ஆய்வுச் சிந்தனைகள்


சங்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் அடிமை முறை

சங்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் அடிமை முறை இருந்ததில்லை என்பர் சிலர். மெகஸ்தனிஸ் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அடிமை முறை இல்லை என்கிறார். வி. கனகசபை, சங்க காலத் தமிழகத்தில் அடிமை முறை இல்லை என்கிறார். டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், சாதிகள் பெருகியிருந்தன; சிலர் புலையர்களாக ஒதுக்கப்பட்டு இழி தொழிலையும் பண்ணை வேலைகளையும் செய்து கொண்டு ஊருக்கு அப்பால் உள்ள சேரிகளில் காலந்தள்ளினர்; ஆயினும் அவர்களை அடிமைகளாகக் கருத முடியாது என்கிறார். ஆனால், சில வரலாற்றறிஞர்கள் இங்கு அடிமை முறை இருந்ததற்கான சான்றுகளைக் காட்டுகின்றனர். வட நாட்டில் ஆரியர்களுக்கிடையில் "தாசர்கள் "சூத்திரர்கள்" என்ற சொற்களுக்கு அடிமை என்று பொருள் என்பதைச் சுட்டிக்காட்டி மெகஸ்தனிசை மறுக்கிறார் ஏ.எல்.பாசம். தென்னாட்டில் அடிமை முறை இருந்தது. அது வடவாரியச் சமுதாயத்தில் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது. பின்னர் மறைந்தது என்கிறார் ஆர்.பி. சாரம். போர்க் கைதிகளை அடிமை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தும் வழக்கம் சங்க காலந்தொட்டே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதார மேம்பாடு கூலி அடிமைகளைப் பெருக்கியது என்கிறார் வெ.தி.செல்லம்.

இனித் தமிழ்நாட்டில் அடிமை முறை வளர்ந்த வரலாற்றைக் காண்போம். உலகத்தில் எந்த நாட்டிலும் மக்கள் தோன்றும் போது அடிமைமுறை தோன்றியிருக்க முடியாது. அது சமுதாய வளர்ச்சி நிலையில் தொழில்கள் பெருகித் தனியுடைமை ஏற்பட்ட பின்னர் தோன்றுவது.

நிலமும் தொழிலும்:

இயற்கைச் சூழ்நிலைக்கேற்பத் தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாக பிரித்தனர். பழங்காலத்தில் மலையிலும் மலை சார்ந்த இடங்களிலும் வாழ்ந்த மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். அது வேட்டைக் காலம். குழுவாக வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்தனர். கூடிவாழ்வது குறிஞ்சி எனப்பட்டது. அங்கு வாழ்ந்தவர்கள் குறவர்கள், காடும் காடு சார்ந்த பகுதிகளிலும் நடைபெற்றது மேய்ச்சல் தொழில், ஆநிரைக்கு ஏற்படும் இடையூறுகளைப் பொறுத்துக் கொண்டு, நம்பிக்கையோடு இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்வது முல்லை எனப்பட்டது. வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் வாழ்ந்தவர்கள் நாகரிகம் வளர்த்தவர்கள். நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்தனர்; நிலைத்த வாழ்க்கை நடத்தினர். தனியுடைமை தோன்றியது. உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் வெறுப்பும் பகையும் அரும்புவிடத் தொடங்கியது. மருதம் என்பது வெறுப்பு, பகை எனப்பொருள்படும். கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் மீன் பிடித்தல், உப்பு தயாரித்தல் நடைபெற்றன. அத்தொழில்களைச் செய்தவர்கள் நுளையர், பரதவர் எனப்பட்டனர். மிகவும் வருந்துவதற்குரியது நெய்தல். மழை குறைந்த வறண்ட, காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள எயினர், வேட்டுவர் எனப்பட்டனர் வழிப்பறி, அநிரை கவர்தல், வேட்டை அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் ஊரை விட்டு வீட்டை விட்டுப் பிரிந்து சென்று பொருள் தேடும் தொழில் பாலை எனப்பட்டது.

இந்த மக்கள் தங்களுக்குப் பழக்கமான தொழிலைச் செய்து கொண்டு தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வு இல்லை. ஆணுக்கும் பெண்க்கும் இடையில் மட்டும் இயல்பாக அமைந்த வேலைப்பாகுபாடு இருந்தது. குழந்தை பெறுவது, அதை வளர்ப்பது, பால் கறப்பது அண்மையிலுள்ள சிறு சிறு நிலங்களில் பயிர் செய்வது பெண்களின் வேலை. காட்டுவிலங்குகளைப் பழக்குவது, வேட்டையாடுவது போன்றவை ஆண்களின் வேலைகள், அவர்களுக்கிடையில் அனைவரும் சமம். குறிஞ்சி, முல்லை வாழ்க்கை முறையில் வயது வந்து ஆண்களெல்லாம் வயது வந்த பெண்களுக்குக் கணவன்மார்கள், பாலுறவில் ஒழுங்கு முறை ஏற்படவில்லை அக்குழு மக்களுக்குத் தாயைத் தெரியும். தந்தையைத் தெரியாது, தாயே குடும்பத்தின் தலைவி, அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை. அனைவரும் சமம்.

தமிழகத்தில் மக்கள் இனக்குழுவாக வாழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் வடவாரியர்களிடம் கி.மு. 700 வரை இருந்தது போன்ற கட்டுப்பாடற்ற பாலுறவு (Promiscuity) இருந்ததற்குச் சான்று இல்லை. ஆனால் தென்னாட்டு மலைவாழ் மக்களிடம் அதன் சொச்சமிச்சங்களைக் காண முடியும். காலப்போக்கில் வேளாண்மை வளர்ந்து சிறு, சிறு நிலக்கிழார்கள் தோன்றினர். அவர்களில் வலியவன் எளியவனின் நிலத்தைக் கவர்ந்து கொண்டான். இல்லாதவன் உள்ளவனுக்கு அடிமையானான். முன்னரே தோன்றிய திருமண முறை மூலம் பெண் ஆணுக்கு அடங்கியவளாக்கப்பட்டாள். வேளாண்மை வளர்ச்சியின் காரணமாகச் சீறூர் மன்னன், ஓரூர் மன்னன் எவ்வி, எழினி, பாரி, காரி, ஓரி அதியமான் போன்ற நிலக்கிழார்கள் உருவெடுத்தனர். அது வர்க்கச் சமுதாயந்தான்; அடிமைகள் இருந்தனர். ஆனால் அவர்கள் மேலைநாடுகளிலும் வடநாட்டிலும் நடத்தப்பட்டதைப் போல் அவ்வளவு கொடுமைக்கு ஆளாகவில்லை. நிலக்கிழார்கள் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்புடையவராய் இருந்ததால் அடிமை நிலை கூர்மை அடையவில்லை என்று சொல்லலாம். நாட்டில் உற்பத்தியும் தொழில்களும் பெருகிய நிலையில் பெருநிலப் பிரபுக்களான, பாண்டிய, சோழ, சேரர்கள் வேளிர்களின் மேல் படையையெடுத்து அழித்து அவர்களின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பேரரசர்களாகப்பறை சாற்றிக் கொண்டனர்.

ஆண் அடிமைகள்:

போரில் பெரும்பாலான வேளிர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். சிலர் சிறைபிடிக்கப்பட்டனர். தோல்வியடைந்த சிலர் கப்பங்கட்டுவதாக ஒப்புக் கொண்டு வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர். ஏனையோர் அடிமைகளாக்கப்பட்டு அரசர்கள், பெருநிலக்கிழார்களின் பண்ணையாட்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும், ஏவலர்களாகவும் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். போர்க்காலங்களில் இந்த அடிமைகள் படைவீரர்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். போர் வீரர்கள் தனியாக இருந்தனர். அவர்கள் போர்க் காலங்களில் கூட உற்பத்திக்கு இடையூறு ஏற்படாமல் உழவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர் என்று கூறுவோறும் உளர்.

சிறு நிலச் சொந்தக்காரர்கள் தங்களின் சொந்த நிலத்திற்கே, வம்ப வேந்தர்களுக்கு, வரிகட்ட வேண்டியநிலை ஏற்பட்டது. வரிகட்ட முடியாத வெள்ளைக்குடி நாகனார் போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் பெரு நிலக்கிழார்களாக உழுவித்துண்போராக வளர்ந்து படைத்தலைவர்களானார்கள். வேளாண்மை வளர, வளரத் துணைத் தொழில்கள் பெருகின. பல்வேறு தொழில் செய்தவர்கள் அந்தந்தத் தொழிலின் பெயரால் அழைக்கப்பட்டனர். அதாவது தச்சன், கொல்லன், பறையன், புலையன், பாணன், துடியன் போன்றோர். இனக் குழுக்களைப் போலவே தொழிற்குழுக்களும் தனித்தனியே வாழ்ந்தன. காலப்போக்கில் சாதிகளாக மாறின. மொத்தத்தில் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் தீண்டத் தகாதவர்களாக நடத்தப்பட்டதற்குச் சான்று இல்லை. ஆரியர்களின் நுழைவுக்குப் பின்னரே அது தோன்றியது.

பெண்ணடிமைகளின் நிலை:

பெண்ணடிமைகளின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் விளைநிலங்களிலும் வீடுகளிலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதோடு கிழார்களின் காமலீலைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். தோல்வியடைந்த மன்னர்களின் மனைவிமார்கள் அரசர்களின் மனைவியர் (Halm) பட்டியலில் சேர்க்கப்பட்டனர் படைத்தலைவர், பார்ப்பனர், நிலப் பிரபுக்களின் இற்பரத்தையராக., காதற் பரத்தையராக, சேரிப்பரத்தையாக்கப்பட்டனர். அகப்பாடல்களில் இடம்பெறும் செவிலித்தாய்கள் இப்படி வந்த அடிமைகளாக இருக்க முடியும். சில பெண்ணடிமைகள் கோயில்களை மெழுகி, விளக்கேற்றி வைத்துப் பரத்தையர்களாக வாழ்ந்தனர். அவர்களுக்குக் கொண்டி மகளிர் என்று பெயர்.

ஆரியர்களின் நுழைவு:

இந்த நிலையில் சுமார் கி.மு.400 அளவில் ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பு தமிழக வரலாற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. புதிதாக நுழைந்த பார்ப்பனக் கலாச்சாரம் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்குக் கிடைத்த தெய்வீக அங்கீகாரமாகக் கருதப்பட்டது. பார்ப்பனர்கள் அமைச்சர்களாக, நெறியாளர்களாக அரசர்களாலும் தொழத்தகுந்தவர்களாக உயர்ந்தனர்.

தமிழகத்தில் தீண்டாமை:

இங்கு ஒரு செய்தியைக் கூர்ந்து நோக்கினால் சில உண்மைகள் விளங்கும். ஆரியர்களின் நுழைவுக்கு முன்னர் இந்தியாவில் அடிமை முறை இருந்தது. ஆனால், தீண்டாமை இல்லை. அவர்கள் அடியெடுத்து வைத்தது முதல் கடைசி வரை அவர்களை எதிர்த்தவர்கள் வேளாண்மைத் தொழிலும் துணைத் தொழிலும் புரிந்து கொண்டிருந்த திராவிடர்களும் நாகர்களுமாவர். அவர்களைத் தாசர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் ஒதுக்கி வைத்துச் சுரண்டினர்; அதே உத்தியைத் தமிழ்நாட்டிலும் பரப்பினார்கள். இங்கு மக்களைச் சுரண்டி வாழ்ந்த சேர, சோழ, பாண்டியர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான மக்களான அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைத்தனர். சில புலவர்களும் பாணர்களும் மன்னர்களின் மனம் மகிழுமாறு, சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்களை இழி தொழில் செய்யும் இழி பிறப்பாளர், இழி குலத்தோர் என்று பாடினர். தண்ணுமை வாசிப்பவன் இழிசினன் என்று பாடுகிறார்கள்.

உயிர் வாழ்க்கைக்குத் தெவையான பொருள்களை உற்பத்தி செய்த அவர்கள் கடையர் என்று இகழ்ந்து ஊருக்கு வெளியே, பன்றிகள், கோழிகள், ஆடுகள் ஆகியவை சுற்றித்திரியும் உறைக்கிணறு உள்ள குடிசைகள் நிறைந்த சேரில் வாழும்படி ஒதுக்கி வைத்தனர்.

அதே நேரத்தில பார்ப்பனர்கள் வா‘ந்த பகுதி கோழியும் பன்றியும் நாயும் நுழையாத, மெழுகப்பட்ட தூய்மையான வீடுகள் நிறைந்த, வேதம் ஓதும் கிளிகள் உள்ள நல்லநகராம்.

அந்தக் காலத்தில் பொருளதிகாரம் என்னும் இலக்கணம் செய்த தொல்காப்பியர் ஆரியப்பண்பாட்டுக்கு மிகவும் சிறப்பளித்தார். வருணாச்சிரம முறைப்படி மக்களை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று பிரித்து அவர்களுக்கு உரிய தொழிலை வரையறை செய்கிறார். ஓதலும் தூது செல்லலும் உயர்ந்தோர் தொழில் என்கிறார். வேளாண் மாந்தர்க்கு உழுதொழிலைத் தவிர பிறதொழில் இல்லை என்கிறார்; அதாவது படிப்பு இல்லை என்கிறார். அடிமைகளுக்கும் வினை செய்வோர்க்கும் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இல்லை. அப்படிக் காதலித்தாலும் அது பெருந்திணை - பொருந்தாக் காமம் என்கிறார்.

தொல்காப்பியர் கூறுவது, "வடமொழியில் அடிமைகளுக்குச் சொத்து வைத்துக் கொள்ளவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை; வேதத்தைப் படிக்கக் கூடாது; யாராவது வேதம் படிப்பதைக் கேட்டு விட்டால் கேட்ட அடிமையின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" என்று மனு நீதி, கூறுவது போல் இருக்கிறது.

மேலும், வேளாண்மை, அடியோர், வினைவலர், வைசிகன் போன்ற சொற்கள் தொகை நூல்களில் இல்லை; தொல்காப்பியத்திலேயே முதன்முதலாகக் காணப்படுகிறது.

சுருங்கச் சொன்னால், தமிழ்நாட்டில் தொல்பழங்காலம் முதல் உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை உற்பத்தி செய்த பெரும்பாலான மக்கள் தொழில் அடிப்படையில் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். காலப்போக்கில் சுரண்டல்வாதிகளான நிலப்பிரபுக்கள் அவர்கள் அடிமைகளாக்கினர். ஆரியர்களின் கலாச்சாரப் படையெடுப்புக்குப் பின்னர் தொழிலால் அடிமையாக்கப்பட்டவர்கள் பிறப்பால் இழி குலத்தோராக்கப்பட்டு அடிமைகளின் பிள்ளைகள் அடிமைகளாகவே இருக்குமாறு செய்யப்பட்டனர்.

இங்குப் பொருளாதாரச் சமத்துவம் வளர்ந்து வர்க்கச் - சுரண்டலுக்கு முடிவு கட்டும்வரை சாதிகளின் பெயரில் அடிமைமுறை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link