ஆய்வுச் சிந்தனைகள்


வெற்றியின் வித்து

முன்னுரை

மனித வாழ்க்கையில், வெற்றியைத் தேடித் தருபவைகள் பலவற்றுள், தன்முயற்சி தலையாய இடத்தைப் பெறுகின்றது. இடைவிடா முயற்சியுடன் செய்யப்படும் எச்செயலும் வெற்றிபெறும் என்பது உறுதியாகும். முயற்சியுடன் வினைநலமும், மனநலமும் உடன் சேர்ந்தால் வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும். வெற்றியின் வித்துகளாக விளங்கும் இவைகளைப் பற்றி அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒளவையும், ஆண்டியும்

எம்பெருமான் முருகப் பெருமானிடம் ஒளவையார் கொண்டிருந்த பக்தியை ஆன்மீக அன்பர்கள் அறிவர். ஒளவைக்குக் காட்சி கொடுத்த முருகன், அவரிடம் அரியது எது? என்று வினவுகின்றார். அதற்கு ஒளவையார்,

"அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே"

என்று பதில் கூறுகின்றார். இப்பாடலின் நுட்பமான பொருள் என்னவென்றால், கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறந்த மனிதர் உண்மையான அறிவைப் பெற வேண்டும், உழைக்க வேண்டும், தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்பதாகும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதப் பிறவியின் பெருமையை உணர்ந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு வாழும் மனிதனே நிறைவான வாழ்வைப் பெறுகின்றான். இவ்வாறு இல்லாமல் உடலையும், உள்ளத்தையும் சிதைத்து வாழும் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். இவ்வாறு அழிந்து படும் அறிவற்ற மனிதனை,

"நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத் தாண்டி"

என்று கடுவெளிச் சித்தர் சுட்டிக் காட்டுகின்றார். பத்து மாதம் தாயின் கருவில் தங்கிப் பூவுலகில் மனிதமாகப் பிறந்தவன், மனிதப் பிறவியின் பெருமையை உணர்ந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கடுவெளிச்சித்தரின் பாடற்கருத்தாகும்.

மனத்தில் உறுதி வேண்டும் பாரதி

மனித வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றிப்புதுமைக் கவிஞர் பாரதியார், சில கருத்துக்களைப் புலப்படுத்தியுள்ளார். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று குறிப்பிடும் பாரதியார் தம்முடைய தோத்திரப் பாடலில்

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிகவுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக்கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"

என்று அறிவுறுத்துகின்றார். இப்பாடற் பகுதியில் இருந்து, பிறவி எடுத்ததன் பயனை அறியாமல் உண்பது, உறங்குவது, இன்பம் துய்ப்பது என்று இல்லாமல், செயற்கரிய செயல்களைச் செய்யவே பாரதியார் விரும்பினார் என்பதை உணரலாம். மனிதன் இவ்வாறுதான் வாழவேண்டும் என்று பாரதி சுட்டிக்காட்டும் வாழ்க்கை நெறிப்பாடல் ஒன்றும் இங்கும் நினைவு கூரத்தக்கதாகும்.

"நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி! - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

சிவசக்தியிடம், "மாநிலம் பயனுற வழிகாட்டத் தமக்கு வல்லமை தர வரம் கேட்கும் பாரதியாரின் உயர்ந்த உள்ளம் போற்றுதலுக்குரியதாகும்.

இசை மீட்டுவதற்கு என்றே உள்ள வீணையை, உலகில் யாரும் புழுதியில் எறிவது இல்லை. வீணை இசை மீட்டுவதற்குப் படைக்கப்பட்ட கருவி. அது போன்றே மானிடப் பிறவியும் மனத்தில் உறுதிகொண்டும், நினைவு நல்லது கொண்டும், வாக்கினில் இனிமை கொண்டும், காரியத்தில் உறுதிகொண்டும் சமுதாய நலத்திற்காக உழைக்கப் படைக்கப்பட்டதாகும். இதற்கு மாறாகச் செயலற்ற நிலையில், நிலச்சுமையாக மனிதன் வாழ்வதைப் பாரதியார் விரும்பவில்லை. பாரதியார் விரும்பும் செயல்திறன் கொண்ட மனிதனாக மனிதன் உருவாவதற்கு, அவரவர் உள்ளத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியும் குறிக்கோளும் இடம் பெற வேண்டும்.

குறிக்கோள் வேண்டும்.

குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை குறைபட்டவாழ்க்கையாகவே முடியும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று குறிக்கோள் இல்லாத மனிதன் கெட்டுச் சீரழிவான் என்றும் கருத்தைத் திருநாவுக்கரசு சுவாமிகளும் தம்முடைய தேவாரத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்தநாளும் மெலிவோடு மூப்புவந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
பாலனாய் இருந்த பொழுதும், மங்கையர் மேல் காதல் கொண்டு

பித்துப்பிடித்து அ€லுந்த பொழுதும், மூப்பு வந்து கையில் கம்பைப்பிடித்து நடக்கும் சூழலிலும் இறைவனை வணங்கும் குறிக்கோள் இல்லாது கெட்டேன் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடும் கூற்று, வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாது செயல்படும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தும் எனலாம்.

தன் கையே தனக்கு உதவி

ஒரு மனிதனுடைய முன்னேற்றம் அவனுடைய கையில்தான் இருக்கிறது. ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடைய செயல்களே காரணம் என்பதைத் திருவள்ளுவரும்,

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்"

என்று குறிப்பிடுவார். "தன் கையே தனக்கு உதவி" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். ஒரு சிறிய கதையை இங்கே குறிப்பிடுவது நலம் பயக்கும். நன்றாக, விளைந்து கதிர் முற்றிய வயலில் ஒரு குருவி கூடு கட்டித் தன்னுடைய குஞ்சுகளை வளர்த்து வந்தது. கதிர் முற்றியதால், நெல் அறுவடையாகிவிடும் நாம் வேறு இடத்திற்குப் போய்விடலாம் என்று குஞ்சுகள் தாயிடம் கூறின. தாயோ, பதட்டப்படாமல் சற்றுப் பொறுத்திருக்கும்படி கூறியது. காலையில் வயலுக்குச் சொந்தக்காரனும் அவனுடைய மகனும் வரப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த ஊர்க்காரர்கள் அறுவடைக்கு வருவதாகக் கூறியிருந்தார்களே! வரவில்லையே! என்று தந்தை மகனிடம் கூறி வருந்தினார். மாலையில் வயலுக்கு வந்த தாய்க்குருவி, குஞ்சுகளின் மூலம் நடந்த செய்தியை அறிந்தது. ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று குஞ்சுகளுக்கு ஆறுதல் கூறியது. மறுநாளும் தந்தையும் மகனும் முன்பு போலவே வரப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இன்று உள்ளூர்க்காரர்கள் அறுவடைக்கு வருவதாகக் கூறினார்களே! வரவில்லையே!! என்று தந்தை மகனிடம் கூறினார். மாலையில் வயலுக்கு வந்த குருவி, குஞ்சுகளின் மூலம் தந்தையும் மகனும் பேசிய பேச்சப் பற்றி அறிந்தது. குஞ்சுகள் வேறு இடத்திற்குச் சென்று விடலாம் என்று தாயிடம் கூறின. தாயோ, பயப்படவேண்டாம் இங்கேயே இருப்போம் என்று அமைதியாகக் கூறியது. அடுத்தநாளும் தாய்க்குருவி இரைதேடச் சென்ற பொழுது, தந்தையும் மகனும் வயலுக்கு வந்தனர். உறவினர்கள் இன்று அறுவடைக்கு வருவதாகக் கூறினார்களே, வரவில்லையே! என்று தந்தை மகனிடம் வருந்திக் கூறினார். மாலை மயங்கும் நேரத்தில் வயலை வந்தடைந்த குருவி, குஞ்சுகளிடம் நடந்த செய்தியை அறிந்து, குழந்தைகளே பயப்பட வேண்டாம். இங்கேயே நாம் தங்கியிருப்போம் என்று கூறியது. அடுத்த நாள் வயலுக்கு வந்த தந்தையும் மகனும் வரப்பில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தந்தை மகனைப் பார்த்து, "இனிமேல் நாம் யாரையும் நம்ப வேண்டாம். நாளைக்கு நீயும் நானும் வந்து அறுவடை செய்வோம்" என்று கூறினார். மாலையில் வயலுக்கு வந்த குருவி, இன்று என்ன பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகளிடமம் வினவியது. நாளைக்குத் தநதையும் மகனுமே வந்து அறுவடை செய்யப் போவதாகப் பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகள் கூறின. இதைக் கேட்டவுடன் தாய்க்குருவி, "உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு இடத்திற்குச் சென்றுவிடுவோம்" என்று குஞசுகளிடம் கூறியது. இத்தனை நாள்களும் பயப்படவேண்டாம், பயப்படவேண்டாம் என்று கூறிய நீங்கள், இப்பொழுது உடனே வேறிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதன் காரணம் என்ன? என்று குஞ்சுகள் தாயிடம் வினவின. அதற்குத் தாய்க் குருவி, "இத்தனை நாளும் அவர்கள் மற்றவர்களை நம்பினார்கள், மோசம் போனார்கள். இப்பொழுது அவர்கள், தங்களை நம்பியுள்ளனர். செயலில் வெற்றி பெறுவார்கள். என்று கூறியது.

இக்கதை உணர்த்தும் உண்மை என்னவெனில், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மனிதன், தன்னால் இயன்ற செயல்களைத் தானே செய்யவேண்டும் என்பதுவாகும்.

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறிக

முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது தாழ்வு மனப்பான்மையாகும். யாருக்கும் நாம் குறைந்தவர் இல்லை என்ற எண்ணம் எப்போதும் நம் உள்ளத்தில் இருத்தல் வேண்டும். ஒருவர் செய்யும் தொழிலோ, ஒருவர் பிறந்த குலமோ, ஒருவரின் ஏழ்மையோ அவருக்கு இழிவை ஏற்படுத்தாது. ஒருவரின் முயற்சி இன்மையே அவருக்கு இழிவை ஏற்படுத்தும். வாழ்க்கையில் முன்னேறிய உலகப் பெரியோர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, அவர்களது வெற்றிக்குப் பின்னணியாக இருந்தவை, அவர்களது உழைப்பும் விடா முயற்சியுமே என்பதை அறியலாம்.

உழைப்பால் உயர்ந்த உத்தமர்களைப் பற்றி, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் குறிப்பிடும் பொழுது,

வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி
விஞ்ஞானி மேதை ஜி.டி. நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி
விண்ணொளிக் கதிர் விரம் கண்ட
சர்.சி.வி. ராமனும் தொழிலாளி

என்று குளிப்பிடுகின்றார். செய்யும் தொழிலே தெய்வம் என்றும் திறமைதான் நமது செல்வம் என்றும் கையும் காலுமே உதவி என்றும், கொண்ட கடமை தான் நமது பதவி என்றும் உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்பதுவும் பட்டுக்கோட்டையார் கருத்தாகும்.

பொருள் இல்லையே என்று ஏங்குவதைவிட பொருள் வருவாய்க்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, "ஐயா! என்னிடம் ஒருகாசு கூட இல்லை" என்று பிச்சை கேட்டானாம். அதற்கு, டால்ஸ்டாய், உன் கண்களை இருபதாயிரும் ரூபாய்க்குத் தருவாயா? என்றார். "மாட்டேன்" என்றான் அவன். "சரி உன் கைகளையாவது, பத்தாயிரம் ரூபாய்க்குத் தா" என்றார். அதற்கும் அவன் சம்மதிக்கவில்லை. "என் நண்பர் ஒருவர் மனிதனின் உடலைக் கொண்டு மருந்துப் பொருள் தயாரிக்கிறார் உனது உடலுக்கு ஒரு லட்சம் தருவார். உனக்கு இல்லாவிட்டாலும், உன் குடும்பத்திற்கு இந்தப் பணம் கிடைக்கும்" என்றார் டால்ஸ்டாய், அதற்கும் அவன் மறுத்தான்.

பல லட்சம் பெறுமானமுள்ள உடலைத்தர மறுத்துக்கொண்டு, என்னிடம் பணம் இல்லை என்கிறாயே; இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிசம், இதைக் கொண்டு உழை. தங்கம், வெள்ளி மட்டுமில்லை சூரியனும், சந்திரனும் கூட உன்னுடையதாகிவிடும்" என்று அறிவுரை கூறி அவனை அனுப்பினார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயின் வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது. "முயற்சியுடன் உழைத்தால் உள்ளதைக் கொண்டு உயர முடியும்" என்பதே அவ்வுண்மையாகும்.

வள்ளுவர் வலியுறுத்தும் மனத்திட்டம்

ஆள்வினையுடைமை, ஊக்கம் உடைமை, மடியின்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை முதலிய அதிகாரங்களில் திருவள்ளுவர் மனித மனத்திற்கு இருக்க வேண்டிய உறுதியைப்புலப்படுத்துகின்றார். மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எச்செயலையும் நம்மால் செய்யமுடியும் என்று நினைக்கும் அவனது மனஉறுதியே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அச்செயலைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும். அதைத்தவிர, மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தன ஆகா என்னும் கருத்தைத் திருவள்ளுவர்,

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற" என்று குறுப்பிடுவார்.

வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவன், நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற உறுதியை மனத்தில் ஏற்படுத்தக்கொண்டு ஒவ்வொரு நாளும் முயன்று படிப்பானேயானால், மாநில அளவில் அவன் முதல் மதிப்பெண் பெறுவதற்குரிய வாய்ப்பும் உருவாகலாம்.

திருவள்ளுவரும், "ஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்கு உரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்" என்னும் கருத்தினை,

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்பெறின்" என்று குறிப்பிடுவார்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து விட்டோமே என்று எப்படி ஒருவர் வருந்துதல் கூடாதோ, அதைப்போன்றே உறுப்புக்குறை உடையவராய், ஊனமாய் பிறந்து விட்டோமே என்றும் ஒருவர் வருத்தம் அடையக்கூடாது. உடல் ஊனமாய் இருக்கலாம். ஆனால் உள்ளம் ஊனமாய் இருத்தல் கூடாது. இரண்டு கண்களையும் இழந்த ஹெலன் கெல்லர் உலகப்புகழ் பெற்ற செய்தி இங்கு நினைவுகூரத் தக்கதாகும். எனவே ஒரு மனிதனுக்கு உடற்குறை என்பது குறைபாடு உடையது அன்று, அவன் முயன்று தொழில் செய்யாமல் இருப்பதே உண்மையான குறைபாடாகும். உடற்குறை உடையவர்களின் மன ஊக்கத்திற்காகவே எழுதியதைப் போன்று திருவள்ளுவரும்

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி" என்று வலியுறுத்திக் கூறுவார்.

வெற்றியின் நுழைவாயில்

ஒருவன் எண்ணுகின்ற நல்ல எண்ணமே வெற்றிக்கு நுழைவாயிலாக அமைகின்றது. எனவேதான் திருவள்ளுவரும் "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்" என்று சுட்டிக்காட்டுவார். "நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்" என்பது பாரதியாரின் வாக்காகும்.

"நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்" என்று மனத்தில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு, காட்டிலும், மேட்டிலும் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும், மழையிலும் அலைந்து தமிழ் இலக்கியத்தைச் சேகரித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள், உ.வே.சா. அவர்களின் மனநலத்திற்கும், மனஉறுதிக்கும், இடைவிடா முயற்சிக்கும் தமிழ் உலகம் என்றும் தலை வணங்கும்.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலையில் ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தான். ஆங்கிலேயனுக்கு நிகராகத் த கப்பல்போக்குவரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார். அவருடைய நினைப்பை நிறைவேற்றிய பாங்கை நாடு நன்கு அறியும்.

"கணிதமேதை" என்று உலகோரால் போற்றப்படும் இராமாநுஜம் அவர்கள் ஏழ்மையில் பிறந்தாலும், அவரது உயர்வுக்கும் புகழுக்கும் காரணம் அவருடைய தூய்மையான உள்ளமும், மன உறுதியும். இடைவிடா உழைப்புமே என்பதை யாரும் மறுக்க முடியாது.

மனித மனம் தூய்மையானால், அவனுடைய வாழ்வும் தூய்மை உடையதாகி, வெற்றியையும் அடைகின்றது. மனம் செம்மையானால் எல்லாம் செம்மையாகும் என்பதை, அகத்தியர் தம்முடைய ஞானக்கோர்வையில்,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே"

என்று அறிவுறுத்துவார். எனவே மனத்துக்கண் மாசு இல்லாதிருப்பதை வெற்றிக்கு முதற்படி எனலாம்.

முடிவுரை

மேற்குறிப்பிட்ட செய்திகளை ஒரு சேர எண்ணிப்பார்க்கும்பொழுது, மனித வாழ்க்கையை, உண்மை, உறுதி, உழைப்பு, ஒழுக்கம், நம்பிக்கை என்னும் பஞ்சசீலக் கொள்கைகளே உயர்த்தும் என்னும் உண்மையை உணரலாம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link