ஆய்வுச் சிந்தனைகள்


'சிற்பியின் கவிதைகளில் தொன்மக்கூறுகள்'

கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுப்பான "சர்ப்ப யாகம்" என்ற நூலில் குறிப்பிடப்படும் தொன்மக் கூறுகளை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதிகாச, புராணக் கதைகளையும், கதை மாந்தர்களின் பெயர்களையும் இன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கவிஞர்கள் கவிதைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆதாம் - ஏவாள்: உலகில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இருப்பதைப் பார்த்துக் கவிஞர் வியப்புக் கொள்கிறார்.

"அன்றைக்கு ஒரு நாள்
ஆரம்பித்து வைத்தானே ஆதாம்
அவனுக்கு
ஏவாள் கொடுத்த
இனிய ஆப்பிளில்
இத்தனை விதைகளா?" (ச.யா. ப.15)

மனித குலத்தில் முதலில் தோன்றியவன் ஆதாம். அவன் மனைவி ஏவாள். அவர்கள்தான் மனித குலம் தழைத்தோங்க காரணமாக இருந்தார்கள் என்பதை "தொடக்கம்" என்ற கவிதை தலைப்பில் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை: இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் அட்சய பாத்திரம் என்னும் வற்றாது உணவு வழங்கும் பாத்திரத்தின் தன்மையினைக் கூறும் பொழுது

"அலுமினிய அட்சய பாத்திரம் திறக்க அடிவாரத்தில்
பத்தினிப் பெண்ணாய்க் கண்சிமிட்டும்
பழைய சோற்றுப் பருக்கைகள்" (ச.யா. ப.24)

அட்சய பாத்திரத்தில் என்றுமே சுவையான உணவு நிறைந்து இருக்கும். ஆனால் வறியவர்களின் வீட்டில் உள்ள அட்சய பாத்திரமான அலுமினியப் பாத்திரத்தின் அடியில் பழைய சோற்றுப் பருக்கைகள்தான் என்றுமே காணப்படும் என்பதையே "அலுமினிய அட்சய பாத்திரம்" என்று கூறுகிறார்.

மணிமேகலை சிறைச் சாலையினை அறச் சாலையாக மாற்றி அமைத்தாள் என்பதை "பேசாத பொருள் பேசினால்..." என்ற தலைப்பில்,

"மணிமேகலைக்கு ஒரு
அறச்சாலை" (ச.யா. ப.55)

என்று சிறைச்சாலை பேசுவது போல அமைத்துள்ளார்.

சகுந்தலை: "ஓ சகுந்தலா" என்ற தலைப்பில் சகுந்தலையின் கதை முழுவதையும் கூறி இன்றைய பெண்கள் பழைய சகுந்தலைகள் போல் அல்ல. அவர்கள் புதுமைப் பெண்கள் என்பதை,

"காளிதாசனின் மானசிக புத்ரியே!
வசந்த உற்சவத்துக்கு
முதல் தாம்பூலம் வாங்கி
இலையுதிர் காலத்தில் வாய்
கொப்புளித்து உமிழும்
விசுவ எத்தர்களும்
துரோக துஷ்யந்தர்களும்
இன்னும் எங்களில் இருக்கின்றார்கள்
ஆனால் எமது சகுந்தலைகள்
இப்போது தொலைப்பது
மோதிரங்களை அல்ல - பொருந்தாத
காதலரை! (ச.யா. ப.36)

புராணக்கால சகுந்தலை மோதிரத்தை தொலைத்துவிட்டு, காதலன் முன் தன்னை ஏற்கும் படி மன்றாடினாள். ஆனால் இன்றைய புதுமைப் பெண்கள் காதலன் பொருந்தாதவன் என்று தெரிந்தால் காதலனைத் தொலைப்பதற்கு தயங்குவது இல்லை என்பதைக் கவிஞர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

சிவன்: சிவனின் கோபத்தினால், நெற்றிக் கண்ணுக்கு இரையான மன்மதனும், நக்கீரனும் தங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே அவர்களை எரித்த சிவனின் நெற்றிக்கண் தூர்ந்து போகட்டும் என்று "சிவனுக்கு ஒரு சாபம்" என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.

"ஓகோ! சிவனாரே!
சாம்பல் பீழை படிந்து
தூர்ந்து போகட்டும்
உமது நெற்றி கண்!
எங்களுக்கு
மனுக்குலம் தழைக்க
மன்மதனும் வேண்டும்
எதேச்சதி காரத்தின் முகத்தில்
காறியுமிழ
நக்கீரனும் வேண்டும்" (ச.யா. ப.47)

பரமபத ஆட்டம்: பரமபதப் படத்தினைத் தேசமாகவும், அதிலுள்ள பாம்புகளை அரசியல்வாதிகளாகவும், தாயம் உருட்டி விளையாடுபவர்களை மக்களாகவும் எண்ணிக் கவிஞர் "சர்ப்ப யாகம்" என்ற கவிதையினைப் பாடியுள்ளார். பரமபத ஆட்டத்தை கொண்டு இன்றைய அரசியல் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துள்ளார் கவிஞர் சிற்பி

"தலை மேல் பூமியை
வைத்தால் சுமக்கும்
ஆதி(க்க) சேடர்களே
சுற்றி வளைத்தால்
சமுதாயப் பாற்
கடலின் அலைநடுவே
இலாபம் கருதிச்
சுழலும் மந்திர
மலையின் தோள்களிலே
கடை கயிறாகிக்
கதையை நடத்தும்
வாசுகிப் பாம்புகளே
நடுங்கி நடுங்கித்
தாயக் கட்டைகள்
உருட்டிக் காத்திருந்தால்
பரம பதத்தை
ஒரு நாளும் நீர்
அடைந்திட விட மாட்டீர்
அதனால்
நாகங்கள் அழிக்கும்
யாகங்கள் தொடங்கினோம்
கொடிய சர்ப்ப யாகம்" (ச.யா. பக்.52,53)

எங்கோ உள்ள சில ஏணிகளைப் பிடித்து நாம் முன்னேறினாலும் அரசியல்வாதிகளான பாம்புகளின் விஷநாக்கால் தீண்டப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே நாம் வந்துவிடுகிறோம். எனவே நாம் அரசியல்வாதிகளான பாம்புகளை அழிக்க, ஒரு புதிய யாகம் தொடங்கி அதில் அப்பாம்புகளை அழித்து அந்த சாம்பலில் புதிய பரமபதத்தினைச் சமைப்போம் என்று அழைக்கின்றார் கவிஞர் சிற்பி. பாம்புகள் தொங்குவது போலே கவிதையின் தலைப்பினையும் அமைத்துள்ளார்.

பேசாதன பேசுதல்: "பேசாத பொருள் பேசினால்" என்ற தலைப்பில் நஞ்சு, சிறைச்சாலை ஆகியவை பேசுகையில் புராணக் கதைகள் இடம்பெறுகின்றன. நஞ்சு தன்னுடைய பெருமையினைப் பற்றி பேசுகையில் அரக்கர்களும், தேவர்களும் திருபாற்கடலைக் கடைந்த பொழுது தான் பிறந்ததாகவும், தேவர், நரகர், மக்கள் இவர்களைக் காக்கும் பொருட்டு நஞ்சை உண்ட சிவனின் திருநீல கண்டமே தன்னுடைய புகுந்த இடம் என்று புராணக் கதையினைக் கூறுகின்றது நஞ்சு,

"நான்
பிறந்த இடமோ பெரிய இடம்
அரக்கன் உறங்கும் திருப்பாற்கடல்
புகுந்த இடமோ புனித இடம்
சிவபெருமான் திருநீலகண்டம்" (ச.யா. ப.54)

"சிறைச்சாலை" என்ற பொருள் பேசுகையில் கண்ணபிரான் சிறைச்சாலையில் பிறந்தான் என்பதைக் கூறுகின்றது.

"கண்ணனுக்கு ஒரு
பிரசவக் கூடம்" (ச.யா. ப.55)

துச்சாதனன்: பாரதக்கதையில் இடம்பெறும் துச்சாதனன், பாஞ்சாலியைத் துகில் உரித்தக் காட்சியை "சிநேகலதா சிரித்துக் கொண்டிருக்கிறான்" என்ற கவிதையில் அரசியல்வாதி விலைமாதுவை துகில் உரிவதைப் பற்றிக் குறிப்பிடும்போது,

"துச்சாதனத் தொடக்க விழாவின்
அடையாளமாய்
அவள் மனம் போல்
சுருண்டு கிடந்த
மானம் பார்த்த சேலை". (ச.யா. ப.78,79)
என்று கூறுகிறார் கவிஞர் சிற்பி.

தேவமறைக் கருத்துக்கள்: ஏசு பெருமான் சிலுவை சுமந்து சென்ற வரலாற்று நிகழ்ச்சியை எடுத்துக்கூறி

"எந்தாய் இன்னதென
அறிகில்லார் இவர் பிழையை
மன்னியும்...." (ச.யா. ப.74)

என்ற வேதக் கருத்தினை "துயரச் சிலுவைகள்" என்ற கவிதையில் கூறுகின்றார். சிலுவை மரத்தில் ஏசு பெருமான் தொங்க விடப்பட்டதால் அது கொடிமரம் ஆயிற்று, சிலுவை மரத்தினை தூக்கிச் சுமந்ததில் அது தூக்கு மரமாகவும், சிலுவை மரத்தில் ஏசு இரு கரம் நீட்டி நிற்பது கி.மு, கி.பி என்ற இருகாலத்தைக் குறிப்பதால் அது கைகாட்டி மரமாகவும், இவர்கள் செய்யும் பிழைகளை மன்னியும் என்று ஏசு பிரான் சிலுவை மரத்திலிருந்து தத்துவம் பேசியதினால் அது விளக்கு மரமாகவும் விளங்கியது என்று கவிஞர் கற்பனை செய்கின்றார்.

முடிவுரை: இவ்வாறு கவிஞர் தன்னுடைய கவிதைத் தொகுப்பில் மணிமேகலை, சகுந்தலை, சிவன், கண்ணன், துச்சாதனன், ஆதாம் ஏவாள், ஏசுபிரான், ஆகிய இதிகாச புராணப் பாத்திரங்களைக் கொண்டு கவிதைகளைப் படைத்து அதன் மூலம் இன்றைய சமுதாய நிலைமையையும், பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link