ஆய்வுச் சிந்தனைகள்


சிலம்பில் - அரசியல்

முன்னுரை:-

இனக்குழு வாழ்க்கை முறையழிந்து நிலப்பிரபுத்துவம் தோன்றுவதற்கு முன் மக்களிடையே அரசு எனும் நிறுவனம் பற்றிய எண்ணம் ஒரளவு உருவாகியிருந்தது. ஆதிமனிதன் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தம்மில் வலிமை பொருந்தியவனின் துணையை நாடினான். அதனைத் தொடர்ந்து அரசு தோன்றுவதற்கான முதல்வித்து விதைக்கப்பட்டது. "அரசு எப்பொழுது தோன்றியது என்பதற்கான தெளிவான வரலாற்றச் சான்றுகள் கிடைத்ததில் நமக்குக் கிடைத்தவற்றில் அறிவிற்கு ஒவ்வாத கற்பனைவாத புனைகதைகளாகப் பெருபான்மையானவை இருப்பதை அறிய முடியும்" என்பார். இனக்குழு மக்களின் வாழ்க்கையில் பெருங்குழப்பங்களும், கலகங்களும் தோன்றின. மனிதகுலம், அழிந்துபட்டொழியும் நெருக்கடியான தருணம் உருவானது. அக்குழு மக்களிடையே உள்ள பெரியவர்கள் தம் கூட்டத்தில் வாழும் வலிமை பொருந்திய இளைஞனை அணுகி, "நீ எங்களைப் காப்பாற்று, உனக்குத் தேவையான பொருட்களை நாங்கள் தருகிறோம் என்று சொன்னார்கள். அவ்விளைஞனும் சம்மதித்து அவர்களைக் காப்பாற்றியதாகவும், அதிலிருந்து அரசு தோன்றியது". என்றும் கூறுவர். "காட்டுமிராண்டி மந்திரக்காரன் தலைவனாக மதிக்கப்பட்டு இருந்தான். மந்திர தந்திரத்தில் வல்லவனே, நாகரீகமில்லாத காலங்களில் அரசனாகவும், சேனைத் தலைவனாகவும் ஆதிக்கம் உடையவனாகவும், அந்தந்த ஊர் அரசியல் நிர்வாகங்களை நடத்தி வந்தான்". காலவேகத்தில் இப்பொறுப்புகளை வகித்தவனே அரசைனாகப் போற்றப்பட்டு இருக்க முடியும்.

அறிஞர்களின் கருத்து:

மனிதன் கண்ட அறிவியல் வெற்றிகளுள், முதன்மை இடம் அரசியலுக்கே வழங்க வேண்டும் என்று பிளாட்டோ என்னும் மேனாட்டு அஞிர் அரசியல் பற்றி கூறியதைப் பொன். சௌரிராசன் தன்னுடைய "சித்திரச்சிலம்பு" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அரசுகளில் குடியாட்சி, கூட்டாட்சி, கோனாட்சி எனப் பல உள்ளன. இமயம் தொட்டுக் குமரிவரை பண்டைக்காலத்தில் நிலவிய ஆட்சி கோனாட்சியே ஆகும். எனவே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் பொதுச்சிந்தனைகளின் தலைவராக விளங்கும் வள்ளுவப் பெருமகனார், தம் திருக்குறளிலே பெரும்பகுதியைக் கோனாட்சி அடிப்படையில் அரசியல் சிந்தனைக்கு வழி வகுத்துத் தந்துள்ளார் எனலாம்.

தமிழ்நாட்டு மன்னர்களும் இத்தகைய உரிமையை எய்தி நாட்டை ஆண்டு வந்தனர். மன்னர்கள் காத்தற் கடவுளாகிய திருமாலாக உருவாகம் செய்யப்பட்டனர். தொல்காப்பியரும் இதனை,

"மாயோன்மேய மன்பெருஞ் சிறப்பில்
தர வர விழுப்புகல் பூவை நிலை"
என்று மன்னனைத் திருமாலோடு சார்த்திக் கூறுகின்றனர்.

"திருவுடை மன்னரைக் காணின்
திருமாலைக் கண்டேனே"
என்று நம்மாழ்வாரும் கூறுகின்றனர். மேலும் புறநானூற்றை நோக்கும் போது,

"நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்று கூறுகிறது.

போர் முதலிய குழப்பங்கள் இன்றி, அமைதி நிலவினாலன்றி உழவர்கள் தங்கள் தொழிலைச் செவ்வனே நடத்த முடியாது எனக் கருதிய மக்கள் மன்னனைச் சமூகத்தின் உயிரெனக் கொண்டனர். பண்புடைய மன்னரும் குடிமக்களின் நோக்கத்தைத் தம் நோக்கமாகக் கருதி வாழ்ந்தனர்.

அரசியல் வாழ்வு:

சேர மன்னர்களின் வில்லாற்றலும், பாண்டியர்களின் கல்வித் திறனும், சோழர்களின் பெருஞ்செல்வமும், ஒன்று சேர்ந்தமையால் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் வாழ்வு மேன்மை பெறுவதாயிற்று. மக்களை ஒரு நெறிமுறையில் வாழச்செய்யும் அரசியலமைதி ஒரு நாட்டிற்கு முதற்கண் வேண்டப்படுவதாகும். இவ்வமைதி பெறாத நாடு, வளங்களை குறைவறப் பெற்றிருப்பினும், சிறந்த நாடாக நிலைப்பெறுதல் இயலாது. இந்த நுட்பத்தினைச் சிலப்பதிகாரச் சமுதாயம் நன்கு உணர்ந்திருந்தது. வள்ளுவரும் இதனை உணர்த்தும் வகையில்.

"ஆங்காமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு" என்று கூறுகின்றார்.

மூவரசர்களின் ஒற்றுமை:

மன்னனுக்குரிய கடமையிலிருந்து முரணாது தமிழ் வேந்தர் மூவரும் செயலாற்றினர். இம் மூவேந்தரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு சேரநாடு, பாண்டியநாடு, சோழநாடு என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர், தமிழ்ச் சமுதாயத்தவர் என்னும் நன்னோக்கு உடையவர்களாகத் தமிழ்நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து நிகழ்த்தினர்.

தமிழ்நாட்டின் சார்பில் வெளிநாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அந்த ஆணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் ஒரு சேரப் பொறிக்கப் பெற்றுச் செல்வது வழக்கமாக இருந்தது. இதனை

"வடதிசை மறுங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்றமிழ் நான்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை யேற்று வரைக ஈங்கென

என்ற அடிகளில் காணலாம். மூவேந்தர்கள் தமிழகத்தின் நலம், குறித்து ஒன்று கூடி, அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு. இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், மக்களின் உள்ளத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வந்தது. உலகு உய்வு பெறுகிற வகையில் வெண்கொற்றக் கொடை கொண்டிருந்தான் சோழன். இடம்பெயரா அளவுக்குக் குடிகளுக்கு நல்வாழ்வு புகாரில் இருந்தது. நாட்டின் வேந்தனுக்குத் துணைநிற்கும் வகையில் சில அமைப்புகள் சிலப்பதிகாரத் தமிழகத்தில் இருந்தன. அவ்வமைப்புகள் ஐம்பெருங்குழு என்பேராயம் என அழைக்கப்பட்டன. அக்குழுக்களின் துணைகொண்டு வேந்தர் நாட்டின் நலங்காத்தனர். அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியார், தூதுவர், சாரணரர், ஆகியோர், ஐம்பெருங்குழு என்றும் கரணத்தியலவர், கருமக்காரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், நளிடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் இனைனர், எண்பேராயம் என்றும் கூறுவார் அடியார்க்கு நல்லார். பாண்டியனுக்கு ஆலோசனை கூறுகிறவகையில் அவனுக்கு மந்திரச் சுற்றம் இருந்தது.

நீதித்துறையில் வேந்தனுக்குத் துணையாக அறங்கூறும் அவை இருந்தமையைப் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. அரசனது அவைக்காலத்தில் குறிப்பிடத்தக்கவர்களாகத் தன்னைத் தலைவர், ஆசான், அந்தணர், பெருங்கணி, அமைச்சர் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சமுதாயத்தின் வேந்தன் தன் அவையினரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டிய நிலை இருந்தது. ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் நாடாளும் வேந்தனுக்கு உறுதுணையாய் இருந்தமையால் நாட்டி நலம் பெருகியது. சமுதாயத்தில் அறம் நிலைத்தது. மன்னர் நாட்டின் தீமைகளுக்கும், குறைகளுக்கும், தாமே பொறுப்பேற்றான். நாட்டில் மழை குன்றி, மண்வளம் குறைந்தாலும், குடிகள் குறைகளைக் கண்டாலும் வேந்தர் அஞ்சினர். கொடுங்கோன்மை, தவறியும் நிகழாது காத்தனர். மக்களைக் காக்கும் மாண்புமிகு பணி எளியதன்று எனக்கூறும் சேரன் செங்குட்டுவனின் தொடர்களிலிருந்து பழந்தமிழ் வேந்தரின் அறவுள்ளம், பொறுப்புணர்ச்சி ஆகியன தெரிகின்றன. இயற்கையும் விலங்குகளும் கூடத் துன்புறுத்தாத அளவுக்குச் செங்கோல் நிலைக்க ஆண்டனர் பாண்டியர். பதியெழு அறியாப்பண்பு மேம்பட்ட மதுரை மூதூர், பாண்டியரது செங்கோலின் செம்மையும், குடையின் தன்மையும். வேலின் கொற்றமும் நீ மேன்மை வாய்ந்தவை ஆகும். பாண்டியர் அரசியல் பிழையாது அறநெறி காத்துப் பெரியோர் சென்ற அடிவழி மாறாது செல்லும் தன்மையர் தனது செங்கோன்மை தவறுமேயானால் தம் உயிர் தரவும் தயங்காதவர்கள் அவர்கள். எனவே செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று சிலம்பு கூறுகிறது. அவர்கள் நீதியில் கொண்டிருந்த நாட்டம் உயர்ந்தது. அதன் வழி மக்களும் மகழ்ந்தனர்.

மனித சமுதாயத்தின் விரிவான நன்மைகளுக்குப் பழந்தமிழ் வேந்தர்களும் மக்களும் இணைந்தும் முனைந்தும் அரும்பாடுபட்டனர். அதன் வழி நாடும் சமுதாயமும் நலம் பெற்றன.

முடிவுரை:

மக்கள் நலனையும் மகிழ்ச்சியையுமே பழந்தமிழ் மன்னர் தம் ஆட்சியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தனர். மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரிமைகளும் உதவிகளும் எண்ணற்றவை. சிறைக்கோட்டங்களைத் திறந்திடுங்கள் பிழை செய்தோரைப் பிழை பொறுத்து விடுதலை செய்யுங்கள் என பாண்டியன் பறை அறிவித்தலின் வழி மன்னர் மாண்பு தெரிகிறது. நாடாளும் முறைமைகளில் வேந்தன் குழு, ஆயம், சுற்றம் ஆகியவற்றின் துணையைப் பெற்றுச் சிறந்தான். எனவே தனியாட்சி முறை ஒழிந்த கூட்டாட்சி தோன்றிய காலம் சிலப்பதிகாரக் காலம் என்று கொள்ளலாம்.

நன்றி: கட்டுரை மாலை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link