ஆய்வுச் சிந்தனைகள்


நாட்டுப்புற அழகியல் - முகமூடிகளின் நிகழ்த்துதல் வழி


நாட்டுப்புற அழகியல் என்று குறிப்பிடுவதன் வாயிலாக இதற்கு மாற்றாக நவீனத்துவ அழகியல் என்பது உண்டு என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் நாட்டுப்புற நிகழ்கலைக் சடங்கில் பயன்படுத்தப்படும் முகமூடிகளின் அழகியல் (நாட்டுப்புற அழகியல்) நவீனத்துவ அழகியலுக்கு மாற்று அழகியலாக விளங்கும் முறை குறித்து விளக்கும் முயற்சியே இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது. நவீனத்துவ அழகியலுக்கான பண்புகள், அழகியல் குறித்தான சில அறிஞர்களின் கருத்துக்கள், இக்கருத்தியல் தளத்திற்கு மாற்றாக நாட்டுப்புற அழகியல் விளங்குவதனை நாட்டுப்புறச் சடங்கு வழிப் புலப்படுத்துதல் எனத் தனித்தனியாகப் பிரித்து விளக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகின்றது.

நவீனத்துவத்தின் பண்புகள்:

நவீனத்துவத்தின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம் 1. ஒற்றை மயமாக்கல் (அல்லது) உலகப் பொதுவாக்கல் 2. மையப்படுத்துதல் 3. இறுக்கமான விதிமுறைகள் உருவாக்கம் 4. தர்க்கங்கள் உருவாக்கம் 5. பெருங்கதையாடல் உருவாக்கம் இப்பண்புகள் குறித்தான விளக்கத்தின் நோக்கம் நவீனத்துவ அழகியலின் அடிப்படைகளைப் புலப்படுத்துவதே.

ஒற்றை மயமாக்கல்:

நவீனத்துவ சமூக உருவாக்கத்திற்கு அடிப்படையான அம்சங்களுள் ஒன்று எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையாகும். எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை மனித உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கு மாற்றாக அமைகிறது. மனித உடல் உழைப்பில் உருவாகின்ற பல்வேறு வகையான தொழில்களானாலும் சரி, கலை வெளிபாடுகளானாலும் சரி அவையாவும் வேறுபாடுகளுடன் பன்முகத்தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன. ஆனால் எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை இப்பன்முகத் தன்மையை மாற்றி ஒற்றைத் தன்மையை உருவாக்கியது. எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையில் வார்ப்பு அல்லது அச்சு என்பது ஒரே நேரத்து அல்லது ஒரே சூழலின் அழகியலை மட்டுமே எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளிப்படுத்தும். எனவே தான், எநதிரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை என்பது மனிதனுடைய அழகியல் உணர்வுக்கும் கட்டுப்பாடு விதிக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவர்.

மையப்படுத்துதல்:

மையம் உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும், அவற்றுள் எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை முக்கியமான காரணமாகும். மையம் என்பது அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் குறிக்கின்ற குறியீடாக உள்ளது. மையமாகக் கருதப்படும் கலை வெளிப்பாடுகள், மனிதனின் கைகளால் உருவாக்கப்படுகின்ற கலை வெளிப்பாடுகளை விளிம்புநிலைக் கலை வெளிப்பாடுகளாக ஓரத்திற்குத் தள்ளி விடுகின்றன. விளிம்பு நிலைக் கலைகள் தரம் தாழ்ந்தவை, இழிவானவை என கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் அழகியல் என்பது மைய அழகியல், விளிம்பு நிலை அழகியல் என்று இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. விளிம்பு நிலை அழகியல் இலக்கணத்திற்கு உட்படாதது, ஆனால், மைய அழகியல் மக்களின் அன்றாட சமூகச் சிக்கல்களுடனும், மாறி வருகின்ற உணர்வுகளுடனும் தொடர்புடையது. மக்களின் கூட்டு உணர்வினால் உருவாவது, மைய அழகியல். தனி மனித அழகியலாக அல்லது எந்திர அழகியலாக விளங்குவது மட்டுமல்லாமல் சமூகச் சிக்கல்களிலிருந்து ஒதுங்கி நிற்பதாக உள்ளது. இந்த வகையில் மைய அழகியலுக்கு மாற்றாக விளிம்பு நிலை அழகியல் அல்லது நாட்டுப்புற அழகியல் விளங்குகிறது எனலாம்.

இறுக்கமான விதிமுறைகள் உருவாக்கம்:

எந்திரமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையில் நிறுவன மையப்பட்ட சந்தைகள் உருவாகின்றன. பின்னர்ச் சந்தைகளோடுத் தொடர்புடைய நிர்வாக அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை உருவாகின்றன. இத்தகைய நிறுவனங்கள் சீராகச் செயல்படுவதற்கு விதிமுறைகள் அவசியமாகும். எனவே இறுக்கமான விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. மேற்கூறியவை யாவும் நவீனத்துவ அழகியலுக்குரிய பண்புகளாக உள்ளன. மேலும், நவீனத்துவ அழகியல் கோட்பாடுகள் தொடர்பான கருத்துக்கள் சில ஆய்வாளர்களால் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இ.முத்தையா 1988, 66). ஒரு படைப்பின் அழகு என்பது படைப்பாளியின் படைப்புத் திறனிலிருந்து வெளிப்படுவதாக எப்.ஆர்.வீவிஸ் குறிப்பிடுகிறார். இவருடைய கருத்துப் படைப்பாளியை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது. படைப்பாளியை மையமாகக் கொண்ட அழகியற் கோட்பாட்டினை மறுத்து ரோலன் பார்த்தஸ் வாசகனின் வாசிப்பில் தான் அழகு வெளிப்படுகிறது எனக் கருத்துரைக்கிறார். லுகாச் எனும் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் "ஓர் இலக்கியப் படைப்பின் ஒட்டு மொத்தமே அழகைத் தருகிறது" என்று குறிப்பிடுகிறார். இவ்வாறாக ஒவ்வொருவரும் அழகியல் குறித்தான சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றனர். மேற்சுட்டிய அறிஞர்கள் நாட்டுப்புற அழகியல் என்ற தனிவகை அழகியல் இருப்பதாகக் கட்டுரையாளர் உணர்வதால் அது குறித்துச் சில சிந்தனைகள் முன் வைக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.

நாட்டுப்புற மக்களின் அழகு பற்றிய கருத்தாக்கங்களைப் புரிந்துக் கொள்வதற்கு நாட்டுப்புறச் சடங்குகளில் அவர்கள் வெளிப்படுத்துகின்ற ஒவ்வொரு வெளிப்பாடும் ஆதாரங்களாக விளங்குகின்றன. இவ்வெளிப்பாடுகள் அனைத்தும் கூட்டு உருவாக்கங்களாக உள்ளன. சடங்குகளில் நாட்டுப்புற மக்கள் வெளிப்படுத்துகின்ற வெளிப்பாடுகள் தனித்தனி வடிவங்களாக இல்லாமல் ஒவ்வொரு வடிவமும் ஒன்றோடு ஒன்று நெருங்கியத் தொடர்புடையவையாக உள்ளன. இத்தொடர்பினால் இவற்றிற்கான அழகும் தொடர்புடையதாகவே விளங்குகிறது. நாட்டுப்புற அழகியலைப் படைப்பாளியின் அழகியல், வாசகன் அல்லது பார்வையாளரின் அழகியல், பனுவல் அல்லது பொருளின் மீதான அழகியல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க இயலாது, நாட்டுப்புற வழிபாட்டுச் சடங்குகளில் வெளிப்பாடு என்பது மக்களின் உழைப்போடும், உணர்ச்சியோடும், பழக்க வழக்கங்களோடும் தொடர்புடையதாக இருப்பதால் நாட்டுப்புற வழிபாட்டுச் சடங்கின் அழகு என்பது மக்களின் அழகாக விளங்குகிறது. நாட்டுப்புற மக்களின் அழகு சமூக, அழகாக, செயல்பாட்டு அழகாக வெளிப்படும். நாட்டுப்புற அழகியல் பண்புகளாக இ.முத்தையா (1988, 77) அவர்கள் பின்வருவனவற்றை குறிப்பிட்டு உள்ளார். ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை, இலக்கணமின்மை, புனிதமின்மை, சுத்தமின்மை, வன்மைத் தன்மை, வன்முறை, மனிதத் தன்மை, வாழ்க்கை நேசிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம் என்பார். இவ்வாறு கூறுவதால் நாட்டுப்புற மக்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றோ, கட்டுப்பாடில்லாதவர்கள், சுத்தமில்லாதவர்கள் என்றோ கருதி விடலாகாது. மேல் தள மக்களாகக் கருதப்படுகின்றவர்கள் ஒழுக்க நடவடிக்கை, கட்டுப்பாடு என்று எவற்றை நினைக்கிறார்களோ அவை எல்லாவற்றிற்கும் மாற்றான கருத்துக்களை, எண்ணங்களை உடையவர்களாக நாட்டுப்புற மக்கள் விளங்குகிறார்கள். மேல்தள மக்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவை இவர்களுக்கு ஒப்புதல் இல்லை என்ற அர்த்தத்தில் ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை என்ற பண்புகள் குறிப்பிடப்படுகின்றன.

முகமூடிக் கலை என்பது நாட்டுப்புறக் கலை வெளிப்பாடுகளுள் ஒன்று நாட்டுப்புற மக்கள் சிக்கல்களைச் சந்திக்கும் போது, இயல்பான சமூக அமைப்பிலிருந்து விடுபட்டு மாற்று அமைப்பிற்குள் செல்கின்றனர். இம்மாற்று அமைப்புகளாக நிகழ்கலைகள் சடங்குகள் போன்றவை வெளிப்படும். முகமூடி அணிதல் என்ற சடங்கு சார்ந்த நிகழ்த்துதலும் மாற்று அமைப்பாகவே வெளிப்படுகிறது. அதாவது முகமூடி அணிதல் சடங்கின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்ற அழகியலானது மைய அழகியலுக்கு மாற்று அழகியலாக உள்ளது. முகமூடியின் அழகியலானது மூன்று விதான நிலைகளில் வெளிப்படுகின்றது. 1. முகமூடி உற்பத்தியாளரின் அழகியல் 2. முகமூடி அணிபவரின் அழகியல் 3. பார்வையாளரின் அழகியல் இவ்வாறாக பல்வேறு நிலைகளில் முகமூடியின் அழகியலானது வெளிப்படுகின்ற காரணத்தினால் இவ்வழகியல் பன்முகத் தன்மையுடையதாக விளங்குகின்றது. முகமூடியின் அழகியல் பன்முகத் தன்மையுடையதாக விளங்கினாலும் அவற்றில் வெளிப்படும் அழகுணர்ச்சி என்பது ஒரே அலை வரிசையிலேயே உள்ளது எனலாம். முகமூடி உற்பத்தியாளர், முகமூடி அணிபவர், பார்வையாளர் ஆகிய மூன்று பிரிவினரின் வாழ்க்கைச் சூழல்களும், நோக்கங்களும் ஒன்றாக இருப்பதால் தான் அம்மூவரின் அழகியலில் இயைபுத் தன்மையைக் காண முடிகிறது. இம்மூன்று பிரிவினரின் ஏற்பு அல்லது அங்கீகாரம் என்பது அவர்களுடைய அழகியல் ஒருமைத் தன்மையைக் காட்டுகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதிக்குட்பட்ட வெள்ளியூர் நாட்டு ஏழை காத்த அம்மன் திருவிழாவின் போது மதுக்குடம் எடுத்தல் என்னும் மைய நிகழ்வுச் சடங்கினைத் தொடர்புபடுத்தி முகமூடி அணிதல் என்னும் விளிம்பு நிலைச் சடங்கானது செய்யப்படுகின்றது. மக்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டே இச்சடங்கினை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர். இந்நேர்த்திக்கடன் சடங்கில் முகமூடியானது அணிவதற்கு முன்பாக முகமூடியளார்கள் தங்கள் உடல் முழுவதும் பிரியினைச் சுற்றிக் கொள்கிறார்கள். முகமூடியாளர்கள் அணிந்து கொள்கின்ற மாடுமுக உருவத்திற்கும், உடலில் சுற்றிக் கொள்கின்ற வைக்கோல் பிரிக்கும் அழகியல் அடிப்படையிலான இயைபு ஏற்படுத்தப்படுகின்றது. மாட்டின் உணவைக் குறியீட்டு நிலையில் உணர்த்தும் வைக்கோலும், மாட்டின் தலை உருவமும், அமைப்பற்ற முறையில் தர்க்கமற்ற முறையில் இணைக்கப்படுகிறது. இதனைப் போன்றே மாட்டின் தலை உருவங்களுக்கு வண்ணங்களைப் பயன்படுத்துகின்ற போது மாட்டின் தலை உருவத்திற்கும், வண்ணத்திற்கும் இடையே தர்க்கபூர்வமான இயைபின்மை என்பது வெளிப்படுகின்றது. இவ்வியைபின்மையை முகமூடி உற்பத்தியாளர், முகமூடி அணிபவர், பார்வையாளர் ஆகியோர் ஒரே அலைவரிசையில் வெளிப்படுத்துகின்றனர் எனலாம். மாட்டின் முக உருவத்திற்குப் பொருந்தாத வண்ணத்தை முகமூடி உற்பத்தியாளர் பயன்படுத்தித் தயாரிக்கின்ற போது முகமூடி அணிபவரும் அவ்வண்ணத்தினை ஏற்றுத் தேர்வு செய்து கொள்கிறார். முகமூடியைப் பார்க்கின்ற பார்வையாளர்களும் முகமூடி வடிவத்தையும் வண்ணக் கலவையையும் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படி மூன்று பிரிவினரின் ஏற்பில் தான் அழகு உருவாகிறது. இச்சடங்கில் பெரும்பாலும் மாட்டின் தலை போன்ற முகமூடி உருவங்கள் பயன்படுத்தப்பட்டாலும், பிள்ளையார், அனுமன் போன்ற தெய்வங்களின் முக உருவங்கள், கோர வடிவமுடைய விலங்குகளின் முக உருவங்கள், கோரமான மனித உருவங்கள், கேளிக்கைப் பொம்மைகளின் முக உருவங்கள் போன்றவை பயன்படுத்துகின்றன. இவற்றுள் மாட்டின் தலை போன்ற முகமூடியினைப் பயன்படுத்துகின்ற போது மாடு முக உருவத்திற்கும், உடலில் சுற்றப்பட்ட வைக்கோல் பிரிக்கும் தர்க்கபூர்வமான உறவு இல்லாவிட்டாலும் கூட குறியீட்டு உறவு காணப்படுகிறது. ஆனால் மாட்டுமுகம் தவிர்த்த மற்ற முகமூடிகளைப் பயன்படுத்தும் போது முகமூடிக்கும், வைக்கோல் பிரிக்கும் இடையே தர்க்க உறவு மட்டுமின்றிக் குறியீட்டு உறவும் இல்லை. ஆனால் இத்தகைய ஒழுங்கற்ற இணைவு மக்களால் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதால் அவை அழகுள்ள வெளிப்பாடுகளாகின்றன எனலாம். உடலில் வைக்கோல் பிரியினைச் சுற்றுகின்ற போது மாட்டின் தலை போன்ற முக உருவத்தினையே பயன்படுத்த வேண்டுமெனறு இறுக்கமான விதிமுறையினை ஏற்படுத்தாமல் அனைத்து வகையான முகமூடிகளையும் வைக்கோல் பிரியுடன் தொடர்புபடுத்தி அணிந்து கொள்ளலாமென்று சமூகத்தால் அங்கீகாரம் செய்யப்படுகின்ற போது அம்மக்களுக்கான அழகியல் உருவாகிறது எனலாம்.

முடிவுரை:

மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில் நாட்டுப்புற அழகியலானது மக்களின் கூட்டு உணர்வினால் எவ்வாறு மக்களுக்கான அழகியலாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பதனையும், நாட்டுப்புற அழகியல் மைய அழகியலுக்கு அல்லது நவீனத்துவ அழகியலுக்கு எவ்வாறு மாற்றாக விளங்குகின்றது என்பதனையும் அறிய முடிகின்றது.

நன்றி: கட்டுரை மாலை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link