ஆய்வுச் சிந்தனைகள்


புதுக்கவிதை: அந்நியமாதல்; சுயம் சிதைவு

தோற்றுவாய்

மார்க்சின் "மூலதனம்" நூலில் அந்நியமாதலின் இழைகள் காணப்படுகின்றன என்பார் ஞானி ("அந்நியமாதல்" படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம், ப.26) "அந்நியமாதல்" பற்றி விரிவாக ஆராய்ந்து நூல் எழுதியவர் எஸ்.வி. ராஜதுரை. "அந்நியமாதல்" என்ற சித்தாந்தப் பிரதிபலிப்பு தமிழ்க் கவிதைகளில் எங்ஙனம் வெளியிடப்பட்டுள்ளது என ஆராயுமுகமாக நிலமும் உழைப்பும் கூலியும் உழவனுக்கு அந்நியமாகி விட்டதை, உழைப்பு பண்டமாக்ககப்பட்டுவிட்டதை, பெண்களின் உழைப்பும் இருப்பும் மதிப்பின்றிப் போனதை, பெண்கள் விற்பனைப் பொருளாகிப் போனதை விளக்குவது மு.இரா. சஃப்ரா பேகம் கட்டுரை. அன்னார் அரசும் ஊடகங்களும், நுகர்வுச்சந்தையும் ஆதிக்க சக்திகளாகி மாந்தரை அந்நியப்படுத்துவதையும், அதன் விளைவாகக் கோணல் சமுதாயம் உருவாவதையும், மாற்ற விழையும் சிந்தனைகளையும் கவிதை வாயிலாக எடுத்துரைத்துள்ளார் ("அந்நியமாதல்" - "கருத்தும் கவிதையும்", டாக்டர் இரா. காசிராசன் (தொ.ஆ-ள்), திசைகள், பக். 207-217)

இக்கட்டு€uயின் குறிக்கோள்

இக்கட்டுரையின் குறிக்கோள், புதுக்கவிதைகள் வழி

1) இயற்கையோடு கொண்ட உறவு, தன் இனத்தோடு கொண்ட உறவு, குடும்பத்தில் நெருக்கமானவரோடு கொண்ட உறவு தன்னோடு கொண்ட உறவு போன்ற உறவுகள் சிதைந்து போனமையால் அவலமுற்ற மாந்தரின் நிலையை விளக்குவது.

2) சிதைந்து போன சுயம் (Self) "வீடு" என்ற குறியீடு மூலம் விளக்கம் பெறுபதை விவரிப்பது ஆகியனவாம்.

இயற்கையிலிருந்து அந்நியமாகி இயந்திரமாக

பனை உயரக் "கிரேனைக்" கண்டுபிடித்தவன் மனிதன்; சூரியனையும் தன் தலையைக் கொண்டு மறைத்து அதனை இயக்குபவன் மனிதன் இதன்மூலம் மனிதன் இயற்கையை வென்றவனாகிறான் "கிரேனை" க்கையாளும் மனிதனைப் பற்றிய சிவராமின் கவிதை இது (எஸ். ஆல்பர்ட், "எழுபதுகளில் தமிழ்க்கவிதை", டாக்டர் க. சண்முகசுந்தரம் (தொ. ஆ), எழுபதுகளில் கலை இலக்கியம், ப.70)

"ஒரு துறைமுகத் தெரு
எங்கும் இரும்பின் கோஷம்
முரட்டு இயக்கம்
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயரக் கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்"

இயந்திரத்தை இயக்கும் மனித இயந்திரத்துக்கு பீடிப்புகை தேவைப்படுகிறது என்பதும், கீழே இருக்கும் மனிதரைப் பற்றிக் கவலைப்படாத அந்த இயந்திரம் அங்கிருந்தபடியே காறித்துப்புகிறது என்பதும், அவனது சூழல் அவனை அவ்வாறு செயல்படச் செய்கிறது என்பதும் இக்கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதர் இயந்திரத்தோடு இயந்திரமாக மாற அதனால் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட சூழலை இக்கவிதை சித்தரிக்கிறது.

தன் இனத்திலிருந்து அந்நியமாதல்

மாந்தர் ஒருவருக்கொருவர் அந்நியமாகி விட்டதை இந்தியராஜா குறிப்பிடுகிறார். எங்கும் திருட்டு, கொலை, கொள்ளை, இத்தகைய ஒரு அமைப்பிலே இரயிலில் பயணம் செய்யும் மனிதர்கள் ஒரே மொழி பேசுவோராக இருப்பினும் தொடர்புகொள்ள அச்சங் கொள்ளுகின்றனர். உடன் வரும் பயணியை அந்நியராகப் கருதிப் பேசுவதையும், உறவாடுவதையும் தவிர்க்கின்றனர் என்று கூறுகிறார் (தினமணி கதிர்: 1612.1997, ப.13)

அழைப்போமா வேண்டாமா எனத் திறந்துமூடும் "கணிப்பொறிவாய்". குலுக்குவோமா வேண்டாமா என நீளும் கை, சிரிப்போமா வேண்டாமா எனச் சிந்திந்து எதிர்கொள்ளும் முகம்பற்றிக் குறிப்பிடும் கனிவண்ணன், நகரம் எனும் காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் உடல்களும், சிந்திக்கும் உள்ளங்களும் வெவ்வேறு தளங்களில் இயங்குவதால், முகங்கள், கண், காது, முக்கு, வாய் என்ற உறுப்புக்களின்றி "மொட்டையாய் உலவுகின்றன" என்று கூறுகிறார். நகரமும். நகர வாழ்க்கையும் மாந்தரை மொட்டை முகமுடையவராக்கி ஒருவரை ஒருவர் உறவு கொள்ளவொட்டாமல் அந்நியமாக்கித் தடுக்கும் காடாகிவிட்டமையை இங்ஙனம் சித்தரிக்கிறார் (சுபமங்களா, டிசம். 1995, ப.29).

கண்ணாடித் தொட்டியில் வாழும் மீன் சேற்றில் வாழும் மீனை அழைப்பதாகவும், சேற்றுவயலிலும் ஓடையிலும் வாழும் மீன் அவ்வேண்டுகோளை மறுப்பதாகவும் ஒரு கவிதை. (பச்சியப்பன், "என் வயல் இதுதான்", தினமணி கதிர், 16.12.1991. ப.12) உன் நிறம் எனக்கு வேண்டாம்; உன் முகமூடி எனக்கு வேண்டாம்; உன் ஒளிவாழ்க்கை எனக்கு வேண்டாம்; கண்ணாடித் தொட்டி எனக்கு வேண்டாம். என் வாழ்வு இருளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். சேற்றிலேயே நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இந்த வயலும் ஓடையுமே எனக்குப் போதும்" என ஓடைமீன் மறுக்கிறது. தன் உழைப்பிலிருந்த அந்நியமாக விரும்பாத, தன் உழைப்பைக் கூலிக்கு விற்க விரும்பாத, தன் இனத்திலிருந்து அந்நியமாக விரும்பாத ஓர் உழவன் இவன் ஒடைமீனுக்குக் குறியீடாகிறான். தன் உழைப்புக்கு அந்நியமாகி விட்டவன் கண்ணாடித் தொட்டி மீனுக்குக் குறியீடாகிறான். நகரத்து மாந்தர் இயற்கை, அது தரும் பயன், இனத்தோடு கூடிவாழும் இன்பம் அனைத்தையும் இழந்து அந்நியப்பட்டு விட்டமையை இக்குறியீடுகள் உணர்த்துகின்றன.

நெருக்கிய உறவுகள் அந்நியமாதல்

தாயும் மக்களும், கணவனும் மனைவியும் அந்நியமாகி உறவுக்கு ஏங்கி நிற்பதைக் கவிதைகள் குறிப்பிடுகின்றன.

தாய்-மக்கள் உறவு அந்நியமாதல்

புளிப்பானைக்குச் சொந்தமாயிருந்தவள் அவள்; புளிப்பானையிலிருந்து புளியிணை எடுத்து புளிக்குழம்பு வைத்துத் தன் கணவன், குழந்தைகள், சுற்றத்துக்குப் பரிமாறியவள் அவள். கணவனை இழந்த அவளை மக்கள் முதற்கொண்டு அனைவரும் கைவிட்டனர்

"உள்ளூர்க் கோயிலின்
உற்சவத்தில்
இலவசமாய் வழங்கும்
புளிசாத பொட்டலங்களை
நடுங்கும் கைகளோடு"
அவள் வாங்குவதைப் பார்த்த கவிஞரது மனசுக்குள்ளொரு கேள்வி.
"அந்தப் பானைகள்
இப்போது
பரன்மேல் கிடக்குமோ?"
என்று சிந்திக்கிறார் (ஜீவி, இருவேறு முகங்கள், செம்மலர், 1996, ப.72).

இனக்குழுச் சமுதாய வாழ்விலே, நிலவுடைமைச் சமுதாய வாழ்விலே பானைகள் சேகரத்தின் சின்னங்கள்; "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின் புளி, அடையாளங்கள். ஒரு பானையில் அரிசி ஒரு பானையில் உப்பு, ஒரு பானையில் புளி ஒரு பானையில் மிளகாய் எனச் சேகரித்து) அறையின் மூலையில் அவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உறவுகளும் சிதையாமல் கூட்டுக் குடும்பமாக வாழும் சூழல் இருந்தது முதலாளித்துவ அமைப்பிலே, பொருளியல் உறவுகளுக்கு மாந்தர் ஆட்பட்ட அமைப்பிலே, "பண்டவழிபாடு" அந்நியமாகவில்லை; தான் பெற்ற மக்களுக்கு அந்நியமாகி சுமையாகிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை இக்கவிதை விளங்குகிறது. பரன்மேல் பானை - நடுத்தெருவில் தாய். தாய் - மக்கள் உறவு அந்நியமானதை இக்கவிதை உணர்த்துகிறது.

கணவன் - மனைவி உறவு அந்நியமாதல்

மனைவியர் அடக்கி ஒடுக்கி அமுக்கி வைக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டு உரிய முறையில் கௌரவிக்கப்படாமல் குமைந்து கொண்டிருப்பதை "அகலிகை" என்ற புராணப்பாத்திரம் மூலம் விளக்குவது ஞானியின் "கல்லிகை"

"அவள் கணவன்
மந்திர மொழியை வாயில் அரைத்து
வேள்வியில் இதயத்தை வேகவைத்துத் தின்று
உடலக் கூட்டை உயிர்க்கயிற்றில் கட்டி
இழுத்துத் திரியும் எந்திரம்"

மனைவியின் உடல்கூட்டை உயிர்க்கயிற்றில் கட்டி இழுத்துச்செல்லும் எந்திரமாக, இல்லற வேள்வியில் அவள் இதயத்தை ஆகுதியாக்கிவேகவைத்துத் தின்னும் எந்திரமாக ஒரு சார் கணவன்மார் விளங்குவதை ஞானி இவ்வாறு சாடுகிறார். ஒரு சில குடும்பங்களில் கணவன்-மனைவியர் நெருக்கமான பிணைப்பின்றி இருவர் உறவும் பிளவுற்றுக் கிடப்பதை இதைவிடச் சிறப்பாகச் சித்தரிக்க இயலாது.

"அவரவர் பேச்சிற்குப் பிறகு
அதனினும் பேசுகிற
அவரவர் மௌனங்கள்"
மௌனங்களுக்குத் தீர்வாக ஒரு கவிதைத் தலைவி,
"உணர்வுகளை
விள்ளாமல் மழலையாய்
வெளிக்கொணர
விரைந்து வா"
எனத் தன் மழலையின் பிறப்பை வரவேற்கிறாள்; கணவன்-மனைவி இடையே நிலவும் மௌனத்தைக் கலைக்க பிள்ளைவரம் வேண்டுகிறாள்
(உமாமகேஸ்வரி, "தேடல்பேச்சு", சுபமங்களா, ஆகஸ்டு 1994, ப.25)

சுயம் அந்நியமாகிச் சிதைவு

நேற்றுவரை இருந்த முகம், இன்றை சூழலால் தொலைந்து போக,
"சுயசிதைக்குள்
சிதைந்த போனது
எனது சுயம்!
..........
நான் எனக்குள்
மௌனமாய்
எரிந்த நிலையில்....."

எல்லாவற்றிலிருந்து அந்நியமாகிச் சுயம் தன் சுயசிதைக்குள் சிதைந்து எரிந்துபோனதை மேமன்கவி காட்டுகிறார் (சுபமங்ககளா, ஆகஸ்டு 1994, ப.94).

குறியீடு "வீடு"

மாந்தரை அந்நியமாக்கி ஒடுக்கும் நிறுவனங்களைக் குறிக்கவும், ஒடுக்கும் சூழலுக்கேற்ப ஒத்துப்போகும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானசுயத்தைக் குறிக்கவும், சூழலுக்கு இணங்கி ஒத்துப்போக இயலாத நிலையில் "நான்" புறந்தள்ளப்படுவதைக் குறிக்கவும் "வீடு" என்பது புதுக்கவிஞயர்களுக்குத் தக்கதொரு குறியீடாகப் பயன்படுகிறது.

"வீடு " - ஒடுக்கும் நிறுவனங்களைக் குறித்தல்

இருத்தலுக்கு உரியது வீடு. திறந்திருக்கும் வீட்டில் நுழையலாம்;பூட்டியிருக்கும் வீட்டைக் கடந்து செல்லலாம்;:வீடு திறந்திருக்கிறதென்று நுழைய முற்படுகையில் அவ்வீடே அசையும் கதவாக மாறிக் கண்முன்னே பாய்ந்து வந்தால் அஃது அவர் உள்ளத்தை ஆயிரம் கூறாகச் சிதைத்துவிடும். அக்கணத்தில் "ஆரோக்கிமான லீனியர் மனது" செயல்பட முடியாது என்பது பா.வெங்கடேசன் கூற்று ("அசையும் கதவின் குரூரம்", சுபமங்களா, ஆகஸ்ட் 1994,ப.37)

இவன் "வீடு" என்ற குறியீடு மனிதனுக்கு நலம் பயக்கும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட குடும்பம் சமூகம், நிறுவனம், அமைப்பு ஆகியவற்றைக் குறிப்பாகக் கொள்ள இடமுளது. அமைதியான வாழ்வுக்கென, இன்பமான வாழ்வுக்கென வகுக்கப்பட்ட இவை மனிதனை நெருக்கி ஒடுக்கத் தொடங்கினால் அங்கே நேர்மையான, ஆரோக்கியமான உள்ளங்களைக் காணுதல் இயலாது; சிதறிப்போன உள்ளங்களைத்தான் காணமுடியும் என்பது இக்கவிதையிலிருந்து குறிப்பாகப் பெறப்படுகிறது.

"வீடு" சுயத்தைக் குறித்தல்

நான் வினவுகிறது:
"என் வீடு வெயிலுக்குள் நகர்ந்துகொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் பதுங்கப் பதுங்க வெயில் வீட்டை விரட்டிக்கொண்டே
இருக்கிறது. நான் என்ன செய்வது".
நீ கூறுகிறது:
நடமாடும் வீட்டைக் கட்டி அவ்வீட்டை நிழலுக்குள் நகர்த்திக் கொண்ட இரு; இயலாவிடில் உன் வீட்டை நீ நகரு".
"வெயில்" என்பது சூழலின் நெருக்கடிகளையும், "வீடு" என்பது நெருக்கடியான சூழலுக்கு ஆளான சுயத்தையும், சூழலின் நெருக்கடிகளுக்கு சூழலுக்கு ஆளான சுயத்தையும், சூழலின்நெருக்கடிகளுக்கு ஆளானால் "சுயம்" பிளவுபட "நான்", "சுயம்" பிளவுபட "நான்", "சுயம்" என்ற வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமான நிலையையும் எஸ்.வைத்தீஸ்வரனின், "தீராத விளையாட்டு" (சுபமங்களா, ஜூலை 1994,ப.37) என்ற இக்கவிதை உணர்த்துகிறது.

வீட்டுக்கு வெளியே "நான்"

தானாக வெளியேறும் "சுயத்" தை பா.வெங்கடேசனின் புதுக்கவிதை சித்தரிக்க, யுவன் எழுதிய "உள்-வெளி" (உன்னதம்,ஏப்.1994,ப.10) என்ற கவிதையோ வீட்டுக்கு வெளியே நெட்டித்தள்ளப்படுகின்ற ஒரு "சுயத்" தின் நிலையைச் சித்தரிக்கிறது. மனிதனின் "சுயம்" அதாவது "நான்" தன் உறவுகளிலிருந்து அந்நியமாகாத வரை வீட்டுக்குள் இருந்தது என்பதையும் உறவுகளிலிருந்து அந்நியமானபிறகு "நான்" வீட்டுக்குப் புறத்தே இழுத்துக்கொண்டுவந்த தள்ளப்பட்டு விட்டது என்பதையும் இக்கவிதை உணர்த்துகிறது.

முன்பு "நான்" வீட்டுக்கு உள்ளே இருந்தவரை வீட்டுக்கு வெளியே "மரம்" இருந்தது; நிழல்தந்து கொண்டிருந்தது. இப்போது இயற்கையிலிருந்தும், சமூகத்திலிருந்தும், தன்னிலிருந்தும் பிரிந்து "நான்" அந்நியமானபிறகு நிழலற்ற வற்றல்மரம் மையமாக, வீட்டின் வெளியே "நான்" விரட்டப்படுகிறது. "நான்" அற்ற வீடு "ஜியோமிதி வடிவம்" என மிதந்து கொண்டிருக்கிறது. உருவம் மிதக்க உள்ளீடு இல்லை.
"அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று"
என்ற வள்ளுவரின் குறளை இப்புதுக்கவிதை நினைவூட்டுகிறது
இவ்வாறாக "வீடு" என்பது "அந்நியமாதல்" என்ற கோட்பாட்டுச் சூழலை விளக்க ஏற்றதொரு குறியீடாகிறது.

இறுவாய்

மாந்தரை அந்நியமாதலுக்கு ஆட்படுத்தும் சமூகச்சூழல் மாற வேண்டுமானால் அதற்கேற்ற வண்ணம் அரசு, சமுகம், குடும்பம், மதம் ஆகிய நிறுவன அமைப்புக்கள் மாந்தரை ஒடுக்காதவண்ணம் அவற்றின் அடிப்படையே மாறவேண்டும். "பண்டவழிபாட்"டையும், அதன் காரணமாக உருவாகும் நுகர்வுச் சமுதாயத்தையும், பொருளியல் உறவுகளையும் ஒழித்துப் புதியதோர் சமூகத்தை மலரச்செய்யும் பெரும்பொறுப்பு இலக்கியவாதிகட்கும், சமூகச் சீர்த்திருத்தவாதிகட்கும் அரசியல்வாதிகட்கும் உண்டு.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link