ஆய்வுச் சிந்தனைகள்


சுரதாவின் கவிதைகளில் தொழிலாளர்கள்

முன்னுரை:

தொழிலாளர் சமூகங்களின் ஒருங்கிணைப்புதான் சமுதாயமாகும். இச்சமுதாயத்தில் காணப்படும் அனைத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் நீக்கித் தீர்வு காண்பதே சமூகவியலின் நோக்கமாகும். நாட்டின் உயர்வு என்பது இயற்கை வளத்தினைமட்டும் குறிப்பதன்று. தொழிலாளர்களின் சிந்தனைத்திறனையும் செயல்திறனையும் இணைத்துக் காண்பதாகும். கவிஞர் சுரதாவும் முன்னோர் மரபைப் பின்பற்றித் தொழிலாளர்களின் வாழ்வியலைக் கவிதையாக்கியுள்ளார்.

தொழிலாளர்கள்:

நாட்டின் உயர்வில் தொழிலாளர்களின் தியாகம் வெளிப்படுகிறது. தொழிலாளர்களின் அறிவும் வலிமையும் இருகண்களாகப் போற்றப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட காலத்தில் உழைப்பதற்கு அல்லது குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி செய்த பொருளுக்குக் கூலியாகப் பணம் அல்லது பொருளை ஊதியமாகப் பெறுகின்றனர். முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளர்களுக்குக் கூலி, பாதுகாப்பு, வேலை போன்றவை சரியாகக் கிடைப்பதில்லை. இவைகளை விட தொழிலாளர் நலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனைப் பெற்றுத் தருவதற்காகத் தொழிற்சங்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. முற்போக்குச் சிந்தனையாளர்களின் எழுத்துக்களில் தொழிலாளர் நலம் பேசப்படுகிறது. திரு.வி.க தொழிலாளர்களின் நலனில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இந்தியாவில் தொழிற்சங்கத்தை ஏற்படுத்திய பெருமை இவரைச்சாரும். இவர் காலத்தில் வாழ்ந்தவர் பாரதியார் தொழிலாளர்களின் இயல்பை.

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப்பு விமேல்
ஆயிரந்தொழில் செய்திடு வீரே
பெரும்பு கழ்நுமக் கேயின சக்கிறேன்
பிரமதேவன் கலையிங்கு நீரே

என வரும் பாடலில் குறிப்பிடுகிறார். பாரதியைப் பின்பற்றி பாரதிதாசனும் பொதுவுடமைக்கு ஏற்றம் கொடுக்கிறார். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்கி, உழைப்பு என்பது அனைவருக்கும் பொதுவாகிட வேண்டும் என்கிறார். இந்நிலை உருவாகவில்லை எனில் மாபெரும்புரட்சி ஏற்படும் என்றும் கூறுகிறார். இதனை,

"ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ"

என்பதின் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தொழிலாளர்களின் நலனுக்காகத் தன் இறுதி மூச்சுவரைப் போராடியவர் ஜீவா. இவர் தன்னுடைய கவிதைகளின் உழைக்கும் மக்களின் இயல்பை,

"காலுக்குச் செருப்பில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு ழைத்தோமடா என்தோழனே
பசையற்றுப் - போனனோமடா"

எனவரும் பாடலில் வெளிப்படுத்துகிறார். தொழிலாளர்கள் ஒன்றுபடவேண்டும் அப்பொழுதுதான் வாழ்வு நலம்பெறும் என்பார் பட்டுக்கோட்டையார். முன்னோர் மரபைப் பின்பற்றித் தொழிலாளர்களின் இயல்பைக் குறிப்பிடுகிறார் சுரதா. இதனை,

"பத்துபதினைஞ்சு தையல்களில்
உடல் சுற்றின சேலைச்
சூரிய வெயிலுக்கு முன்
குடம் குடமாய்த்
தண்ணீர் கோரிசுமக்கணும்"

என்று குறிப்பிடுகிறார்.

விவசாயத் தொழில்:

கிராமத்து மக்கள் நிலத்தை நம்பி வாழ்கின்றனர். விவசாயம் இவர்களுடைய முதன்மைத் தொழிலாகும். நாட்டின் உயர்வுக்கு உழவுத்தொழில் அடிப்படையாகும். உலகிலுள்ள அனைவரும் உணவுக்கு உழவர்களை நம்பியே வாழ்கின்றனர். உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழவின் மிகுந்த ஊதியம் இல்லை என்னும் முழுமொழிகள் உழவுத்தொழிலின் சிறப்பை வலியுறுத்துகின்றன. உழவுத்தொழிலின் நுட்பங்களைப் பெருக்கி நீர்வளம் கொண்டு நிலவளம் கண்டு, பயிர்வளத்துடன் உயிர்வளத்தைப் பெருக்கினர் பண்டைத்தமிழர். பாரதியார் உழவின் சிறப்பை,

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்".

என்கிறார். கவிஞர் சுரதாவின் கவிதைகளில் விவசாயத் தொழில்களாக நெல்விதைத்தல், நாற்றுநடுதல், களைபறித்தல், அறுவடை செய்தல், போரடித்தல், கால்நடை வளர்த்தல் போன்றன இடம்பெறுகின்றன. இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் காலை முதல் மாலை வரை வேலை செய்கின்றனர். இவர்களுடைய கடினமான உழைப்பால் களஞ்சியங்கள் நிரம்புகின்றன. இந்நாட்டு மக்களின் வாழ்வு உழைக்கும் வர்க்கத்தின் கண்ணீர்த்துளிகளில்தான் உள்ளது என்கிறார். விவசாய முறைகளிலும் பலத்தமாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இயற்கை உரங்களுக்குப்பதில் செயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மண்ணில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. வயலில் நாற்றுநடுபவர்களுக்கும், களைபறிப்பவர்களுக்கும் நச்சுத்தன்மையால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்பதனை,

"நாத்துக்கிடையில் வளர்ந்த
களைகளைப் பிடுங்கி எறிவா
செடியிலுள்ள கொழுவட்டைகள் காலைக்கடிக்க
சுண்ணாம்புத் தடவி உருவி எறிவா"

என வரும் பாடல் அடிகள் பகருகின்றன. விளைச்சலான கதிர்களை அறுவடை செய்யும் தொழில்வருடத்தில் சிலமாதங்களில் மட்டும் நடைபெறுகின்றது. இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் குழுக்களாகச் செயல்படுகின்றனர். இவர்களின் தலைவன் கூறோடி என்று அழைக்கப்படுகிறான். இவன் தன்குழுவினருக்குக் கிடைக்கும் கூலியில் அதிக அளவு எடுத்துக் கொள்கிறான். இதனையும் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். அறுவடைச் செய்தபின் போரடித்தல் நடைபெறுகிறது நெற்கதிர்களைப் பிரித்தெடுப்பதற்குக் கால்நடைப் பயன்படுத்துகின்றனர். இத்தொழில் ஆண்களும், பெண்களும் செயல்படுகின்றனர். இவர்களுக்கும் குறைந்த கூலிதான் வழங்கப்படுகிறது.

குடிசைத் தொழில்கள்:

ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்று நாடுகள் வளர்ச்சி பெற்ற நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் உயர்ந்த நிலையை அடைவதற்குக் குடிசைத் தொழில்கள் காரணமாகின்றன. உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் குடித்தொழில்வாயிலாகத் தயாரிக்கப்படுகின்றன. நமது நாட்டில் மரபுரீதியான கைவினைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இக்கலைஞர்களுக்குப் போதிய வருவாய்க் கிடைப்பதில்லை. இதனால் இத்தொழில்கள் சிதைந்துபோகும் நிலையில் காணப்படுகின்றன. வளர்ச்சிபெற்ற நாடுகளைப் போன்று குடிசைத்தொழிலை மேம்படுத்துவதிலும், தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். சலவை, நெசவு, மண்பாண்டம் செய்தல், மீன்பிடித்தல், பனையேறுதல், கயிறுதயாரித்தல், பாய்ப்பின்னுதல், ஓலை முடைதல், மரம் அறுத்தல், பீடிசுற்றுதல், தீப்பெட்டிகள் தயாரித்தல், போன்ற தொழிலாளர்களையும் அவர்தம் வாழ்வியலையும் குறிப்பிடுகிறார். இவர்கள் கடுமையாக உழைத்தும் போதிய வருமானமின்றித் துன்புறுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் குடிசைத் தொழிலாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை மேற்கொள்கின்றனர். இந்தித் தொழிலாளர்கள் குறிப்பிட்டதொரு தொழிலைமட்டும் அறிந்து வைத்துள்ளனர். இதனால் இவர்களுடைய வாழ்க்கைத்தரம் பின்தங்கிக் காணப்படுகிறது. மீன்பிடித்தொழிலாளர்களும் பனையேறும் தொழிலாளர்களும் நாள்தோறும் இயற்கையை எதிர்த்துப் போராடுகின்றனர். இதனால் விபத்துகளும் அதிகமாக நிகழ்கின்றன. பனையேறு தொழிலாளர் குடும்பங்களில் பெண் கொடுக்கவும் எடுக்கவும் ஏனையோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இத்தொழில் நலிவடைந்துவருகிறது. பனையேறும் தொழிலாளர்களின் இயல்பை,

"முப்பது நாப்பது பனையாள
நூறு நாழிகைக்குள் ஏறி எறங்குவார்
நெட்டை மரத்தடியிலிருந்து பதநீரும் இயங்கும்
பாலைவிட குடிச்சியக்கு ருசியாய்"

எனவரும் பாடலில் வெளிப்படுத்துகிறார். மண்பாண்டுத்தொழிலாளர் ஆகியோரின் வாழ்க்கைத்தரம் கல்வி, பொருளாதாரம், போன்றவற்றையும் குறிப்பிடுகிறார். பனைநாரைப் பயன்படுத்திக் கயிறு திரித்துப் பயன்படுத்துகின்றனர். பனையேற்றுத் தொழில் வீழ்ச்சியடைந்திருப்பதால் பனைநார்த்தொழில் வழக்கிழந்து வருகிறது.

பிறதொழில்கள்:

கிராமத்துமக்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திகொள்வதற்குச் செய்யும் தொழில்களில் மாட்டுவியாபாரம், தேங்காய் வெட்டுதல், துப்புரவு செய்தல், செருப்புத்தைத்தல், வீடுவேலை, கைதைநார் எடுத்தல், மரம் அறுத்தல், கட்டிடம் கட்டுதல், வண்டி ஓட்டுதல், புல்லறுத்தல் ஆகியவைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தொழிலாளர்களின் உழைப்பையும் வறுமையையும் உள்ளவாறே குறிப்பிடுகிறார். பெண்களில் பலரும் புல்லறுத்து விற்பனைச் செய்து வாழ்கின்றனர். இவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உழைத்தும் குறைந்த அளவு வருமானத்தைத்தான் அடைகின்றனர். இந்நிலையை,

"விடியற்காலையில்
அரிவா எடுத்து
வேலிமலை போனால்
அந்திச் சந்தைக்கு வருவாள்
புல்லுக்கட்டுடன்"

எனவரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

முடிவுரை:

கிராமச் சூழலில் தொழிலாளர்களிடம் காணப்படும் கடின உழைப்பு, குறைந்த ஊதியம். இவர்களிடம் நிலைத்து நிற்கும் வறுமை போன்றவற்றை உள்ளவாறே புனைந்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பில் நாட்டின் உயர்வு அடங்கியுள்ளது. பல்வேறு தொழில்களைச் செய்யும் உழைக்கும் சமூகத்தின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link