ஆய்வுச் சிந்தனைகள்


நளனம்மானை : நாட்டுப்புறக்காப்பியம்

முன்னுரை

நளன் - தமயந்தி கதை கூறும் நாட்டுப்புற இலக்கியங்களுள் ஒன்று நளனம்மானை. இது கேரளப் பல்கலைக்கழகக் கீழ்திசைச் சுவடிகள் நூலகத்திலுள்ள ஏட்டு இலக்கியமாகும். அச்சில் வெளிவராத இவ்விலக்கியத்துள் நாட்டுப்புறக் காப்பியக் கூறுகளைக் கண்டறிவது ஆய்வுச் செல்நெறியாகும்.

நளனம்மானை

நளனம்மானையைப் பாடியவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூர் பகுதியிலுள்ள தாமரையூரைச் சேர்ந்த அருதகுட்டி என்பவர். இதனை ஏட்டில் எழுதியவர் முத்துக் கறுப்பன். இந்நூல் ஏட்டில் எழுதப்பட்ட காலம் பிலவங்க வருடம் ஐப்பசி 21 ஆம் தேதி ஆயிலிய நட்சத்திரம் கூடிய சனிக்கிழமை ஆகும். எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளையின் இந்தியப் பஞ்சாகப்படி (Indian Ephemeis) இந்நாள் 03-11-1787 எனத் தெரியவருகின்றது. ஆகவே, இவ்விலக்கியம் 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கொள்ளலாம்.

நளனம்மானை : நாட்டுப்புற இலக்கியம்

அம்மானை என்பது வாய்மொழித் தன்மையுடைய இலக்கிய வகையாகும். இதனை, "நாட்டுப்பாடலாக இருந்து இலக்கியமாக ஏற்றம் பெற்ற வகைகளுள் அம்மானை குறிப்பிடத்தக்கது" (ச.வே. சுப்பிரமணியன், ப.477, 1984) என்ற கூற்று அரண் செய்கின்றது. மேலும், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் முற்காலக் காப்பியங்களின் எச்சம் என்றும், இன்றைய கதைபொதி இதிகாசங்களின் கதைக் கூறுகளைக் கொண்டது என்றும், வாய்மொழிக் கதைப்பாடலும் காப்பியங்களும் எல்லாக் காலத்தும் தம்முள் சில ஒப்புமையையும் வேற்றுமையும் கொண்டு அமைவதை எதிர்பார்க்கலாம் என்றும், இவற்றில் ஓசை நிறைக்கச்சில அடிகள் அம்மானை எனும் சொல்கொண்டு முடியும். (மேலது, பக். 292 - 293) எனவும் கூறுவர். அவ்வழி, நளனம்மானையின் கதையானது இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கிளைக்கதைகளுள் ஒன்றான நளன் கதை (தமிழண்ணல், ப. 212, 1986) ஆகும்.

நாட்டுப்புற இலக்கியமான கதைப்பாடல்கள் வாழ்த்தும் வணக்கமும் அவையடக்கமும் கொண்டு தொடக்கம் கொள்கின்றன. (ச.வே. சுப்பிரமணியன் ப. 293, 184) என்பர். அவ்வழி, நளனம்மானையின் நூல் தொடக்கம், கதைத் தொடக்கம் இரண்டும் அமைவது கருதத்தக்கது.

எல்லாக் கதைப்பாடல்களும் முதலில் பிள்ளையார் முதலிய தெய்வங்களைப் பரவி காப்புப் பாடல்கள் பாடப்படுவனவாகவும், நூல் இனிதே முடிய தெய்வங்களை வேண்டுவதாகவும், அவையடக்கம் நுதலிப்புகுதல் முதலிய மரபுகளைக் கடைபிடிப்பனவாகவும் உள்ளன. (இரா. சுரேந்திரன், ப. 176, 1981) என்று கூறுவர். இவ்வமைப்பை நளனம்மானையின் காணலாம்.

"நன்றாக நளனம்மானை நீடுளி வான்க
துங்கமானில வேந்தன் சூதினால்த் தோற்று மீண்ட
வங்கமான நளன் கதையை யம்மானைப் பாடலிற்
சேர்ப்பங்கயத்த
யனும் மாலும் பார்பதியாளுங் கங்கை
செங்கையற் சடையல்ச் சூடும்சிவ பதம்
சென்னி வைப்பாம் வெண்பா சீரோங்கும்
பொன் மார்பன் சிறந்த நளன் கதையை யாராய்ந்து
யம்மானை யாக்கவே போரோடு மங்கையற்கண்
சிற்ப வீடையம்மை
யுமை யீன்றெடுத்த கற்பகமே யிக்கதைக்குக் காப்பு" (ந-அ.பக்1)

என்று நூலை வாழ்த்தி, பாடப்போகும் கதையைக் கூறி, அயன், மால், சிவன், மூவரையும் வணங்கி பிள்ளையாரைக் காப்பாக்கிப் பாடும் நிலையைக் காண்கின்றோம். மேலும் கதை பாடத் தொடங்கியதும் முதலில்

"மின்னி முகில் சொரிந்து மேதினியோ தான் வாள்க
மன்ன னளனென்போனு மங்கை தமை எந்தியையும்
கன்ம விதியாலே கலி படித்துத் தீந்த கதை
பொன்னங்கிரி யதனில்ப் பொருப்பினாலே எளுதும்
கன்னமதம் வெற்றிக் கணபதயே காப்பாமே" (ந.அ-5 அடி)

என்று பாடியிருப்பதில் மேதினியோரை வாழ்த்தி, வருபொள், கணபதி காப்பு ஆகியவை இடம்பெறும் மரபைக் காண்கின்றோம். அத்துடன் காப்பியக் கூறுகளில் முக்கிய இடம் பெறும் அவையடக்கமும்.

"முட்டி முன்னாள்த் தான் பயின்று முதியாருரைத்தாலும்
கூட்டி நான் சொன்னதில்க் குறை சொன்னதில்க் குறை சொன்னென்ற

பின்பு

கேட்டுப் படித்து கிளர்ந்த பொருளுரையால்
நாட்டு தமிளோர்கள் நல்லதென்று கொள்வீரே" (ந.அ.24-27 அடி)

என்று இவ்விலக்கியத்தில் இடம் பெறக் காண்கின்றோம்.

"வாழி" என வாழ்த்திக் கதை முற்றுப் பெறுவது கதைப்பாடல்களின் மரபு (இரா. சுரேந்திரன், ப. 176, 1981) என்பர். அவ்விரமே நாட்டுப்புறக் காப்பியமான இந்நூலில்,

"மன்ன னளன் வாளிமங்கை தமஎந்தி வாளி
கேட்டோரும் கற்றோரும் கிளைதோறும் வாளியதே
எளுதிப் படித்தோர் வாளி யின் புறக்கேட்டார் வாளி
பாடிவித்த யண்ணாவி பைந்தமிழோர் வாளியதே
வாளி க வாளி வையகத்தோர் வாளியதே
நளனம்மானை முகுந்தது முற்றும்" (ந. அ. 617 - 3622 அடி)

என்று வாழ்த்துடன் கதை முற்றுப் பெறுகின்றது. இவ்வாறான தொடக்கமும், முடிவில் ஆகிய நளனம்மானையின் நாட்டுப்புறக் காப்பியக் கூறினைத் தெளிவுப்படுத்துகின்றன.

நாட்டுவளம், நகர்வளம்

காப்பியங்களில் கதை தொடங்கியதும் நாட்டுவளம், நகர்வளம் முதலானவை இடம்பெறும். நளனம்மானையிலும்,
"நீட்டும் நிடதநாடன் நேமிச்சக்கரம் புரந்தோன்
நாட்டின் சிற்ப்பதனை நானுரைப்பே னம்மானை
கருங்கொண்டல் தானேளுங் கலைமகள் தன் மேனிதனில்
............
கள்ளவீளுங் கோதை கல்வி நலந்தோர் பயின்று
நன்னீதியும் போர்மலநாட்டில் முறையிது காண்" (ந. அ. 29 - 56 அடி)

என்று நாட்டுவளம் முதலில் கூறப்படுகின்றது. இதில் கதை பாடுவோர் நிடத நாட்டின் வளம் கூறி முடிக்கும் போது மலநாட்டில் முறையிது என்று கூறுவதால், இவ்விலக்கியம் பாடப்பட்ட பகுதியின் வளத்தைப் பாடுவது போலுள்ளது. இது நாட்டுப்புற இலக்கியத்தின் மரபைக் காட்டுகின்றது.

இதனையடுத்துக் காப்பியம் போன்றே நளனம்மானையிலும்
"நாட்டின் முறையிது காண் நகர்ச் சிறப்புக் கூறுகிறேன்" (ந.அ. 57 அடி) என்று நகர்வளம் தொடங்குகின்றது.

கூற்றுமுறை

வழிவழியாக வழங்கிவரும் நாட்டுப்புறக் காப்பியம் கேட்கும் வாசகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டுமேயன்றி படிப்பவர்களுக்காக அல்ல (George W. Bosewell, J. Reaver, P. 86, 1962) என்றுரைப்பர், நளனம்மானை கேட்கும் வாசகர்களுக்காகவே உருவான நாட்டுப்புறக்காப்பியம், அதனால் கேட்போர் கவனத்தைக் கவர,

"இன்னபடி வேந்தனினிதிருகூகு மன்னாளில்" (ந.அ. 153 அடி)
"அப்படியே மன்னவனிருக்கு மன்னாளில்" (ந.அ.172 அடி)

என்ற தொடர்கள் காணப்படுகின்றன.

இந்நூல் நீண்ட நாட்டுப்புறக் காப்பியமாக இருப்பதால், கதைகூறுபவர் எப்பகுதியைக் கூறி வருகிறார் என்பதைக் கேட்போர் அறிந்து கொள்ள,
"நாட்டின் முறையிதுகாண் நகர்ச்சிறப்புக் கூறுகிறேன்" என்றும் (ந.அ. 57 அடி)

"நன்னகற்கு நகர் படலமுற்றியதே
அன்னத்தைக் கண்ணுற்ற கதையது வுரைப்பேனம்மானை" (ந.அ.151-152 அடி)

என்றும் கூறி முடிக்கும் நிகழ்ச்சியையும், கூறப்போகும் நிகழ்ச்சியையும் கூறுகின்ற முறையினைக் காண முடிகின்றது.

இவ்வாறு நளனம்மானையில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பிரித்துக் கூறும், அமைப்பானது நைடதத்தின் படலப்பிரிவுகளை நினைவூட்டுவதுடன், இது ஒரு நாட்டுப்புறக் காப்பியம் என்பதை உறுதி செய்கின்றது.

மொழிநடை

இவ்விலக்கியம் கலிவெள்ளோச€யுடைய கலிவெண்பாட்டில் அமைந்துள்ளது. இடையிடையே விருத்தங்களும் வெண்பாக்களும் வந்துள்ளன. நில விடங்களில் சொற்களின் ஓசைநயம் சரியாக அமையாவிட்டாலும் கூட அவற்றை எழுதியதால் ஏற்பட்ட பிழையென்றே கொண்டு மேற்கூறிய யாப்பின் கீழ்க் கொள்ளலாம்.

நாட்டுப்புற இலக்கியங்களில் அவை உருவாகிய சமுதாயத்தினரின் வழக்குச் சொற்களும், அவை வழங்கி வந்த வட்டாரச் சொற்களும் விரவி வருதலுண்டு, அவ்வாறே நளனம்மானையிலும் விரவி வரக் காண்கின்றோம்.

வழக்குச்சொற்கள் - பொருள்
பூறா - எல்லாம்
கருதறுக்க - கதிரறுக்க
துடந்து - தொடர்ந்து
சடுதி - விரைவு
தவசு - தவம்
மெத்த - நிறைய

மேலும், இவ்விலக்கியம் வழங்கி வந்த வட்டாரத்தைப் பொறுத்து மலையாளச் சொற்களும் இடம்பெறுகின்றன.

வட்டாரச் சொற்கள் - பொருள்
கத்தபம் - கழுதை
பாரி - மனைவி
அப்போழ் - அப்போது
நன்னி - நன்றி

இது போன்று மொழிநடையில் வழக்குச் சொற்களும், மலையாளச் சொற்கள் கலந்த வட்டாரச் சொற்களும் கலந்து நனளம்மமானையினை ஒரு நாட்டுப்புறக் காப்பியமாக்குகின்றன எனலாம்.

அடுக்கிக்கூறுதல்

"நாட்டுப்பாடலுக்குரிய வந்த சொல்லே மீண்டும் வரல், ஒரே பொருளை பலவிதமாகப் பன்முறை கருக்கில் கூறல் அம்மானைப் பாடலிலும் காணப்படுகின்றது" (ச.வே. சுப்பிரமணியன். ப. 478, 1984) என்பர். நளனம்மானையில் சுருக்கிக்கூறும் அமைப்பு வந்துள்ளது. நளம் பிரிந்து சென்றபின் தமயந்தி தனியாய் வனத்தில் புலம்புவது (ந.அ. 2786 - 2821 அடி) இடம் பெறுகின்றது. அப்புலம்பலில் இடையிடையே

"ஆதி பிராமாவே அரியமாவே யீசனே" (ந.அ.2786 அடி)
"வாளு மிளமான்காள் மயிர்காமென் புள்ளினங்கா
கூவுங்கரிய குயில்காள் மென்மயிலினங்காள் (ந.அ. 2794 அடி)
"புன்னைகாள் செண்பகங்காள் பூந்தாமரைன்றினமே" (ந.அ. 2799 அடி)
"பிச்சிகாள் மல்லை மெய்குட மல்லிகைகாள்" (ந.அ. 2801 அடி)

என்று தெய்வங்கள், பறவைகள், மலர்கள், மரங்கள், ஆகியவற்றை வரிசையாக விளித்துக்கூறும் முறையினைக் காண்கின்றோம். ஆயின், அடுக்கிக்கூறும் இவ்வரிசை நளனம்மானையின் தனித்த கூறு எனலாம்.

கதாபாத்திரங்கள்

கதைக்கருவும் கதாபாத்திரங்களும் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களாலும், நம்பிக்கையாலும், மொழியாலும், செயலாலும் உருவாக்கப்பட்டவையாக நாட்டுப்புறக் காப்பியங்களில் அமையும். (George W. Bosewell, J. Reaver, P. 86, 1962) என்றுரைப்பர். அவ்வண்ணமே நாட்டுப்புற மக்களால் நன்கறியப்பட்ட, "ஓராளி ஏளும் ஒரு குடைக்குள் ஆண்ட நளன்" (ந.அ.1.25 அடி) தான் கதைத்தலைவனாக உள்ளான்; வீரத்துடன் நற்குணங்கள் வாய்க்கப்பட்டவனாக நளனம்மானையில் சித்திரிக்கப்பட்டுள்ளான். நளனைப் போலவே தமயந்தியும் கற்புநலம் வாய்க்கப்பட்ட நளனம்மானையில் சித்திரக்கப்பட்டுள்ளான். நளனைப்போலவேதமயந்தியும் கற்புநலம் வாய்க்கப்பட்ட நல்லாளாகப் படைக்கப்பட்டுள்ளாள். அத்துடன் மீவியல்பு ஆற்றல்மிக்க பாத்தரிங்களாகத் தேவர்களும் கலியும் அன்னமும் பாம்பும் நளனம்மானையில் இடம்பெற்று மக்கள் மனதில் பலவித உணர்வுகளைத் தூண்டிக் கதையை மையக் கருத்தோடு ஒன்றி நடத்திச் செல்லத் துணைபுரிகின்றன. இவ்வாறு நாட்டுப்புறக் காப்பியத்தன்மைக்கு அரண் செய்வதாக நளனம்மானையில் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளது.

இயற்கை இகந்த நிகழ்ச்சிகள்

மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிகழும் விந்தைகள் தெய்வீக ஆற்றலை மக்களுக்கு உணர்த்தக் கூடியனவாக இருப்பது தொல்பழங்காலத்தொட்டு இருந்து வரும் ஒரு நம்பிக்கை மரபாகும். இது எல்லா இன மக்களுக்கும் உரிய பண்பாட்டு மரபே. இதன் விளைவாகவே பல்வேறு புராணமரபுக் கதைகள் தோன்றின (து. சீனிச்சாமி, ப.162, 1985) என்பர். அவ்வகை இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் நளனம்மானையில் இடம் பெறுகின்றன. அவற்றுள் கலி என்ற பாத்திரம் நாட்டுக்கல், அன்னப்புள், பாக்குவெட்டி, தான்றிக்காய் எனப் பல்வேறு உருவெடுப்பதனைக் சுட்டலாம். இவ்வுரு மாற்றங்கள் கதைப்போக்கிற்கு விறுவிறுப்பும், தலைமைப் பாத்திரங்கள் மீது இரக்க உணர்வும் மிகுவிக்கச் செய்வதாக அமைகின்றன.

"காப்பியத்தில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றலை ஏற்றுவதற்காக இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் இடம் வெறுவது முக்கியத்தன்மை (மேலது, ப. 163) எனக்கூறுவர். நளனம்மானையில் பாம்பு ஒன்று தமயந்தியை விழுங்குவதும், மற்றொருபாம்பு வேதியனாக மாறி நளனிடம் பேசிவிட்டு மீண்டும் பழைய உருவை பெற்றுக் செல்வதுமாகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு நளனம்மானையில் இயற்கை இயந்த நிகழ்ச்சிகள் இடம் பெறுவது இந்நூலின் சிறப்பிற்குக் காரணமாகின்றது. மேலும் இவ்வாறான இயற்கை இகந்த நிகழ்ச்சிக் கூறுகள் நளனம்மானையை நாட்டுப்புறக்காப்பியமாக உயர்த்துகின்றன எனலாம்.

நாட்டுப்புற நம்பிக்கைகள்

நாட்டுப்புற இலக்கியத்தில் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள் இடம்பெற்றுக் கேட்போர் மனதைக் கவரும், விதி பற்றிய நம்பிக்கை காலங்காலமாக மக்கடையே நிலவி வருவது கன்ம விதியாலே கலிபிடித்துத் தீந்த கதை என்று நளனம்மானையின் மையக் கருத்தே விதித்தொடர்பானதாகக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை கதைப்போக்கில் பலவிடங்களில் கூறி உறுதி செய்கின்றனர். ஆசிரியர் நாடு விட்டுக் காடு குறைந்தும் நம்மை வினை விட்டிலையே (ந.அ. 2527 அடி), பெண்ணே உனைப் பிரிய பிரம விதி (ந.அ.3055 அடி), எழுதியவாறீதுவென்றால் முன்செய்த பாவம் முகிழ்ந்த காண (ந.அ.2637-38 அடி) என்று பலவிடங்களில் விதிபற்றிய நம்பிக்கை ஆதிக்கம் கொள்கின்றது. நாட்டுப்புற மக்களிடையே நிலவும் பேய், பிசாசுகளுக்கு அஞ்சும் மூடநம்பிக்கை,

காவில் மலரெடுக்க வந்த யிளங் கன்னியற்கு
தேவர் மனக்குறையோ தெய்வமோ என்றளுவார்
காளி குறையோ கண்ணாதரதன் குறையோ
கூளி குறையத் தலைகள் கண்டதுண்டோ
ஏது குறையோ கானின்னேரம் கன்னியற்கு (ந.அ. 551 - 555 அடி)

என்று விரக தாபத்தால் வருந்தும் தமயந்தி நிலையுணராததாதியின் புலம்பலில் வெளியிடப்படுவதைக் காணலாம். இவ்வாறு மக்களின் இயல்பான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக்கூறுகள் நளனம்மானையில் இடம் பெற்று அதனை நாட்டுப்புறக் காப்பியமாக்குகின்றன.

தொகுப்புரை

அச்சு வடிவம் ஏறாத நாட்டுபுற இலக்கியமான நளனம்மானையில் நாட்டுப்புறக் காப்பியக்கூறுகள் அமைந்து கிடக்குமாற்றை ஆய்கின்றது இக்கட்டுரை.

நளனம்மானை வாழ்த்தும், வணக்கம், வருபொருள், காப்பு, அவையடக்கம் எனத் தொடங்கி வாழ்த்துடன் முடிந்துள்ளது.

நாட்டுவளம், நகர்வளம் முதலிய காப்பியக் கூறுகுள் இடம்பெறுகின்றன.

கதைகூறும் முறை முன்னிலைக் கூற்று முறையாக அமைந்து இந்நாட்டுப்புறக் காப்பியத்தை நிகழ்வதை வடிவமாக அமைக்கின்றது.

இவ்வேட்டிலக்கியத்தின் மொழிநடை செவ்விய இலக்கிய நடையும், வழக்குச் சொற்கள் ஆகியவை கலந்து வரும் மொழிநடையாக உள்ளது.

மக்கள் மனதில் இடம்பெற்ற நளன் இவ்விலக்கியத்தின் கதைத் தலைவன், அவனுடன் இடம்பெற்ற பிற பாத்திரங்கள் காப்பியங்களில் இடம்பெறக் கூடிய மீவியல்பு ஆற்றல்மிக்க பாத்திரங்களாக அமைந்துள்ளனர்.

இவ்விலக்கியத்தில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் அமைந்து இதனை நாட்டுப்புறக் காப்பியத் தன்மைக்கு உயர்த்துகின்றன.

நாட்டுப்புற மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கைகள் இவ்வேட்டலக்கியத்தில் கலந்து வருகின்றது.

நாட்டுப்புக் காப்பியமான நளனம்மானை பற்றிய அறிமுகமாகக்கட்டுரை அமைகின்றது. பல்வேறு அணுகுமுறைகளில் ஆய்வு செய்வதற்கு இந்நனளம்மானையில் இடம் உண்டு.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link