ஆய்வுச் சிந்தனைகள்


தெருக்கூத்தும் பார்வையாளர்களும்

இயல், இசை நாடகம் என்ற முக்கலைகளில் சிறந்தது நாடகக்கலை. இது நாட்டுப்புறத்திற்கே உரிய சிறந்தக் கலையாகும். இதில் தெருக்கூத்தென்பது வீதிகளில் தெய்வ சன்னதிக்கு முன்பாக சாதாரண நிலையில் பந்தல் போட்டு தரையில் நடத்தப்படுகின்றது. இதன் வளர்ச்சியே மேடை நாடகமாகும். தெருக்கூத்து நாட்டுப்புற மக்கள் மட்டுமல்லாமல், நகர்ப்புற மக்க€யும் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது. தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாடுகளையும் ஒருங்கே பெற்ற சிறந்தக் கலை, தெருக்கூத்து. இதனாலேயே நகர்பபுற மக்களையும் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது. இவற்றின் பலவகையான நிலைப்பாடுகளையும் கூறும் முகத்தோடு விழைகின்றது இக்கட்டுரை.

தெருக்கூத்தின் செல்வாக்கு: தொல்காப்பியர் கூறும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளைக் கொண்டக் கலவையால் தெருக்கூத்துப் பின்னப்படுவதால் எல்லாத் தரப்பினரையும் பார்வையாளர்களாகப் பெற்றிருப்பது புதியதன்று. தெருக்கூத்தில் உடலசைவையும், உதட்டசைவும், எதார்த்தமாகவும், எளிதாகவும், அமைந்து வருவதால் இது எல்லாத்தரப்பு மக்களையும் பார்வையாளராகக் கொண்டுள்ளது. இதனை மெய்ப்பிக்க கட்டியங்காரனின்,

நாங்க பணத்துக்காக
ஆடவல்ல ஆடவல்ல
குணத்துக்காக ஆடவந்தோம்

என்ற பாடலும்,

ஆத்தோரமாய் இருக்கும்
காத்தாடித் தோப்புக்குள்ளே
யாரடி வந்தவளே
அத்தமகச் சின்னப்புள்ள
உனக்குள்ளே நானுபுள்ள

என்ற பாடலும் இளைய உள்ளத்தை உசுப்பி ரசிக்க வைக்கின்றது. பக்தசீராளன், பக்தப் பிரகலாதன், லோகிதாசன் போன்ற பாத்திரங்கள் மேடையில் தோன்றி நடிப்பதும், பேசுவதும், பாடுவதும் குழந்தைகள் உள்ளங்களை கவர்கின்றது. திரௌபதி, ரதி, சந்திரமதி, சீதைப் போன்றப் பாத்திரங்களின் வாழ்க்கையினையும், சோகங்களையும் கூத்தில் காணமுடிகின்றன. இதைக் காணும் பெண்களின் கண்களில் கண்ணீர் தோன்றுவதைக் காணலாம். மேலும் சில பெண்கள் அழுதுகொண்டு கூத்தாடுகளத்தை விட்டு சென்று விடுவதையும் கள ஆய்வில் காணமுடிந்தது. பாவ உணர்வை உணர தர்மன் பாத்திரமும், தசரதன், அரிச்சந்திரன் போன்றப் பாத்திரங்கள் சத்தியம் தவறாமலும் சொல்லாட்சியுடனும் திகழ்வதால் பெரியவர்களின் உள்ளத்தைக் கவர்கின்றது. இந்த வகையில் தெருக்கூத்து அனைத்துத் தரப்பு மக்களையும் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது.

கூத்தரும் பார்வையாளர்களும்: கூத்துக் கலைஞர்களைப் பார்வையாளர்கள் அவர்களது நடிப்புத் தன்மையினை வைத்துக் கணக்கிடுகின்றனர். கூத்தர்கள் பார்வையாளர்களின் முக பாவங்களை வைத்து அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டும். இதனால் நடிப்பு பார்வையாளர்கள் நினைத்த வகையில் அமையும்போது கை தட்டலும், அன்பளிப்பும் கூத்தர்களின் வெற்றியை உறுதி செய்கின்றன. கூத்து நடிகர்களை ஒரு சாதாரண மனிதன் என்று பார்க்காமல் கதைக்குரியப் பாத்திரங்களாகவே எண்ணி வணங்குவதுண்டு. திரௌபதி துகிலுரிப்பின் போது பார்வையாளர்கள் துச்சாதணனை ஐயோ பாவி இப்படி செய்யுறானே என்றும், மானம் காத்த கண்ணபிரானை கலியுகக் கண்ணா மணிவண்ணா என்று போற்றி வணங்குகின்றனர். நடிப்புத் திறமையால் பார்வையாளர்களை அதிக அளவில் பெற்றுவிடுகின்றனர் பாரதக்கதையை நடத்தும் கூத்தர்கள். இதனால் மக்கள் கூத்தர்களை தொழில் முறையில் பார்க்காமல் விருந்தினராகவே போற்றி உணவளித்து மகிழ்கின்றனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் கூத்தாடுகளத்தில் ஒரு முறை எமதர்மனாக வேடமிட்டுக் கொண்டு வரும்போது பார்த்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் சுவாமிகள் வேடமிட்டு வருகின்றார் என்றால் பயம் உள்ளவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி அறிவிப்பு செய்வதுண்டு. இதன் மூலம் பார்வையாளர்கள் கூத்தர்களை பாத்திரமாகவே நினைத்து மகிழ்கின்றனர்.

கூத்தின் போது பார்வையாளர்கள்: கூத்து நிகழ்ச்சி நடக்கும் போது பார்வையாளர்கள் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இருந்து கதைகேட்கின்றனர். கூத்து நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மறைமுகமாக சில நேரங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்வை பார்வையாளர்கள் விரும்பியும் செய்கின்றனர். அல்லது கூத்தர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் நடைபெறுகின்றது. பார்வையாளர்கள் சில நேரங்களில் கட்டியங்காரனுக்கு நடிகர்களுக்கும் அன்பளிப்பு அளிப்பதில் நகைச்சுவை செய்வதுண்டு. முறுக்கு மாலை அணிதல், பான்பராக்கு, பணமாலை போன்றவற்றை அணிவித்து நகைப்புக்கு இடம் வகுப்பார்கள். இச்செயலை உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற பேதமை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் கண்டுகளிக்கின்றனர்.

தெருக்கூத்துப் பார்வையாளர் வகைகள்: சிறியவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், பண்ணையார்கள் என்று அனைத்துத் தரப்பினரும் தெருக்கூத்திற்கு பார்வையாளர்களாக இருப்பது உண்டு. நகைச்சுவைக்கே சிறியவர்கள் கூத்தைப் பார்க்கின்றனர். இவர்கள் கட்டியங்காரனின் நடிப்பில் ஐக்கியமாகிவிடுகின்றனர். சிறியவர்கள் மனநிலைக்கு ஏற்றவகையில் கதைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகக் கட்டியங்காரன் அமைகின்றான். இளைஞர்களைக் கவரும் நிகழ்ச்சிகள் தெருக்கூத்தில் பல உண்டு. பெண்களின் கைதட்டலும், கண்ணீரும் தெருக்கூத்து நடிகர்களுக்கு அதிகம். திரௌபதி, சீதை போன்ற பாத்திரங்கள் பெண்களின் பிடித்தப் பாத்திரமாக அமைந்து மனதைக் கவர்ந்துவிட்ட நிலையில் பெண்கள் அரிசி, பருப்பு போன்றப் பெருட்களை அன்பளிப்பாக அளிக்கின்றனர். முதியவர்களைக் கவரும் வகையில் தர்மன், தசரதன், அரிச்சந்திரன் போன்றப் பாத்திரங்கள் அமைந்து, இவர்களது அன்பிற்குப் பாத்திரமாக அமைகிறது. பண்ணையாளர்களின் மனதைக் கவர துரியோதனன் போன்றப் பாத்திரங்கள் அமைகிறது. இவர்களே கூத்தினை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளராக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது அவையில் தோன்றி அன்பளிப்பு செலுத்தி மகிழ்வர்.

தெருக்கூத்தும் பார்வையாளர்களும்:

"ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"

என்ற பழமொழிக்கு ஏற்ப கூத்தில் இரண்டு பிரிவினர் சண்டையிட்டுக் கொண்டு முடிவில் முதியவர்களின் தலையீட்டால் ஒற்றுமை நிலவும். இதனால் தெருக்கூத்து நடத்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது நாட்டுப்புறத்துக்கே உரிய செயலாகும். கிராம மக்கள் காசு செலவு செய்யாது, கண்டு தெளியவும் சிந்திக்கும் வகையில் அமைவது தெருக்கூத்து என்ற சடையப்பன் கலையுலகில் தெருக்கூத்து எனும் நூலில் கூறுவார். இதனால் கூத்தின் பார்வையாளர்கள் நாட்டுப்புறத்தில் அதிகம் இதனை மட்டும் அல்லாது நகர்ப்புற மக்களையும் பார்வையாளர்களாகக் கொண்டது தெருக்கூத்து. பாரதக்கதை பாவ விமோசனா என்று கூறுவது போல பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிக அளவில் பாரதக் கிளைக் கதைகளையே கூத்தாக கேட்டும் பார்த்தும் மகிழ்கின்றனர். நாட்டுப்புற மக்கள் வெறும் பொழுது போக்காக மட்டும் தெருக்கூத்தை காண்பதில்லை. நம்பிக்கையின் உச்சமாக நினைத்து திருமணம் நடக்க வேண்டி மீனாட்சித் திருமணம், இறந்தவர்கள் மோட்சம் அடைய வேண்டி கர்ணமோட்சம், மழைவேண்டி விராடபர்வம் போன்ற கூத்துக்களைக் கதைகளாக வைத்துக்கொண்டு இவற்றைக் கண்டு மகிழ்கின்றனர்.

தெருக்கூத்துப் பார்வையாளர்களால் வளர்கிறது: பார்வையாளர்களைக் கவராத எக்கலையும் வெற்றியடைவதில்லை. அனைத்துப் பார்வையாளர்களின் உள்ளங்களிலும் ஊடுருவி பார்வையாளர்களின் உதடுகளை அசைய வைக்கும் பாடல்களும் உரையாடல்களும் நல்லவிதமாக அமைந்து பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன. இதனால் பார்வையாளர்கள் அன்பளிப்பு அளித்து பல நாள் கூத்துக் கதைகளை அமைத்துக் கண்டு மகிழ்கின்றனர்.

முடிவாக:

1. தெருக்கூத்து தொல்காப்பியர் கூறும் மெய்பாடுகள் அனைத்திற்கும் இடமாக உள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களையும் பார்வையாளராக பெறுகிறது.
2. தெருக்கூத்துக் கலைஞர்களை சாதாரண சக மனிதன் என்றில்லாமல் கதைக்குறிய பாத்திரமாகவே நினைத்து வணங்குகின்றனர் நாட்டார்.
3. தெருக்கூத்தின்போது இனம், சாதி வேற்றுமை இல்லாமல் அவரவர்கள் நினைத்த இடத்தில் இருந்து கண்டு மகிழ்கின்றனர்.
4. தெருக்கூத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்வையாளராகக் கொண்டது.
5. பெரம்பலூர் மாவட்ட மக்கள் பாரதக் கதைகளையே அதிகமாகக் கண்டும் கேட்டும் வருகின்றனர் என்பதை கள ஆய்வில் காண முடிந்தது.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link