்த்தாரி:

மெய்த்தாரி என்பது களரிப்பயிற்சி முறைகளை மிக நன்றாகச் செய்யும் வண்ணம் உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

"கை தொழுது மாறத்துப் பிடிச்சு வலத்து சவுட்டி
வலபாகம் திரிஞ்நு நீர்ந்து இடது காலின்றெ வெள்ள தொட்டு
தொழுதமர்ந்து முட்டூந்தி கும்பிட்டு......"

அங்கதாரி:

ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறைகளை அங்கதாரி என்று அழைக்கின்றனர். இதனைப் பின்வரும் பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

"அமர்ந்து அங்கம் தொட்டு வந்திச்சு
அங்கமெடுத்து களரிக்கு வந்நிச்சு கைகூட்டி
நெஞ்சத்து வச்சு வணங்கியமர்ந்து பொங்கி உளவு
மாறி வலத்துளவுட இத்துளவு......."

கோல்த்தாரி:

கோல்த்தாரி என்பது கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையாகும்.

வெறுங்கைப்பிரயோகம்:

கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் பயிற்சி முறையாகும்.

ஆசனங்கள்:

ஆசனங்கள் என்பவை உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சி முறைகளாகும். ஆசனங்களை யோகாசனங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆசனங்களின் வகைகளாக பத்மாசனம், சிரசாசனம், உத்கட்டாசனம், பசுமுகாசனம், மயூராசனம், ஏகபாதாசனம், மகராசனம், புஜங்காசனம், மேருதண்டாசனம், சலபாசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், வஜ்ராசனம், சவாசனம் போன்றவற்றைத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுதங்கள்:

கோல்த்தாரியில் இடம் பெறும் ஒரு சாண் கம்பு, முச்சாண் கம்பு(மூன்று சாண் கம்பு) ஆறு சாண் கம்பு, ஒற்றைக் கம்பு, பன்னிரண்டு சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் மூக்கு வரை நீளமுடையது) ஆகியவையும் அங்கதாரியில் வாள், வடிவாள், சுரிகை, உறுமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி (கெட்டுகாரி), வெண்மழு, குந்தம் (ஈட்டி), பரிஜை (கேடயம்), கெதை ஆகிய ஆயுதங்களும் இடம் பெறுகின்றன.

களரியும் வர்மக்கலையும்:

உடலில் மறைந்துள்ள முக்கியமான இடங்களைக் கணித்து அவற்றைத் தாக்கி எதிரியை நிலை குலையச் செய்யும் கலை. நாடி நரம்புகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலைத் திகழ்கிறது வைத்திய முறைக்கும் பங்களிக்கிறது உடலில் அடிப்பட்ட இடத்தில் வர்மம் கொண்டிருந்தால் அதற்கேற்ப வைத்திய சிகிச்சை முறையை மேற்கொள்வர் இந்த முறையை "சித்த வர்ம வைத்தியம்" என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர் (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). இந்த சிகிட்சை முறையை களரி ஆசான்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

களரிப்பயிற்றில் சீடர்கள் பயிற்சியின் போது வர்மம் கொள்ள நேர்ந்தால் ஆசான்கள் உடனடியாக சிகிச்சை செய்து அவர்களைக் காப்பாற்றுவர். களரி பயிற்றின் வாரி, ஆனவாரி இவை போன்ற பூட்டுகள் வர்மப் புள்ளிகளைக் குறிவைத்தே செய்யப்படுகின்றன. இந்த வர்மமும் வர்ம வைத்திய முறையும் அகத்திய முனிவரின் தலைமையிலான சித்த முனிவர்களால் எழுதிவைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் 108 வர்மப் புள்ளிகள் காணப்படுகிறது. வர்மப் புள்ளிகளை உடம்பில் கொள்ளச் செய்யும் முறையின் அடிப்படையில் தொடுவர்மம் 96, படுவர்மம் 12 மொத்தம் 108 என்றும், இதே வர்மப் புள்ளிகளை உடம்பின் கண்டங்களின் அடிப்படையில் தலையில் 25, கழுத்து முதல் நாபி வரை 45, நாபி முதல் மூலம் வரை 9, கையில் 14, காலில் 15 மொத்தம் 108 என்றும், தோஷங்களின் அடிப்படையில் வாத வர்மம் 64, பித்த வர்மம் 24, சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6, உள் வர்மம் 14 மொத்தம் 108 எனவும் குறிப்பிடுகின்றனர்.

களரியும் சிலம்பும்:

சிலம்பம் என்று அழைக்கப்படும் சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் களரியில் கோல்த்தாரியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஒத்தது. களரியில் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையையே சிலம்பம் என்று வழங்குகின்றனர். சிரமப் பயிற்சி பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கும் சுவடுகள் அடங்கியது ஆகும். எனவே அதை மட்டும் பயின்று சிலர் அதை ஒரு தனிக்கலையாக உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முடிவுரை:

கலைப் பொக்கிஷங்களின் வரிசையில் களரி என்ற தற்காப்புக் கலை மிகவும் சிறப்பிடம் பெற்றுத் தனித்தன்மை வாய்ந்த கலையாகத் திகழ்கிறது. தவ முனிவர்கள் தந்த இக்கலையை அதன் மகிமையை அறிந்து முற்காலத்தில் பலர் பயின்று தேர்ச்சிப் பெற்ற ஆசான்களாகவும் மிகச் சிறந்த போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர். தற்போதைய இளைஞர் சமுதாயம் இக்கலையின் பழமையையும், பெருமையையும் அதன் உயிரோட்டமான நயங்களையும் அறியாததால் அதை விரும்பிப் பயில ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தல் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியின் குண்டுகளைக் கூட இக்கலையை பயின்று தேர்ச்சிப் பெற்றவர்களால் தடுக்க இயலும். மேலும் மனிதன் தன்னைத் தானே புரிந்து கெண்டு பிறருக்கு உதவிச் செய்யக்கூடிய நல்லுள்ளம் கொண்ட ஒரு முழு மனிதனாக வாழ இந்த கலை உதவிச் செய்கிறது. எனவே இன்றைய இளைஞர்கள் இக்கலையை ஆர்வமுடன் பயின்று அவர்களும் பயன்பெற்று அழிந்து வரும் உயிரோட்டமான இக்கலையை உயிர் பெறச் செய்து சமுதாயத்திற்கும் உகந்த கலையாகப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link