ஆய்வுச் சிந்தனைகள்


நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்கள்

முன்னுரை

இன்று வளர்ந்து வரும் துறைகளில் நாட்டுப்புறவியலும் ஒன்றாகும். நாட்டுப்புறவியலை இலக்கிய வடிவம் பெற்றவை, இலக்கிய வடிவம் பெறாதவை என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த நாட்டுப்புறப்பாடல்களை அறிஞர்கள் பொதுவாகத் தாலாட்டுப்பாடல்கள், சிறுவர் பாடல்கள், தொழில் பாடல்கள், ஆட்டப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் என்று வகைப்படுத்துவர். சில அறிஞர்கள் தம் நிலைக்கு ஏற்ப பலவாறாகப் பிரிக்கின்றனர். அவர்களில் ஆறு, அழகப்பன், சுரேந்திரன், க. சண்முக சுந்தரம், நா வானமாமாலை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவருமே ஒப்பாரிப் பாடல் என்ற ஒரு பிரிவைக் குறிப்பிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். வாழ்க்கையின் அவல நிலைகளை ஒப்பாரிப்பாடல்கள் உள்வாங்கியிருப்பதால் இவை உணர்ச்சிப்பாடல்களாக அமைந்திருக்கின்றன.

புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் போற்றப்படுபவை ஏட்டிலக்கியங்களாகும். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். நாட்டுப்புறப்பாடல்களை, நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், பரம்பரைப் பாடல்கள், காற்றில் வந்த கவிதைகள், காற்றில் மிதந்த கவிதைகள், நாட்டார் பாடல்கள் என்று பலவாறாகக் குறிப்பிடுவர். நாட்டுப்புறப்பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடல்களின் பொருளாகின்றன.

நாட்டுப்புறப்பாடல்கள் பெரும்பாலும் காடு, கழனிகளிலும், தோட்டவயல்களிலும், தொழில் செய்யும் இடங்களிலும் பிறக்கின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கைத் தாலாட்டுப்பாடல்களில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து திருமணப்பாடல்களில் நிறைவெய்தி ஒப்பாரிப்பாடல்களில் முடிவடைகின்றது. இன்ப துன்பங்களைப்பற்றி மக்ள் தாங்களாகவே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் அழைப்பர். ஒரு நாட்டு மக்களின் நாகரீகத்தை, பண்பாட்டை பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை உண்மையான முறையில் படம் பிடித்துக் காட்டுவன நாட்டுப்புறப்பாடல்கள் என்பது மிகவும் பொருத்தமானதாகும். நாட்டுப்புறப்பாடல் எளியவை, இனியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து செவிகளில் உலவி காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவைகளாக உள்ளன.

ஒப்பாரி என்னும் சொல் ஆங்கிலத்தில் என்று அழைக்கப்படுகிறது. ஒப்பாரி என்பதை ஒப்பு + ஆரி என்று பிரித்து "ஒப்புச் சொல்லி அழுதல்" என்று பொருள் கொள்ளலாம். இன்றளவில் ஒப்பாரி என்பதை ஒப்புக்கு அழுதல் என்றும், இறந்தவர்களுக்கும், பிற பொருள்களுக்கும் ஒப்புச் சொல்லிப் பாடி அழுதல் என்றும் கூறுவர். சிலர் ஒப்பாரியைப் பிணைக்கானம், இரங்கற்பா, இழவுப்பாட்டு என்றெல்லாம் கூறுகின்றனர். " தலைச்சன் பிள்ளைக்குத் தாலாட்டும் புருஷனை இழந்தவனுக்கு ஒப்பாரியும் தானாகவே வரும்" என்ற பழமொழி இக்கருத்துக்கு அரணாக விளங்குகிறது. இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரிப்பாடல்கள் ஆகும். இன்று ஒப்பாரிப்பாடுதல் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இதை "கூலிக்கு மாரடித்தல்" என்ற நாட்டுப்புற வழக்காறு உறுதிப்படுத்தும்.

ஒப்பாரிப்பாடல்களை அவற்றின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைக்கு ஒப்பாரி, கணவனுக்கு ஒப்பாரி, தாய், தந்தை, மாமனார், அண்ணன், தம்பி, போன்றோர்க்கு ஒப்பாரி பாடுதல் என்ற வகையில் வகைப்படுத்தலாம். ஒரு பெண் குழந்தைப்பருபத்தில் பெற்றோரின் பாதுகாவலிலும் இளமைப்பருவத்தில் கணவனின் பாதுகாவலிலும் முதுமைப்பருவத்தில் தன் மக்களின் பாதுகாவலிலும் வாழ்கிறாள். இம்மூன்று பருவங்களில், கணவனின் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் வாழும் வாழ்க்கைதான் ஒரு பெண்ணுக்கு ஏற்றமும் பெருமையும் அளிக்கக்கூடியதாக அமைகின்றது. "ஒரு பெண் தன் கணவனுக்கு நிகராக வேறு ஒருவரை நினைக்கக்கூடாது" என்பதை " கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்" என்று சிலப்பதிகாரமும், " கொண்டாளின் துன்னியகேளிர் பிந் இல்லை என்று நான்மணிக்கடிகையும், கணவனுக்கு மிஞ்சிய உறவும் இல்லை, கோவணத்திற்கு மிஞ்சின வறுமையும் இல்லையென்ற பழமொழியும் உணர்த்துகின்றன.

ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்த மறுநாளே கணவன் இறந்துவிடுகிறான். அவள் பலவாராகப்புலம்புகிறாள். தான் இவ்வாறு வருத்தப்பட்டு அழுதால் கருநாகப் பாம்பும் கூடி மனம் இறங்கி கண்ணீர் விடும் என்ற கூறுகிறாள்.

கல்லுமேலே நின்னுகினு
கன்னிகுறை சொன்னாக்கா
கல்லும் கிடுகிடென்னும்
கல்லில் இருக்கும்
கருநாகம் கண்ணீர்விடும்!
புத்துமேலே நின்னுகினு
பொண்ணு குறை சொன்னாக்கா
புத்தும் கிடுகிடென்னும்
புத்தில் இருக்கும்
புதர்நாகம் கண்ணீர்விடும்!

என்ற பாடலைச் சான்றாகக் கூறலாம்.

குழந்தைக்கு : " பிள்ளை இல்லா வாழ்வு, பேய்வாழ்வு" என்பது பழமொழியாகும். தாய் ஒருத்தி குழந்தையைச் சீராட்டி பாராட்டி வளர்த்தாள். ஆனால் அக்குழந்தை 5 மாதங்களுக்குள் இறந்து விட்டதை எண்ணி,

மடியில் கிளி வளர்த்து
மலையோரம் மேய விட்டேன்
மலையோரம் மேய்ஞ்ச கிளி
மடிவந்து சேரலையே!
மடியில கிளை வளர்த்து
மதிலோரம் விட்டு வச்சேன்
மதிலோரம் விட்ட கிளி
மாயமாய் மறைச்சதடா!

இவ்வாறு கூறிக் கலங்குகிறாள்.

தந்தைக்கு: ஒரு பெண்ணின் முதல் பாதுகாவலர் அவளின் தந்தையே ஆவார். அப்பெண் தந்தையிடம் மிகுந்த பாசம் கொண்டவளாக இருந்தாள். தந்தை இறந்த செய்தி கேட்ட அவள்,

காதவழி நடந்து - என்
காலுரெண்டும் நோகுதின்னா
காசி தீர்த்தம் வாங்கி - என்
கால் நோவு தீர்த்திடுவீர்!
தூர வழி நடந்து - என்
தொடைரெண்டும் நோகுதின்னா
துளசிமாலை தீர்த்தம் வாங்கி - என்
தொடை நோவு தீர்த்திடுவீர்!

இவ்வாறு புலம்புகிறாள்.

பல மருந்துகள் கொடுத்தும் பயன் இல்லையே என்றும் வருத்தப்பட்டு மக்களின் பாடல் வருமாறு:

இஞ்சியைத் தூளு பண்ணி
எலுமிச்சை சாறு பிழிஞ்சு - நான்
ஏழப்பொண்ணு குத்தும்பாலு
என்னப் பெத்த அப்பாவே
தேடி அழைச்சாலும் - நீங்க
திரும்புவீரோ இந்தப்பக்கம்!

தாய்க்கு : தாய்க்கும் மகளுக்கும் இருக்கும் நெருக்கம் தான் அதிகம். ஒரு பெண் எந்த ஒரு குறையையும் தன் தாயிடம் தான் துணிந்து சொல்வாள். தாய் இறந்துவிட்ட செய்தி கேட்டு மகள் கதறுகிறாள்,

எட்டுமணி வண்டியேறி - நான்
இளைப்போடு வந்து நின்னா
ஏலரிசிக் கஞ்சி காய்ச்சி
இளைப்பாத்தும் அம்மாளாச்சே!
பத்துமணி வண்டியேறி - நான்
பசியோடு வந்து நின்னா
பச்சரிசிக் கஞ்சி காய்ச்சி
பசியாத்தும் அம்மாளாச்சே
தாய் வீட்டுச் சேதியின்று
தந்தி வந்து தகவல் சொல்ல - அங்கே
அழுதப்பிள்ளை தூக்காமல்
அரண்மனையைச் சாத்தாமல்
அவரிடத்தில் சொல்லாமல்
அலைந்த கூந்தல் முடியாமல்
உரியில பணம் எடுத்தா
ஒரு மணி ஆகுமின்னு
அறையில பணம் எடுத்தா
அஞ்சுமணி ஆகுமின்னு
அப்போ பணம் எடுத்து
ஆகாயக் கப்பல் ஏறி
அப்பாலே நான் பொறந்த
அரண்மனையை வந்தடைஞ்சேன்.

அண்ணனுடன் பிறந்த தங்கை ஒருத்தி தன் அண்ணன் இறந்துவிட்டசெய்தி கேட்டு துடிதுடித்து,

கருப்பு சைக்கிள் வண்டி - எங்கண்ணன்
காசாடும் ரப்பர் பந்து
காசாடும் அண்ணனுக்கு
காபி கொண்டு போனாயே
காபி இருந்தா இருக்கட்டும்மா
கவலையைச் சொல்லுமென்பார்

என்று கூறி அழுகிறாள். இவ்வாறாக மாமனாருக்கும், தம்பிக்கும், மைத்துனருக்கும் கூட ஒப்பாரி பாடுதல் உண்டு. இதுவரை ஒருவர் இறந்துவிட்டால் மற்ற உறவினர்கள் கூடிப்பாடி அழுவதுதான் ஒப்பாரி என்கிறோம். ஆனால் ஒரு பெண் தான் இறந்துவிட்டதாகக் கற்பனை செய்து பாடும் ஒப்பாரியும் நாட்டுப்புறப் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

அம்மாவுக்கு ஆள் அனுப்பினால் முந்தாணையை விரித்து முகத்தின்மீது போட்டழுவாள் என்றும், அக்காள் பம்பைத் தலைவிரித்து பாடை மீது விழுந்து அழுவாள் என்றும், அண்ணனோ அந்திக் கடை திறந்து, ஆகாயம் பட்டெடுத்து வரும்போது பட்டணமும் கூட்டவரும் என்றும் அறிய அவள் தன் அண்ணி இவ்வாறு வருவாள் என்று கற்பனையாகப்பாடுகிறாள்.

அண்ணிக்கு ஆள் அனுப்ப
வாய்க்கரிசி கொண்டு வந்து
வழி நெடுக கல்பார்ப்பான்
வாய்க்கரிசி தீர்ந்து போக
அந்தவழி திரும்பிவிடுவாள்
என்று பாடுகிறாள்.

முடிவுரை

மக்கள் வாழ்வின், முன்னுரையைத் "தாலாட்டு" எனவும் முடிவுரையை "ஒப்பாரி" எனவும் நாட்டுப்புறப்பாடல் பாகுபடுத்துகிறது. தாலாட்டு கலங்கரை விளக்கமானால் ஒப்பாரி நினைவுச் சின்னமாகும். நாட்டுப்புறப்பாடல்களின் ஒரு பிரிவாகவும் இறந்தவர்களுக்கு ஒப்புச்சொல்லி அழுதல் என்ற நிலையும் "ஒப்பாரி" அமைகிறது. பொதுவாக, ஒப்பாரிப்பாடல்கள் இறந்தவர்களின் நெருங்கிய உறவுகளை ஒட்டி அமையக்கூடியதாகும். அன்றும் சரி, இன்றும் சரி, நாட்டுப்புறப்பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்தவர்களே இல்லை என்பதில் ஐயமில்லை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link