ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத் தொலைநோக்குச் சிந்தனைகள்

தொலைநோக்கு: தொலைநோக்குச் சிந்தனை என்பது ஓர் உயரிய சிந்தனை அல்லது கருத்து. அச்சிந்தனை தோன்றிய சமூகம், நாடு என்பனவற்றிற்கு ஏற்புடையதாக இருத்தலோடு உலகப் பொதுமை நோக்கி எல்லாச் சமூகங்கள், நாடுகள் என்பவற்றிற்கும் ஏற்புடையதாக இருத்தலாகும். இச்சிந்தனைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபடாது. உலக எல்லையைத் தன் வட்டமாகக் கொண்டவை. எண்ணங்களும் அதன்வழிச் சிந்தனைகளும் சமூகத்திற்குச் சமூகம், இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. என்றாலும் இவ்வெல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உகந்ததாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைவனவே தொலைநோக்கு என்ற எல்லைக்குள் வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்தில் இலக்கியங்களாகவும், இலக்கணங்களாகவும், இன்னும் பிற வடிவிலும் வெளிப்பட்டிருக்கின்றன என்றாலும், இலைமறை காயாக இருக்கும் இவ்வகைச் சிந்தனைகளை வெளிக் கொணரும் முறையிலேயே உலகை எட்டச் செய்யும் முறையிலேயே அச்சிந்தனைகளின் சிறப்பு மட்டுமல்லாது அச்சிந்தனைகள் தோன்றிய சமூகத்தின் சிறப்பும் பழைமையும், பெருமையும் போற்றப்படவும், உலகறியவும் ஏதுவாகிறது என்பது தெளிவு.

தொல்காப்பியம்: எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை பெற்று, ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. இவற்றில் எழுத்து, சொல் இரண்டும் முறையே தமிழ் மொழியின் எழுத்துக்களையும் சொற்களையும் பற்றிப்பேச, பொருளோ தமிழரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிடும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும்போது ஒருசொல் நீர்மைத்து; பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பழமையைத் தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும். தமிழரின் தொன்மையைப் பழமையைக் காத்து இயம்பும் நூல்(தொல்காப்பியம் தெளிவுரை) என்று குறிப்பிடுகிறார். இதனால் தொல்காப்பியத்தின் சிறப்பு விளங்கும். தொல்காப்பியத் தொலைநோக்கு பற்றிக் காணுமிடத்து தொல்காப்பியத்தில் ஐம்பது விழுக்காட்டிற்குமேல் உலகப் பொதுப்பார்வை தான் உள்ளது என்னும் ச.வே.சுப்பிரமணியன் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது. இவ்வகையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணலாகும் தொலைநோக்குச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

திணைப் பாகுபாடு: தொல்காப்பியர் திணைப் பாகுபாட்டைக் குறிக்குமிடத்து தமிழ் நாட்டிற்கு உரித்தான நிலப்பகுதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாது. உலக நிலத்தன்மைகள் அனைத்தையும் மனதில் கொண்டு பிரித்துள்ளமை புலனாகிறது. காரணம் பாலைத்திணை என்ற ஒன்று தமிழ் நாட்டிற்கு உரியதன்று. மேலும் அவர்,

"நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்தியபண்பே"(தொல்.948)

என்பதில், "தமிழ்மண்" என்று குறிப்பிடாமல் "வையம்" என்று உலகத்தைக் குறிக்கிறார். உலகத்தின் எப்பகுதியில் உள்ள நிலங்களுக்கும் இப்பாகுபாடு பொருந்தும் என்பது தெளிவு.

முதல்பொருள்: அக இலக்கியத்தில் வழங்கும் பொருள்களை முதல் கருஉரி எனக் குறிப்பர். இவற்றில் முதல் பொருள் என்பது நிலம் பொழுது என்ற இரண்டின் தன்மையே என்று உரைப்பார் தொல்காப்பியர். இதனை,

"முதல்எனப் படுவது நிலம் பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே"(தொல்.950)

என்கிறார். இந்நூற்பா பற்றிக் குறிப்பிடுமிடத்து "உலகத்தில் முதல் பொருளாக அமைவது நிலமும் பெழுதும்தான். இவை இல்லை எனில் உலகம் இல்லை; செயல்கள் இல்லை, நாம் இன்று வரலாற்று அடிப்படையில் கி.மு., கி.பி. என்று பேசுவதெல்லாம் காலமே. உலக நாடுகள் பற்றிய வரலாறெல்லாம் நிலத்தின் அடிப்படையைச் சார்ந்தவையே. உலகமே முப்பொருளில் தான் உள்ளது. "time space and action" என்று கூறுவர். அம் முப்பொருளும் முதல். கரு உரிப்பொருள்கள் என்பதில் உட்படும்" என்கிறார் ச.வே.சுப்பிரமணியன்.

இயற்கை வளம் பேணல்: முதற்பொருளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர் அடுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்களைக் குறிப்பிடுகிறார். இக்கருப்பொருள்களில் விலங்குகள், மரம், செடி, கொடிகள், பறவை, நீர், பூ என்பனவற்றையும் பிறவற்றையும் சுட்டுகிறார். இவை தொல்காப்பியரின் உயிரியல் அறிவையும் நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான இயற்கை வளங்களைப் பேணுவதும், வளர்ப்பதும் இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளதை அறியலாம். இதனைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்தவர் தொல்காப்பியர். இச்சிந்தனை அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும். இக்கருப் பொருள்களைப் பற்றிக் கூறும் ச. வே. சுப்பிரமணியன் "இன்று உலகில் பல விலங்கு இனங்கள், பறவை இனங்கள் மறைந்து வருகின்றன. அவற்றிற்கு அடிப்படை சுற்றுப்புறச் சூழலே. சுற்றுப்புறச் சூழல் கல்வியைத் தருவதுதான் கருப்பொருள்கள். தெய்வம், உணவு, மரங்கள், விலங்குகள், பறவைகள், இசைக்கருவிகள், நரம்புக் கருவிகள் செய்யும் தொழில்கள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கின்றன. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பறந்து பல நாட்டுப் பறவைகள் தமிழக வேடந்தாங்கலுக்கு வருகின்றன. இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் அவைகளுக்கு ஒத்துள்ளன. இவற்றைச் சூழலியல் என்று தற்காலக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதைக் கி.மு.வில். கூறியது தொல்காப்பியம்" என்கிறார்.

பிரிவு: உலக மாந்தர் அனைவருக்கும் பிரிவு என்பது நிகழக்கூடிய ஒன்று. அவ்வகையான பிரிவுகள் நிலத் தன்மையின் அடிப்படையிலும் மக்கள் வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் அமைந்தாலும், பெரும்பான்மை சில அடிப்படைத் தேவைகளின் பொருட்டே அமைகின்றன. இத்தகைய தேவைகள் அல்லது கடமைகள் உலகப் பொதுவாக இருப்பதைத் தொல்காப்பியர் சுட்டுகிறார். இக்காரணங்களை,

"ஓதல் பகையே தூதுஇவை பிரிவே
என்று சுட்டுகிறார்"இதோடு, (தொல்.971)
"பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்" (தொல்.979)

என்பதையும் இணைக்கிறார். இங்கு ஓதல், பகை, தூது, பொருள் என்ற நான்கும் பிரிவிற்குக் காரணங்களாக அமைவதைக் காணமுடிகிறது. இன்றைய நிலையிலும் இந்நான்கு கூறுகளுமே உலகின் பெரும்பான்மை பிரிவிற்கு மூலமாக அமைவதை உணரலாம்.

மெய்ப்பாடு: மெய்ப்பாடுகள் ஒன்பது என்பர். அவற்றை "ஒன்பான் சுவை" என்றும், "நவரசம்" என்றும் வழங்குவர். ஆனால் தமிழர்தம் கோட்பாட்டின்படி மெய்ப்பாடுகள் எட்டே என்பது தொல்காப்பியம். இதனை,

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப"(தொல்.1197)

என்கிறது நூற்பா. சிரிப்பு, அவலம், இழிவு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என்ற இந்த எட்டு வகை மெய்ப்பாடுகளும் தமிழருக்கு மட்டும் உரியதன்று. உலக மாந்தர் யாவருக்கும் பொது. முழு மனிதர் யாவரிடத்தும் தோன்றுவது. அத்தோடு இந்த எட்டு வகை மெய்ப்பாடுகள் தோன்றக்காரணமான காரணிகளும் இவ்வண்ணமே அமைகின்றன. இவற்றின் இத்தொலைநோக்குப் பற்றிச் ச.வே.சுப்பிரமணியன், "உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி மெய்ப்பாட்டியல் பேசுகிறது. நகை, அழுமை இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி உவகை என்ற எட்டு வகை மெய்ப்பாடுகள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்துபவையே. தமிழர்க்கு மட்டும் உரியவல்ல" என்பதோடு சான்றும் காட்டுகிறார்.

"கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே"

என்பதில், "மனிதகுலத்துக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கு அடிப்படையானவை கற்ற கல்வி, எதற்கும் அஞ்சாத பண்பாகிய தறுகண், எல்லா நிலைகளாலும் வருகின்ற புகழ், கொடுத்தலாகிய தன்மை. இவை நான்காலும் பெருமிதம் ஏற்படுவது உலக மனிதர்க்குப் பொருந்தும். இது தமிழன் பார்த்த உலகப் பார்வை" என்கிறார்.

பண்புகள்: அறம் பொருள் இன்பங்களில் வழுவாமல் வாழும் உயர் நெறியே இல்லற நெறி. அந்த இல்லற நெறி எல்லோராலும் போற்றப்படும் செம்மை நெறியாக, வழுவில் நெறியாக, வையகத்து வழிகாட்டு நெறியாக அமைய\தலைமக்களிடையே இருக்கவேண்டிய பண்புகள் இவை இவை எனப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். இவற்றை

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவி நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"(தொல்.1219)

என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.

உயிர்களின் இன்பம்: உயிர்களின் இன்பம் பற்றிக் கூறுமிடத்து உலகப் பொதுவானதொரு சிந்தனையை முன்வைக்கிறார் தொல்காப்பியர். மனதின் தன்மையைப் பொறுத்தே இன்பத்தின் தன்மையும் அமையும் என்கிறார். இது மனித உயிர்க்கு மட்டுமல்லாது எல்லா உயிர்க்கும் பொருந்தும் என்பது அவரின் தொலைநோக்கு. இதனை,

"எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்". (தொல்.1169)
என்ற நூற்பா உணர்த்துகிறது.

முதுமையில் கடமை: இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கும், பொது வாழ்க்கையில் புகழுக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும், தலைமைக்குத் தேவையான தன்மைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அதற்கெல்லாம் மேலே சென்று இவ்வகையான வாழ்க்கை முறையினை வாழ்ந்து முடித்து, முதுமையினை எய்தியோருக்கும் வாழ்க்கை முறையினை வகுக்கிறார்.

"காமம் சான்ற கடைக் கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே"(தொல்-1138)

என்ற முதுமையின் பயனைச் சுட்டுகிறார், இல்லற வாழ்வின் பயனை இது வலியுறுத்துகிறது.

உயிர்ப்பாகுபாடு: தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு உலகினர் வியக்கும் நுட்பம் கொண்டது. உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள்; உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டறிவு உயிர்கள்; உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூன்றறிவு உயிர்கள்; இவை மூன்றோடு கண்ணாலும் அறிவன நான்கறிவு உயிர்கள்; இந்நான்கோடு காதோடும் அறிபவை ஐந்தறிவு உயிர்கள்; இந்த ஐந்து உறுப்புகள் அன்றி புலனாகாத மனத்தைப் பெற்று அவற்றின் வழிப் பகுத்தறிவும் ஆற்றல் பெற்றவை ஆறறிவு உயிர்கள் என்கிறார் (தொல்.1526). உலகஉயிர்கள் யாவற்றையும் அடக்கும் தொலைநோக்குத் தன்மையை இப்பகுப்பு கொண்டுள்ளமை தெளிவாகிறது.

முடிவு: மேற்கூறிய கருத்துக்களால் தொல்காப்பியம் தமிழ். தமிழர் என்ற எல்லையைக் கடந்து உலகப்பொது என்ற தொலைநோக்குச் சிந்தனைகளையும் பெற்றிருப்பது தெளிவாகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link