ஆய்வுச் சிந்தனைகள்


தமிழ்மொழியின் இக்கால நிலையும் எதிர்கால நிலையும்

உலக நாடுகள் எங்கும் இல்லாத ஓர் அவலம் இந்த நாட்டிலே இருந்து வருகிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக உலகில் உள்ள எந்த நாடும் அயல் மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளவே இல்லை. அவரவர் மொழியே அவரவர்க்கு இயற்கையானது. இதயத்தோடு இயைந்தது. உயிரோடு ஒட்டியது; மொழியின் நெளிவு சுழிவுகளெல்லாம் அவரவர் மொழியிலேதான் இதயத்தைச் சென்று பற்ற வல்லன. முனைவர் வில்லியம்ஸ் எம்ரிஸ் என்ற ஆங்கிலேயர் சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பணியாற்றியவர். மின்சாரப் பொறியியற் பேராசிரியரான அவருக்கு இந்தியரிடம் பற்றுதல் உண்டு. நீங்கள் என்று உங்கள் சொந்த மொழியில் பாடங்களைப் படிக்கிறீர்களோ அன்றுதான் எந்த வகையிலும் முன்னேற முடியும் என்பார். அவர் சொன்னது கீழ்மட்டக் கல்வி பற்றி மட்டுமன்று. எல்லாவகையிலும் உயர் மட்டமாக உள்ள ஆராய்ச்சிக் கல்வியைக் கூட அவரவர் மொழியிலேயே நடத்த வேண்டும் என்பதை உணர்த்தினார். ஆக்க வழிபட்ட படைப்புகள் ஆராய்ச்சி விளைவாக உருவாக வேண்டுமானால் சொந்த மொழிவாயிலாகப் படிப்பதே உரிய நல்வழியாகும். நம்நாட்டில் என்று தமிழ் மொழியில் படிக்கிறோமோ அன்றுதான் தமிழில் சிந்திக்கும் வழக்கம் வரும். என்று தமிழில் சிந்திக்கிறோமோ அன்றுதான் ஆராய்ச்சியும் படைப்பும் பெருகத் தொடங்கும்.

இன்றைய நிலையில் மழலையர் கல்வி கூட ஆங்கிலத்துடன் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் அனைத்துமே 1937க்கு முன்பிருந்தது போல ஆங்கிலம் பயிற்று மொழியாக இடம்பிடித்து வருகிறது. இந்த அவலநிலைக்குக் காரணங்கள் பல. அவைகளுக்கு முன்னே ஒன்று தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்தவர்களின் பணிக்கு ஊக்கம் தராமல் குற்றம் குறை கண்டு அவர்கள் ஊக்கத்தைக் குலைத்தது ஆகும். இரண்டாவது ஒரு புறத்திலே ஆக்கம் தருவது போலப் பேசிச் செயலுக்கு வரும்பொழுது அதற்கு நேர் எதிரான போக்கை மேற்கொண்டதாகும்.

இந்த சூழ்நிலையில் தாய்மொழியே பயிற்று மொழியாதல் வேண்டும் என்று காந்தியடிகள் முதல் நம் போன்றவர்கள் வரை எவ்வளவுதான் சொன்னாலும் தமிழக மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்கின்ற நிலையில் உள்ளார்களா என்பது என் ஐயமாகவே உள்ளது. இந்திய நாட்டின் பிற பகுதிகளில் தாய்மொழி பயிற்று மொழியாகத் தமிழ் மொழி இடம்பெறுதல் என்பதைத் தமிழ்நாட்டவர்களே விரும்புகின்றார்களா என்பதும் ஐயப்பாடாக உள்ளது. விளம்பரத்தின் வளர்ச்சிக்கு மொழி ஒரு சாதனமாக மட்டும் பயன்படுவதைக் காணலாம்.

21ஆம் நூற்றாண்டு இயந்திர நூற்றாண்டு, அறிவியல் நூற்றாண்டு என்று கூறுவதோடு விளம்பர நூற்றாண்டு என்ற ஒன்றையும் சேர்த்துக் கூறுதல் வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் இடம்பெறும் பொருட்கள் கூட விளம்பரத்தினால் சிறப்புற்றுச் சீர்மை பெறுவதை இன்று நேரில் காணலாம். எங்கும் விளம்பரம், எதிலும் விளம்பரம், எதற்கும் விளம்பரம் என்று சமுதாயம் இன்று நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு விழிப்புணர்ச்சியாகக் கொள்வோம்.

விளம்பரங்களில் மட்டுமல்லாமல் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஒரு கலப்பட மொழியாகி வருவது கண்கூடு. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களையும் அவற்றைச் சார்ந்த ஒலிகளையுமே பயன்படுத்துகின்றனர். நாமோ தமிழை "Tamil" என்றும் மதுரையை "மெஜீரா" என்றும் ஆங்கிலப்படுத்தியே ஒலிக்கின்றோம். அதுபோல பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி ஒலித்தால் தமிழ் எழுத்தின் ஒலிப்படி வழங்கினால் தாழ்வாக எண்ணுகின்றனர். இந்த நிலைகளை மாற்றாமல் நாமே செய்யக்கூடிய அறிய செயற்திட்டங்களை நிறைவேற்றாமல் தமிழைச் "செவ்வியல்" மொழியாக்க வேண்டுமென்று நடுவணரசின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று முழுக்கமிடுவது ஒரு வேடிக்கையான நாடகமே ஆகும். முதலில் நமது மாநில அரசு நமது தாய்மொழிக்கு ஒரு செவ்வியல் மொழிக்கான (Classical Language) அனைத்துச் சிறப்புகளையும் தருமா? என்பதுவே இன்றைய கேள்விக்குறியாக நிற்கிறது.

கல்விமொழி - தொடர்புமொழி வேறுபாடு: மழலையர் கல்விமுதல் முனைவர் பட்டம் வரை தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும். தொடர்புமொழியாக எந்தமொழி விருப்பம் என்றாலும் அதன்வழி கல்விகற்கச் செய்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த இரண்டிற்கும் இடையே அதிகமான குழப்பம் நிலவுகிறது. ஆங்கிலம் தவிர இந்தியும் பெரிதும் பயன்படும். அவரவர் வேலைக்குச் செல்லும் நாட்டிற்கு ஏற்ப ரஷ்யம், ஜப்பானியம். சீனம் என தொடர்பு மொழிகளை விருப்பப்பாடமாகப் பயிலலாம். தமிழக அரசுகளும், கல்வியாளர்களும் இந்த இரண்டையும் குழப்பி அயல்மொழிகளையே கல்வி மொழியாக்க பிற மாநிலங்கள் அனைத்தும் அந்த மாநிலத் தாய்மொழியையே கல்விமொழியாகக் கொண்டுள்ளன. இங்கு தாய்மொழியாம் தமிழை அறவே விட்டுவிட்டுப் பட்டப்படிப்பு முடிய படிக்கும் அவலநிலை சட்டப்படியான ஆணைகளின் வழி நடைபெறுகிறது. மக்களும் இதில் ஏமாற்றம் அடைந்து, அயல்மொழிகளைக் கற்பதே நன்மைதருமென நம்புகின்றர். தமிழகத்தில் தமிழே ஆட்சிமொழி என்று கூறுகின்றனர். இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அதன்படி தமிழகத்திற்குள்ளாவது தமிழை வாய்ப்புள்ள மொழியாக, வருமானம் தரும் மொழியாக, பொருளாதார வாழ்க்கைக்கு பயன்படும் மொழியாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் அரசுகள் அதைச் செய்யவில்லை. "தமிழ் வாழ்க" என்ற முழக்கத்திற்கு ஒன்றும் குறைவில்லை.

தமிழகத்தில் மேடையில் தமிழ் வாழ்க! என்று முழங்கிவிட்டு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ் சீரிளம் திறம் இழந்து, நலிந்து, நைந்து செத்துப்போகும்படி செய்துவரும் கொடுமையை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இந்த நிலை மாறவேண்டுமெனில் கல்விமொழி தாய்மொழியாகவே இருக்க வேண்டும். தொடர்பு மொழியாகத்தான் ஆங்கிலத்தைப் பயில வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும். அதற்கான பரப்புரைகள், பிரச்சாரங்கள், புரட்சிகரமான திட்டங்கள் வகுத்து வளர்ந்த இளைஞர்கள் செயற்பட வந்தால் ஒருவேளை நிலைமை மாறலாம்.

எங்ஙனம் ஆனாலும் தமிழ்மொழி வேலைவாய்ப்புத்தரும், தமிழ் வழங்கும் தேயங்களிலேனும் வருமானம் தரக்கூடிய வாய்ப்புகள் தரும். வாழ்வதற்குத் துணை செய்யும் என்ற நிலைமையை அரசுகள் ஏற்படுத்தினால்தான், அதற்காக உயர்கல்வி அனைத்தையும் பொறியியல், மருத்துவம், அறிவியல் உட்பட தமிழில் படிக்க விரும்புவோருக்கு மட்டுமாவது தமிழில் தந்தால்தான் நிலைமை மாறும். இல்லாவிட்டால் ஆட்கொல்லி நோய் போலவும், புற்று நோய் போலவும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் அழிந்து வருவதால் 21ஆம் நூற்றாண்டுடன் தமிழ் வழக்கமற்ற மொழியாகிப்போகுமே என்று கூறலாம்.

புண்ணுக்கு மருந்து போடாமல் புனுகுபோடும் வேளையிலேயே எல்லோரும் மூழ்கியுள்ளனர். இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சு புகுத்தப்படுவது பற்றி யாருமே கவலைப்படவில்லை. என் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லுவதே பெற்றோர்களின் பெருமையாகிவிட்டது. இதனால், பெயர்களில் தமிழ் இல்லை, திரைப்படங்களில் தமிழ் இல்லை, மக்கள் ஊடகங்களில் நல்ல தமிழ் பயன்படுத்தப்படவில்லை. ஒரு சிறுவர்மணியையோ, மலரையோ இன்றையப் பள்ளிப்பிள்ளைகளுக்குப் படிக்கத் தெரியவில்லை. தமிழ் கற்றவர்கள் தமிழ் போதிக்கவில்லை. தமிழ் கற்றவர்களே தமிழைப் போதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. தமிழ் வகுப்புகளும், பாடங்களும் மேலும் மேலும் குறைக்கப்படுவதே புதிய பாடத் திட்டங்களின் போக்காக இருக்கிறது. இந்த இழிநிலை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இந்தி மொழியைத் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொண்ட மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் தங்கள் தாய்மொழி வழிக்கல்வியே உயர்கல்வி வரை வளர்த்து விட்டார்கள். வங்காளம். குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளில் அவ்வம்மொழிகளிலேயே எண்களின் வடிவங்களைப் பயன்படுத்துகின்றன.

எதிர்காலநிலை: சான்றோர்களுக்குத் தாய்மொழி பயிற்று மொழியாக வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. கடந்தவைகளை மறந்துவிட்டு உண்மையான ஈடுபாட்டோடு கல்வி அலுவலர்கள் அரசின் துணையோடு முயற்சியை இன்று தொடங்கினாலும் எதிர்காலத்தில் தாய்மொழியைப் பயிற்றுமொழியாக ஆக்குவதென்பது நடக்கக்கூடிய செயலாகும். தமிழிலே படிப்பது எளிது. இயற்கையானது, கல்வித்துறையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு அவரவர் மொழியில் பயில்வதே பொருத்தமானது. சிந்தனைக்கு கிளர்ச்சியூட்டி, அழிவுக்கு வளர்ச்சி நல்கி முன்னேற்றம் தரவல்லது உரிமையான, சொந்த மொழியாகத்தான் இருக்க முடியும். அத்தகைய உரிமைக்குப் பொருத்தமானது தமிழ்நாட்டில் தமிழ்தான்.

அன்று முதல் இன்றுவரை ஏற்பட்டுள்ளவற்றையெல்லாம் கருதி, இன்றைய தமிழுக்கு புதிய இலக்கணம் வகுக்கும் போது முன்பு வளர்ந்த தமிழுக்கான இலக்கணமும் தெரிந்திருப்பது நல்லது. அப்போதுதான் பாதை விலகாமல் பார்த்து நடக்க முடியும்.

தமிழின் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் கல்வித்துறையில் இன்றைய உடனடித்தேவை தமிழை எல்லா மட்டத்திலும் பயிற்று மொழியாக்குதல், அதற்காக வல்லுநர்களும் அரசும் இணைந்து ஆவண செய்ய உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் தயக்கமோ தாமதமோ மேற்கொள்வது எதிர்காலத் தமிழகத்திற்கு நல்லதல்ல என்றும் கூறலாம்.

நன்றி: கட்டுரை மாலை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link