ஆய்வுச் சிந்தனைகள்


தற்காலத் தமிழில் பிறமொழி ஆளுமையும் இலக்கண மீறல்களும்

தற்காலத்தமிழில் ஆங்கிலம், வடமொழி போன்ற பிறமொழிகளின் கலப்பால் ஏற்படுகின்ற இலக்கண விளைவுகளையும் மரபு சார்ந்த இலக்கண விதிகளின் மீறல்களையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

எழுத்திலக்கணம்:

வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகள் தற்காலத் தமிழில் கலப்பதல், இதுவரை தமிழில் வழங்கப்படுகிற எழுத்துக்களின் வருகை முறைகள் குறித்த மரபுகள் மீறப்படுகின்றன.

மொழி முதல் எழுத்துக்கள்:

மொழிக்கு முதலில் ட்,ர்,ல் மற்றும் ஆய்தம் போன்ற எழுத்துக்கள் வராததாகக் கருதப்பட்டன, ஆயின் தற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து வழங்கப்படுவதால் இவ்விதி மீறப்பட்டு இவ்வெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரத்தொடங்கின. இவ்வகையில் கீழ்க்கண்ட சொற்கள் தமிழில் காணப்படுகின்றன.

டவல், டல், டர்னா, டப்பா, டானிக், டாக்டர், டாங்கி, டிரக்கர், டிக்கட், டிப்ளமோ, டிரிப்யூனல், டீசிங், டீசல், டெலிகிராம், டெண்டர், டெலிபோன், டைரி, லக்ஸ், லட்சம், லஞ்சம், லட்டு, லட்சார்ச்சனை, லாரி, லாட்டரி, லாபம், லீலை, லீவ், லேட், லேடி, லுங்கி, லூட்டி, லுக், ரசிகர்கள் ரம்ஸான், ரப்பர், ரத்து, ரயில், ரயில்வே, ரகசியம், ராணுவம், ராஜினாமா, ரிசர்வ், போலிஸ், ரேட், ரைட், ரைஸ், ரோந்து,

ஃபோர்டு, ஃபாத்திமா, ஃபேன், ஃபார்மஸி, ஃபிட்டர், ஃபுட், புரொடெக்ட்ஸ், ஃபைன், ஆய்தம் முதலில் வரும் சொற்கள் அருகியே காணப்படுகின்றன. மேலும் வடமொழி எழுத்துக்களான ஜ, ஸ், ஷ,, போன்ற எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வருதலும் காணப்படுகிறது. கீழ்க்கண்ட சொற்கள் இவ்வகையில் காணப்படுகின்றன.

ஜட்ஜ், ஜம்பம், ஜனவரி, ஜமீன், ஜவுளி, ஜனநாயகம், ஜான், ஜாடி, ஜோர், ஜோடி, ஸ்டேசன், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்ட்ராங், ஸ்டார், ஸரசுவதி, ஷங்கர், ஷர்பத், ஷன்முகம், ஷாப், ஹரிசன், ஹால், ஹாஸ்பிடல், ஹாய், ஹிந்து, ஹிந்தி,

மொழியிறுதி எழுத்துக்கள்:

தமிழ் மரபில் வல்லின மெய்யெழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வருதல் இல்லை, ஆயின் இம்மரபு மீறப்பட்டு வல்லின மெய்யெழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வரத்தொடங்கின. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுக்கள் இவ்வகையில் அமைகின்றன.

கிளார்க், ப்ளாஸ்க், பிரேக், பாங்க், ஸ்டிரைக், பெஞ்ச், வாட்ச், சுவிட்ச், பிஸ்கட், கோர்ட், யூனிட், சீக்ரெட், டிக்கெட், சர்டிபிகேட், சீட், ஏஜெண்ட், பட்ஜெட், கிரிக்கெட், செமபைட், பார்லிமெண்ட், ஜாக்பாட், யூனிட், ராக்கெட், பந்த், பரத், சர்பத், டைப், கிளப், பல்ப், ஷாப், டைப்,

மேலும் வடமொழி எழுத்துக்களான ஸ்,ஜ்,ஷ் போன்றனவும் சொற்களின் இறுதியில் காணப்படுகின்றன.

போலீஸ், எக்ஸ்பிரஸ், கிளாஸ், ஏஜென்ஸ“ஸ். இன்ஸ்சூரண்ஸ், ஆபிஸ், பஸ், க்ளுகோஸ், ஸ்டோர்ஸ், ஜட்ஜ், பேட்ஜ், பஜாஜ், புஷ், ஜ்ஷ் போன்ற எழுத்துக்களின் வருகை அருகியே காணப்படுகின்றது.

மொழி முதல் மெய்மயக்கம்:

தமிழ்மரபுக்கு மீறிய மொழிமுதல் மெய்ம்மயக்கம், பிற மொழிச்சொற்களின் வருகையால் தமிழில் இன்று காணப்படுகிறது. கீழ்க்கண்ட சொற்கள் இவ்வகையில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: பேங்க, பார்லிமென்ட், கோர்ட், சர்ட், சார்க், பெல்ட்,

சொல்லிலக்கணம்:

பிறமொழிச் சொற்களுடன் தமிழின் பன்மை விகுதிகளும் வேற்றுமை உருபுகளும் இணைதல் இல்லை, ஆயின், இம்மரபு, தற்பொழுது, மீறப்பட்டு பன்மை விகுதிகளும், வேற்றுமை உருபுகளும் பிறமொழிச் சொற்களுடன் இணைதலைக் காணலாம்.

பன்மை விகுதிகள் இணைதல்:

"கள், அர், ஆர், அர்கள், போன்ற விகுதிகள் இவ்வகையில் இணைகின்றன. கள் விகுதியின் ஆட்சி அதிகமாகக் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: பஸ்கள், ஃபேன்கள், ரன்கள், பாக்கெட்டுகள், விக்கெட்கள், ரசிகர்கள், ரயில்கள், என்ஜின்கள், ஏஜெண்டுகள், ஓட்டுக்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், டிராக்டர்கள், வேஸ்டிகள், சர்ட்டுகள், வருசங்கள், போலீசார், புரோகிதர்கள், என்ஜீனியர்கள்.

புதிய பன்மையாக்கம்:

ஆங்கிலப் பன்மை விகுதியைத் தமிழ்ச்சொற்களுடன் இணைத்துப் புதிய பன்மைச் சொல்லை உருவாக்கும் போக்கும் இதழியல் வழக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

குட்டீஸ் (தினமலர் 29.2.2004), வாண்டூஸ் கார்னர் (தினமலர் 29.2.2004) கலக்கல்ஸ் (தினத்தந்தி 1.3.2004)

வேற்றுமை உருபுகள் இணைதல்:

பிற மொழிச் சொற்களுடன் தமிழ் வேற்றுமை உருபுகள் இணைதல் தமிழ் மொழி மரபில் காணப்படாத ஒன்று ஆயின் தற்போது இம்மரபு மீறப்பட்டு வேற்றுமை உருபுகள் பிறமொழிச் சொற்களுடன் சேர்தல் பெருவழக்கமாக அமைகின்றது. இவ்வகையில் பல வேற்றுமை உருபுகள் இணைகின்றன.

காரைத் தானே ஓட்டிச் சென்றான்
பவுடரைப் பூசினாள் ஈவ் டீசிங்கைத் தடுக்க முயற்சி
பென்சிலினை உபயோகித்தனர்
பஸ்ஸைப் பிடித்தான், பவர்ஸை காட்டினான்
பஸ்சால் ஒரு பயனும் இல்லை,
பஸ்சில் தவறி விழுந்த பெண் சாவு
ரோட்டில் நடந்து சென்றான்
இண்டர்நெட்டில் ரிசல்ட் பார்க்கலாம்,
பென்சனுக்கு பதில் புதிய திட்டம்
டிரைவருக்குக் காயம்.
கண்டெக்டரது தலையில் அடி

இவ் அமைப்பில் "ஐ" வேற்றுமை உருபின் வழக்கே அதிகமாகக் காணப்படுகிறது.

புணர்ச்சி இலக்கணம்:

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதால் புணர்ச்சி இலக்கணமும் தமிழ் இலக்கணம் போன்றே செயல்படத் தொடங்கின.

ஒற்றுக்கள் வருதல்:

பென்ஷனுக்குப் பதிலாக ஒரே தவனை (தினமலர், 3.3.2004)

குட்டிஸ்க்கு பாத் டாப் குளியல் உண்டா? (தினமலர், 29.2.2004)
ப்ரேக்கைப் போட்டான்

பஸ்ஸைக் கடத்திச் சென்றான்.

இயல்பான புணர்ச்சிவிதி போல அமைதல்:

தமிழ் மொழியில் காணப்படுகிற குற்றியலுகரப் புணர்ச்சி போன்று (ஆடு+ஐ ஆட்டை, காடு + ஐ காட்டை) ஆங்கிலச் சொல் கலப்பிலும் புணர்ச்சி அமைகின்றது.

எடுத்துக்காட்டாக ரோடு + ஐ ரோட்டை என இயல்பாக வழங்கப்படுதலைக் காண முடிகின்றது.

அவன் ரோட்டைக் கடந்து சென்றான்.

எனவே பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் கலப்பதால் தமிழ் மொழியின் இயல்பான இலக்கண விதிகள் மீறப்படுதலோடு புதிய சொல் வழக்குகள் காணப்படுதலையும் அறிய முடிகிறது. மேலும் இதுபோன்ற இலக்கண மாற்றங்களை இன்று இயல்பாகவே மொழியும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலையையும் உணர முடிகின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link