ஆய்வுச் சிந்தனைகள்


சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் சிந்தனை

தமிழினம் ஒரு தனியினம். தமிழர் பண்பாடு தன்னிகரில்லாத் தனிப்பெரும் பண்பாடு. ஆங்கிலத்தில் பண்பாடு என்னும் சொல்லை Culture என்பர். அறிஞர் டி.கே.சிதம்பரநாத முதலியார்தான் பண்பாடு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர். பண்பாட்டின் வெளிப்பாட்டைச் சுவையுணர்விலும், நடையுடை பாவனையிலும், காணலாம். பண்பாடு இல்லாதவனைக் காட்டுமிராண்டி என்கிறோம். உடலைப் பற்றிய நன்னிலை, மனதைப் பற்றிய தூய்மை நிலை, பேச்சில் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பார் அறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்.

ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும் பேரவாக் கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும் என்பார் மாத்யூ அர்னால்டு. சங்கப் புலவர் பண்பாட்டை நாகரிகம் என்றும் குறித்துள்ளார்.

"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்" (நற். 355)

இதனையே,

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"

என்பார் திருவள்ளுவர்.

சங்கத் தமிழர் அகப்பண்பாட்டையும், புறப்பண்பாட்டையும் வேறுபடுத்திக் கண்டிலர். அறிவு வளர்ச்சியினும் பண்பு வளர்ச்சியையே போற்றியுள்ளனர். பழிஎனின் உலகையே பெறுவராரெனினும் கொள்ளார். புகழ் எனின் உயிரையும் கொடுப்பர், அஞ்சுவது அஞ்சுவர், அடக்கமே உருவாய்த் திகழ்வர். ஆரவாரத்தை விலக்குவர். அயராது உழைப்பர், அவ்வுழைப்பிலும் பிறர் நலம் நாடுவர். இத்தகு சான்றோர் வாழ்ந்த காலமே சங்க காலம். தாம் பெற்ற இன்பத்தினைப் பிறரோடு பகிர்ந்து கொண்டதனைச் சங்க இலக்கியவழி அறியமுடிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்:

சங்கத் தமிழர் வடநாட்டு வாரணாசியையும், பாடலி நகரத்தையும், நந்தர்களையும், மோரியர்களையும் பற்றி நன்கு அறிந்திருந்தனர். பாடலிபுரம் பொன்மலிந்தது எனவும் நந்தர்கள் கங்கையில் பெருநதியை மறைத்து வைத்திருந்தனர் எனவும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர்தம் கொள்கை இதன்வழி உறுதியாகிறது. சங்க கால அரசியலில் மூவேந்தர்களும் பல குறுநில மன்னர்களும் விளங்கினர். அரசியலில் பிரிவு இருந்தது. மொழியும் பண்பாடும் பிரிவை விலக்கி ஒற்றுமையுணர்வைத் தோற்றுவித்தது. இதற்கு வித்திட்டவர்கள் சங்கப் புலவர்கள். சேரநாட்டுப் புலவர் பாண்டியரையும், சோழனையும் வாழ்த்தியிருக்கிறார். இப்பண்பினைப் பிறநாட்டுப் புலவர்களிடமும் காணமுடிகிறது. பண்பு எவரிடம் இருந்தாலும் அப்பண்பினைப் பாராட்டும் உயர்ந்த பண்பாளர்களாகச் சங்கப் புலவர்கள் திகழ்ந்தனர். குறுநில மன்னன் பாரியின் நண்பர் கபிலர். இவர் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாராட்டியுள்ளார். பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் நட்புடையவராக விளங்கியிருக்கிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போரிட்டு இருவருமே மாண்டபோது கழாத்தலையாரும் பரணரும் இருமன்னர்களுக்காக வருந்திப் பாடியுள்ளனர். பண்பாட்டை இதன்வழி உணரமுடிகிறது.

எண்ணம், சொல், செயல் ஆகியன திருந்திய நிலையில் விளங்கும் போது பண்பாடாகிறது. மனிதரின் இயல்பு மாறுபட்டதே. ஒருவரைப்போல மற்றொருவர் விளங்குவது அரிதே. எல்லோருடைய இயல்புகளையும் நன்கறிந்து அவர்களுக்கு ஏற்ற வண்ணம் செயல்புரியும் நன்நெறியாளரைப் பண்பாளர் எனக் கருதலாம். இத்தகைய பண்பாடே உலகம் நிலைக்க ஏதுவாகின்றது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடலே இதற்குச் சிறந்த சான்றெனக் கருதலாம்.

"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஒப்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே" (புறம்-195)

நல்வினையைச் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தீவினையைச் செய்யாதீர்கள். இப்பண்பாடே அனைவர்க்கும் மகிழ்ச்சியைத் தரும் என கூறியிருப்பது எக்காலத்தும் எந்நாட்டினர்க்கும் இன்பத்தைத் தரும் அரிய நீதியாகத் திகழ்வதை அறியமுடிகிறது.

கல்வி, கேள்வி, ஒழுக்கம் ஆகியன ஒருவகை வாழ்வில் பல்வேறு நிலைகளில் உயர்த்தும் தன்மையன. அவர்கள் வறுமையுற்றாலும் மதிப்போடே வாழ்வர். இதனைச் சங்கப் பாடல்வழி உணரமுடிகிறது.

"முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்ற ஈதல் யாம் வேண்டலமே" (புறம்-205)

மன்னைச் சென்று காணுங்காலத்து அன்பின்றிக் கொடுத்தாலும், காலந்தாழ்த்திக் கொடுத்தாலும், நேரில் காணாது பிறர்வாயிலாகக் கொடுத்தாலும், குறையக் கொடுத்தாலும் அப்பரிசினைப் புலவர் பெறுவதில்லை என அறியமுடிகிறது. மன்னன் தவறு செய்தால் அம்மன்னன் உளம் திருந்தப் புலவர்கள் அறநெறி கூறியுள்ளனர். அம்மன்னன் பரிசு அளித்தவனாயிற்றே எனக் கருதாது அம்மன்னன் தவறு செய்யுங்காலத்து இடித்துக் கூறிய, திருத்திய பண்பினைச் சங்ககாலப் புலவர்களிடம் காணமுடிகின்றது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வள்ளல் திருமுடிக் காரியின் குழந்தைகளைப் பகை காரணமாகக் கவர்ந்து வந்து யானைக் காலில் இட்டுக் கொல்ல முற்பட்டபோது கோவூர்கிழார் விரைந்துவந்து அவள் முன்னோர் இயல்பை பண்போடு கூறிக் கிள்ளிவளவனைத் தவறு செய்யாமல் காப்பாற்றிய பண்பைச் சங்க இலக்கியத்தில்தான் காணமுடிகிறது. ஒரு நாடு சிறக்க நல்லாட்சி மிக மிக இன்றியமையாதது. மக்கள் நல்வாழ்வு பெறுவதே மன்னன் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதனை,

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்" (குறள் - 388)

எனத் திருவள்ளுவரும்,

"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூறின் மன்னுயி ரில்லை" (மணி)

எனச் சாத்தனாரும் உணர்த்தியுள்ளார். இவ்வாறு வள்ளுவரும் சாத்தனாரும் உணர்ந்த முன்னோடியாக இருந்தது சங்கப் புலவர்களின் வாழ்வியல் சிந்தனைகள்.

பாண்டியன் அறிவுடைநம்பி முறை தவறிக் குடிமக்களை வருத்தி வரிவாங்க முற்பட்ட போது அம்மன்னன் செயலைத் தக்க நேரத்தில் தக்க உவமைவழி கண்டித்த பெருமை புலவர்க்கு உண்டு.

"அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்"

எனவும்,

"யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே" (புறம்-184)

என்ற அறிவுரை சிறந்த வாழ்வியல் சிந்தனையாகும். எக்காலத்தும் எந்நாட்டவர்க்கும் பொருந்தும் அறிவுரையைத் தக்க நேரத்தில் எடுத்துக்காட்டிய சங்கப் புலவர்தம் சிந்தனை போற்றத்தக்கது. முறைசெய்து காப்பாற்ற வேண்டிய மன்னன் முறை தவறினால் நடக்கப்போகும் கொடுமையைச் சங்கப் பாடல் அறிவுறுத்தும் திறம் சிந்திக்கத்தக்கது. மன்னன் தவறு மன்னனையும், மக்களையும் அழித்துவிடும். எனவே மன்னன் ஆட்சி புரியங்காலத்து பின்னர் விளையப் போவதைக் கருதி எச்சரிக்கையாக நடக்க வேண்டும் எனும் அறிவுரை சாலச் சிறந்தது.

அரசாண்ட மன்னர்களுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் அறிவுரை கூறிய சிறப்பு சங்க இலக்கியத்திற்கு உண்டு. பிறருக்கு உதவி செய்யுங்கள். அது உங்களை மட்டுமல்லாது பெற்றவர்க்கும் மகிழ்ச்சியைத் தரும் என்ற சிறந்த சிந்தனை பிறந்தது சங்க காலத்தில் தான்.

"உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே"

என வாழ்வின் தேவைகளை மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துக்கூறி,

"செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே" (புறம்-189)

என மிகு செல்வம் பெற்றவர் ஈதலினால் நன்மை பெறலாம் என அறிவுறுத்திய திறம் என்றென்றும் கடைபிடிக்கத்தக்கது. சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கினைச் சிறந்த சிந்தனையாகப் போற்றலாம். சங்க இலக்கியம் காட்டும் சிந்தனைகள் வாழ்வியலை வளப்படுத்தும் என்பது திண்ணம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link