ஆய்வுச் சிந்தனைகள்


இலக்கிய வளர்ச்சியில் மொழி பெயர்ப்பின் பங்கு

மொழி பெயர்ப்பு கலையா? அறிவியலா?

மொழி பெயர்ப்பு படைப்பாக்கச் செயல் திறன்களைக் கொண்டதா அல்லது அதற்கும் கீழானதா என்ற வினாக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, இன்றைய ஒப்பிலக்கிய மாணவனுக்கு மொழி பெயர்ப்பு சிறந்த ஆய்வுக்களமாகத் திகழ்கிறது. ஒரே படைப்பின் பல்வேறு மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆய்வது, மொழி பெயர்ப்புகள் இலக்கியப் படைப்பாளிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வது, ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் படைப்பாளிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வது, ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் படைப்பாளியை உள்நாட்டு வாசகர்கள் ஏற்பதற்கு எவ்வாறு மொழி பெயர்ப்பு காரணமாக அமைகிறது எனக் காண்பது, இலக்கியப் போக்குகளில் பிறநாட்டு இலக்கிய வகைகளின் மொழி பெயர்ப்புகள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தின எனக் காண்பது, இலக்கிய வகை வளர்ச்சிகளில் மொழி பெயர்ப்பின் பங்கு - என மொழி பெயர்ப்பு என்ற களம் பல்வேறு வீச்சுகளில், நோக்கு நிலைகளில் ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கு இடம் அளிக்கிறது.

தமிழில் நாவல், நாடகம், கவிதை ஆகிய இலக்கிய வகைகளின் போக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு உறுதுணையாக மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளமையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

நாவல் இலக்கிய வகை வளர்ச்சியில் மொழி பெயர்ப்பின் பங்கு

நாவல் இலக்கிய வளர்ச்சி வரலாற்றை எழுதிய கி.வ. ஜகந்நாதன், (தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்), சிட்டி சிவபாதசுந்தரம் (தமிழ் நாவல் - நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்), கைலாசபதி (தமிழ் நாவல் இலக்கியம்) தோத்தாத்திரி போன்ற பலரும் ஆரம்பகால நாவல்கள் மொழி பெயர்ப்புகளாக, போன்மை யாக்கங்களாக, தழுவல்களாக, அமைந்தமையைச் சுட்டுகின்றனர்.

தமிழ் நாவல்களின் போக்கை மாற்றி அமைத்த பெருமை வங்க நாவல்களுக்கு உண்டு. வங்கக் கதைகளை மொழி பெயர்த்து தொடர்கதைகளாகவும், மொழி பெயர்ப்பு நாவல்களாகவும் அன்றைய இதழ்கள், வாரப் பத்திரிகைகள் வெளியிட்டன. 1930-க்குப் பின்னரே வங்க நாவல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன எனினும் பக்கிம் சந்திர சட்டோபாத்யாவின் "ஆனந்தமடம்" எனும் நாவலை ம. குப்புசாமி ஐயர் (மகேச குமார சர்மா என்ற புனைபெயரில்) முதலில் மொழி பெயர்த்தார். இதே நாவலின் ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து தமிழாக்கித் தந்தார் திருச்சிற்றம்பலம் பிள்ளை (சிட்டி - சிவபாதசுந்தரம் - ப. 153) பின்னர் த.நா. குமாரசாமியும், கு.ப. ராஜகோபாலும் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளனர்.

இவ்வாறு ஒரே படைப்பு பல மொழி பெயர்ப்பாசிரியர்களால் ஒரே மொழியில் மொழி பெயர்க்கப்படும்போது இம்மொழி பெயர்ப்புகளில் ஒப்பீடும் கூட ஆய்வுக்களமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பு ஏன் தேவையாகிறது?

தனக்கு முன்னே மொழி பெயர்த்தவர்களின் மொழி பெயர்ப்பில் போதாமையை உணர்ந்தபோது, முழுமையற்ற நிலையை உணரும்போது, நிறைவான மூலத்தைப் போன்ற ஒன்றைத்தர வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது ஒரே நூலுக்குப் பல மொழிபெயர்ப்புகள் ஏற்படுகின்றன.

வங்க நாவல்கள் மொழி பெயர்ப்பாக வந்த பொழுது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டமையான் தொடர்ந்து சரத்சந்திரர், தாகூர், விபூதிபூஷன் பானர்ஜி முதலியோர் நாவல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. த.நா. குமாரசாமி, தா. சேனாதிபதி, டி.எஸ். பார்த்தசாரதி, வி.எஸ். வெங்கடேசன், சரஸ்வதி ராம்நாத், குமுதினி போன்றோர் இம்மொழி பெயர்ப்பில் ஈடுபட்டவர்கள்.

தமிழில் பெயர்க்கப்பட்ட வங்க நூல்கள்

பக்கிம் சந்திரரின் "பரிமளா" நாவலை டி.வி. கிருஷ்ணசாமி சாஸ்த்திரி (1907) யும் "சந்திரசேகரன்" நாவலை ம. குப்புசாமி ஐயரும் (1908) "துர்கேச நந்தினி" யை டி.வி. வெங்கடரதாசாரியும், (பின்னர் கு.ப.ரா.வும்) "ஜோடி மோதிரங்களை" வ.ரா.வும் ஆனந்தமடம், விஷ விருஷம் ஆகிய தேசிய உணர்வு கொண்ட நாவல்களை த.நா. குமாரசாமியும் மொழி பெயர்த்தனர். பக்கிம் சந்திரரின் தேசிய உணர்வு கொண்ட நாவல்களின் மொழி பெயர்ப்புகள், அத்தகைய தேசிய உணர்வுடன் கூடிய தமிழ் நாவல்கள் தோன்றக் காரணம் ஆயின.

தாகூரின் படைப்புகள்: தாகூரின் படைப்புகள் அனைத்தையும் த.நா. குமாரசாமி தமிழில் அளித்துள்ளார். இத்துடன் த.நா.கு. பாலாயி சந்த், முகோபாத்யாயா, தாராசங்கர் பானர்ஜி சந்தோஷ்குமார் போஷ், ராகுல்தாஸ் பானர்ஜி போன்ற வங்கப் படைப்பாளிகளின் படைப்புகளின் படைப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

சரத்சந்திரரின் படைப்புகள்: சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் 42 படைப்புகளையும் தமிழில் பெயர்த்து அளித்த பெருமை அ.கி. ஜெயராமனுக்கு உண்டு. சண்முகசுந்தரம் சரத்சந்திரரின் படைப்புகளைத் தமிழில் பெயர்த்ததுடன் பக்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பேனர்ஜி போன்றோரின் நாவல்களையும் தமிழில் பெயர்த்துள்ளார்.

வங்க நாவல் மொழி பெயர்ப்பின் விளைவுகள்:

தமிழில் வந்த வங்க நாவல்கள் தமிழில் ஆழமான தடங்களைப் பதித்துள்ளன. ஏற்பு என்ற நிலையில் காணும் போது, இவ்வாறு மொழி பெயர்ப்புகள் தமிழில் வரவேற்றுப் படித்தமையைக் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்:

"ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத்திரிகையில் பக்கிம் சந்திரரின் நாவலும், மற்றொன்றில் சரத் சந்திரர் நாவலும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்கதையாக வந்தன. அவற்றை வாசகர்கள் ஆர்வத்துடன் வாசித்து இன்புற்றார்கள். " இது ஏற்பு என்ற நிலையில் மொழி பெயர்ப்பின் விளைவைச் சுட்டுகிறது. இத்தகைய வாசகர் ஏற்புக்கு என்ன காரணம் என விளக்குகிறார் செ. யோகநாதன் (வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம் சிந்தனை, மலர் 3.ப-1)

வங்கப் பண்பாடு, நாகரிகம், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற தமிழ்ப்பண்பாட்டுடன் பெருமளவு ஒத்துப்போவதையே முதற்காரணமாகச் சுட்டும் இவர், கூட்டுக் குடும்பம், தகப்பனே குடும்பத்தின் தலைவனாக இருத்தல், திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளில் பின்பற்றப்படும் வைதிகச் சடங்குகள், உணவு முறை ஆகியன ஒன்றுபட்டு இருப்பதும், பொதுவான உணர்வு பூர்வமான மனப்பான்மைகள் ஒன்று போல இருப்பதும் காரணங்கள் ஆகும் என்கிறார்.

வங்க நாவல்களில் மிகை உணர்ச்சி, புனவியல்தன்மை, மத்தியதர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசுவது, வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முடிவுகளைச் சுட்டுவது, கதைக்கு முக்கியத்துவம் அளிப்பது, போன்ற கூறுகள் தமிழ்வாசகர்களுக்கு ஏற்றதாக இருந்ததாகவும் விளக்குகிறார் செ. யோகராஜா. இம்மொழி பெயர்ப்புகள் தமிழ் நாவல்களில் போக்கு மாற்றியமை:

இதனைச் செல்வாக்கு, தாக்கம், விளைவு என்ற பல நிலைகளில் வளர்ச்சியாகக் காணலாம். இந்நூற்றாண்டில் முதல் இருபது ஆண்டுகளில் மொழி பெயர்ப்புகளாகத் தமிழுக்கு வந்த நாவல்கள் அதிகம். குறிப்பாக வந்த நாவல்கள் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டன. இதன் காரணமாகத் தமிழ் நாவல்களின் போக்குகளும், உள்ளடக்கமும் மட்டுமின்றி நாவலாசிரியர்களும் வாசகர்களும் கூடப் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆரம்பகாலத் தமிழ் நாவல்களான பத்மாவதி சரித்திரம், கமலம்பாள் சரித்திரம், தீனதயாளு போன்றன ஓரளவு யதார்த்தமும் ஓரளவு புனைவியல் போக்கும் கொண்டிருப்பன. ஒரே மாதிரியான மர்ம நாவல்களின் வரவும் வாசர்களிடம் சோர்வும், மனப்பான்மையை ஏற்படுத்திய கால கட்டத்தில் வங்க நாவல்களின் பெயர்ப்புகள் வர அவை பெரிதும் ஏற்கப்பட்டன. காரணம் அவற்றின் உள்ளடக்கம், தமிழ் வாசகனுக்கும் ஏற்றதாக, அவன் தன்னையும் தன் பிரச்சினைகளையும் நாவலில் வரும் பாத்திரத்துடனும் நிகழ்வுடனும் ஏற்றிக் காண்பதற்கு ஏற்ப அமைந்திருந்தது எனலாம்.

நாவல் படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கல்கியவர்கள் ஆனந்தவிகடனில் ஆசிரியராக இருந்தபோது முதல் நாவல் போட்டியை அறிவித்தார். அதற்கு வந்த கதைகளைக் கண்டு மனம் நொந்த கல்கி, ஏன் இவ்வாறு ஒரு போட்டியை அறிவித்தோம் என்று மனம் புழுங்கினாராம்.

"காதலர்கள் - கள்ளக் காதலன் - ஸத்ரீ சோரங்கள், கொலைகள், கனவுகள், துப்புத்துலக்கங்கள், தூக்கு மேடைகள், சித்திரவதைகள் - சிருங்காரப் பயங்கரங்கள் சிங்கத்தின் உருவத்தில் மனிதன் பிறத்தல் பிரேதங்கள் பிழைத்து எழுதல் பிழைத்திருப்பவர் பிரேதமாதல் - ஆகிய அத்துஷ்டிகரமான விஷயங்கள் குறித்து". கதைகள் வந்தமை கண்டு வருந்திய நிலை அக்காலகட்டத்து நாவலாசிரியர் தரம், வாசக ரசனை ஆகியவையும் கூட வளராத நிலையையே சுட்டுகிறது. நாவல் இலக்கிய வகை வேறூண்றாத நிலையில் பத்திரிகைகள் போட்டி வைத்து வளர்க்க எண்ணியதையும் இது சுட்டுகிறது.

இப்போக்கிலிருந்து மாற்றி, வாசகர்ளின் ரசிகத்தன்மையும், நாவலாசிரியர்களின் படைப்பாக்கத் தன்மையையும் மாற்றியமைத்தவை வங்க மொழி பெயர்ப்புகள்.

வங்க மொழி பெயர்ப்புகள் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்த பிறகு அவற்றின் தாக்கத்தைப் தமிழ் படைப்பாளர்களிடம் காணமுடிந்தது.

1. இராமானுஜூலு நாயுடு எழுதிய பரிமளா (1923) என்ற தமிழ் நாவல் முழுக்க முழுக்க வங்காள நாவலை முன் மாதிரியாகக் கொண்டது. (செ. யோகராஜா, ப.3) பெயர் கூட பக்கிம் சந்திரர் எழுதிய "பரிமளா" நாவலை நினைவு படுத்துவது.

2. வங்காள நாவல்களில் வரும் பாத்திரப் படைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு பல தமிழ்க் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன.

பெரிய இடத்துப் பிள்ளைகள், கல்வியறிவு மிக்கோர், தம் விருப்பப்படி நடப்பவர்கள் போன்ற அன்றாட வாழ்வில் காணும் பாத்திரங்களைக் கதாநாயகர்களாகப் படைத்தார்கள். கதாநாயகனைச் சுற்றியுள்ள பிற பாத்திரங்கள், உண்மையான, ஆழமான காதல், காதலுக்காக தியாகம் செய்தல், குடும்ப உறவுகளிடையே நெருக்கமான பாசம் போன்ற உணர்வுகளைக் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டனர். யதார்த்த வாதமும், புனைவியலில் காணப்படும் மிகையுணர்வும் கொண்ட கதைகளாக இவை விளங்கின. சரத்சந்திரரின் இத்தகைய கதைகள் ஏற்கப்பட்டதன் விளைவே இது எனலாம். அகிலன் - பாவை விளக்கு ஜெகச்சிற்பியன் - சொர்க்கத்தின் நிழல் போன்ற படைப்புகளை தாக்கத்தின் விளைவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம்.

3. சரத் சந்திரரின் குடும்பப்பாங்கான கதைகளும் அதிகம் ஏற்கப்பட்டன. வங்கத்தில் பகல்பூர் பாணிக் கதைக்கு குழு என்ற ஒன்றுஉண்டு. இவர்களுடைய பெரும்பாலான படைப்புகளில் அன்றாடவாழ்வில் சாதாரண மக்களின் நடைமுறை வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளும், உணர்வுகளும், சூழல்களும் அப்படியே நுணுக்கமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். காதல், திருமணம், குடும்பம் - உறவுகள் - சிக்கல்கள் இன்பதுன்பங்கள் எனக்கு குடும்பச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவை அமைந்திருந்தன. சரச்சந்திரரின் "கிராமசமாஜம்" (கோஷால் வம்சக் குடும்பம் பற்றியது) "தூய உள்ளம்" (பவானிப்பர் சட்டர்ஜி குடும்பத்தைப் பற்றியது) போன்ற நாவல்கள் இத்தகையன.

லஷ்மி, பி.வி.ஆர் போன்றோர் தமிழில் குடும்ப உறவுகளை, ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் குடும்ப நாவல்களை எழுதினார். இது பற்றிக் குறிப்பிடும். செ. யோகராசா, "(வங்க) குடும்ப நாவல்களும் மொழி பெயர்ப்பு மூலம் வந்தடைந்து காலப் போக்கில் தமிழில் குடும்ப நாவல் வகை தோன்றுவதற்குக் காலாய் அமைந்தன." (ப.4) என்றார்.

4. வங்க நாவலின் கதையமைப்பு, கதைப்பின்னலில் உள்ள கட்டுக்கோப்பு, பாத்திரப்படைப்பு, நிகழ்ச்சிப் பின்னல்கள், உத்திகள் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இவ்வாறான தாக்கத்திற்கு முதன்மையான காரணம் மொழி பெயர்ப்பு ஆசிரியர்களில் பலர் படைப்பாசிரியர்களாகவும் இருந்தமையே. ஆர். சண்முக சுந்தரம் 120-க்கும் மேற்பட்ட வங்க நாவல்களை மொழி பெயர்த்துள்ளார். இவரிடம் வங்கத்தின் தாக்கம் இருப்பது இயல்பானது. தவிர்க்க இயலாதது. அவரே ஒரு பேட்டியில் "சரத் சந்திரரின் படைப்புகளை மொழி பெயர்த்த போது, அவரது பாத்திர சிருஷ்டி என்னுள் பாதித்தது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட கலை நுட்பங்கள் நான் புதிது புதிதாகச் சோதனை செய்ய உதவின" என்று கூறியுள்ளார்.

5. நிகழ்ச்சிப் பின்னல் சிறப்பு: வங்க நாவல்கள் பெரும்பாலும் பிரபலம் அடைந்த பத்திரிகைகளில் இதழ்களில் தொடர்கதைகளாக வெளிவந்தன. எனவே வாசகரிடம் ஆர்வமூட்ட விறுவிறுப்பாக அமைய, சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்துப் பரபரப்பை ஊட்டினார்.

இந்த நிகழ்ச்சிப் பின்னல் உத்தியை கல்கி தன் தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி போன்ற பல நாவல்களில் பின்பற்றியுள்ளார். நிகழ்ச்சிகள் பலவற்றை அடுத்தடுத்து கோர்வையாக - சாரம் குன்றாமல் விறுவிறுப்பாக அடுக்கிச் செல்வார் கல்கி.

6. பக்கிம்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோர் இருவரும் மிகச் சாதாரண கருப்பொருளை எடுத்துக்கொண்டு, படிக்கப்படிக்க ஆர்வமூட்டும் வகையில் எழுதுவதில் திறமை வாய்ந்தவர்கள். இதே பாணியைப் பின்பற்றிய கல்கி போன்றோர் நாவலைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டுவதாக எழுதுவதில் வல்லமை பெற்றனர்.

7. வங்க நாவல்களில் பெண்மைக்கு உணர்வும் பெண்ணை மேம்படுத்தும் போக்கும் காணப்பட்டது. ஆர்.வி. தன் நாவல் முன்னுரையில், சரத்சந்திரர் நாவல் பற்றிக் குறிப்பிடுகையில், சரத்சந்திரர் குப்பையிலிருந்து தோன்றுவதானாலும் அதனிடமுள்ள உயர்ந்த பண்பை எடுத்து, வாசகர்கள் நினைவை விட்டு நீங்காமல் நிலைக்கச் செய்யும் கலை நுட்பம் பெற்றவர். விலை மகளிடத்தும் உயர்ந்த பண்புகளைக் கண்டறிந்து பெண் குலத்தையே உயர்த்திக் காட்டும் உன்னதமான சிற்பி. அவர் நாவல்களில் ஈடுபட்டிருந்த மனநிலையில் - அந்த எழுச்சியில் உந்தப்பட்டு உருவானது இந்தக் கதை" என்கிறார். (பெண் என்னும் பூ, முன்னுரை, வானதி பதிப்பகம் 1968)

8. தமிழ் நாவல்களில் பெண் பாத்திரங்கள் பெற்ற முதன்மைக்கும் வங்க மொழி பெயர்ப்புகளே காரணம் எனலாம். சரத்சந்திரரின் மாலதி, அனுபமா, மதனி முதலியோர் தமிழ் வாசகர்களின் மனதை விட்டு நீங்காத பாத்திரங்கள் பெண்களிடம் உயர்வான கண்ணோட்டத்தை உருவாக்கிய பாத்திரங்கள் இவை.

லட்சுமி, லட்சுமி சுப்பிரமணியம், கோமகள், அநுத்தமா போன்ற படைப்பாளிகளின் பெண் பாத்திரங்கள் அன்றைய குடும்பப் பெண் வாசகர்களின் மனதைக் கவர்ந்தவர்கள். இவ்வாறான தாக்கத்திற்குக் கலைமகளும் ஒரு விதத்தில் காரணமாயிற்று. ஏனெனில் அந்த கால கட்டத்தில் கலைமகளில் வங்க நாவல்களில் மொழி பெயர்ப்புகள் தொடர்கதையாக வெளிவந்தன.

முடிவுரை

வங்க நாவல்களில் மொழி பெயர்ப்புகள் போலவே மராட்டிய நாவல்களும் மலையாள நாவல்களும் மொழி பெயர்ப்பு மூலமாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயின. அதே போல பிரெஞ்சு, ரஷ்யக் கதைகளும் மொழி பெயர்க்கப்பட்டன. இவை யாவும் தமிழ்க் கதைக்களத்திற்கு அதிக உரம் ஊட்டி வளம் சேர்த்தன. இம்மொழி பெயர்ப்புகள் மூன்று நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வாசகர்களின் ரசிகத் தன்மையில் மாற்றத்தைக் கொணர்ந்து, அதன் மூலம் புதியவற்றை ஏற்கும் மனநிலையை ஏற்படுத்தின. தமிழில் அவை போன்ற படைப்புகளை வரவேற்கும் சூழலை ஏற்படுத்தின.

2. படைப்பாளர்களிடையே சக இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள் போலத்தாமும் தம் மொழியில் எழுதவேண்டும் என்ற ஊக்கத்தை தூண்டுதலை அளித்தன.

3. மொழிபெயர்ப்பாளர்களே படைப்பாளிகளாகவும் இருக்கும் பட்சத்தில் மூலப்படைப்புகளின் பாத்திர வார்ப்புகள் கதைப்பின்னல், நிகழ்ச்சிக் கோவைகள் போன்றவற்றை அவர்கள் தம் சொந்தப் படைப்புகளில் கையாளக் காரணமாய் அமைந்தன. எடுத்துக்காட்டாக எஸ். சண்முகசுந்தரம், ஆர்.வி. புதுமைப்பித்தன், க.ப.ரா. ஆகியோரைச் சுட்டலாம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link