ஆய்வுச் சிந்தனைகள்


சிவப்பிரகாசரின் உவமை வளம்

கற்பனைக் களஞ்சியம் என்றும் கற்பனைக் கருவூலம் என்றும் சிறப்பிக்கப்படும் சிவப்பிரகாசரின் "புரபுலிங்க லீலை" என்னும் காப்பியத்தில் உவமை வளம் குறித்துக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கன்னட மொழியில் காமராசர் எழுதிய பிரபுலிங்க லீலையைத் தழுவித் தமிழில் அதே காப்பியப் பெயரில் கன்னட பிரபுலிங்க லீலை போன்று 25 கதிகளை அமைத்து சிவப்பிரகாசரால் பாடப்பட்ட தமிழ்க் காப்பியம் பிரபுலிங்க லீலை. சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு சிவனடியார்களின் புகழ் பேசும் பெரியபுராணக் காப்பியத்தை ஒத்த நிலையில் வீர சைவ குரவரும் ஞானசிரியருமான சிவபெருமானாகிய அல்லமரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வீர சைவ அடியார்களின் சிறப்பினைப் பேசுவது பிரபுலிங்க லீலை.

பிரபுலிங்க லீலை என்பது மேலான இறைவனாம் சிவபெருமானின் திருவிளையாடல்களை பேசுவது என்று பொருள்படுகிறது. உயிர் சுவை மாயைகளில் அகப்படாமல் தடுத்து ஆட்கொள்பவனாக இறைவனாம் சிவபெருமானையும், மண்ணுலகில் பிறவி பெற்று மாயைகளால் கட்டுண்டு தவித்து இறைவனால் ஆட்கொள்ளப்படும் இறைவியாம் உமையம்மையையும் மையமாகக் கொண்டு நிகழ்கின்றன பிரபுலிங்க லீலையின் கதை நிகழ்வுகள்.

உணர்த்துபவன் ஆணாகவும், உணர்பவள் பெண்ணாகவும் படைக்கப்படுவது பொதுவாகத் தமிழிலக்கிய மரபாக விளங்குகிறது. இம்மரபிற்கு ஏற்பப் பிரபுலிங்க லீலையிலும் அறியாமையில் கிடந்து உழலும் உமையம்மைக்கு ஞானாசிரியரது தன்மை குறித்தும் யோகநெறி நின்று வீடுபேறு அடையும் மெய்யறிவு குறித்தும் அறிவுறுத்துபவராகச் சிவபெருமான் படைத்துக் காட்டப்படுகிறார்.

இதுபோன்று வயப்படுத்துவோர் ஆணாகவும், வயப்படுவோர் பெண்ணாகவும் படைக்கப்படும் தமிழிலக்கிய மரபில் இக்காப்பியத்தில் மாயை என்னும் பெண் சிவபெருமானை வயப்படுத்த முயன்று தோல்வியுற்று அவரால் வயப்படுத்தப்படுகிறாள் என்ற கதைப்போக்கு சிற்றின்பம் நீக்கிப் பேரின்பம் காணுதல் என்ற ஞானநெறி உணர்த்தும் விதமாகக் கையாளப்படுகிறது.

மேற்கண்ட கதை நிகழ்வுகள் காப்பியத்தில் வெவ்வேறு வகையான உவமைகள் பலவற்றைக் கைக்கொண்டு கற்பனை வளத்துடன் சிவப்பிரகாசரால் எடுத்தாளப்படுவது இலக்கிய இன்பம் பயப்பதாய் அமைகிறது.

"பூவய் நெடுங்கோட் குறுபசுந்தேன் கைகால்
முடங்கு பொறியிலி தன்
நாவாய் ஒழுகிற நௌவுலகம் அளந்த
மாலும் நான்முகனும்
காவாய் எனநின் றேத்தெடுப்பத் தானே
உவந்தெங் கரதலத்தின்
மேவா அமர்ந்த மாமணியைத் தொழுது
வினைக்கு விடைகொடுப்பாம்" (துதி கதி-1)

மனம் மிக்க மலர்களிலிருந்து சேகரிக்கப்பட்டு மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட தேன் கூட்டிலிருந்து கை கால்கள் அற்ற முடவனின் நாவில் தானாக ஒழுகிய தேனைப் போன்று நான்முகனுக்கும் திருமாலுக்கும் அகப்படாது என மனத்தில் தானே வந்து அமர்ந்து என்னை ஆட்கொண்ட சிவபெருமானை வழிபட்டு நல்வினை தீவினை சார்ந்த பிறவியை நீக்கிக் கொள்வோம் எனச் சிவப்பிரகாசர் "தானே வந்து தன்னை ஆட்கொண்ட சிவபெருமானை" வாழ்த்துகிறார். இங்கு ஆட்கொள்பவனாம் சிவபெருமானின் செயலுக்குத் தானே வந்து முடவனின் நாவில் விழுந்த உயர்சுவை கொண்ட தேன் உவமையாக்கப்படுவது இலக்கிய நயம் பொருந்துவது.

இச்செய்யுள் எளிதின் முடியணி, நிரல்நிறையணி, இன்பவணி, சுவையணி முதலியன கலந்து அமைந்த கலவையணியாக அமைகிறது. (சிவப்பிரகாசரின் இலக்கிய நூல்கள் - ஒரு திறனாய்வு, மா.சு. சாந்தா. ப.3)

ஆட்கொள்பவனைப் போற்றிய சிவப்பிரகாசர் ஆட்படுவளாம் இறைவியையும் போற்றத் தவறவில்லை.

"ஆதி பகவன் தனதூடல் தணிப்பான்
பணி அவ்விறைவன்
பாதம் இறைஞ்சும் அதற்கும் நெற்றிப் பகையும்
அல்குல் பகையுமாம்
சீதமதியு மரவும்விழும் செயற்கும்
உவகை செயாமலலை
மாது பணியும் அதற்கு மனமகிழும்
உமையை வணங்குவோம்" (துதி கதி-2)

உமையின் ஊடல் தணித்திற் பொருட்டு அவளது பாதத்தில் தன் தலை தாழ்த்தி வணங்கிப் பணியும் சிவபெருமானின் தலையில் சூடப்பெற்ற பிறைநிலவும், கழுத்தில் அணியப்பெற்ற பாம்பும் உமையின் நெற்றிக்கும் அல்குலுக்கும் ஈடாகாமல் தலை தாழ்ந்து பணிகின்றன எனினும் அவரது தலையில் சூடப்பெற்ற வற்றாநதியாகிய கங்கை தன்னைப் பணிந்ததைக் கண்டு மனம் மகிழ்பவளாக உமையம்மை இப்பாடலில் பேசப்படுகிறாள். கைலையில் தொடங்கி கைலையில் முற்றுப் பெறுவதாக அமைக்கப்பட்டுள்ள இக்காப்பியக் கதையில் வீடு பேற்றிற்கு உரியவர் யார்? என்று உமையம்மை கைலாசநாதரிடம் வினவுவதாகக் காப்பியம் தொடங்குகிறது. மண்ணுலகில் மக்களாகப் பிறந்து யோக நெறி ஒழுகுபவர் மெய்யறிவு கைவரப் பெறுபவர்; வாமேய ஞானாசிரியராக அமைவோம். எம்மை உன்னால் கூடக் காண இயலாது என அதற்குச் சிவபெருமான் விடையளிக்கிறார்.

காப்பியத்தின் மையப்பகுதியில் மேற்கண்டவாறு சில அறியா வினாக்களை அம்மையார் எழுப்ப. சிவன் அவளுக்கு அறிவுறுத்துகிறார்.

"அல்லமன் அருள் பெறற் கடைந்த நந்தியோ
டெல்லையி னின்கணம் எனது நற்கலை
மெல்லியல் நிலமிசை மேனிச் செய்ததென்
சொல்லுதி என உமை இறைவன் சொல்லினான்" - (மான்மியகதி)

இப்பாடலில் நந்தி, சிவகணங்கள், நற்கலை ஆகியோர் நிலவுலகில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என இறைவி வினவ, அவர் தம் நிலவுலகப் பணிகளை அவளுக்கு எடுத்துரைக்கிறார் இறைவன்.

இங்குப் பேசப்படும் பொருள் "எல்லாம் அறிந்த இறைவன் இறைவி" சம்பந்தப்பட்டதாக அமையினும் கூட உணர்த்துபவன் - உணர்பவள் என்ற ஆண் - பெண்ணின் தன்மைகள் குறித்த இலக்கிய மரபும் சமுதாயக் கருத்தாக்கமும் ஒன்றிணைந்து படைப்பாளிகளின் அறிவுத் திறனுடன் செயல்பட்டு இவ்வாறு படைப்பாகிறது என்ற இலக்கியப் படைப்பாக்க நெறி புலப்படுகிறது.

இறுதியில் இறைவி "உண்மை உணர்ந்தேன்" என்று இறைவனைப் பணிகிறாள். இவ்வாறு அறியாமை நிறைந்த இறைவி இறைவன் உணர்த்த உணர்வது காப்பியத்தின் கதைக் கருவை விளக்கிக் காப்பியத்தைக் கட்டமைக்க ஏதுவாகிறது.

வள்ளிகாவை நகரில் ஆகமநெறி நின்று வாழும் நிராங்கரரனும், சுஞ்ஞானியும் மகப்பேறு வேண்டித் தவம் மேற்கொண்டு ஒன்பது திங்கள் சிவயோக சமாதி உற்றிருந்த போது அவர்தம் நெற்றியின்கண் உள்ள பரஞ்சோதி திரண்டு அல்லமன் என்னும் குழந்தையாகச் சிவபெருமான் தோன்றுகிறார்.

அல்லமனாகிய சிவபெருமானை மயக்குவதற்கு அதாவது வயப்படுத்துவதற்கு உமையம்மையாள் நிலவுலகிற்கு அனுப்பப்பட்ட மாயை, வனவசை நகரைத் தலைநகராக கொண்டு விவலதேயத்தை ஆட்சி செய்து வந்த மகாரனுக்கும் அவன் மன€வி மோகினிக்கும் மகவாகத் தோன்றி அந்நகரில் குடி கொண்ட ஈசன் மதுகைநாதனை தன் தலைவராக எண்ணி வழிபட்டு வருகிறாள்.

அல்லமர் அழகிய இளைஞன் வடிவு கொண்டு மத்தளம் முழங்கி மதுரைநாதன் கோயில் முன் செல்ல, மாயை அவனையும் அவனது மத்தள ஓசையையும் கண்டு கேட்டு மயங்குகிறாள்.

மேற்கண்ட காப்பியக் கதைப்பின்னல் ஆழ்ந்து நோக்கத்தக்கது. மயக்க வேண்டும் - மயக்குவேன் எனச் சபதம் எடுத்து வந்தவள் மயக்கப்படுகிறாள். மயங்குகிறாள். இங்கு ஆண் வயப்படுத்துவன் - பெண் வயப்படுபவள் என்ற சூத்திரம் செயல்பட்டிருப்பது காணத்தக்கது.

"மிடிய னொரு செய் யாளனச் செய்
விளையக் காக்கும் செயல்போலப்
படியில் கல்வி விரும்பி னோன்
பாடம் போற்றும் அது போல
ஓடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கும் முறைபோலக்
கொடிய நோன்பு செய் தீன்ற
கொடியை வளர்த்தாய் மோகினியே" - (மாயையின் உற்பத்தி கதி - 49)

என மாயை வளர்க்கப்படும் முறை பேசப்படுகிறது. இங்கு அதிக நிலமற்ற வறியவன் அக்கறையுடன் நிலத்தை விளைவித்தலும், கற்கும் ஆர்வம் மிக்கவன் பாடம் போற்றுதலும் செங்கோல் செலுத்தக் கருதியோன் உலகு புரத்தலும் மாயையை மோகினி வளர்த்தலுக்கு உவமைகளாக விவரிக்கப்படுகின்றன.

"தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழிசார
மன்னி அங்கதுநிகரற்ற வாழ்மனை வாய்தன்
முன்னி றற்திடுவேனென ஞான்றுகொண் முறைமை
என்னவெண்மணி மூக்கனி ஒருத்தி நின்றிட்டாள்" (மாயை பூசை கதி -11)

இப்பாடல் மாயையக்கு அணிகள் பல அணிந்து மகிழும் நிலையைப் பேசுகிறது. மாயையின் மூக்கிற்கு மூக்குத்தியும் மூக்கின் உள்ளிடத்துள்ள மூக்குத் தண்டின் கீழ் புல்லாக்கும் அணிகின்றனர். புல்லாக்குத் தலைகீழாகத் தொங்கும் காட்சி, மாயையின் பல் ஒளிக்கும் அழகிற்கும் வெட்கி, வென் முத்தாலாகிய புல்லாக்கு நான்று கொண்டு தொங்குவது போல் உள்ளது உவமிக்கப்படுகிறது. இங்கு இல்பொருள் உவமை இடம் பெற்று மாயையின் அழகிற்கு அழகு சேர்க்கிறது.

"பான லங்கருங் கண்ணிபோ கியகொடும்பாலை
யானை புதன்புழைக் கைநிகர் துளியிடை விடாமல்
வான நின்றுபெய் யினுந்தழற்பட்ட வல் இரும்பின்
மேன கந்தெறி திவலைபோற் சுவற்றும் விரைந்து" - (மாயை கோலாகலகதி)

மாயை அல்லமரைக் கண்டு மயக்குற்று அவரைப் பின் தொடர்ந்து பாலை நிலத்துவழி செல்லும் காட்சியை எடுத்துக் காட்டுகிறது. யானையின் துதிக்கை போல் மழைத்தாரை இடைவிடாமல் பெய்யினும் தழவிற் பாய்ந்த இரும்பின் மேற்பட்ட நீர்த்துளிகள் போன்று காய்ந்து போகும்படியான நிலப்பகுதி எனப் பாலை நிலத்தின் கொடுமை சுட்டப்படுகிறது.

"நாடிய ஆடி நிழலென அணைமேல்
நண்ணுறத் தோன்றிய இறையை
ஓடினள் விழுந்து தழுவுறத் தழுவ
உறாமையால் அனைமிசை விழுந்தே
ஆடியி னிழலைப்பற்றளீட் டியகை
ஆடியில் தாக்க நின்றழுது
வாடுறு மழலைப் பேதையே போல
வருந்தினள் மதர்விழி மாயை" - (பிரபுதேவர் வந்த கதி பாடல் 67)

இப்பாடலில் மாயையின் பிடியில் சிக்காமல் ஆடி நிழல் போன்று அருவமாக விளங்கும் அல்லறுமரின் தன்மையும், கண்ணாடியில் தோன்றும் நிழலைப் பற்றதற்குக் கை நீட்டி ஏமாற்ற முற்று வருந்தும் மழலை போன்று துயருறும் மாயையின் நிலையும் ஆடி நிழல் பற்றுதல் என்னும் உவமை வாயிலாகத் தெளிவுப்படுத்தப்படுகின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link