ஆய்வுச் சிந்தனைகள்


சங்க காலத்தில் கலைகள்

முன்னுரை:-

கலைகள் பல செறிந்தது தமிழகம். சங்க காலத் தமிழகத்தில் பல கலைகள் செழித்து விளங்கின. அவை கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை, ஒப்பனைக்கலை ஆகியன நுண்கலைகள் ஆகும். இவ்வகைக் கலைகளின் அருமைப்பாடு நுண்ணியதாக உணரப்படுதலின் இவை இப்பெயர் பெற்றன. இத்துறையில் சங்காலத் தமிழகம் சிறந்திருந்தது என்பதைச் சங்க இலக்கிய நூல்கள் உணர்த்துகின்றன. இச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலமாகிய காப்பிய காலத்திலும் தமிழகம் இக்கலைகளில் சிறந்து விளங்கியமையைத் தமிழ்க் காப்பியங்களின் வழி அறியலாம். இவ்வகையில் சங்க காலத்தில் சிறந்து விளங்கிய ஓவியக்கலை, சிற்பக்கலை, வான சாஸ்திரக்கலை, ஒப்பனைக்கலை ஆகியவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

ஓவியக் கலை:-

சங்க காலத்தில் ஓவியக் கலைஞர்கள், கண்ணுள் வினைஞர் எனப் பெயர் பெற்றனர். வீடுகளின் அமைப்பு வர்ணிக்க முடியாத இடனுடை வரைப்புகளாக விளங்கின. பெண்கள் தோளிலும், மார்பிலும் கொடி போன்றவற்றைத் தீட்டிக் கொண்டனர் என்பதை இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. மேலும் அரண்மனை, கோயில் மாளிகைகளின் சுவர்களில் ஓவியம் தீட்டியிருந்தனர் என்பதை நெடுநெல்வாடை, மதுரைக்காஞ்சி, பாட்டினப்பாலை முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன. மேளங்களின் கண் முகப் பகுதியில் குருவி போன்ற உருவங்களைத் தீட்டினர் என்னும் செய்தியை நற்றிணை தெரிவிக்கின்றது. கட்டிலின் மேற்கூரையில் சந்திரனோடு உரோகிணி கூடியிருக்கும் காட்சி தீட்டப்பெறும் வழக்கத்தை நெடுநெல்வாடை காட்டுகின்றது. இவற்றினின்று இயற்கை ஓவியங்களும் கற்பனை ஓவியங்களும் பழந்தமிழ் நாட்டில் படைத்துக் காட்டப்பெற்றமையை உணர முடிகிறது.

சிற்பக்கலை:-

பழங்காலக் கோட்டைகள், மதில்கள், பல்வகைப் பொறிகள் நிரம்பிய வேலைப்பாடுடையனவாகவும், பல்வகைப் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உருவத்தில் அமைக்கப்பெற்ற சிற்பங்களை உடையனவாகவும் விளங்கின. தெய்வ உருவங்களையும், தெய்வத்தன்மை படைத்ததெனப் பிறரால் மதிக்கத்தக்க உருவங்களையும் பழந்தமிழர் படைத்தனர். அத்தகைய பாவைகளில் இயந்திரங்களை அமைத்திருந்தனர். தற்போது மண்ணால் செய்து வண்ணம் தீட்டி அமைக்கின்றமையைப் பார்க்க முடிகின்றது. கற்கோயில்களும், சிற்பக்கலையின், சிறப்பினைக் காட்டுவனவாகும். பண்டைத்தமிழர் கல், மண், வண்ணம், மரம், பொன், ஓலை, முதலியவற்றைக் கொண்டு கவர்ச்சி தரும் உருவமுடைய பொருள்களைப் படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

வான சாஸ்திரக்கலை:-

வான சாஸ்திரக் கலையில் பண்டைத் தமிழரின் முன்னேற்றம் அளவிட்டுக் கூற முடியாததாக உள்ளது. ஞாலம், ஊசி, பாசி, சடை, எரி, குட்டம் முதலிய பெயர்கள் தமிழர்தம் வான நூல் அறிவைப் பறை சாற்றுவனவாய் அமைகின்றன. சோதிடக் கலையும் அக்காலத்தே சிறந்து விளங்கியது. கார் காலத்தே சைய மலைக்கண் மழை பொழியப் பெருகி வரும் வையைப் புனலைப் பாடும்போது ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் எந்தெந்த விண்மீன்கள் எவற்றைத் தீண்டின என்று பரிபாடற்புலவர் பாடுவதும், சேரமன்னன் ஏழு நாட்களுக்குள் அழிவான் என விண்மீன் வீழ்ந்ததைக் கொண்டு கூடலூர் கிழார் உரைப்பதும் பண்டைத் தமிழரின் வான சாஸ்திர அறிவை அறியுமாறு செய்கின்றன. இவ்வாறு வானத்தைக் கணித்துக் கூறுபவர்கள் கணியன் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். காலங்கணித்தல், பயன் கூறல், வருவன முன்னர் அறிந்து காத்தல், என்ற வகைகளில் வானநூற் கலையில் தமிழர் மிகச் சிறந்து விளங்கினர் என்று அறிய முடிகிறது.

ஒப்பனைக் கலை:-

தமிழர் தங்களை அழகு செய்து கொள்வதில் மிக அதிக அக்கறை காட்டினர். உடை, அணிகலன், மலர் வாசனைப் பொருள்களைப் பயன்கொள்வதில் அவர்கள் காட்டிய கலையின் தேர்ச்சியை அறிய முடிகிறது. மக்கள் தங்களுடைய மரபுக்கும் தொழிலுக்கும், நிலைக்கும் ஏற்ப ஆடைகளை அணிந்தனர். முனிவர்கள் மரவுரியாகிய சீலையை அணிந்திருக்கின்றனர், பார்ப்பனர் காவியாடையை உடுத்தியிருக்கின்றனர். குஞ்சங்கள் கட்டப்பெற்ற பட்டாடைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆடைகள் விறைப்பாக விளங்கக் கஞ்சியிட்டனர். காவிதிப்பட்டவர்கள் தலைப்பாகையை அணிந்திருந்தனர். மெய்க் காப்பாளர்கள் சட்டையிட்டுத் திரிந்தனர். மறவர்கள் நீலக்கச்சாடையை அணிந்திருந்தனர். அக்காலத்தில் உடுப்பவை இரண்டு என்ற நிலை இருந்தது. எனினும் இடையர் ஒற்றாடையே அணிந்திருந்தனர். புணர்ச்சி காலத்துப் பட்டை நீக்கித் துகிலாடையை மகளிர் உடுத்திய செய்தி பட்டினப்பாலையில் கூறப்பட்டுள்ளது. நீராடும் காலத்திற்கெனத் தனியாடை தரித்தனர். தழையாடைகளையும் அழகாடையாகக் கொண்டுள்ளனர். ஆடைகளுக்கு மணமேற்றும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆடவர்கள் கழலையும், மகளிர் சிலம்பையும் அணியாகக் கொண்டனர். அணிகலன்கள் காரணம் பற்றி இழை, கலன், பூண் எனப்பெயர் பெற்றன. குழை, தொடி என்பன இருபாலருக்கும் அணிகளாயின. குழந்தைகளுக்கு கிண்கிணி, ஐம்படைத்தாலி முதலியவை சூட்டி மகிழ்ந்தனர். அணிகலன்கள் பொன், துகில், முத்து ஆகியவற்றால் செய்யப்பட்டன.

மலர் சூடுதல்:-

தமிழர் வாழ்வில் மலர் சீரிய இடம் பெற்றது. தார், மாலை, கண்ணி என்னும் மூவகை மாலைகள் கூறப்பட்டுள்ளன. மகளிர் தம் கூந்தலை நெய்யும் மயிர்ச் சாந்தும் பூசி மணப்படுத்துவர்.

"உடுத்தும் தொடுத்தும் பூண்டு செறீஇயும்
தழையணி பொலிந்த ஆயம்"

என்பது குறுந்தொகையில் கூறப்படும் மலர்ச் சூடுதல் பற்றிய செய்தியாகும்.

மணப்பொருள்:-

மைந்தரும், மகளிரும் சந்தனத்தைத் தம் மார்பில் பூசிக் கொண்டனர். பூசிய சந்தனம் காய்வதற்கு முன் வேங்கைத் தாதினை அதன் மேல் அப்பிக் கொண்டனர். மணப்பொருள் சுண்ணத்தை மேனியில் பூசிக் கொள்வர். இச்சுண்ணத்தை நவமணிகளும், பொன்னும் சந்தனமும் கற்பூரம் முதலியனவும், புனுகிலும், பன்னீரிலும் நனைய வைத்து இடித்துத் தயாரிப்பதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். நெற்றிக்குத் திலகமிடுவதும், கண்ணுக்கு மையிடுவதும், தோளிலும், மார்பிலும், தொய்யில் எழுதுவதும் மகளிர் மேற்கொண்ட ஒப்பனைகளுள் சிலவன ஆகும்.

முடிவுரை:-

சங்க காலத்தில் கலைகள் முக்கியத்துவம் பெற்று விளங்கியமைக்குக் காரணம் அக்கால மன்னர்களின் முறையான ஆட்சி, செல்வவளம், மக்களிடையே இருந்த கலைப் பண்பாட்டுத் தாக்கம், முன்னோர்கள் பின்பற்றி வந்த ஆடை, அணிகலன்களின் முக்கியத்துவம், திறமையான கலைஞர்களைக் கொண்டு கலைகளை வளர்ப்பதற்கென்று நெறி முறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டதே ஆகும். எனவே தான் இன்றளவும் சங்க காலக் கலைவளம் இலக்கியத்தோடு மட்டும் நின்று விடாமல் அன்றாடப் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு அக்காலக் கலைப் பண்பாட்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link